TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் அக்கறையின் நதிமூலமும் இன்றைய நிலையும்

September 28 , 2024 59 days 183 0

சுற்றுச்சூழல் அக்கறையின் நதிமூலமும் இன்றைய நிலையும்  

  • பன்னாட்டளவில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் தொடர்பான முதல் நடவடிக்கையாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டைக் குறிப்பிடலாம். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் இம்மாநாட்டின் விளைவுதான். மாநாட்டில் வெளியிடப்பட்ட 26 சூழலியல் கருதுகோள்களின் தொகுப்பு ‘ஸ்டாக்ஹோம் பிரகடனம்’ எனப்படுகிறது.
  • இம்மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மூன்று செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன- உலக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை நடவடிக்கைகள், பன்னாட்டளவில் இந்த இரண்டுக்கும் துணைநிற்கும் வழிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
  • ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது தலைமையில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புக் குழுவை நிறுவினார். அந்த ஆண்டிலேயே மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நீர் (1974), காற்று (1981), வனப் பாதுகாப்பு (1981) சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தன.

மாண்ட்ரீல் நெறிமுறை:

  • 1950கள் தொடங்கி, பிரிட்டிஷ் அண்டார்க்டிகா ஆய்வு நிலையம் அண்டார்க்டிகா பகுதியின் வளிமண்டல ஓசோன் படலத்தின் அடர்த்தியை அளவிடத் தொடங்கியிருந்தது. நிலத்திலிருந்து 10 முதல் 50 கிலோமீட்டர் உயரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஓசோன் படலமானது, சூரியனிலிருந்து வருகிற புறஊதாக் கதிர்களிலிருந்து உயிர்களைப் பாதுகாக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் மூன்று அணுக்கூறுகள் சேர்ந்த மூலக்கூறு.
  • 1970களில் அங்கு ஆய்வுசெய்த கேம்ப்ரிட்ஜ் வானிலை நிபுணர் ஜோனதன் ஷாங்க்லின், 1950க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்திருந்ததை ஆய்வில் கண்டறிந்தார். 1984இல் ஹேலி விரிகுடா (அண்டார்க்டிகா) ஆய்வு மையத்தில் கிடைத்த தரவுகளை ஒப்புநோக்கியதில், 1950க்கும் 1984க்கும் இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி மூன்றில் ஒன்றாக மெலிந்து போயிருப்பதைக் கண்டறிந்தார். ‘ஒசோன் படலத்தில் ஓட்டை’ என்கிற பொருளில் இது பெரும் விவாதமானது.
  • குளிரூட்டும் கருவிகளில் பயன்படுத்தப்படும் குளோரோ-ஃபுளூரோ-கார்பன் வளிகள் வளிமண்டலத்தில் கலந்து ஓசோன் படலத்தைச் சிதைக்கின்றன என்கிற உண்மை கண்டறியப்பட்டது. 1987இல் உலக நாடுகளின் தொழில் நிறுவனங்கள் பசுங்குடில் வளிகளைத் தவிர்த்து மாற்றுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அறிவுறுத்தும் மாண்ட்ரீல்நெறிமுறை (Montreal Protocol) வெளியிடப்பட்டது.

கியோட்டோ நெறிமுறை:

  • மாண்ட்ரீல் நெறிமுறை நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, பசுங்குடில் வளி குறைப்பு தொடர்பாக நிகழ்ந்த முக்கியமான சந்திப்பு கியோட்டோ மாநாடு (1997). பசுங்குடில் வளியைக் குறைப்பதற்கான சட்ட ரீதியான செயல் இலக்குகளை நிர்ணயிக்கும் முதல் சர்வதேச ஒப்பந்தமான கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol) ஜப்பானின் கியோட்டோவில் ஏற்கப்பட்டது. ஆனால் மாண்ட்ரீல் நெறிமுறையில் ஐக்கிய நாடுகள் சாதித்த வெற்றி, கியோட்டோ நெறிமுறையில் வசப்படவில்லை. கியோட்டோ நெறிமுறை சந்தைசார் தீர்வுகளை முன்வைத்தது இதற்கு ஒரு காரணமாகலாம்.

புவி உச்சி மாநாடு:

  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் -வளர்ச்சி அமைப்பு (UNCED) 1992 ஜூனில் சுற்றுச்சூழல் தொடர்பாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒரு பன்னாட்டு மாநாட்டை நடத்தியது. அதுவே ரியோ புவி உச்சி மாநாடு. 172 நாடுகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் கொள்கையும் (ரியோ பிரகடனம்) திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டன.
  • இந்த அறிக்கையின் அடிப்படையில் 32 துறைகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை இந்தியா கட்டாய மாக்கியது. கட்டுமானங்கள்/ தொழில்களுக்கு சுற்றுச் சூழல் தொடர்பான அனுமதி யளிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டன. 1996இல் மத்திய அரசு கடற்கரை, மலைப்பகுதி, அபாயகரமான கழிவு மேலாண்மைக்கென தனித்தனி வாரியங்களை அமைத்தது.
  • 2006 இல் அறிமுகமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நெறிமுறைகளின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைகள் (2014, 2016) வெளியிடப்பட்டன. முக்கியமாக சுரங்கம், நதிக்கரை போன்ற சிக்கலான துறைகள் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களில் அனுமதி அளிக்கும் கூடுதல் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.
  • 2016இல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் குழுக்கள் நிறுவப்பட்டன. இச்சட்டத்தில் பெருமுதலாளிகளுக்குச் சாதகமான கூறுகளை உள்படுத்திச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (திருத்த) மசோதாவை 2020இல் மத்திய அரசு முன்மொழிந்தது. நாடு தழுவிய எதிர்ப்பு காரணமாக அது கிடப்பில் போடப்பட்டாலும், அம்மசோதாவிலுள்ள பல பாதகமான கூறுகள் அரசாணைகளாக வெளியிடப் பட்டுவிட்டன.

