TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 17

August 28 , 2022 711 days 475 0

மருத்துவம்: வளர்ந்துவரும் சித்த மருத்துவம்

  • சித்த மருத்துவத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு. 1924 இல் நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்திய மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டது.
  • சித்த மருத்துவ முறை அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒன்றாக மாறியதன் வரலாறு இங்கிருந்தே தொடங்குகிறது. 1965இல் காங்கிரஸ் ஆட்சியில், சித்த மருத்துவத்துக்கு எனத் தனிக் கல்லூரி பாளையங்கோட்டையில் முதன் முதலாக நிறுவப்பட்டது.
  • 1969-70இல் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியிலிருந்து முதல் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வெளிவந்தபோது பொறியாளர்களுக்கு இணையான அங்கீகாரத்தை அவர்களுக்கு அன்றைய தி.மு.க. அரசு வழங்கியது. 1973இல் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்தது.
  • தமிழ்நாடு அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரது முயற்சிகளின் விளைவாகவே, சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் ஒரு பிரிவு அல்ல. அது தனி மருத்துவ முறை என்பதை மத்திய அரசு அங்கீகரித்தது.
  • 1975க்குப் பிறகு, சித்த மருத்துவ ஆய்வுகளும், அறிவியல்ரீதியிலான முயற்சிகளும் நடைபெறத் தொடங்கின. சென்னை அரும்பாக்கத்தில் மருத்துவமனையுடன் இணைந்த சித்த மருத்துவக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தை ஓர் அறிவியல் பிரிவாக ஏற்றுக்கொண்டது.
  • சித்த மருத்துவ அறிவியல் என்னும் அறிவியல் ஆய்வுத் துறையையும் அது உருவாக்கியது. இன்று அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவத்துக்கு எனத் தனிப்பிரிவு உள்ளது. 2006இல் தமிழகத்தில் பெரும் வீரியத்துடன் சிக்குன் குன்யா பரவியபோது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்பட்டது.
  • கரோனா பெருந்தொற்று காலத்தில், லேசான பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளைக் குணப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்ததே. சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அறிவியல் முறைசார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இன்று பெருமளவில் ஊக்குவித்துவருகின்றன.

திரையுலகம்: சிந்திக்கவைத்த சிரிப்பு

  • திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான இடம், நாடக மரபிலிருந்து உருவானது. எந்த வழியிலாவது பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பவர்கள் என்கிற மலிவான பார்வையே அவர்கள் மீது படிந்திருந்தது. அதை உடைத்து நொறுக்கிய ‘நகைச் சுவைப் போராளி’ கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
  • தான் நடித்த இரண்டாவது படத்திலேயே (சதி லீலாவதி-1935) நகைச்சுவைப் பகுதியை எழுதி, தனது தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கினார். கிராமிய மரபுக் கலைகளின் அசல் தன்மையைச் சிதைக்காமல், அவற்றை நகைச்சுவைப் பாடல் காட்சிகளுக்குப் பயன்படுத்தி, கிராமிய மரபுக் கலைகளுக்கு மரியாதை செய்தவர். திரையிலும் மேடையிலும் அவர் நடத்திக் காட்டிய கிந்தனார் கதா காலட்சேபம், வில்லுப்பாட்டு, லாவணிப் பாட்டு ஆகியவை பெரும் புகழ்பெற்றன.
  • நகைச்சுவை நடிப்பின் துணைகொண்டு மூடநம்பிக்கைகளை பார்வையாளர் மனம் புண்படாத வகையில் சாடினார். பகுத்தறிவு, அறிவியல் சிந்தனையை நகைச்சுவைப் பாடல்கள் மூலம் தூண்டினார்.
  • அவரது இந்தக் கலைப்பணியில் தொடக்கம் முதலே வழித் துணையாகவும் வாழ்க்கைத் துணையாகவும் பங்கு பெற்றவர் டி.ஏ. மதுரம். கலைவாணரும் மதுரமும் இணைந்து 102 படங்களில் நடித்து, 176 பாடல்களைப் பாடிச் சாதனை படைத்திருக்கிறார்கள்.
  • நல்லதம்பி’ படத்தில், தனக்குச் சொந்தமான நிலம் முழுவதையும் ஊரின் பொதுச் சொத்தாக மாற்றிவிடுவார். மக்கள் அனைவரையும் அந்த நிலத்தில் இறங்கி உழைக்க வருமாறு அழைப்பார். கூட்டுழைப்பில் விளைந்து நிற்கும் பயிரை ஒற்றுமையாக அறுவடைசெய்து பகிர்ந்துகொள்ளச் செய்தார்.
  • கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே முதல் தேவை என்று வலியுறுத்தினார். தீண்டாமையை எதிர்த்த அதே வேகத்துடன் மதுவை எதிர்த்தும் குரல் கொடுத்தார். பிரச்சாரமோ அறிவுரையோ செய்யாமல் கலைவாணர் திரையில் சீர்திருத்தம் செய்துகாட்டியபோது சினிமா நகைச்சுவை சிகரம் தொட்டது.
  • கலைவாணரின் இந்த வழியைப் பின்பற்றத் தொடங்கியபின் திரையுலகில் விவேக் அடைந்த வெற்றி உயர்வானது. காலம்காலமாக நகைச்சுவை நடிகர்கள் பலர் வந்துபோனாலும், காந்தியின் பக்தரான கலைவாணரின் இடம் யாராலும் நிரப்ப முடியாத ஒன்று.

