TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 21

August 31 , 2022 709 days 456 0

ஆளுமை: புரட்சியாளர் பகத் சிங்

  • சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோரது செயல்பாடுகள் வெவ்வேறுவிதமாக இருந்தாலும், நோக்கம் என்பது ஒன்றாகத்தான் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்கின் பங்களிப்பு அவரை ஒரு புரட்சியாளராக நிலைநிறுத்தியிருக்கிறது.
  • பகத் சிங் பிறந்தபோதே அவரது குடும்பத்தில் பலரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குச் சென்று வந்திருந்தனர். அதனால் தேச விடுதலைப் போராட்டத்தில் மிக இளம் வயதிலேயே பகத் சிங்குக்கும் ஆர்வம் வந்துவிட்டது. உலக வரலாறுகளைப் படித்தார். விளாடிமிர் லெனின், லியோன் ட்ராட்ஸ்கி, மிகையேல் பகுனின் எழுத்துகளை விரும்பினார். ஆரம்பத்தில் காந்தியின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டிருந்த பகத் சிங், பின்னர் மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
  • ஜலியான் வாலாபாக்கில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் கண்டதும் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப்பெற்றதும் புரட்சிகரப் போராட்டத்தை பகத் சிங் தேர்ந்தெடுக்கக் காரணங்களாக அமைந்தன.
  • நவ ஜவான் பாரத சபாவை 1926இல் நிறுவிய பகத் சிங், அதன் செயலாளராகவும் பணியாற்றினார். இந்த அமைப்பு விவசாயிகள், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சி நடத்த அழைப்புவிடுத்தது. பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாடு நடந்தபோது, ‘என் வாழ்க்கையைத் தாய்நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருப்பதால், வேறு எதிலும் ஆர்வம் இல்லை’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, சென்றுவிட்டார்.
  • சுகதேவ், சந்திரசேகர ஆசாத் போன்றோருடன் இணைந்து 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தை' 1928இல் அவர் நிறுவினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டின் உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய தடியடியில் லாலா லஜபதிராய் உயிரிழந்தார். பகத்சிங்கும் அவரது அமைப்பினரும் பெரிதும் மதித்த லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்க முடிவுசெய்தனர்.
  • ஜேம்ஸ் ஸ்காட்டுக்குப் பதிலாக ஜான் சாண்டர்ஸைத் தவறுதலாகச் சுட்டுவிட்டனர். 1929இல் பகத் சிங்கும் பதுகேஷ்வர் தத்தும் ஆங்கிலேயர்களை மிரட்டுவதற்காக டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டை வீசி, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
  • சிறையில் அரசியல் கைதிகளைப் போல் நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பகத் சிங் ஈடுபட்டார். ஏராளமான தலைவர்கள் பகத் சிங்கை சந்தித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். தன் அப்பாவுக்காகவும் தலைவர்களுக்காகவும் 116 நாள்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் பகத் சிங்.
  • பகத் சிங்கின் செல்வாக்கு மக்களிடம் அதிகரிப்பதை அறிந்த ஆங்கிலேய அரசு, சாண்டர்ஸ் வழக்கையும் இந்த வழக்குடன் இணைத்தது. பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. நாடு முழுவதும் இந்தத் தண்டனைக்கு எதிர்ப்பு உருவானது. 1931 மார்ச் 23இல் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன், ‘ஆங்கில ஏகாதிபத்தியம் ஒழிக’ என்றே முழக்கமிட்டார்.
  • இவர்களின் வீரமரணம் லட்சக்கணக்கான இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் எழுச்சியுடன் ஈடுபட வைத்தது. இன்றும் ஒரு புரட்சியாளராக இந்தியர்களின் மனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பகத் சிங்.

