TNPSC Thervupettagam

சுந்தர ராமசாமி தந்தை கூற்றுக் கவிதை

October 14 , 2023 280 days 829 0
  • ‘பசுவய்யா’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் சுந்தர ராமசாமி. அவர் எழுதிய முதல் கவிதை ‘உன் கை நகம்’ 1959, மார்ச் மாத ‘எழுத்து’ இதழில் வெளியானது. அதன்பின் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து கவிதைகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியவற்றின் மொத்த எண்ணிக்கை மிகவும் குறைவு. நடுநிசி நாய்கள் (1975), யாரோ ஒருவனுக்காக (1987) ஆகிய தலைப்புகளில் நூலாக்கம் பெற்றவை பின்னர் ‘107 கவிதைகள்’ (1996) என ஒரே நூலாகவும் வெளியாயின. இவை மூன்றும் ‘பசுவய்யா’ என்னும் புனைபெயரில் வெளிவந்தவை. அவர் இறப்புக்குப் பிறகு தொகுக்கப்பட்ட ‘சுந்தர ராமசாமி கவிதைகள்’ நூலில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கை 110.
  • குறைவாக எழுதினாலும் நவீன கவிதை வரலாற்றில் பெரிதும் கவனம் பெற்றவையாகவும் பல கவிதைகள் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டவையாகவும் உள்ளன.  ‘மணிக்கொடி’ காலத்தில் கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி முதலியோரால் தொடங்கப்பட்ட நவீன கவிதை அடுத்த கட்டமாக 1950களின் இறுதியில் ‘எழுத்து’ இதழ் மூலம் வலுப் பெற்றது. ‘எழுத்து’ காலக் கவிஞராகப் பசுவய்யா என்னும் சுந்தர ராமசாமி அடையாளம் பெறுகிறார்.
  • உன் கை நகம், கதவைத் திற, மேஸ்திரிகள், சவால், ஆந்தைகள், நடுநிசி நாய்கள், எனது தேவைகள், கன்னியாகுமரியில், உன் கவிதையை நீ எழுது உள்ளிட்டவை மிக முக்கியமானவையாக விமர்சகர்களால் கருதப்பட்டன. இவை அனைத்தும் 1990க்கு முன் எழுதப்பட்டவை. 1990க்குப் பிறகு அவர் எழுதியவை முந்தையவற்றைப் போலப் பெரிதாகக் கவனத்திற்கு உள்ளாகவில்லை. 1980களுக்குப் பிறகு நவீன கவிதையில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு குரல்களுக்கு இடையே முன்னோடிகளின் குரல்கள் மங்கிப் போயின என்றே தோன்றுகிறது.

