TNPSC Thervupettagam

சுயாதிகாரம் மிக்க நேரடி மேயர்களே நமக்குத் தேவை

January 20 , 2020 1820 days 762 0
  • டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் உற்சாகமாக நிற்கிறார் ஆஆகவின் அர்விந்த் கேஜ்ரிவால். டெல்லி மாநகர நிர்வாகத்தைப் பொறுத்த அளவில் அவர் பெரிய மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறார். நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்துறை அமைச்சகமும், நகர்ப்புற வளர்ச்சித் துறையும் மாநிலத்தின் பெரும் பகுதி நிர்வாகத்தைத் தன் கையில் வைத்திருக்கிருக்கின்றன. மேலும், ஆஆக அரசு சுதந்திரமாகச் செயல்பட்டுவிட முடியாதபடி தொடக்கத்திலிருந்தே முட்டுக்கட்டைகளைப் போட்டுவருகிறது மத்திய அரசு.
  • இத்தகு தடைகளையும் தாண்டி கல்வி, சுகாதாரம், குடிநீர், அடிப்படைக் கட்டமைப்பில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.

கொண்டுவந்துள்ள மாற்றங்கள்

  • கல்விக்காக ஐந்தாண்டுகளுக்கு முன் டெல்லி அரசு செலவிட்டுவந்த தொகை ரூ.2,219 கோடி. இதை 106% அதிகரித்த அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 20,000 வகுப்பறைகளை டெல்லி அரசுப் பள்ளிகளில் கட்டியிருப்பது பெரும் சாதனை. இவையெல்லாம் சாதாரண வகுப்பறைகள் அல்ல; உயர் நடுத்தர வகுப்பினரின் பள்ளிகளுக்குச் சவால் விடும் ஸ்மார்ட் வகுப்பறைகள். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும் வழிகாட்டிகளையும் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி நவீன கற்பித்தல் முறை, பள்ளி நிர்வாக நடைமுறைகளைக் கற்றுவரச் செய்தவர், வெவ்வேறு பாடத் துறைகளை மாணவர்கள் சிறப்பாகப் பயில அந்தந்தத் துறைக்கான கல்விக் கருவிகளையும் அளித்திருக்கிறார்.
  • கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து முன்னெடுத்ததோடு அதை வளர்த்தெடுக்கவும் செய்தார் அர்விந்த் கேஜ்ரிவால். டெல்லி அரசின் கல்விச் செலவு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 27.8%. மாநிலங்களின் சராசரி அதிகபட்சம் 15.8%. இதேபோல, சுகாதாரத் துறைக்கான டெல்லி அரசின் ஒதுக்கீடு 13.8%. மாநிலங்களின் சராசரி அதிகபட்சம் 5.2%. டெல்லியில் குடியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே ஒரு கிமீ தொலைவுக்குள் தொடங்கப்பட்ட ‘மொஹல்லா கிளினிக்குகள்’ உலகின் பல நாடுகளால் நல்ல முன்மாதிரியாக இன்று பார்க்கப்படுகின்றன. 2019-20 நிதிநிலை அறிக்கையில் மாநகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக மட்டும் 38% நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எந்தப் பெருநகரங்களிலும்கூட இந்த அளவுக்குப் போக்குவரத்து வசதிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • டெல்லி மாநில முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு ‘சூப்பர் மேயர்’ போலவே செயல்படுகிறார். ஒருபுறம், டெல்லி முதல்வருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதன் அவசியத்தை இது வலியுறுத்தும் அதேசமயத்தில், மறுபுறம் நம்முடைய நகரங்களுக்கு ‘சுய அதிகாரம் மிக்க மேயர்கள்’ ஏன் தேவை என்பதையும் இது சுட்டுகிறது.
  • அதிகாரம் குறைக்கப்பட்ட மேயர்கள்
  • டெல்லி தவிர மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் போன்ற பெருநகரங்களின் மேயர்களும் இவ்வாறு நகரின் நிர்வாகத் திறமையைக் கூட்டவும், வருவாயைப் பெருக்கவும், வாழ்வதற்கான சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரமும் சுதந்திரமும் பெற்றிருக்கவில்லை. அவர்களை நகர விழாக்களின்போது அலங்கார பொம்மைகள்போல வந்துபோகவும், நிகழ்ச்சிகளின் அங்கமாகவும் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளன தேசிய, மாநிலக் கட்சிகள்.
  • 2017-18 பொருளாதார ஆய்வறிக்கையின்படி நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இப்போது நகரங்களில்தான் வாழ்கின்றனர். கூடவே, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஐந்தில் மூன்று பங்கையும் நகரங்களே வழங்குகின்றன.
  • ஆனால், இந்திய நகரங்களோ மக்களுக்குத் தேவைப்படும் குடிநீர், மின்சார இணைப்பு, சாலை வசதிகள், சுகாதார வசதிகள், பள்ளிக்கூடங்கள், பொழுதுபோக்குக்கான இடங்கள், வாசகசாலைகளைத் தரும் நிலையில் இல்லை. நகரங்கள் மூலம் பெருமளவு வரி வருவாயைப் பெறும் மாநில அரசுகள், மேயர்கள் அதிகாரம் பெறும் அமைப்பு உருவாவதை விரும்புவதில்லை. அடித்தளக் கட்டமைப்புக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுவதும், நகர நிர்வாகத்துக்கு முழு அதிகாரமுள்ள ஒரேயொருவர் இல்லாததும்தான் நகரங்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகளும் ஒப்புக்கொள்கின்றன.