விளையாட்டு: தடம் பதித்த இந்திய அணி

  • கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்த நிகழ்வு 1983 ஆம் ஆண்டு நடந்தேறியது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 1971 இல் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள்தாம் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தன.
  • டெஸ்ட் போட்டியில் நீண்ட பாரம்பரியம் கொண்ட அணியாக இந்தியா இருந்த போதிலும், தொடக்கக் கால ஒரு நாள் போட்டிகளில் இந்தியா கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டது.
  • முதல் இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் (1975, 1979) மிக மோசமாகத் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த இரண்டு முறையும் மே.இ. தீவுகள் அணியே கோப்பையை வென்று ஆதிக்கத்தை நிலை நாட்டியிருந்தது.
  • 1983 இல் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் தலைமையில் இளைஞர்களும் அனுபவஸ்தர்களும் கலந்த இந்திய அணி களமிறங்கியது.
  • அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு மே.இ. தீவுகள் தகுதிபெற்று மூன்றாவது முறையும் உலகக் கோப்பையை வெல்லக் காத்திருந்தது. அந்தத் தொடரில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
  • இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. அதற்கேற்ப இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், குறைந்த ரன்களாக இருந்தாலும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்கிற திட்டமிடலோடு பந்துவீசக் களமிறங்கியது இந்திய அணி.
  • இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் மே.இ.தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நாட்டின் மூவண்ணக் கோடி உயரப் பறக்க, முதன்முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியது.
  • கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மகத்தான தடமாக இந்த நிகழ்வு பதிந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் அதிவேகமாக வளரத் தொடங்கியது என்பது வரலாறு.

மகளிர்: வென்றோம் ‘சதி’யை!

  • பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் மிகக் கொடூரமானது சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். மன்னராட்சி காலம் முதலே கைம்பெண்கள் சமூகத்துக்குச் சுமையாகக் கருதப்பட்டுவந்தனர்.
  • பதி பக்தியை நிரூபிக்கவும் கணவன் மீதான காதலின் வெளிப்பாடாகவும், கணவன் இறந்த பிறகு கணவனின் சிதையில் தாங்களும் வீழ்ந்து உயிர் துறப்பது அக்காலத்தில் பெண்களின் வழக்கமாக இருந்தது.
  • தொடக்கத்தில் சுயதேர்வின் அடிப்படையில் உயிர் துறந்த பெண்கள் பிறகு ‘சதி’ என்னும் சடங்கின் பெயரால் வலுக்கட்டாயமாகச் சிதையில் தள்ளிக் கொல்லப்பட்டனர்.
  • பொ.ஆ. (கி.பி.) 300 – 500களுக்குள் இந்த வழக்கம் தொடங்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அக்பர், ஔரங்கசீப் இருவரும் ‘சதி’ வழக்கத்தை ஒழிக்க முயன்றனர். ஆனால், அது கைகூடவில்லை.
  • இந்தியாவில், குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே ‘சதி’ நடைமுறையில் இருந்தது. பெண் எப்போதும் தன் தூய்மையையும் புனிதத்தையும் நிரூபிக்க வேண்டியவள் என்பதன் வெளிப்பாடாகத்தான் ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதைக் குறிக்கும் ‘சதி’ என்னும் சொல்லால் இந்த வழக்கம் அழைக்கப்பட்டது.
  • வீரத்தின் அடையாளமாக நடுகற்கள் நடப்பட்டதைப் போல், சதி வழக்கத்தின் அடையாளமாக ‘சதி கற்கள்’ அமைக்கப்பட்டன. மேல் நோக்கி அபயக்குரல் எழுப்புவதைப் போன்று தோற்றமளிக்கும் கை, ‘சதி பீட’த்தில் இடம்பெற்றிருக்கும். சிவன் மீதான தன் காதலின் தீவிரத்தைத் தன் தந்தைக்கு உணர்த்தத் தன்னையே தீயிலிட்டுச் சாம்பலாக்கிக் கொண்ட தாட்சாயணி, சதி வழக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறார்.
  • அதனாலேயே ‘சதி’யால் கொல்லப்படும் பெண்கள் ‘சதி மாதா’வாகவும் ‘சதி தேவி’யாகவும் வணங்கப்பட்டனர். அவர்கள் நினைவாகச் சிறுகோயில் எழுப்பப்படுவதும் உண்டு. கௌரவத்தின் பெயரால் கொல்லப்படும் பெண்களுக்குத் தெய்வ அடையாளம் கொடுக்கும் வழக்கத்தின் தொடர்ச்சிதான் இது.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் பரவலான காலத்தில் ராஜா ராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் ‘சதி’ கொடுமைக்கு எதிராகவும் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் குரல்கொடுத்தனர்.
  • அதன் விளைவாக சதி ஒழிப்புச் சட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் முன்னெடுப்பால் வங்க மாகாண அரசால் 1829 இல் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் சதி வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டதால், சதிச் சடங்கை நடத்துபவர் தூக்கிலிடப்படுவார் என்று சார்லஸ் நேப்பியர் 1850இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு சதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
  • இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்கள் ஓரளவுக்குக் கல்வியும் பொருளாதர வளர்ச்சியும் பெற்றுவந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தியோரலா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது ரூப் கன்வர் 1987இல் ‘சதி’ வழக்கத்துக்குப் பலிகொடுக்கப்பட்டார்.
  • திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் ரூப் கன்வரின் கணவர் இறந்துவிட, கணவரது சிதையில் ரூப் கன்வர் எரிக்கப்பட்டது இந்தியாவையே உலுக்கியது.
  • ரூப் கன்வர் தன்னிச்சையாகத்தான் சிதையில் இறங்கினார் என்றும் வலுக்கட்டாயமாகத் தீயில் தள்ளப்பட்டார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்பட்டன.
  • முன்னேற்றப் பாதையில் நாடு சென்றுகொண்டிருந்த நிலையில் மூட நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடூரம், மக்கள் மனங்களில் குடியிருக்கும் அறியாமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் பறைசாற்றியது. ரூப் கன்வரின் மரணத்துக்குப் பிறகு சதி தடுப்புச் சட்டம் 1987இல் இயற்றப்பட்டது.

நவீன இந்தியாவின் கவின்மிகு கட்டிடங்கள்

  • கட்டிட வடிவமைப்பில் தனித்துவத்தை யும், வளம் மிகுந்த பாரம்பரியத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. இவற்றுடன் நவீனத்தையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டிடங்கள் சுவீகரித்துக்கொண்டுள்ளன. அத்தகைய கட்டிடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சில:

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை

  • சென்னை அண்ணா சாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்து்ள இந்தக் கட்டிடத்தை பெர்லினைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் ஹுயுபெர்ட் நீன்ஹாஃப் வடிவமைத்துள்ளார். தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், 2011இல் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், தமிழ் நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

சைபர்டெக்சர் முட்டை, மும்பை

  • 13 மாடிகள் கொண்ட வணிக அடுக்குமாடிக் கட்டிடம் இது. நம்பமுடியாத தோற்றமுடைய இதன் கட்டமைப்பை ஜேம்ஸ் லா எனும் கட்டிடக் கலைஞர் வடிவமைத்தார். முட்டை வடிவத்தைப் போலிருக்கும் இந்தக் கட்டிடத்தின் புதுமையான வடிவமைப்பு பார்த்தவுடன் பிரமிப்பில் ஆழ்த்தும்.

