- சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அதிகக் கவனம் செலுத்துகிறோம். நம்மைச் சுற்றியிருக்கும்குப்பை, கழிவை அகற்றி, நாம் வாழும் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே நோய்கள் இல்லா வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், பூமி என்பது நகரமும் கிராமமும் மட்டும் கிடையாது. காடுகள், கடல்கள், பாலைவனங்கள், புல்வெளிகள், மலைகள் போன்றவையும் இருக்கின்றன. அவற்றில் வாழும் உயிரினங்கள் எப்படித் தம் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்கின்றன?
- தினமும் காடுகளில் ஆயிரக்கணக்கான விலங்குகள் உயிரிழக்கின்றன. நோய்த் தாக்குதலாலோ விலங்குகளால் வேட்டையாடப்பட்டோ அவற்றின் இறப்பு நிகழ்கிறது.
- இறந்த விலங்கின் சடலம் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கியவுடன், அது சுற்றுப்புறத்தை மாசுபடுத்த ஆரம்பிக்கிறது. அழுகிய சடலங்கள் விஷம் என்பதால் வேட்டை விலங்குகள் உண்ணாது. மேலும், அந்த சடலங்கள் நீர்நிலைகளில் விழுந்தால், நீர் பருகும் உயிரினங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உண்டு.
- பிறகு இந்த இறந்த சடலங்களை யார் சுத்தம் செய்வது? இதற்காகவே இயற்கை சில உயிரினங்களைப் படைத்துள்ளது. அவை ‘மிச்சத்தை உண்ணும் உயிரினங்கள்’ (Scavengers). அவை இறந்த விலங்குகளின் சடலங்களை மட்டும் உண்ணும். புல்வெளிகள், காடுகள், பாலைவனங்களில் கழுதைப்புலிகள், கழுகுகள் போன்றவை இறந்த உயிரினங்களின் சடலங்களை உண்பவையாக இருக்கின்றன.
- கடலில் கடல் காகம், நண்டுகள், விலாங்கு மீன் போன்றவையும், நன்னீர்நிலைகளில் நத்தை, ஆமை போன்றவையும் இறந்த உயிரினங்களின் சடலங்களை உண்கின்றன. நாம் வாழும் இடங்களில் காகங்கள், கரப்பான் பூச்சிகள் போன்றவை இந்த வேலையைச் செய்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு வெவ்வேறு உயிரினங்கள் இந்தக் கடமையை ஆற்றுகின்றன.
- இவற்றின் வேலையே இறந்து கிடக்கும் உயிரினத்தைத் தின்று அந்த இடத்தைச் சுத்தம் செய்வதுதான். கழுகு, கழுதைப்புலி போன்றவற்றின் சடலம் அமைப்பு இறந்த விலங்குகளின் எலும்புகளைக்கூடச் செரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதன்மூலம் இறந்த விலங்குகளின் அழுகிய சடலம் சுற்றுப்புறத்தையும் நீர்நிலையையும் அசுத்தம் செய்வதற்கு முன்பே அந்த இடத்தி லிருந்து அகற்றப் படுகின்றன.
- சரி, அழுகிய விலங்கின் உடலில் இருக்கும் கிருமிகள், நோய்த்தொற்றுகள் அவற்றைச் சாப்பிடும் உயிரினங்களைப் பாதிக்காதா? பாதிக்காது. இந்த உயிரினங்களின் உடலில் உள்ள செரிமான அமைப்பு கடும் அமிலத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதன் மூலம் கிருமிகள் அவற்றின் உடலுக்குள் சென்றால் வயிற்றிலேயே இறந்துவிடும். மேலும் இவற்றின் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுவானது என்பதால் வெளியில் இருந்து வரும் நுண்ணுயிர்களும் இவற்றைத் தாக்காது.
- ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விலங்குகள் இறப்பினால் பரவும் கிருமிகளான காலரா, ஆந்த்ராக்ஸ், ரேபிஸ் போன்றவற்றைச் சூழலியல் மண்டலத்தில் இருந்து அகற்றுவதில் இந்த உயிரினங்கள் பெரும் பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே போன்று மட்குண்ணிகள் (Detrivores), சிதைப்புயிரிகள் (Decomposers) வகை உயிரினங்களும் உண்டு. இவற்றின் வேலை இறந்த உயிரினங்களையும் அவற்றின் கழிவுகளையும் சிதைத்து மட்க வைப்பதே.
