மகளிர்: பெண்களுக்கான மாபெரும் தொழிற்சங்கம்
- பெண்களைத் தொழிலாளர் பட்டியலில் வைக்கவும் வீட்டு வேலைகளில் செலவிடப்படும் அவர்களது உழைப்பை நாட்டின் வளர்ச்சிக் குறியீட்டில் கணக்கில்கொள்ளவும் இப்போதும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன.
- ஆனால், உழைக்கும் பெண்களின் உரிமைக்காக 1960களில் களமிறங்கியவர் இலா பட். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர், சமூக சேவகர்.
- காந்தியின் அகிம்சை, தற்சார்பு உள்ளிட்ட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பழமையான தொழிற்சங்கமான ஜவுளித் தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவில் 1955இல் இவர் இணைந்தார்.
- பிறகு அதன் பெண்கள் பிரிவுக்குத் தலைமை வகித்தார். பீடி சுற்றுவது, நெசவு, தையல், சுள்ளி பொறுக்குதல் - குப்பை சேகரிப்பது போன்ற முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவர்கள் பணம் படைத்தவர்களாலும் முதலாளிகளாலும் உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுவதை அறிந்தார்.
- அதிகக் கடன் சுமையால் குடும்பத்தில் அனைவருமே காலம் முழுக்க உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தார். இதுபோன்ற பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான தொழிற்சங்கத்தை (Self Employed Women’s Association – SEWA) 1972இல் அமைத்தார். இது 1990களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவில் பெண்களுக்கான மிகப் பெரிய தொழிற்சங்கமாக வலுப்பெற்றது.
- அதிகாரம் இல்லாததுதான் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கான காரணம் என்று சொன்ன இலா பட், பெண்களை அதிகாரப்படுத்துவது அவசியம் என்றார். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான முதல் கூட்டுறவு வங்கி 1974இல் அமைய காரணமாக இருந்தார். இந்தியத் திட்டக் குழுவின் உறுப்பினராக (1989 – 1991) இருந்தார். பெண்களுக்கான உலக வங்கியை (Women’s World Bank) 1980இல் உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.
அறிவியல்: விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்
- சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் 1961இல் விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்னும் பெருமையைப் பெற்றார். இது நடந்து 23 ஆண்டுகள் கழித்து, விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் முயற்சியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்தியாவின் தடத்தை விண்வெளியில் பதித்தவர் ராகேஷ் சர்மா.
- சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் 1984 ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் ராகேஷ் சர்மா. அதற்குப் பிறகு இப்போதுவரை இந்தியக் குடிநபர் எவரும் விண்வெளிக்குச் செல்லவில்லை.
- ராகேஷ் சர்மா சோயுஸ் டி-11 விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றபோது அவருடைய வயது 35. விண்வெளியிலிருந்த சால்யுட் - 7 விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் புவி அறிவியல், உயிரி மருத்துவம், உலோகவியல் ஆகியவை சார்ந்து அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நிறப்பிரிகை கேமராவைக் கொண்டு இந்தியாவை அவர் எடுத்த ஒளிப்படங்கள் மதிப்புமிக்கவை. விண்வெளியில் 13 ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.
- ராகேஷ் சர்மா விண்வெளியில் 7 நாட்கள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்தார். விண்வெளியிலிருந்தபோது ராகேஷ் சர்மாவுடன் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் உரையாடியது வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வு. ’இந்தியா எப்படிக் காட்சியளிக்கிறது’ எனப் பிரதமர் அவரிடம் கேட்டார். அதற்கு ராகேஷ் சர்மா ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்று பதிலுரைத்தார். உலகில் இந்தியாவே சிறந்ததாகக் காட்சியளிக்கிறது என்பது அதன் அர்த்தம்.
கல்வி : அடிப்படை உரிமையான கல்வி
- இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசமைப்பின் கூறு 45இல் கூறப்பட்டுள்ளது.
- இதற்கான பயணத்தில் 2002இல் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட 86ஆம் திருத்தம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக இந்திய அரசமைப்பின்படி 6 வயது முதல் 14 வயதிலான குழந்தைகளுக்குக் கல்வி என்பது அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது. அதே நேரம் இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் 86ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- அதன்படி 2005இல் கல்வி உரிமைச் சட்டத்துக்கான வரைவு தயாரிக்கப் பட்டது. இதையடுத்து கல்வி உரிமைச் சட்டம் என்றழைக்கப்படும் இலவச - கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவேறியது.
- இந்தச் சட்டம் 6 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகள் பள்ளியில் இல்லாமல் இருந்தால், அவர்கள் வயதுக்குரிய வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கு வழிவகை செய்தது. மேலும் இந்த வயதுப் பிரிவினர் இலவசமாக கட்டாயக் கல்வி பெறுவதை உறுதிசெய்வதற்கு மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆகியோரின் கடமைகளும் பொறுப்புகளும் இந்தச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
- இந்தச் சட்டத்தின் மூலம் 6 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகள் தமது அருகமைப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதையும் அவர்கள் வயதுக்குரிய கல்வியை நிறைவுசெய்வதையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமையானது. அரசுப் பள்ளிகளில் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணமோ பிற கட்டணங்களோ வசூலிக்கப்படக் கூடாது.
- கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் எந்தக் குழந்தையும் கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதும் அரசின் கடமை. எனவே, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களைப் பொருளாதாரரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்திவிடும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த 25% ஒதுக்கீடு விதி பொருந்தாது என்று 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- அரசமைப்புச் சட்டத்தின்படி கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்கி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும் இந்தியக் குழந்தைகள் அனைவரும் தமது வயதுக்குரிய கல்வியைப் பெற்றிருப்பது இன்னும் முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை.
பெயர்பெற்றது தமிழ்நாடு
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மதராஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த மாநிலம் தமிழ்நாடு என்று மாறியது, வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணம், மதராஸ் மாநிலம் என்று மாறியது. இன்றைய ஆந்திரம், கேரளம், கர்நாடகப் பகுதிகள் மதராஸ் மாநிலத்தில் இருந்தன. ஆனால், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளுக்குப் பிறகு தெலுங்கு மொழி பேசும் பகுதிகள், ஆந்திர மாநிலமாக 1953இல் பிரிக்கப்பட்டன.
- பிறகு மலையாளம் பேசும் பகுதிகள் கேரள மாநிலமாகவும், கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாநிலமாகவும் 1956இல் பிரிக்கப்பட்டன. எஞ்சிய தமிழகப் பகுதி, மெட்ராஸ் மாநிலம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
- மெட்ராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 1956இல் விருதுநகரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை தீவிரமாக எழுந்தது.
- திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம் போன்ற தலைவர்கள் இதற்காகக் குரல் கொடுத்துவந்தனர். இதேபோல 1957இல் இக்கோரிக்கையை வலியுறுத்தி திமுக, 1961 இல் சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது காங்கிரஸ் அரசு அவற்றைத் தோற்கடித்தது. 1961இல் நாடாளுமன்றத்தில் திமுக தனி மசோதா கொண்டு வந்தபோதும், அது நிராகரிக்கப்பட்டது.
- 1967இல் அண்ணாதுரை தலைமையில் திமுக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகுதான், அதற்கான காலம் கனிந்தது. அதே ஆண்டு ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அத்தீர்மானம் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பர் 1இல் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக 1969 முதல் மதராஸ் மாநிலம் என்கிற பெயர் தமிழ்நாடு என்று முறைப்படி மாறியது.
நன்றி: தி இந்து (04 – 09 – 2022)