TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 25

September 5 , 2022 704 days 372 0

பெருந்தமிழ்த் தொண்டர்

  • வ.உ.சிதம்பரனாரை ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவே அறிந்திருப்போம். தமிழறிஞர், தமிழ் இலக்கண இலக்கியத் துறையிலும் செயல்பட்டவர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற அவருடைய பன்முக ஆளுமைக் குறித்து அறிந்திருப்பவர்கள் வெகு சிலரே.
  • உலகின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை வரைந்த இளம்பூரணர், திருக்குறளுக்கு முதன்முதலில் ஒரு நல்லுரை தந்த மணக்குடவர் போன்ற உரையாசிரியர்கள் மீது வ.உ.சி.க்குப்பெரும் ஈடுபாடு இருந்தது.
  • அவருடைய கூர்த்த அறிவால் அந்த இலக்கண, இலக்கிய நூல்களைச் செம்மைப்படுத்திக் கிடைக்கப்பெற்றதே தொல்காப்பிய எழுத்ததிகாரம், பொருளதிகாரம் உரைகள், மணக்குடவரின் திருக்குறள் உரை ஆகியவையாகும்.
  • திருக்குறளில் அறத்துப் பாலை மணக் குடவர் உரையோடு செம்மைப்படுத்தி 1917இல் வெளியிட்டார். அவருடைய கையெழுத்துப் படிகளின் வழியாக அவர் மறைவிற்குப் பின்னர் பொருட்பால், காமத்துப்பால் உரையும் வெளியானது.
  • வ.உ.சியின் இலக்கண, இலக்கிய உரைகள் அவருடைய ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகின்றன. அவர் பொருள் கூறும் விதம், பல்வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என படிக்கும்போது அறிய முடிகிறது.
  • பன்முகத் தமிழ்ப் பணி: ஏற்ற இறக்க வாழ்க்கைச் சூழலிலும் தமிழ் மொழிக்கு வ.உ.சி. ஆற்றியப் பணிகளில் குறைவில்லை. 1908இல் சிறைப்படுத்தப்பட்ட வ.உ.சி. செக்கிழுத்துப் பல துன்பங்களை எதிர்கொண் டார். அவர் வெளியே வந்தபோது அன்றைய அரசியல் உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. வறுமை ஆட்கொண்டது.
  • சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் சில காலம் வணிகம் செய்தும், சில காலம் ஒரு நிறுவனத்திலும், சில காலம் கோவில்பட்டியில் வழக்குரைஞராகவும் பணியாற்றினார். வறுமையிலிருந்து மீளாதபோதும் பொது வாழ்வைத் தொய்வின்றித் தொடர்ந்தார். வ.உ.சி. நான்கு நூல்களை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அனைத்தும் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை, அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவை.
  • விவேகபானு’, ‘இந்து நேசன்’, ‘தி நேஷனல்’ போன்ற பத்திரிக்கைகளுக்கு வ.உ.சி. ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இரத்தினக் கவிராயர் எழுதிய ‘இன்னிலை’ நூல், ‘சிவஞான போதம்’, ‘திருக்குறள்’ ஆகிய நூல்களுக்கு வ.உ.சி விளக்கவுரை எழுதியுள்ளார்.
  • அவர் இயற்றிய முதல் மூன்று நூல்களும் 1914-15ஆம் ஆண்டுகளில் எழுதப் பட்டவை. கண்ணனூர் சிறை யில் இருந்தபோது எழுதியவை ‘மெய்யறம்’, ‘மெய்யறிவு’. இவை திருக்குறளின்வழி வந்த நூல்கள் எனலாம். வெவ்வேறு காலத்தில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பு ‘பாடல் திரட்டு’.
  • அவருடைய இறுதி நூல் வாழ்க்கை வரலாறு. 1916 முதல் 1930 வரை அவருடைய குடும்பம், இளைமைக் காலம், சட்டக் கல்வி, பொதுவாழ்க்கை, சிறைவாழ்க்கை என பல செய்திகள் இதில் அடங்கியுள்ளன. அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 1946இல் இது வெளியானது.
  • வாழ்வின் இறுதி நாட்களில், தன் வீட்டில் அன்றாட இலக்கியச் சொற்பொழிவு களுக்கு ஏற்பாடு செய்துவந்தார். ‘தூத்துக்குடி சைவசித்தாந்த சபை’ என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம் தொடர்பான சொற் பொழிவுகளை இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்திவந்தார்.
  • பெரியார் நட்பு: மொழிப்பற்று வழிதான் நாட்டுப்பற்று உருவாகும்; அதனால் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; காங்கிரஸ் மேடைகளிலும் அவ்வாறே பேசிவந்தார்.
  • வ.உ.சி.யின் வாழ்க்கையும் சமூக நோக்கமும் பெரியாரை பெரிதும் ஈர்த்திருக்கின்றன. ‘பெரியாரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும்’ என்று நாகப்பட்டினத்தில் 1928 பேசிய வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் 1908 முதல் அறிமுகமும் நட்பும் இருப்பதை உணரமுடிகிறது.
  • நாட்டின் விடுதலைக்காக குடும்பத்தோடு நாசமடைந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் வ.உ.சிதம்பரனார் அவர்களேயாகும். வங்காளத்தில் ஏற்பட்ட சுதந்திர உணர்ச்சி இயக்கம் காரணமாக, நம் நாட்டிலும் துணி கொளுத்தப்பட்டது.
  • ஆனால் நமது வ.உ.சி. அவர்கள் இது மட்டும் போதாது என்று வெள்ளையர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடுசெய்தார்” என்று பெரியார் பேசியுள்ளார்.
  • செல்வாக்காக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936) தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் தமிழ்த் தொண்டை மறவாதிருப்போம்.