- அதேபோல இறந்த உயிரினங்கள் என்றால் விலங்குகள் மட்டும் கிடையாது. தாவரங்களும் மரங்களும் உயிரினங்கள்தாம். அவை இறக்கும்போதும் சூழல் கேடு ஏற்படுகிறது. குறிப்பாக இறந்த விலங்குகள்கூடச் சில நாள்களில் மட்கி மண்ணாகிவிடும். ஆனால், மரங்கள் இறந்தபின் மட்குவதற்குச் சில நூறாண்டுகள் பிடிக்கும். இதனால் புதிய தாவரங்கள் வளர்வதற்கு அங்கு வழி கிடைக்காது.
- இதனால், இந்தக் கழிவை அகற்றுவதற்கும் மட்குண்ணிகள், சிதைப்புயிரிகள் உதவுவது உண்டு. சாணவண்டு, கறையான், மண்புழு, நத்தை, பூஞ்சை, பாக்டீரியா போன்றவை இந்த வேலையைச் செய்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள்கூட இந்த வகையில் அடங்கும். அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், கழிவுகளில் இருந்தே கிடைக்கின்றன.
- சரி, ஏன் இந்த உயிரினங்கள் சிரமப்பட்டு தூய்மைப் பணியைச் செய்ய வேண்டும்? அந்தந்த உயிரினங்களின் பார்வையில் அவை தமது உணவுக்காகக் கழிவை, இறந்த உயிர்களை உண்ணுகின்றன. ஆனால், சூழலியல் பார்வையில் இந்தச் சுற்றுப்புறத்தைக் காக்கவும் அனைத்து உயிரினங்களுக்கும் வேண்டிய சத்துகள் கிடைக்கவும் இந்த உயிரினங்கள்தாம் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- இந்தப் பூமியில் சத்துகள் (Nutrients), ஆற்றல்கள் (Energy) ஆகியவை உயிரற்ற, உயிருள்ள பொருள்களில் சேமிக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாருக்கும் பகிரும் பணியை மேலே குறிப்பிட்ட உயிரினங்கள் செய்கின்றன.
- உதாரணமாக அனைத்து உயிரினங்களும் கார்பன் மூலக்கூறினால் கட்டமைக்கப்பட்டுள்ளன. உயிரின வாழ்க்கையின் அடிப்படையாகவும் பல்வேறு வேதியியல் செயல்முறைகளின் முக்கியக் கூறாகவும் கார்பன் உள்ளது. உயிர் வாழவும் வளரவும் இனப்பெருக்கம் செய்யவும் கார்பன் தேவைப்படுகிறது.
- இதே போல பாஸ்பரஸ், நைட்ரஜன், கால்சியம் உள்ளிட்ட வேறு சத்துகளும் உயிரின வாழ்வில் முக்கிய அம்சமாக இருக்கின்றன. இந்தச் சத்துகளை இறந்த உயிரினங்களிலிருந்து பிரித்து மீண்டும் நிலத்துக்கோ தாவரத்துக்கோ வேறு உயிரினத்துக்கோ தரும் பணியை மிச்சத்தை உண்ணும் உயிரினங்கள், மட்குண்ணிகள், சிதைப்புயிரிகள் செய்கின்றன. இதனால், அவை இயற்கையால் படைக்கப்பட்ட மறுசுழற்சி அமைப்புகளாகக் கருதப்படுகின்றன.
- சிதைப்புயிரிகளால் மட்டும் ஆண்டுக்கு ஒரு டன்னுக்கும் மேலான கழிவுகள் பூமியில் புதைக்கப் பட்டு மண்ணுக்கு வளம் சேர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல மிச்சத்தை உண்ணும் உயிரினங்கள் நோய், கிருமிகள் பரவலைத் தடுக்கும் சுற்றுச்சூழல் கதாநாயகர்களாக வலம் வருகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 11 – 2023)