திரையுலகம்: உலகம் வியந்த இந்திய இயக்குநர்
- ‘இந்திய சினிமாவின் உலக முகம்’ என்னும் புகழ்மொழிக்கு முற்றிலும் பொருத்தமானவர் இயக்குநர் சத்யஜித் ராய். கொல்கத்தாவில் பிறந்த ராய், பொருளியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலை பயின்றார்.
- ஜவாஹர்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’, விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `பதேர் பாஞ்சாலி’ நாவல் உள்ளிட்ட புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்தார். தன் மீது பெரிதும் தாக்கம் செலுத்திய ‘பதேர் பாஞ்சாலி’ நாவலைத் திரைப்படமாக இயக்க முடிவுசெய்தார். கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையே. 1952இல் தொடங்கிய படம் 1955இல் வெளியானது.
- ஏழைக் குடும்பத்தில் பிறந்த துர்கா, அவளுடைய தம்பி அபு ஆகிய சிறாரின் கதையாக முன்வைக்கப்பட்ட இந்தப் படம் இந்திய கிராமங்களைப் பீடித்திருந்த வறுமையையும் வாழ்வில் எப்படியாவது முன்னேறிவிடுவதற்கான வரியவர்களின் ஏக்கத்தையும் பதிவுசெய்தது.
- வெளியானபோது இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் வசூலைக் குவித்த ‘பதேர் பாஞ்சாலி’ சிறந்த திரைப்படம், சிறந்த வங்க மொழித் திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றது. பிரான்ஸின் கான் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு 'சிறந்த மானுட ஆவணம்' என்னும் விருதைப் பெற்றது. இந்திய சினிமாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக்கல்லாக என்றென்றும் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
- `பதேர் பாஞ்சாலி’யின் தொடர்ச்சியாக ‘அபராஜிதோ’ (1956), ‘அபுர் சன்ஸார்’ (1959) ஆகிய இரண்டு படங்களை ராய் இயக்கினார். இவை ‘அபு டிரையாலஜி’ எனப்படுகின்றன. இவை தவிர ‘தேவி’, ‘மஹாநகர்’, ‘சாருலதா’, ரவீந்திரநாத் தாகூரின் மூன்று சிறுகதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ‘தீன் கன்யா’ உள்ளிட்ட அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் உலகப் புகழ்பெற்றன. ராய் மரணமடைவதற்கு முன் 1992இல் வாழ்நாள் சாதனைக்கான கெளரவ ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இலக்கியம்: வாசகர் மனத்தில் நிலைபெற்ற மால்குடி
- சாகித்திய அகாடமி அமைக்கப்பட்ட பிறகு ஆங்கில இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட முதல் விருதைப் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.கே.நாராயண். ‘தி கைடு’ (The guide) என்னும் நாவலுக்காக இந்த விருதை அவர் பெற்றார்.
- மால்குடி என்னும் கற்பனையூரை ஆர்.கே.நாராயண் தனது கதைகளுக்காக உருவாக்கியிருந்தார். இந்த நாவலும் மால்குடியில் நிகழ்வதுபோல் சித்தரிக்கப் பட்டிருந்தது.
- தனித்துவம் வாய்ந்த தனது கதைகளுக்காக நாராயண் இந்த ஊரை உருவாக்கினார். 1935இல் வெளிவந்த அவருடைய ‘சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்’ கதையில்தான் மால்குடி முதன்முதலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரில் சரயூ என்னும் கற்பனை நதி, மெம்பி என்னும் அடர்ந்த காடு, 'பாம்பே ஆனந்த பவன்' என்னும் உணவு விடுதி ஆகியவை உண்டு.
- மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைத் தெருதான் ஊரின் மையப் பகுதி. அந்த ஊரிலிருந்த ரயில் நிலையத்தில் கதையின் பல பகுதிகள் நிகழும். கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள ஆகும்பே என்னும் கிராமம் மால்குடியாக இருக்கக்கூடும் என பின்னர் கண்டறியப்பட்டது. ‘மால்குடி டேஸ்’ என்னும் பெயரிலான புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் இந்த ஊரில்தான் எடுக்கப்பட்டது.
- ‘தி கைடு’ நாவலின் நாயகன் ராஜூ, ஒரு சுற்றுலா வழிகாட்டி. தொல்பொருள் ஆய்வாளர் மார்கோவின் மகள் ரோஸி மீது அவனுக்குக் காதல். ரோஸிக்கு நடனம் மீது பெரிய காதல். ஆனால், அவளது தந்தைக்கு அதில் துளியும் விருப்பமில்லை. ராஜூ, ரோஸிக்கு நடனம் குறித்து நம்பிக்கைகளை விதைக்க, அவர்கள் நெருக்கமாகிறார்கள்.