வ.உ.சி. 150 - தெற்கில் எழுந்த சுதேசித் தீ

  • தென் தமிழகத்தின் திருநெல்வேலி-தூத்துக்குடி பகுதிகளில் நடந்த 1858 கலவரம், 1895 சிவகாசி கலவரம், அதன் நினைவுகளை உயிர்ப்பித்த 1957 முதுகுளத்தூர் கலவரம் என சாதி, மத, இனங்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக நிகழ்ந்த கலவரங்கள் வரலாற்றில் ஆழப்பதிந்தவை.
  • இப்படியான கலகங்கள் விளைந்த பூமியி லிருந்து, இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தென்தமிழகத்திலிருந்து ஒலித்த ஓர் உரத்த குரலாக, வ.உ.சி. மூட்டிய சுதேசித் தீயின் விளைவால் 1908இல் நிகழ்ந்தது ‘திருநெல்வேலி எழுச்சி’. இது பெரிய மக்கள் எழுச்சி.
  • ஆனால் ஆங்கிலேயர்களோ இதனை அவர்களுடைய ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான கிளர்ச்சியாகவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் கருதியதால் ‘கலகம்’ (riot) என்றே குறிப்பிட்டனர்; இதன் பொருளை ஆராயாமல் வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே வழங்கிவருகின்றனர்.
  • ஆனால், தன்னியல்பாக ஏற்பட்டதெனினும் அரசியல் உணர்வுடன் ஏற்பட்ட நிகழ்வு என்பதால் விடுதலைப் போராட்டப் பின்னணியில் இதனை விளக்க ‘எழுச்சி’ என்ற சொல்லே சரியானதும் பொருத்தமானதும் ஆகும் என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
  • கலகங்கள் அனைத்துக்கும் வலுவான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் இருக்கவே செய்யும். சமூக அசைவியக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
  • அந்தவகையில், திருநெல்வேலி எழுச்சியை முன்வைத்து சலபதி மேற்கொண்ட ஆய்வான ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ (காலச்சுவடு வெளியீடு), ஏராளமான சான்றுகளைக் கொண்டு அதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது.

வ.உ.சி.யும் சுதேசி இயக்கமும்: 1885இல் பம்பாயில் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், அதன் ஆரம்ப ஆண்டுகளில் அரங்குக்குள்ளே இருந்தது. ஆயினும், விரைவில் வங்காளத்திலும் ஓரளவு மகாராஷ்டிரத்திலும் வெகுமக்களை எட்டத் தொடங்கியது.