சு.ரா.வின் கவிதைகள் பற்றி

  • சுந்தர ராமசாமியின் கவிதைகள் பற்றி “…ஆழ்ந்த வாழ்க்கைப் பார்வை, செறிவான – கச்சிதமான கவிதையமைப்பு, கேலியும் கிண்டலும் கலந்த அங்கதம், நுட்பமும் நூதனமும் கூடிய கவிதை மொழி, வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் இடையறாத தேடல், காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை என்று தீவிரமான இலக்கியப் பிரக்ஞையுடன் கவிதை எழுதியவர் சுந்தர ராமசாமி” (சுந்தர ராமசாமி கவிதைகள், ப.7) என்று ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்.
  • “வாழ்வனுபவத்தை அறிதல், உணர்தல், விமர்சித்தல் ஆகிய செயல்களையே சுந்தர ராமசாமி கவிதைகள் படைப்பின் குணாம்சங்களாகக் கொண்டிருக்கின்றன. இதன் அடியோட்டமாக ஒரு கருத்து நிலையும் விரிந்து செல்கிறது. சுந்தர ராமசாமியின் எந்தக் கவிதையை எடுத்துக்கொண்டாலும் இந்தக் குணத்தை இனம் காண முடியும். இந்தக் குணங்கள் தனித்தும் ஒன்றோடொன்று கலந்தும் ஒன்றோடொன்று முரண்பட்டும் கவிதைக்கான தளத்தை உருவாக்குகின்றன” (மேற்படி, ப.235) எனச் சுகுமாரன் கருதுகிறார்.
  • சுகுமாரன் கூறுவதைச் சற்றே விரித்துக் கண்டால் ‘அனுபவமும் கருத்துநிலையும் இயைந்து நிற்பவை’ எனச் சுந்தர ராமசாமியின் கவிதைகளை மதிப்பிடலாம். ‘எழுத்து’க் காலக் கவிஞர்களிடமிருந்து தனித்துத் தெரியும் சொல்லாட்சி, வடிவச் செறிவு, சொல்முறை ஆகியனவும் அவர் கவிதைகளின் இயல்பு. கை வந்தபடி அல்லாமல், நவீன கவிதைகளில் அடிபிரிப்பைக் கவனத்தோடு செய்தவர் அவர். பத்தி பிரிப்பு, நிறுத்தற் குறிகள் ஆகியவற்றிலும் பெரிதும் கவனம் செலுத்தியவர். இலகுவான வாசிப்பும் பொருள் தெளிவும் கொண்டவையாகக் கவிதை இருக்க வேண்டும் எனவும் கருதியவர்.
  • அவர் கவிதைகள் எடுத்துரைப்புக்கு மிகவும் ஏற்றவையாக இருப்பதற்கு மேற்கண்ட இயல்புகள் எல்லாம் காரணம். ஒரு கவிதையை மட்டும் இங்கே காணலாம்.
  • மாறுபட்ட கவிதை
  • ‘பூக்கள் குலுங்கும் கனவு’ என்னும் கவிதை ஒரு தந்தை மனநிலையிலிருந்து எழுதப்பட்டுள்ளது. உணர்ச்சிகளுக்குப் பெரிதும் இடம் கொடுக்காதவை சு.ரா.வின் கவிதைகள். அதிலிருந்து மாறுபட்ட கவிதை இது. இதிலும் உணர்ச்சிப் பிரவாகம் ஏதுமில்லை. ஆனால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத மனநிலை தானாக வெளிப்பாடு கொள்கிறது.
  • முன்னிலையை நோக்கிப் பேசும் கூற்று முறை தமிழ்க் கவிதை மரபுக்கு மிகவும் ஏற்றது. சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்தும் கூற்று முறையில் அமைந்தவையே. தலைவி, தோழி, தலைவன், செவிலி, நற்றாய், பாங்கன், கண்டோர் முதலிய பாத்திரங்களின் கூற்றாக அவை அமையும். ஒரே குரல்தான் பேசும். முன்னிலையின் எதிர்வினைகள் என்ன என்பதையும் இந்தப் பாத்திரக் கூற்று மூலமாகவே உய்த்துணர முடியும். சில சமயம் பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள துறைக்குறிப்பு அதற்கு உதவும். இந்தக் கூற்று முறையில் தந்தை இடம்பெறுவதில்லை.
  • காதலை வெளிப்படுத்தும்போது தலைவி – தோழி – செவிலி – நற்றாய் – தந்தை, தனயன் என்னும் வரிசை முறையை அகப்பொருள் இலக்கணம் கூறும். ஆனால், தந்தைக்கும் தனயருக்கும் கூற்று இல்லை. அவர்கள் பேசுவதாகப் பாடல் எதுவும் சங்க இலக்கியத்தில் இல்லை. காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் திருமணம் நடைபெறும். இல்லாவிட்டால் உடன்போக்குத்தான். சரி, திருமணத்திற்குப் பிறகும்கூடத் தந்தை, தனயரின் குரலுக்கு ஏன் இடம் தரவில்லை என்பது வியப்பிற்குரியது.

மகள் திருமணம்

  • சுந்தர ராமசாமியின் கவிதை அவ்வகையில் மரபில் இல்லாத ‘தந்தை கூற்று’ என்று சொல்லலாம். ‘மணம் முடிந்து சென்ற மகளை (எண்ணி அல்லது) நோக்கித் தந்தை கூறியது’ என்று இக்கவிதைக்குத் துறை வகுக்கலாம். மகளுக்குத் திருமணம் நடந்து முடிகிறது. அதன் பின் சில நாட்கள் அல்லது மாதங்கள் கழிந்த பிறகும் தந்தை மனதில் சில காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. மகளிடம் நேராகப் பேச இயலாததைக் கவிதையில் பேசுகிறார் அத்தந்தை. மனதில் மகளை முன்னிறுத்தி அவளை விளித்துத் தம் கூற்றைத் தொடங்குகிறார்.  ‘அன்று, அதாவது உன் திருமணம் நடந்த அன்று, நீ நின்ற நிலை’ என்கிறார். உடனே தனக்குள் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார். ‘ஏன் அந்தக் காட்சி என் மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது?’ என்று கேட்டுக்கொள்கிறார். அவருக்குக் காரணம் புரியவில்லை.