முதல்வர்களின் அச்சம்

  • முற்போக்கான கொள்கைகளும், நல்ல செயல்திறமும், மக்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் தன்மையுமுள்ள மேயர்கள் தங்களுடைய தலைமைக்கே சவாலாக வந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வர்கள் மத்தியில் இருப்பதால், அப்படி அவர்கள் உருவாகும் அமைப்புக்கே வாய்ப்பில்லாமல் பார்த்துக்கொள்கின்றனர். நகர மன்றங்களும் மாநகர மன்றங்களும் சரியாகச் செயல்படவில்லை என்று காரணம் காட்டியே மேயர்கள், நகரமன்றத் தலைவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறையைக்கூடத் தடுத்துவிட்டு மறைமுகத் தேர்தலுக்கு சட்டத்தைத் திருத்தியுள்ளனர்.
  • தமிழ்நாடு ஓர் உதாரணம். மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் மேயராகி சென்னையின் வளர்ச்சிக்கு எடுத்த பல முன்னுதாரண நடவடிக்கைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன.
  • ஆனால், இப்போது அதிமுக அரசு இயற்றிய அவசரச் சட்டத் திருத்தத்தின் விளைவாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் எந்த மாநகராட்சிக்கும் தலைவராக வந்துவிடும் வாய்ப்பு தகர்க்கப்பட்டுவிட்டது.
  • சில மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. இதனால், ‘அதிகாரப் பரவல்’ என்ற லட்சியமே தோல்வியடைகிறது. இதற்கும் தமிழ்நாடு ஓர் உதாரணம். 1992-ல் நிறைவேற்றப்பட்ட 74-வது சட்டத் திருத்தம், உள்ளாட்சி நிலையில் 18 நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கானது. பொருளாதார – சமூக வளர்ச்சிக்கான திட்டமிடல், நில ஒழுங்குமுறை, கட்டிடம் கட்டுவது, நகர்ப்புறத் திட்டமிடல், பொது சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியவை அந்த 18 நடவடிக்கைகள். ஆனால், இத்தனை ஆண்டுகளில் 9 மட்டுமே உள்ளாட்சிகளிடம் விடப்பட்டுள்ளன. இன்னமும்கூட நகராட்சிகளால் செய்யப்பட வேண்டிய பல முக்கியச் செயல்பாடுகள் மாநில அரசுகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லக் கடமைப்பட்ட துறைகள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு சிறப்புத் திட்டங்கள், நகரப் புத்துயிர்த் திட்டங்கள், ஸ்மார்ட் நகரத் திட்டங்கள் என்றெல்லாம் பெயரைச் சூட்டி நேரடியாக மத்திய அரசும் மாநில அரசுகளும் கண்காணிக்கின்றன.
  • மேயர்களுக்கான அதிகாரங்களைக் குறைத்த பிறகும்கூடத் தங்களுடைய மிகப் பெரிய நகரங்களைக்கூட மேயர்கள் நிர்வகிப்பதைப் பல மாநில அரசுகள் விரும்புவதில்லை. நகராட்சிகளில் நகராட்சி ஆணையர் ஒட்டுமொத்த நிர்வாகங்களின் தலைவராகவே நியமிக்கப்படுகிறார்.

வெளிநாடுகள் – உதாரணம்

  • நியூயார்க், பாரிஸ், லண்டன், ஏன் சீனாவின் ஷாங்காய் நகர மேயர்கூட சிறப்பாகச் செயல்பட்டு, தங்கள் நாட்டில் மட்டுமல்ல - உலக அளவில் மற்றவர்களால் பாராட்டப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் உள்ள மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களைவிட மேயர்கள் நன்கு அறிமுகமானவர்களாக இருக்கின்றனர். இதை இந்தியா உள்வாங்க வேண்டும்.
  • பாரிஸ் நகரின் மேயரான ஆனி ஹிடால்கோ, பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இன்று சர்வதேச முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
  • ஆனால், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்துள்ள டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டும், தடுக்கப்பட்டு காணொலிக்காட்சி மூலம் உரையாற்றும் சூழல் இங்கே நிலவுகிறது. டெல்லியின் மொஹல்லா கிளினிக்குகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆஸ்திரேலியர்களுக்கு விளக்க, அங்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டார் ஆஆக கட்சியின் சுகாதார அமைச்சர். மத்திய அரசின் முட்டுக்கடைகளே காரணம்.
  • இந்தியாவை ‘செயல்படும் அராஜகம்’ என்று வர்ணித்தார் ஜான் கென்னத் கால்பிரெய்த். இந்த நிலை மாற இந்தியா நிறைய மாற வேண்டும். வளரும் நகரங்களின் சவால்களை எதிர்கொள்ள மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரங்கள் அதிகம் பெற்ற, மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட மேயர்களால் மட்டுமே இத்தகைய லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்