  • 1905இல் வங்காளப் பிரிவினை, 1906 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாடு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுந்த சுதேசி இயக்கம் சுயராஜ்ஜியம், அந்நியப் பொருள் விலக்கு, தேசியக் கல்வி என பரந்துபட்ட மக்களைச் சென்றடையும்வகையில் பேரியக்கமாக வளரத் தொடங்கியது.
  • வங்காளம், மராட்டியம், பஞ்சாப் ஆகிய இடங்களில் சுதேசி இயக்கம் ஓரளவுக்கு வலுவாக இருந்தது. அக்காலம்வரை இச்செயல்பாடுகள் பரவலாகியிருக்காத சென்னை ‘இருண்ட மாகாணம்’ எனப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், ‘வராது வந்த மாமணி’யாக, இந்தியப் பெருநாடே வியப்பும் மலைப்பும் மேலோங்க அண்ணாந்து பார்க்கும் வகையில் ஒரு பெரும் சுதேசிய முன்னெடுப்பை வ.உ.சி. தொடங்கினார்.
  • உள்நாட்டு முதலீட்டில் சுயசார்புடன் கூடிய தொழில் முயற்சிகளின் மூலம் மூலதனம் திரட்ட இயலாத நிலை தொடர்ந்தாலும், பிரிட்டிஷ் முதலீட்டுக்குப் போட்டியாகச் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார் வ.உ.சி. இத்தகைய பெருமுற்சியைச் செயல்படுத்தும் எண்ணம் எப்படி அவருக்கு ஏற்பட்டது என்பது விளக்க முடியாத புதிராக இன்றும் உள்ளது என்கிறார் சலபதி.
  • வாடகைக் கப்பல் முயற்சியாகத் தொடங்கியது, 1906 அக்டோபரில் ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்’ என்ற பதிவுபெற்ற கம்பெனியானது. இந்த முயற்சியில் கடும்முனைப்புடன் செயல்பட்ட வ.உ.சி. அதற்குப் பங்குகள் சேர்க்கும் நோக்கில் சென்னை, கடலூர், தஞ்சை, மதுரை, சேலம் முதலான மாவட்டங்களுக்கும் கொழும்புவுக்கும் பயணம் மேற்கொண்டார்.
  • வ.உ.சி. செல்லுமிடங்களில் எல்லாம் பல சொற்பொழிவுகளைத் தமிழில் ஆற்றத் தொடங்க, மக்கள் சார்ந்த ஒரு வெகுஜன அரசியல் இயக்கமாகச் சுதேசி இயக்கம் உருப்பெறத் தொடங்கியது.
  • 1907 டிசம்பர் முடிவில் சூரத் காங்கிரஸ் மாநாட்டில், புதுக் கட்சியினர் என்று அழைக்கப்பட்ட திலகரின் தலைமையிலான தீவிரப் பிரிவினரின் கை ஓங்கியது. இம்மாநாட்டுக்குப் பாரதி, சக்கரை செட்டியார் முதலிய பேராளர்களுடன் சென்ற வ.உ.சி. வலுப்பெற்ற எண்ணங்களுடன் அவர்களின் தலைவராகத் தமிழகம் திரும்பினார்.
  • இதன் விளைவாக, 1908 பிப்ரவரியில் தூத்துக்குடிக் கடற்கரையில் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவரையும் தவிர பத்மநாப ஐயங்கார், சோமசுந்தர பாரதியார், சூசை பர்னாந்து ஆகியோரும் உரையாற்றினர். தமிழ்ப் பொதுமக்கள் சாதி, மத, வர்க்க அடையாளமின்றி இவ்வாறு பெருமளவில் அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டது இதுவே முதல்முறை.