பாரிஸ் ஒப்பந்தம்:

  • 2015இல் பாரிஸில் நடைபெற்ற ‘21ஆவது மாநாட்டில்’ (Conference of Parties- COP21) காலநிலை குறித்த ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா உள்ளிட்ட 196 நாடுகள் அதில் கையெழுத்திட்டன. நாடுகள் உறுதியளித்த முக்கியமான புள்ளிகள்: தொழிற்புரட்சிக் காலத்துக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து 1.5 பாகை செல்சியஸுக்கு மேல் உயராத அளவுக்குப் பசுங்குடில் வளி உமிழ்வைக் கட்டுப்படுத்துவது; 2030க்குள் நாட்டின் ஆற்றல் தேவையில் 50%ஐ புதைபடிவ எரிபொருள் சாராத வழியில் உற்பத்திசெய்வது; 500 கிகாவாட் ஆற்றலை அவ்வாறு உற்பத்தி செய்வதன் மூலம் பசுங்குடில் வளி உமிழ்வை ஒரு பில்லியன் டன் அளவு குறைப்பது; பொ.ஆ. (கி.பி.) 2070க்குள் பசுங்குடில் வளி உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவருவது. இயற்கை உறிஞ்சிக்கொள்ளும் அளவுக்குப் பசுங்குடில் வளி உமிழ்வைக் கட்டுப்படுத்துவதே பூஜ்ய கரிம உமிழ்வு.

இந்தியாவின் கரிமத் தடம்:

  • 20ஆம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு உலக அளவில் ஒரு கோடி சதுர கிலோமீட்டர் காட்டுப் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. 7.5 கோடி இந்தியர்கள் காடுகளைச் சார்ந்து பிழைப்பு நடத்திவருபவர்கள். ஒரு கோடி ஹெக்டேர் காட்டுப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; காடு சாராப் பயன்பாட்டுக்காக 57 லட்சம் ஹெக்டேர் காட்டுப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் 2.6 கோடி ஹெக்டேர் காடு அழிக்கப்பட்டுவிடும்.
  • வளரும் நாடுகள் கரிமத் தடத்தைக் (Carbon footprint- தனிநபர் உமிழும் கரிமத்தின் அளவை) குறைக்குமாறு வளர்ந்த நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. இதுவும் உண்மைக்குப் புறம்பான வாதம்தான். ஓர் ஒப்பீடு: அமெரிக்காவின் தனிநபர் ஆண்டுக் கரிம உமிழ்வு 14.2 மெட்ரிக் டன் எனில் சராசரி இந்தியரின் உமிழ்வு வெறும் 1.57 மெட்ரிக் டன்.
  • 17% மக்கள்தொகை கொண்ட இந்தியா உமிழும் கரிம நிகர் வளிச் சுமை வெறும் 7%. இதில் மின்னாற்றல் உற்பத்தியின் பங்கு 44%; தொழில், கட்டுமானம், பயன்பாடுகளின் பங்கு 26%; வேளாண்மை:14%; கழிவுகள்: 3%. இதில் முதல் இரண்டு வகைமையில் வருகிற 44 26% விழுக்காடு சுமையில் வளரும் நாடுகளுக்காக உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும், அவற்றின் மின்னாற்றல் பயன்பாடும் உட்பட்டது.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கரிம வளிச்சுமையிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலும் வளரும் நாடுகளின் நுகர்வுக்கு முக்கியப் பங்கு உண்டு. வளர்ந்த நாடுகளில் தொழிற்சாலை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கறாராகக் கடைப்பிடித்தாக வேண்டும். வளரும் நாடுகளின் மக்கள் விழிப்புணர்வற்றவர்கள்.
  • பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு இங்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது; நன்னீர், மின்னாற்றல், மாசுக் கட்டுப்பாடு அனைத்திலும் தாராளவாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவைக் குறைத்து, மாசு மேலாண்மைப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் பொருட்டு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் வளரும் நாடுகளைத் தங்கள் உற்பத்தியிடங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டன.
  • குறைந்த கூலியில் பணியாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திக்கான நீர் (மறைநீர்) தடையின்றிக் கிடைக்கப்பெறும்; நிலத்தடி நீர் இத்தொழிற்சாலைகளினால் அளவின்றி உறிஞ்சப்படுகிறது. நீர்நிலைகளின், காற்றின் மாசுச் சுமை ஏறுகிறது. எந்தச் சிக்கலும் இல்லாமல் பொருள் அவர்கள் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
  • நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்