TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 3

August 13 , 2022 726 days 403 0

ஆளுமை - வெள்ளையனே வெளியேறு' மக்களிடம் சேர்த்தவர்

  • படித்தவர்கள் நிறைந்த, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அருணா, கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆசஃப் அலியைச் சந்தித்தார்.
  • 19 வயதில், தன்னைவிட 21 வயது மூத்தவரான ஆசஃப் அலியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அருணா திருமணம் செய்துகொண்டார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியவர், உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறை சென்றார். இவருக்குப் பிணை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது.
  • 1931ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதும், அருணா விடுவிக்கப்படவில்லை. இந்தச் செயல் ஆங்கிலேய அரசுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியது. அருணாவின் விடுதலைக்காகச் சிறையிலிருந்த பெண்கள் போராட்டம் நடத்தினர்.
  • காந்தியும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அருணாவை வெளியே கொண்டுவந்தார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அருணா, கைதிகளை மோசமாக நடத்தியதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாகச் சிறையில் கைதிகளை நடத்தும் விதம் மேம்பட்டது.
  • சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அருணாவின் போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது. 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன், முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. 33 வயது அருணா, மும்பையில் உள்ள கோவாலியா மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
  • இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று மக்கள் உரக்க முழங்கினர். அருணாவைப் பிடித்துக் கொடுத்தால், சன்மானம் வழங்குவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • வெற்றிகரமாகத் தப்பிச் சென்ற அருணா, தலைமறைவு வாழ்க்கையில் ஆங்கிலேயே அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.
  • 'இன்குலாப்' என்ற பத்திரிகையைக் கொண்டுவந்தார். வானொலியில் உரையாற்றினார். சோசலிச தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, எடதாதா நாராயணன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு அருணாவுக்குக் கிடைத்தது. அருணாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளிவரச் சொன்னார் காந்தி.
  • நாட்டு விடுதலைக்குப் பிறகு பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் அருணா கவனம் செலுத்தினார். 1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராகப் பொறுப்பேற்றார்.
  • விரைவிலேயே அந்தப் பொறுப்பைத் துறந்து, சமூக மாற்றத்துக்கான பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1964ஆம் ஆண்டு சர்வதேச லெனின் அமைதி விருதைப் பெற்றார்.

வெள்ளித்திரையில் சுதந்திரப் போராட்டம்

  • இந்திய சினிமா நூற்றிப் பத்து வயதை நெருங்கிவிட்டது. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கைச் சித்திரங்களும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் பல மொழிகளில் வெளியாகியுள்ளன.
  • பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டிருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரத்தையும் தியாகத்தையும் வெகுஜனத் திரையில் பதிவுசெய்தது சோரப் மோடி இயக்கித் தயாரித்த ‘ஜான்சி கி ராணி’ (1953). 1958இல் வெளியான வங்க மொழிப் படம் ‘பாகா ஜதீன்’ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜதீந்திரநாத்தைப் பற்றியது.

தமிழ் சினிமாவின் பெருமிதம்

  • கறுப்பு-வெள்ளை காலத்தில் விடுதலை வேள்விக்கு தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகளைப் பற்றிய பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக தேசியவாத சிந்தனைகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவரான சிவாஜி கணேசன், இதுபோன்ற படங்களில் பெருவிருப்பத்துடன் நடித்தார்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் ஆங்கிலேயர்களை பகைத்துக்கொண்டதால் தூக்குமேடை ஏறிய பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்குத் திரையில் சிவாஜி புத்துயிர் அளித்தார். கட்டபொம்மனிடம் வரி கேட்கும் ஜாக்சன் துரையைப் பார்த்து ஆவேசமான குரலில் “எம்மோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா..” என்று தொடங்கி அவர் பேசும் நெடிய வசனம், தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்த ஒன்று.
  • கப்பலோட்டிய தமிழன்’ (1961) திரைப்படத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உசிதம்பரனாரை கண்முன் நிறுத்தினார். தமிழகம் மறந்துவிட்ட ‘பெரும் தமிழர்' வ.உ.சியின் போராட்டம் ஓரளவுக்காவது பொது வெளியில் நினைவிருக்கிறது என்றால், அதற்கு இந்தத் திரைப்படமும் முக்கியக் காரணம்.
  • கவியரசர் கண்ணதாசன் தயாரித்த ‘சிவகெங்கை சீமை’ (1959), மருது சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெரிய மருது, சின்ன மருதுவின் தியாகத்தைப் பதிவுசெய்தது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றறியப்படும் சிப்பாய்க் கலகத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தியாகங்களும் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டன என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் மருது சகோதர்களின் வரலாற்றில் இருக்கின்றன. அதை அனைவருக்கும் கொண்டுசேர்த்தது இந்தப் படைப்பு.