கல்வி: பெண் கல்வியை அதிகரிப்பதற்கான திட்டங்கள்

  • பெண்கள் கல்வி கற்பது பெரும்பாதகச் செயலாக கருதப்பட்ட காலகட்டத்தில் சாவித்திரிபாய் புலே, தான் தொடங்கிய பள்ளியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறிப் பெண்களுக்குக் கல்வி புகட்டினார். இப்படியான சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் சுதந்திரத்துக்கு முன்பே பெண்கள் சிறிதளவு கல்விபெறத் தொடங்கியிருந்தனர்.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கப்படும் கல்வி சமமானதாக இருக்க வேண்டியதன் அவசி யத்தை நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பெண் கல்விக்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் வலியுறுத்தின.
  • கோத்தாரி கல்விக் குழு (1964), தேசிய கல்விக் கொள்கைகள் (1968, 1986) ஆகியவை பெண்கல்வியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தன. கல்வியின் மூலமாகவே பெண்களை பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்ற புரிதலை இந்தக் கல்விக் கொள்கைகள் வெளிப்படுத்தின.
  • பாலிகா சம்ருத்தி யோஜனா’ (1997) என்னும் திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
  • 2001இல் 6 முதல் 14 வயதிலான அனைவருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் வகையில் அரச மைப்பில் மேற்கொள்ளப்பட்ட 86ஆம் திருத்தம் இந்தியக் கல்வியில் ஒரு மைல்கல் தருணம். இந்த அரசமைப்பு திருத்தத்துக்கு பிறகான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் கல்வி பெறுவது மென்மேலும் அதிகரித்தது.
  • அனைவருக்கும் கல்வி அளிக்கும் இலக்கை அடைவதற்காக தொடங்கப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (சர்வ சிக்ஷா அபியான்) கீழ் பெண் கல்விக்கென்றே பிரத்யேகமான பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. பெண்களின் தொடக்கக் கல்விக்கான தேசிய திட்டம் (2003) சமூக, பொருளாதாரரீதியாக பிற்பட்ட பெண் குழந்தைகளுக்கு 1-8ஆம் வகுப்புவரை கல்வி அளிப்பதற்கானது.
  • கஸ்தூர்பா காந்தி பால விகாஸ் வித்யாலயா’ திட்டத்தின்கீழ் (2004) பெண் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் பட்டியலின பழங்குடிப் பெண் குழந்தைகளுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
  • 1951இல் இந்தியப் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 8.9% ஆக இருந்தது. இது 2011இல் 65 சதவீதமாக உயர்ந்து, இப்போது 70%ஐக் கடந்துள்ளது. ஆனால் ஆண்களின் எழுத்தறிவு விகிதத்துக்கும் பெண்களுக்கான எழுத்தறிவு விகிதத்துக்கும் இடையே 10 சதவீதத்துக்கு மேல் இடைவெளி உள்ளது. பெண் கல்விக்கான திட்டங்களும் அரசு நடவடிக்கைகளும் மென்மேலும் தேவைப்படுவதை இது உணர்த்துகிறது.

விளையாட்டு: கிரிக்கெட் ‘முதல்’வன்

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் படைத்தது பெரும் சாதனை. கிரிக்கெட் என்றாலே டெஸ்ட் போட்டிகள் என்றொரு காலம் இருந்தது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடப்பது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. கிரிக்கெட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் விளையாடிய காலத்தில்கூட டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன் என்கிற மைல்கல்லை யாரும் எட்டியிருக்கவில்லை.
  • இச்சாதனைனையை முதன்முதலில் கவாஸ்கர் தான் நிகழ்த்திக்காட்டினார். வேகப்பந்து வீச்சு கோலோச்சிய காலத்தில், 1971ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் சுனில் கவாஸ்கர்.
  • உலகில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சுகளை எதிர்கொண்ட வீரர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்கர் விளாசிய 34 சதங்களில் 15 சதங்கள் வேகப்பந்து வீச்சில் கொடிக்கட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்தவைதான்.
  • எண்பதுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் குவிக்க வாய்ப்புள்ள ஒரே வீரராக கவாஸ்கர் மட்டுமே இருந்தார். அந்தச் சாதனையை 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் படைத்தார்.
  • அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 63 (124ஆவது டெஸ்ட் போட்டி) ரன்களைக் கடந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையை கவாஸ்கர் படைத்தார். அந்த மைல்கல்லை எட்டிய பிறகு 125 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளோடு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றார் கவாஸ்கர்.