விதான சௌதா, பெங்களூரு

  • பெங்களூருவிலிருக்கும் இந்தக் கட்டிடம் நவீன திராவிட கட்டிடக் கலையின் நிகழ்கால அதிசயம். இடைக்கால சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றின் முதன்மைக் கூறுகளை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கிறது. 1956இல் கட்டப்பட்ட இதுவே கர்நாடக மாநில சட்டமன்றம்.

லோட்டஸ் டெம்பிள், டெல்லி

  • சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் லோட்டஸ் டெம்பிள் அமைதியும் அழகும் நிரம்பியது. பஹாய் மதத்தினரின் வழிப்பாட்டு தலமான இந்தக் கோயில் வெள்ளை நிறத்தில், தாமரை மலரின் வடிவத்தில் அமைந்துள்ளது. 1986இல் இதை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் ஃபரிபோர்ஸ் சாஹ்பா.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், டெல்லி

  • கட்டிடக் கலைஞர் குல்தீப் சிங் 1980இல் வடிவமைத்த இந்தக் கட்டிடம், புதுமையான ஸிக்ஸாக் வடிவத்துடன் கண்ணைக் கவர்ந்து புத்துணர்வூட்டக்கூடியது. இடைப்பட்ட பகுதிகளில் காற்றோட்டம் மிகுந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் இயற்கையாகவே குளுமை நிலவும்.

வள்ளுவர் கோட்டம், சென்னை

  • திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னமே வள்ளுவர் கோட்டம். 1975இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டிப்பட்டது. திருவாரூர் தேரைப் போன்று செதுக்கப்பட்டிருக்கும் கல் தேர், வள்ளுவர் கோட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக நிறுவப்பட்டுள்ளது.

ஆரோவில் டோம்

  • உலகப் பிரசித்திபெற்ற இந்தக் குவிமாடம் 1971இல் கட்டப்படத் தொடங்கி, 2008இல்தான் முடிந்தது. மாத்ரி மந்திர் என அழைக்கப்படும் இந்தக் குவிமாடம் அன்னையின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. ரோஜர் ஆங்கர் எனும் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இதனை வடிவமைத்தார்.

வளர்ச்சி ஆராய்ச்சி மையம், திருவனந்தபுரம்

  • இந்தியாவின் மரபார்ந்த கட்டிடக் கலைக்குப் புத்துயிர் அளித்தவர் லாரி பேக்கர், குறைந்த செலவில் வலுவான கட்டிடங்களை வடிவமைத்ததற்காகப் போற்றப்படுகிறார். 1971இல் பேக்கர் வடிவமைப்பில் திருவனந்தபுரத்தில் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கட்டப் பட்டது. உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மங்களூர் ஓடுகளைக் அவர் பயன்படுத்தி யுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அகமதாபாத் குகைக் கூடம்

  • இந்தியக் கட்டிடக் கலையின் முன்னோடி பி.வி.தோஷி. இவர், சண்டிகரை வடிவமைத்த பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே கார்பூசியேவின் மாணவர். அகமதாபாத் குகை என அழைக்கப்படும் அவர் வடிவமைத்த இந்தக் கட்டிடம் இந்திய நவீன கட்டிடக் கலைக்கான சான்று.

காந்தி பவன், சண்டிகர்

  • பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள காந்தி பவன் 1962இல் திறக்கப்பட்டது. நீரில் மிதக்கும் மலரைப் போன்றிருக்கும் இதை சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் ஜீன்னெரட் வடிவமைத்துள்ளார்.

நன்றி: தி இந்து (28 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்