அப்படியென்ன காட்சி 

  • ‘அலங்காரங்களின் வசீகரம்; உன் அருகே அந்த இளம் மீசை.’ அலங்காரம் இல்லாமல் திருமணமா? எல்லோரையும் வசீகரிக்கும் அலங்காரம் அல்லவா அது? அத்தகைய அலங்காரத்தை இன்னொரு முறை யாரும் செய்து கொள்வதில்லை. சரி, அலங்காரங்களின் வசீகரத்தால் தான் அந்தக் காட்சி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறதா? இல்லை, அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.  ‘உன் அருகே அந்த இளம் மீசை.’ அதுதான் காரணம். தன்னருகே ஓடி விளையாடிக்கொண்டிருந்த மகள் அருகே இப்போது இளம் மீசை கொண்ட மணமகன். அதை ஏற்றுக்கொள்வதில்தான் தந்தைக்குப் பிரச்சினை என்பது புரிகிறது.
  • மீண்டும் தந்தை தன் மனதோடு பேசத் தொடங்குகிறார். மகளுக்குத் திருமணம் நடக்க வேண்டியது முறைதானே. அதிலென்ன மனக்குழப்பம்? இப்படியெல்லாம் தனக்குக் குழப்பம் ஏற்படும் என்று அவர் ஒருபோதும் நினைத்தவர் அல்ல. அதனால் சட்டென அவர் மனம் காலத்தை நோக்கிப் பேசுகிறது. ‘காலமே’ என்று அழைக்கிறார். ‘எதற்கு என்னை இங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாய்?’ என்று கேட்கிறார். எங்கெல்லாம் காலம் அழைத்துச் செல்கிறது? திருமணம் முடிந்த மகளை எண்ணித் தவிக்கும் மனநிலையைத்தான் அப்படிச் சொல்கிறார். மேலும் சொல்கிறார், ‘என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே.’ பிறந்தது முதல் தன்னருகில் இருந்த பெண்ணை இப்போது அனுப்பி வைப்பதென்றால் உணர்வுகள் குழம்பாதா? மனம் சரியாதா?
  • நேரடியாக விஷயத்திற்கு வருகிறார்.  “என்னருகே வெகுநாள் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த நீ எவ்வாறு இவ்வளவு பெரிய கனவாய்ப் பந்தலில் விரிந்தாய்?” என்று கேட்கிறார். திருமணப் பந்தலில் உரிய அலங்காரங்களுடன் காணும் போதுதான் தன் மகளின் வளர்ச்சி தந்தைக்கு உறைக்கிறது. அக்காட்சி உண்மை போலில்லை; பெருங்கனவுபோலத் தெரிகிறது. இதுதான் அவருக்குப் பிரச்சினை. எத்தனை மூடி மறைத்துக் காலம், உணர்வு, குழப்பம் என்றெல்லாம் பேசினாலும் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு பிரச்சினை வெளியே வந்துவிடுகிறது.
  • பிறகென்ன? உன் கூந்தலில் முல்லைப் பூக்களின் குவியல்கள்; அவற்றுக்குத் தாயிடமிருந்து கிள்ளப்பட்ட விசனம் இல்லையா? உன் நடையின் துள்ளலில் அவை பெறும் குதூகலம் தாயிடமிருந்து அவை பெற்றதில்லையா? என்றெல்லாம் கேள்விகளை நேரடியாக முன்வைக்கிறார். மகளைப் பிரியும் துயரம் தந்தைக்கு இருக்கிறது. அப்படி ஒரு துயரம் மகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் மகள் நடையில் எப்படித் துள்ளல் வரும்?

வாழ்வின் தேன்

  • இப்படி வெளிப்படையாகப் பேசிய பிறகு அவருக்குத் தெளிவு வருகிறது. தான் துயரம் அடைவதற்கும் மகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் காரணம் புரிகிறது. அவர் வாழ்வின் அஸ்தமனத்தில் இருக்கிறார். மகள் வாழ்வில் முழுநிலவு உதிக்கும் காலம். துயருக்கும் மகிழ்வுக்குமான காரணம் விளங்குகிறது. அப்புறம் என்ன? மனம் சமாதானம் கொள்கிறது. மகளைப் பார்த்து வாழ்த்துகிறார். வாழ்த்து இப்படி வருகிறது:

ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை

வண்டைப் போல் உறிஞ்சு.