கலை: பரதம் என்றால் பாலசரஸ்வதி

  • பரதநாட்டியத்தை உலக மேடைகளுக்கு கொண்டு சேர்த்த பெருமை தஞ்சாவூர் பாலசரஸ்வதிக்கு உண்டு. இசை வேளாளர் பரம்பரையில் வந்த வீணை தனம்மாளின் பேத்தி பாலசரஸ்வதி.
  • டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு - மேற்குக் கலைகளின் சந்திப்பு நிகழ்ச்சியில் பாலாவின் நடனம், எடின்பரோவில் நடந்த இசை நாட்டிய விழாவில் பாலசரஸ்வதியின் நடனம் போன்றவை மேற்குலக நாடுகளில் பரதக் கலைக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.
  • அந்த தேசத்து ரசிகர்களுக்கு பாட்டின் மொழி வெளிப்படுத்தும் அர்த்தங்கள் புரியாவிட்டாலும் பாலாவின் அபிநயங்கள், அவரின் கலையோடு உணர்வுரீதியாக ரசிகர்களை ஒன்றவைத்தது.
  • சின்ன மேளம் என்று ஆலயங்களில் இறைவனுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட ஆடற்கலையை, அந்த சம்பிரதாயத்தைச் சிதைக்காமலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமலும் மேடையிலும் நிகழ்த்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பாலா.
  • அந்தக் காலத்தில் பரதநாட்டியத்தில் புகழோடு விளங்கிய கௌரியம்மாள், லட்சுமி நாராயண சாஸ்திரி போன்ற நாட்டிய மேதைகள் பாலசரஸ்வதியின் நாட்டியத் திறமையை பட்டைதீட்டியவர்கள். பிரபல நட்டுவனார் கந்தப்ப பிள்ளையிடம் நேரடியாக பாலசரஸ்வதி நடனம் பயின்றார்.
  • தனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களின் வழியை அப்படியே பிரதிபலிக்காமல், அதில் தன்னுடைய மேதாவிலாசத்தையும் வெகு சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் திறன் படைத்தவர் பாலா. அவருடைய நாட்டியத்தில் பக்தியும் இருக்கும். சிருங்கார ரசமும் இருக்கும். அதனால்தான் அவருடைய கலை இன்றைக்கும் உதாரணமாகப் பேசப்படுகிறது.
  • பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய், பாலசரஸ்வதி குறித்த ஆவணப்படத்தை ‘பாலா’ என்னும் பெயரிலேயே எடுத்துள்ளார். ‘உலகின் உன்னதமான நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவர்’ என்று நியூயார்க் டைம்ஸின் கலை விமர்சகர் அன்னா கஸ்ஸல்கஃப்பால் பாராட்டப்பட்டவர் பாலசரஸ்வதி.
  • பாலசரஸ்வதியின் நடனப் பாணி அவருடைய மகள் லட்சுமி நைட், பேரன் அநிருத்தா வரை அவருடைய குடும்பத்தில் நீண்டிருக்கிறது. இது தவிர, அவரிடம் நேரடியாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்கள், வெளிநாடுகளிலிருந்து அவரிடம் நடனம் கற்றுக் கொண்டவர்கள் என அவருடைய நடன பாணி உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

வளர்ச்சிக்கு வழிகோலிய ஐந்தாண்டுத் திட்டங்கள்

ஐந்தாண்டுத் திட்டங்களை இந்தியா ஏன் தேர்ந்தெடுத்தது?

  • சோவியத் ஒன்றியம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக எட்டியதால் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும் அது வெகுவாக ஈர்த்திருக்க வேண்டும். திட்டமிடலை மேற் கொள்வதன் மூலமே இந்தியாவும் விரைவாகப் பொருளாதார வளர்ச்சி காணும் என்று அவர் நம்பினார்.
  • மற்றவர்களுடன் இது பற்றி விவாதித்தாரா, இல்லையா என்பது தெரியாது, வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் அவசியம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
  • பொருளாதார வளர்ச்சி பெற உள்நாட்டில் மக்களுடைய சேமிப்பும், தொழில்களில் அவர்களுடைய முதலீடும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே முதல் படி என்பதை அவருக்கு விளக்க வேண்டிய கட்டாயம், பொருளாதாரம் படித்த எங்களுக்கு இருந்தது. அப்போது இந்தியாவில் மொத்தமாக மக்களுடைய சேமிப்பு எவ்வளவு என்று கணக்கிட்டதில், தேசிய வருமானத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவுதான் என்பது தெரிந்தது.
  • மிகப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ஐந்து சதவீதம்தான் மக்களுடைய சேமிப்பு என்றால், திட்டக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதம்வரைதான் இருந்திருக்கும். ஆண்டுதோறும் அது முக்கால் சதவீதத்துக்குத்தான் வளர முடியும் என்பது அப்போதைய உலக அனுபவங்களிலிருந்து தெரிந்தது.