விருது வென்ற திரைப்படங்கள்

  • இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக ஆதிவாசிகளையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி மறைந்திருந்து தாக்கும் கெரில்லாப் போரைக் கையிலெடுத்த பழங்குடித் தலைவர் அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தெலுங்குப் படம் ‘அல்லூரி சீதாராம ராஜு’ (1976). கிருஷ்ணா நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், நந்தி விருதையும் வென்றது.
  • கேத்தன் மேத்தா இயக்கிய ‘சர்தார்’ (1994), மகாத்மா காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவியேற்று இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கையைப் பதிவுசெய்தது.
  • ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ’ (2004) என்னும் இந்திப் படம், இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கைச் சித்திரம்.
  • தன்னுடைய புரட்சிகரக் கவிதைகளால் மக்கள் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ (2000), சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. ‘தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங்’ (2002) பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்டு தூக்குதண்டனை பெற்ற புரட்சி வீரர் பகத் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்தப் படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
  • கேத்தன் மேத்தா இயக்கத்தில் ஆமிர் கான் நாயகனாக நடித்திருந்த ‘மங்கள் பாண்டே: தி ரைஸிங்’ (2005), 1857இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிவந்த இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டு போரிட்ட சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு முக்கியப் பங்களிப்பைச் செலுத்திய மங்கள் பாண்டேயின் சாகசங்களை பதிவுசெய்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய ‘பழசிராஜா’ (2009), கிழக்கிந்திய கம்பெனி விதித்த அநியாய வரிக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் புரிந்த கோட்டயம் அரசர் கேரள வர்மா பழசிராஜாவைப் பற்றிய மலையாளப் படம்.
  • இதில் மம்முட்டி நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

தவறவிடப்பட்ட வாய்ப்புகள்

  • பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்களைத் திரட்டி அகிம்சை வழியிலான போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று நாம் அழைத்தாலும், அவருடைய தன்னிகரற்ற வாழ்க்கையை திரைப்படமாகப் பதிவுசெய்த பெருமை ரிச்சர்ட் அட்டன்பரோ என்னும் ஆங்கிலேய இயக்குநருக்கே கிடைத்தது. பென் கிங்ஸ்லி காந்தியாக வாழ்ந்திருந்த ‘காந்தி’ (1982) எட்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
  • கரோனா ஊரடங்குக் காலத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘சர்தார் உதம்’, ஜலியான்வாலா பாக் படுகொலை நிகழ்வுக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர் மைக்கேல் ஓ ட்வையரை லண்டனுக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து பழிதீர்த்த சோஷலிஸப் புரட்சியாளர் சர்தார் உதம் சிங்கை அனைவருக்கும் தெரியவைத்த சிறந்த வெகுஜனப் படைப்பு.
  • திரைப்படத் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி 1919இல் பஞ்சாப் மாகாணத்தின் ஜலியான்வாலா பாக்கில் பல அப்பாவிகள் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை நேரில் கண்டது போன்ற அதிர்ச்சியையும் வலியையும் உணரவைத்த திரைப்படம் இது. பிரிட்டிஷார் மீதான வெறுப்பை முன்வைக்கிறது என்று இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு கூறியதால், இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படவில்லை.

சினிமாவில் போராட்ட நிகழ்வுகள்

  • சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை கதைக் கருவாகவோ சில காட்சிகளாகவோ பயன்படுத்திக்கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன: சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தில் ஒரு நாடகக் காட்சியில் கொடி காத்த குமரனின் தியாகத்தை நினைவூட்டினார்.
  • பிரியதர்ஷன் இயக்கிய ‘காலாபானி’/’சிறைச்சாலை’ (1996) அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம் செறிந்த பின்னணியையும் சிறையில் அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளையும் உயிர்ப்புடன் பதிவுசெய்தது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ (1996) திரைப்படத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போரிட்ட தமிழராக கமல் ஹாசன் நடித்திருந்தார்.
  • இந்திய தேசிய ராணுவத்தினருடன் நேதாஜி இருப்பது போன்ற நிஜக் காணொளித் துணுக்குகள் படத்தில் இடம்பெற்றன. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஆமிர் கான் நடித்த ‘ரங் தே பஸந்தி’ (2006) திரைப்படத்தில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சிப் படையினரின் தியாக நிகழ்வுகள் காட்சிகளாக இடம்பெற்றன
  • இன்னும் பல இந்தியத் திரைப்படங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றையும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் பதிவுசெய்துள்ளன. இன்னும் அறியப்படாத பல தியாகிகளும் சொல்ல விடுபட்ட நிகழ்வுகளும் திரைப்படமாக்கப்படாமல் இருக்கின்றன.
  • இன்றைய இளம் இயக்குநர்கள் இது போன்ற திரைப்படங்களை படைக்க முன்வர வேண்டும். அவற்றின் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் மகத்துவத்தை இன்னும் பலர் உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். படைப்பாளிகள் நாட்டுக்கு ஆற்றும் சிறந்த பங்களிப்பாகவும் அது அமையக்கூடும்.