  • அருமையான வாழ்த்துதான். இவ்வுலகில் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ள நமக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது. பூவில் தேனை எத்தனை ஆவலோடு வண்டு உறிஞ்சுகிறதோ அப்படி மகிழ்ச்சியோடு வாழ்வில் இனிமை கண்டு வாழச் சொல்லும் வாழ்த்து. தந்தையின் மனக்கனிவு இவ்வாழ்த்தில் கசிந்து வெளிப்படுகிறது. இருந்தாலும் மகள் வாழ்வில் இனிமேல் தனக்கு எந்த இடமும் இல்லையோ என்னும் ஏக்கம் தந்தையின் உள்ளத்தில் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் தேனை வண்டைப் போல உறிஞ்சும் அந்தப் பாதையும் என்றோ ஒருநாள் முடியத்தான் போகிறது.
  • திருமண மகிழ்வில், இளமையின் வசீகரத்தில், வாழ்வின் தேனை உறிஞ்சும் வேகத்தில் தந்தையின் நினைவு வராமல் போகலாம். இவையெல்லாம் தீர்ந்த ஒருகாலம் வருமே. அப்போது என்னைப் பற்றி அந்த இளம் மீசையிடம் (மீசை நரைத்திருக்காதா? அடையாளம்தானே) கொஞ்சம் சொல்லு என்று கேட்கிறார். உன் கடந்த காலத்தின் பழைய நினைவாய் அது இருக்கட்டும் என்கிறார்.
  • மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டாலும் மகள் பிரிவைத் தாங்காத ஒரு தந்தையின் மனநிலையை இக்கவிதை காட்டுகிறது. மகளை விளித்துப் பேசும் தந்தைக்கு மருமகனை அத்தனை எளிதாய் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ‘இளம் மீசை’ என்றே இரு இடங்களில் குறிப்பிடுகிறார். அது இளமையின் அடையாளம் என்றாலும் தந்தைக்குத் தான் இருந்த இடத்தின் பதிலி என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத வெறுமையின் வெளிப்பாடு என்றும் கொள்ளலாம்.
  • திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு மகளை அனுப்பி வைக்கும் தந்தையர் சிலர் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் சிந்தி அழுவதுண்டு. இந்தத் தந்தையும் அழுதிருந்தால் அது கண்ணீரோடு முடிந்திருக்கும். இப்படிக் கவிதையாகி இராது.

முழுக் கவிதை:

பூக்கள் குலுங்கும் கனவு

அன்று – உன் திருமணத்தன்று – நீ நின்ற நிலை

ஏன் அந்தக் காட்சி என் மனத்தில்

இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது

அலங்காரங்களின் வசீகரம்

உன் அருகே அந்த இளம் மீசை.

காலமே! எதற்கு என்னை இங்கெல்லாம்

அழைத்துச் செல்கிறாய்?

  • என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே.

என்னருகே வெகுநாள் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த நீ

எவ்வாறு இவ்வளவு பெரிய கனவாய்ப் பந்தலில் விரிந்தாய்

உன் கூந்தலில் முல்லைப் பூக்களின் குவியல்கள்

அவற்றுக்குத் தாயிடமிருந்து கிள்ளப்பட்ட விசனம் இல்லையா

உன் நடையின் துள்ளலில் அவை பெறும் குதூகலம்

தாயிடமிருந்து அவை பெற்றதில்லையா.

நான் அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது

நீ முழு நிலவின் விளிம்பில் பரவசம் கொள்கிறாய்.

ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை

வண்டைப்போல் உறிஞ்சு.

ஆனால் ஒன்று.

அந்தப் பாதை முடிவுறும் முன்னே என்றேனும் ஒருநாள்

அந்த இளம் மீசையிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு

உன் கடந்த காலங்களின் பழைய நினைவாய்.

கவிதையின் பின்னணி

  • கவிதையை விளங்கிக்கொள்ளக் கவிஞரின் சொந்த வாழ்க்கைச் செய்திகள் ஓரளவுக்கு உதவும்.  சொந்த வாழ்வையும் படைப்பையும் இணைத்துப் பார்க்கும் முறைத் திறனாய்வு இப்போது செல்வாக்கை இழந்துவிட்டது. எனினும் வாசக ஆர்வம் அவ்வாறு இணைத்துப் பார்ப்பதைப் பெரிதும் விரும்புகிறது. சுந்தர ராமசாமியின் இக்கவிதைக்கும் அப்படியொரு பின்னணியைப் பொருத்திப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.
  • இக்கவிதை 1985ஆம் ஆண்டு ஜூலை மாதக் ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் இரண்டாம் மகள் தைலாவின் திருமணம் 1984 ஜனவரி 27இல் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள் இக்கவிதையை அவர் எழுதியிருக்கிறார். அக்காலத்தில் பிரசுர வாய்ப்பு அரிது என்பதால் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் ‘கொல்லிப்பாவை’யில் ஒருசேர வெளியாகியுள்ளன.
  • ஓராண்டு காலத்திற்கு மேல் அவர் எழுதிய பல கவிதைகள் அவை. ஆகவே, ‘ஒவ்வொரு நிமிஷமும் வாழ்வின் தேனை வண்டைப் போல் உறிஞ்சு’ என்னும் வாழ்த்தைப் பெற்றவர் அவரது இரண்டாம் மகள் தைலா என ஊகிக்கலாம்.

பயன்பட்ட நூல்

  • 1. ராஜமார்த்தாண்டன் (தொ.ஆ.), சுந்தர ராமசாமி கவிதைகள், 2005, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

நன்றி: அருஞ்சொல் (14 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்