- பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான திட்டம் அனைவருக்கும் "சுகாதார எண்ம அடையாள அட்டை' அறிவிப்பு.
- "டிஜிட்டல் ஹெல்த் மிஷன்' எனப்படும் எண்ம அடையாள அட்டைத் திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால், மருத்துவ உலகில் அது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடும்.
- அதுமட்டுமல்லாமல், தளர்ந்து போயிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு புத்துணர்ச்சி வழங்குவதாகவும் அது அமையும்.
சுகாதார எண்ம அடையாள அட்டை
- தேசிய சுகாதார ஆணையத்தின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டம், முதலில், சண்டீகர், லடாக், புதுச்சேரி, அந்தமான்- நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி - டையு டாமன் ஆகிய ஆறு யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் சுகாதார எண்ம அடையாள அட்டையில், அந்த நபரின் நோய்கள், மேற்கொண்ட பரிசோதனைகள், எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைகள், உட்கொண்ட - உட்கொள்ளும் மருந்துகள் உள்ளிட்ட உடல்நிலை குறித்த அனைத்து விவரங்களும் சேமித்து வைக்கப்படும்.
- கடந்த 15 ஆண்டுகளாக, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள் (லைஃப்ஸ்டைல் டிஸீஸஸ்) இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணங்களுக்கு அவை ஒரு முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது.
- உடல்நிலை குறித்த தகவல்கள் அடங்கிய எண்ம அடையாள அட்டை இருக்குமானால், இதுபோன்ற சூழலில் நோயாளிகளின் பிரச்னையைத் துல்லியமாக அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
- மருத்துவர், குறிப்பிட்ட எண்ணைக் கணினியில் பதிவு செய்தால், நோயாளியின் உடல்நிலை குறித்த முழு வரலாற்றையும், அவரால் பெற முடியும் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.
- 2017-இல் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை, எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் அவர்களுடைய மருத்துவப் பின்னணித் தகவல்கள் குறித்த பதிவை ஏற்படுத்துவது குறித்துக் குறிப்பிட்டிருந்தது.
- ஓராண்டுக்குப் பிறகு, "நீதி ஆயோக்'கும் தேசிய சுகாதார எண்ம அடையாள அட்டை மூலம் மருத்துவ சிகிச்சையின் தரத்தை உயர்த்துவது குறித்தும், சிகிச்சை முறையில் தவறுகளைக் குறைப்பது குறித்தும் தெரிவித்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இது குறித்து நடந்துவந்த விவாதங்களின் முடிவில், பிரதமரின் அறிவிப்பு வந்திருக்கிறது.
- சமீபத்தில் "எண்ம அடையாள ஆய்வு முயற்சி' (டிஜிட்டல் ஐடன்டிடி ரிசர்ச் இனிஷியேடிவ்) என்கிற அமைப்பு, மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
- அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் மருத்துவ வசதிகள் எண்மப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுதான் வருங்கால வழிமுறையாக இருக்கும் என்றும் வலியுறுத்தினர். மிகுந்த கவனத்துடன், அதே நேரத்தில் விரைவாக, மருத்துவத் துறை எண்மப்படுத்தப்பட வேண்டும் என்கிற அவர்களது முடிவைப் பிரதிபலிக்கிறது பிரதமரின் அறிவிப்பு.
- சுகாதார எண்மப் பதிவு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றதல்ல சுகாதார எண்ம அடையாள அட்டை. ஒவ்வொருவரின் மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் பதிவேற்றம் செய்து சேமிக்கப்பட வேண்டும். பதிவேற்றத்தில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, விடுபடல்களும் இருந்து விடலாகாது.
அச்சம் எழுகிறது
- ஒவ்வொரு அட்டையும் தனிநபரின் உடல்நிலை குறித்த விவரங்கள் என்பதால், அதன் தன்மறைப்பு நிலை (பிரைவசி) உறுதிப்படுத்தப்படுதல் அவசியம்.
- பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் பதிவேற்றப்படும் தகவல்கள் "குறியாக்கம்' (என்கிரிப்ஷன்) செய்யப்படுவதால் தன்மறைப்பு நிலை உறுதிப்படுத்தப்படுவதுடன், அதை யாரும் திருத்தவோ, மாற்றவோ முடியாமலும் செய்ய முடியும். அட்டையில் இருக்கும் தகவல்களை முழுமையாகவோ, சில பகுதிகளையோ சேமித்து வைப்பதற்கு, அட்டைதாரரின் ஒப்புதல் பெற்றாக வேண்டும்.
- எண்மத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் சுகாதார எண்ம அடையாள அட்டையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.
- அவர்களின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க முடியும். அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதன்மூலம் பொருளாதார இழப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும்.
- இந்தியாவில் பெருநகரங்களைத் தவிர, சிறு நகரங்களிலும், பல கிராமங்களிலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. எல்லாராலும் தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கும், புதுச்சேரி "ஜிப்ம'ருக்கும் அவசர சிகிச்சைக்குச் சென்றுவிட முடியாது.
- ஓரளவுக்கு "இ-சஞ்சீவனி' திட்டம் மூலம் தொலைத்தொடர்பு வழி மருத்துவ ஆலோசனை பெற வழிகோலப்பட்டிருக்கிறது என்றாலும், சுகாதார எண்ம அடையாள அட்டையும் இருந்தால், அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை என்பது சாத்தியமாகும்.
- அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது எந்த அளவுக்கு அவசியமோ, அதைவிட அவசியம் நாம் மருத்துவ, சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் உறுதிப்படுத்துவதும்.
- ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டிய நிலையில் இந்தியாவில் 1,450 பேருக்குத்தான் ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை அல்லது இருந்தும் செயல்படுவதில்லை.
- அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தாமல், பிரம்மாண்ட மாளிகை எழுப்ப முற்படுகிறோமோ என்கிற அச்சம் எழுகிறது!
நன்றி: தினமணி (22-08-2020)