சேமிப்பின் முக்கியத்துவம்

  • நாட்டு மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது தெளிவானது. சோவியத் ஒன்றியத்தில் சேமிப்பு 30% ஆக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அரசு ஆட்சியில் இருந்ததாலும் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு எதிரான வழியை அது தேர்ந்தெடுத்ததாலும் பல சவால்களை எதிர்கொண்டது. அதே வேளை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைப் பாணி அரசியல் அமைப்பு இந்தியாவில் கிடையாது. இதைச் சொன்னபோது, ஜனநாயக அமைப்பு முறையிலிருந்து இனி எதற்காகவும் இந்தியா மாறுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் நேரு.
  • திட்டமிடல் தொடர்பான விவாதம் தொடர்ந்தபோது, மக்களின் சேமிப்பு அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால் ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலில் ஒவ்வொரு துறையிலும் முன்னுரிமை அடிப்படையில் சிலவற்றை மேற்கொள்ளவும், சேமிப்பு அளவைப் படிப்படியாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார் நேரு. நம்முடைய நடவடிக்கைகள் மூலம் தேசிய வருமானத்தை உயர்த்தும்போது, அப்படி உயரும் அளவில் 20 முதல் 25 சதவீதம் வரையில் சேமிப்பாக இருப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கலாம் என்று கூறினோம்.

மெதுவாக விரைதல்!

  • இந்த வகையில் முதலாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் தொடக்கத்தில் ஐந்து சதவீத மாக இருக்கும் தேசிய சேமிப்பின் அளவை, திட்டம் முடியும் காலத்தில் ஏழு சதவீதமாக உயர்த்தலாம் என்று கூறினோம். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இதையே 11%, பிறகு மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 15%, 1970களில் 20% என்ற அளவுக்கு உயர்த்தலாம் என்று திட்டமிட்டோம். இந்த வழிமுறை நேருவுக்குப் பிடித்திருந்தது, இதற்கு ‘மெதுவாக விரைதல்’ (Hastening Slowly) என்று பெயர் ஏற்பட்டது.
  • ஐந்தாண்டுத் திட்டங்களைத் தொடங்கிய முதல் 15 முதல் 20 ஆண்டுகள் வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டோம். உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க முடியாததால், இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டன. சேமிப்பும் முதலீடும் மிகவும் குறைவாக இருந்த 1950 களின் தொடக்கத்தில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவு தானியங்களின் விலை உயரும்போது, குறைந்த வருவாய்ப் பிரிவினரை அது வெகுவாக பாதிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தடைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
  • 1970களில் ‘பசுமைப் புரட்சி’ மூலம் முதலில் கோதுமை விளைச்சலும் பிறகு நெல் விளைச்சலும் அமோகமாக உயர்ந்தன, பிறகு எல்லாமே மாறிவிட்டன. அதற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம், திட்டக்குழு நிர்ணயித்த இலக்குக்கு நெருக்கமாக வளர்ச்சி காண ஆரம்பித்தது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘சாதிக்க முடியும்’ என்று நம்பி நாங்கள் இறங்கிய செயலில், எங்களுடைய இலக்கையும் மிஞ்சி சாதித்திருக்கிறோம் என்பது புரிகிறது.
  • இன்றைக்கு (1997) இந்தியாவில் தேசிய சேமிப்பு விகிதம் 25 முதல் 27 சதவீதமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் நம்முடைய தேசிய வருவாயின் வளர்ச்சியும் வேகம் பெற்றுள்ளது. இப்போது தேசியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7% என்கிற அளவில் வளர்கிறது. இது மிகவும் அருமையான வளர்ச்சி. இப்படியே போனால் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தேசிய வருமானம் இரட்டிப்பாகிவிடும்.