 கலை: இசையின் அரசி

  • இந்த இசை அரசிக்கு முன்னால், நான் சாதாரண பிரதம மந்திரி’ என்றார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகளாவிய சிம்மாசனத்தில் கர்னாடக இசையை அமர்த்திய பெருமைக்கு உரியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
  • பாடலைப் பாடுவது என்பது வேறு, மனம் ஒன்றிப் பாடுவது என்பது வேறு. ஒன்றிப் பாடுவது என்பதில்தான் கலைஞனும் கலையும் இரண்டறக் கலக்கும் அதிசயம் நடக்கும்.
  • இந்த அதிசயமான உணர்வுக்கு வாழும் உதாரணமாக நம்முன் வாழ்ந்தவர் எம்.எஸ். அவரின் சமரசமில்லாத அர்ப்பணிப்பான சங்கீதம்தான், பிரதமரையும் பாமரனையும் ஒருங்கே ரசிக்க வைத்தது. அவர்களுக்கான இசை அரசியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கொண்டாட வைத்தது.
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி பத்து வயதிலேயே கிராமபோன் இசைத் தட்டில் பாடி சாதனை படைத்தார். இசை உலகில் உயரிய கௌரவமான மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற்ற முதல் பெண் கலைஞர் என்னும் புகழும் இவருக்கு உண்டு.
  • ஐக்கிய நாடுகள் அவையிலும், எடின்பரோ இசை விழாவிலும் பாராட்டப்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. தன்னுடைய அசாத்தியமான பாடாந்திரத்தால் அதுவரை ஆண்களுக்கான மேடையாகவே அறியப்பட்ட கர்னாடக இசையின் புகழ் மிக்க மேடைகளை அடைந்ததோடு, கர்னாடக இசை அரசியாகவும் அவர் மாறினார்.
  • சாமானியக் குடும்பத்தில் பிறந்து சாதித்த அவருடைய வெற்றி, பல பெண்கள் அந்தத் துறையில் நுழைவதற்குக் காரணமாக அமைந்தது. மிகச் சிறந்த கலைஞராக இருந்தது மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதநேயராக, எளிய மக்களின் நலனுக்கான சேவையில் தன்னுடைய இசையைப் பயன்படுத்தியவராக தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.

தமிழ்நாடு: மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலம் வரை

  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மதராஸ் மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, ராயலசீமா, தட்சிண கன்னடா, பெல்லாரி, உடுப்பி, கேரளத்தின் மலபார் பகுதிகள், லட்சத்தீவு போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. மதராஸ் மாகாணத்தின் தலைநகராக இன்றைய சென்னையும், கோடைக்காலத் தலைநகராக உதகமண்டலமும் இருந்தன.
  • நாடு சுதந்திரமடைந்த பிறகு சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் உருவாகின. அதன்படி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த மதராஸ் மாகாணம் (Madras Presidency), மதராஸ் மாநிலமாக (Madras state) 1950இல் மாறியது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழத் தொடங்கின.
  • மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத் தியாகி பொட்டி ராமுலு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்த் துறந்தார். இதன் தொடர்ச்சியாகத் தெலுங்கு பேசும் பகுதிகளில் பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.
  • இதையடுத்து மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு முடிவுசெய்து, 1953ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அதேவேளையில் பல்வேறு மாநிலங்களில் எழுந்த மொழிவாரி மாநிலப் பிரிப்புக் கோரிக்கையை ஏற்று பிரதமர் நேரு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில மறுசீரமைப்பு ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன்படி மதராஸ் மாநிலத்திலிருந்து மலபார் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956இல் கேரள மாநிலம் உருவானது. இதேபோல மதராஸ் மாநிலத்திலிருந்து கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு மைசூர் மாநிலமும் உருவானது.
  • மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற பகுதிகள் மதராஸ் மாநிலத்தில் இணைக்கப்பட்டன.

நன்றி: தி இந்து (13 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்