எதிர்வரும் எழுச்சி: தூத்துக்குடியிலிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தம் செய்தனர். நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி பகுதியின் இணை மாஜிஸ்திரேட்டாக இருந்த ராபர்ட் ஆஷுடன் வ.உ.சி. நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  • கடும் முரணை உருவாக்கிய இந்த நேர்ச்சந்திப்பின் விளைவாகத் தொழிலாளரின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன. மார்ச் 7 அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் தூத்துக்குடி முகவர்களான ஏ.அண்டு எஃப். சகோதரர்கள்தான் கோரல் ஆலையின் நிர்வாக முகவர்களும் என்பதால், இந்தத் தோல்வி அவர்களைக் கொதிப்படையை வைத்தது.
  • இந்தப் பின்னணியில்தான், வங்காளத்தின் முக்கிய சுதேசி இயக்கத் தலைவரான விபின் சந்திர பால் ஆறு மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு 1908 மார்ச் 9 அன்று வெளியேறும் நாளைச் சுயராஜ்ஜிய நாளாகக் கொண்டாடச் சுதேசிய இயக்கத்தினர் முடிவெடுத்தனர்.
  • ஆனால், மாவட்ட ஆட்சியர் விஞ்ச், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்கீழ் இக்கூட்டத்துக்குத் தடைவிதித்தார்; மார்ச் 9ஆம் தேதி காலை திருநெல்வேலியில் ஆட்சியர்முன் ஆஜராகுமாறு வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோருக்கு 8ஆம் தேதி மாலை அறிவிப்புத் தரப்பட்டது. இந்த அறிவிப்புக் கிடைத்த உடனே தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4,000 பேர் கலந்துகொண்டர்.
  • உணர்ச்சி வெள்ளம் பாய்ந்த அந்தக் கூட்டத்தைப் பற்றிப் பதிவுசெய்த காவல் அதிகாரி, மக்களின்மீது வ.உ.சி. செலுத்திய செல்வாக்கு ‘அசாதாரணமானது’ என்று எழுதினார்.
  • மறுநாள், மூவரும் ஆட்சித் தலைவருக்கு முன்னால் நின்றனர். விசாரணை முடிந்ததும், விபின் சந்திர பாலின் விடுதலை நாளைச் சிறப்புறக் கொண்டாடி, வ.உ.சி.யும் சிவாவும் உரையாற்றினர். தூத்துக்குடியில் தடைசெய்த விழாவைக் கலெக்டரின் கண்ணெதிரில் கொண்டாடினர்; அதோடு நிற்காமல், மார்ச் 10 அன்று காலை தூத்துக்குடியில், முந்தைய நாள் தடைசெய்யப்பட்டிருந்த விழாவையும் கொண்டாடினர்.
  • கொண்டாட்டம் முடிந்து வ.உ.சி. முதலான மூவரும் நெல்லை திரும்பி, மீண்டும் ஆட்சியர்முன் ஆஜராகினர். விசாரணையின் முடிவில், மார்ச் 12 பிற்பகல் 4 மணிக்கு வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரையும் கைதுசெய்ய விஞ்ச் உத்தரவிட்டார். உடனே அவர்கள் பாளையங்கோட்டைச் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஆய்வு வெளிச்சம்... அடுத்த நாள்...” என்று முடியும் முதல் அத்தியாயத்தைத் தொடர்ந்து விரியும் அத்தியாங்களில், வரலாற்று ஆதாரங்கள் எனும் விளக்கின் ஒளியில், இந்த எழுச்சியின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் சலபதி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசிய இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

  • இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. ஒன்றுதிரண்ட மக்கள் அரசு சொத்துகளை அழித்தனர். துப்பாக்கிச்சூடு நடந்தது. நால்வர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ நூறு பேரின் மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பெரும்பாலானோர் தண்டனைபெற்றனர். திமிர்வரி விதித்து, ஆறு மாதங்களுக்குத் தண்டக் காவல் படையினையும் நிறுத்தி அனைத்து மக்களையும் அரசாங்கம் தண்டித்தது.
  • அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகம் காணாத இந்த எழுச்சியைத் தேசிய ஆவணக்காப்பகம், நேரு நினைவு நூலக ஆவணங்கள் உதவியுடனும் கள ஆய்வுகள்வழி எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்திருக்கும் சலபதி, எழுச்சியின் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகத் திகழும் “திருநெல்வேலி எழுச்சியை நினைவுகூரவோ அதில் கலந்துகொண்டு இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவோ ஆளில்லாமல் போய்விட்டார்கள்.
  • திருநெல்வேலி எழுச்சிக்கும் அதில் பங்குகொண்டு உயிரும் உடைமையும் வாழ்வும் இழந்தவர்களுக்கும் ஒரு நினைவுச் சின்னம்கூட இல்லை. வரலாற்று நினைவின்மை என்பதுதான் எவ்வளவு கொடுமை,” என்று வெதும்புகிறார் சலபதி. வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டு நிறைவின்போதாவது, இந்த வரலாற்று அக்கறையின்மையை போக்கிக்கொள்ளுமா அரசு?

நன்றி: தி இந்து (05 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்