பன்முகப் பயன்கள்

  • ஐந்தாண்டுத் திட்ட நடைமுறையை நாங்கள் தொடங்கிய காலத்துடன் ஒப்பிடுகையில் இது திருப்திகரமான வளர்ச்சியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மிகவும் சிக்கலான இந்த காலகட்டத்தில்தான் அரசியல் களத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்கூட சுமுகமாகவே தொடர்ந்தன.
  • சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட அளவுக்கு இங்கே மாநிலங்களுக்கு இடையில் பெரும் மோதல்களும் பிளவு மனப்பான்மையும் உருவாகிவிடவில்லை. பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தபோதிலும், நாடு ஒற்றுமை மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையோடு செயல்பட்டது.
  • அரசாங்கத்துக்குக் கிடைத்த நிதியாதாரம் மிகவும் குறைவு என்பதால், கிடைத்தவற்றை உயர் முன்னுரிமை தேவைப்பட்ட துறைகளில் மட்டுமே செலவிட்டோம். எங்களுடைய உயர் முன்னுரிமைத் துறையாக வேளாண்மை, அதிலும் குறிப்பாக பாசன வசதிகள்தான் இருந்தன.
  • தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்பிய நாங்கள், அதற்கு முதல் தேவை ‘மின்சார உற்பத்தி’ என்று அடையாளம் கண்டோம். இவ்விரண்டுக்கும் சேர்த்துத்தான் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்ட முன்னுரிமை அளித்தோம். நீர்மின்சாரம் தயாரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களுக்காக மிகப் பெரிய அணைகளைக் கட்டினோம்.
  • அவற்றை மின்னுற்பத்திக்கு, பாசனத் தேவைக்கு, நகரங்களின் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு, தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செயல்களுக்கு என்று பல்வேறு பயன்பாடுள்ளவையாகப் பார்த்துக் கொண்டோம். இந்த மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்களைத்தான் இந்தியாவின் ‘நவீனக் கோயில்கள்’ என்று நேரு வர்ணித்தார். முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கணக்கிட்டபோது, கையில் இருந்த நிதியாதாரம் மிகவும் குறைவாக இருந்ததால், ஏற்கெனவே தொடங்கிவிட்ட பக்ரா-நங்கல் போன்ற நீர்மின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
  • முதலாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதிக் காலத்தில், புதிய உருக்காலையை நிறுவவும் திட்டமிட்டு நிதி ஒதுக்கினோம். நேருவிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்த பேராசிரியர் மகலனோபிஸ், கனரகத் தொழிற்சாலைகளை அதிக எண்ணிக்கையில் விரைவாக நிறுவிவிட வேண்டும் என்றார். இதற்கிடையில் இந்தியா வின் ஐந்தாண்டுத் திட்டங்கள் வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்தன.
  • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மூன்று பெரிய உருக்காலைகளை நிறுவ உதவி அளிக்க சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் முன்வந்தன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலேயே, இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆலைகளை நிறுவுவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. ஆசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானைத் தனது கூட்டாளியாகப் பயன்படுத்த அமெரிக்கா முடிவுசெய்துவிட்டதால், அதை ஈடுகட்ட ராணுவத்துக்கான உற்பத்தியை அதிகப்படுத்துவது அவசியமாகிவிட்டது.

முதல் திட்டக் குழு

  • திட்டக் குழு முதல் முறையாக அமைக்கப்பட்ட போது பிரதமர் ஜவாஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, வி.டி. கிருஷ்ணமாச்சாரி, ஜி.எல். மேத்தா ஆகியோர் உறுப்பினர்கள். திட்டத்துக்கான ஒட்டுமொத்த வரையறைகளைத் தீர்மானிப்பது உறுப்பினர்களின் வேலை.
  • ஆனால் திட்டமிடல் என்பதே புதிய துறை என்பதால், பொருளாதாரத்தில் நமக்குள்ள நிதி - இதர ஆதாரங்கள், சவால்கள், செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் சாதனங்கள் ஆகியவை குறித்து குழு உறுப்பினர்களுக்கே விவரித்தாக வேண்டிய கடமை, பொருளாதாரம் படித்த என்னைப் போன்ற சுமார் 20 தொழில்முறை நிபுணர்களுக்கு ஏற்பட்டது.
  • திட்டக் குழு அப்போது மிகவும் சிறியதாக இருந்தது. திட்டக் குழு உறுப்பினர்களைத் தவிர என்னைப் போன்ற 20 தொழில்முறை நிபுணர்கள் மட்டுமே இருந்தோம். திட்டக் குழுவுக்கென்று தனி அலுவலகம் இல்லை, குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதியிலேயே அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
  • பொருளாதாரப் பிரிவில் ஜே.ஜே. அஞ்சாரியா, டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி (பின்னாளில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்தார்), டாக்டர் ஐ.எஸ். குலாத்தி (இப்போது கேரள மாநில திட்டக்குழு துணைத் தலைவர்), ஆகியோருடன் நானும் இருந்தேன்.
  • பேரியியல் பொருளாதாரத் திட்டமிடலை நாங்கள் மேற்கொண்டு, வெவ்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி என்று ஒதுக்குவோம். எங்களைப் போலவே இருந்த வேறு குழுக்கள் விவசாயம், மின்னுற்பத்தி போன்றவை குறித்துத் தீர்மானிக்க உதவின. இவையெல்லாவற்றையும் இணைத்து விரிவான அளவில் திட்டமிடல் நடந்தது.

நன்றி: தி இந்து (31 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்