- மகளுடன் பிணங்கி, மால்குடியிலிருந்து மதராஸுக்குப் போகிறார் மார்கோ. ராஜூவும் ரோஸியும் ஒன்றாகிறார்கள். ரோஸி விரும்பியதுபோல் ஒரு பெரிய நடனக் கலைஞர் ஆகிறார். ஆனால், ராஜூவோ மோசடியில் ஈடுபட்டுச் சிறை செல்கிறான். இப்படிக் கதை, வாழ்க்கையின் கோர யதார்த்தத்தில் முடிகிறது. இந்த நாவல் தேவ் ஆனந்த நடிப்பில் ‘கைடு’ என்னும் பெயரிலேயே இந்தித் திரைப்படமாகி வெற்றிபெற்றது.
ஆட்சி: முதல் பொதுத் தேர்தல்
- சுதந்திர இந்தியாவில் மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தல் 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை நடைபெற்றது. 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள்தொகை 36 கோடி. தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட, சுமார் 17.3 கோடி பேர் வாக்களிக்கும் தகுதிபெற்றனர். பருவநிலை, போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் 68 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெற்றது.
- நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 1,96,084 வாக்குச்சாவடிகளில், பெண்களுக்குத் தனியாக 27,527 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 489 இடங்களுக்காக 53 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,949 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18% ஆக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம், வாக்குப்பதிவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனவே, இந்திய வாழ்வின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்த அம்சங்கள் சின்னங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன.
- வாக்குப்பதிவு 45.7% ஆகப் பதிவானது. 25 அக்டோபர் 1951 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த முதல்கட்ட தேர்தலில் வாக்களித்த சியாம் சரண் நெகி இந்தியாவில் முதல் வாக்காளராக வரலாற்றில் இடம்பெற்றார். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் செயல்பட்டார்.
- போட்டியிட்ட 489 இடங்களில் 45% வாக்குகளுடன் 364 இடங்களில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் மிகப் பெரிய வரலாற்று வெற்றியைப் பெற்றது. இது இரண்டாவது அதிக இடங்களைப் வென்ற கட்சியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் . அக்காலகட்டத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான தேர்தலாக இது அமைந்தது. அந்தப் பிரமாண்டம் இன்றும் தொடர்கிறது.
தொழில்நுட்பம்: சுயமான சூப்பர் கம்ப்யூட்டர் - சாதித்துக்காட்டிய இந்தியா
- சூப்பர் கம்ப்யூட்டரை நோக்கிய இந்தியாவின் பயணம் 1980-களில் தொடங்கியது. 80-களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் சூப்பர் கம்ப்யூட்டர்களை ஏவுகணைகள், போர் விமானங்கள், அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை வடிவமைக்கப் பயன்படுத்திவிடும் என்று அந்த நாடுகள் அஞ்சின. அதன் காரணமாக, 80-களில்தான் க்ரே எனும் சூப்பர் கம்ப்யூட்டரின் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தியது.
- சூப்பர் கம்ப்யூட்டருக்கான உயரிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டது. தனது அதிவேக கணக்கீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாமல் இந்தியா தடுமாறியது. அந்தச் சூழலில்தான், உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் நோக்கில் 1988இல் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) இந்தியாவில் நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே சூப்பர் கம்யூட்டரை உருவாக்க வேண்டுமென்று கனவு கண்டவர் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி. அந்தக் கனவுக்கு மூன்றே ஆண்டுகளில் வடிவம் கொடுத்து, நனவாக்கியவர் விஜய் பாண்டுரங்க் பட்கர்.
- 1991இல், இந்தியாவின் முதல் உள்நாட்டு சூப்பர் கம்ப்யூட்டரான பரம் 8000 (PARAM 8000) பயன்பாட்டுக்கு வந்தது. உலக அளவில் ஒரு வளரும் நாடால் உருவாக்கப்பட்ட முதல் சூப்பர் கம்ப்யூட்டரான அது, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்தானா என்பதில்கூடப் பலருக்குச் சந்தேகம் இருந்தது. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான சர்வதேச மாநாட்டில் தரவுகளுடன் பட்கர் அதைத் அறிமுகப்படுத்தியபோது, அந்தச் சந்தேகம் வியப்பாக மாறியது.
- 2002இல் பரம் பத்மா எனும் சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பரம் இஷான், பரம் கஞ்சன்ஜங்கா ஆகியவை பரம் கம்ப்யூட்டர் வரிசையின் சமீபத்திய வெளியீடுகள். இன்று சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் திறனில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
நன்றி: தி இந்து (14 – 08 – 2022)