சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைக் காப்பது யாருடைய கடமை?
- உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள், சட்ட விரோதிகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். உச்சபட்சமாகக் கொலைகூடச் செய்யப்படுகிறார்கள்.
- காடழிப்பு, மாசுபடுத்துதல், கட்டாயப்படுத்தி நிலங்களை அபகரிப்பது போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்துச் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபடுவது என அயராமல் இயங்கும் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
- பரவலாக இயற்கை வளங்களைக் கையாளும் தனியார் நிறுவனங்களே சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மிக முக்கியக் காரணம். அதில் சில அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பங்கிருப்பதை மறுக்க இயலாது.
- உலக அளவில் உயிர்களின் இருத்தலுக்கு அச்சுறுத்தலாகக் காலநிலை மாற்றம் மாறிவரும் இவ்வேளையில், இயற்கையைப் பாதுகாப்பதில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் பங்கு இன்றியமையாதது. புவி வெப்பமாதலுக்கான முதன்மைக் காரணங்களில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மிக முக்கியமானது. அந்த வகையில்தான் முதலாளித்துவப் பொருளாதார அடிப்படையில் இயங்கும் உலகம், தற்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை அதிகம் பயன்படுத்த முனைப்புக் காட்டுகிறது.
- இதனால் காடுகள் அழிக்கப்படுகின்றன; இயற்கைத் தாதுக்கள் சுரண்டப்படுகின்றன; சூரிய சக்தி, காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அத்தகைய தொழில் முன்னெடுப்புகள் மக்களின் நிலம், நீர், விவசாயம் உள்ளிட்ட வாழ்வுரிமைகளைப் பாதிக்கும்பட்சத்தில், தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.
தரவுகள் கூறும் உண்மை:
- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து 2012ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருங்கிணைந்த தரவுகள் பொதுவெளியில் ஏறக்குறைய இல்லை. நல்வாய்ப்பாக, 2012க்குப் பின் ‘குளோபல் விட்னஸ்’ (Global Witness) என்கிற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலிருந்தும், எத்தனை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டனர் என்கிற தரவுகளைச் சேகரித்துவருகிறது.
- 2012 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,106 பேர் இந்த வகையில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 1,873, பெண்கள் 226, அடையாளம் தெரியாதவர்கள் 6 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். 2012இல் கொலை செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை 139. அதுவே, 2023ஆம் ஆண்டு 197. இத்தரவுகள் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதைக் காட்டுகின்றன.
- 2023இல் உலகம் முழுவதும் 100 பேர் கூலிப்படைகளாலும் மாஃபியாக்களாலும், 19 பேர் ராணுவம் / காவல் துறையாலும் கொல்லப்பட்டுள்ளனர். நில உரிமையாளர்கள், தனியார் பாதுகாவலர்களால் பிறர் கொல்லப்பட்டுள்ளனர். 50% மரணங்களுக்குக் கூலிப்படைகளும் மாஃபியாக்களுமே காரணம். அதிகரித்துவரும் கொலைச் சம்பவங்கள் ஒருவகையில் இயற்கை வளச் சுரண்டலின் வேகம் அதிகரித்துவருவதையே காட்டுகிறது.
- சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், சுரங்கங்கள், கனிமங்கள் சார்ந்த தொழில் துறைகளே சுற்றுச்சூழல் பாதுகாவலர்களுக்கு மோசமான தீங்கு விளைவிப்பவையாக இருக்கின்றன. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நோக்கி நாம் நகர்வதையும், அது தொடர்புடைய மின் வாகனங்களுக்கான மின்கலன்கள் தயாரிக்கத் தேவையான நிக்கல், கோபால்ட், லித்தியம் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பதையும் வெளிப்படுத்துகிறது.
- மேற்சொன்ன 12 ஆண்டுகளில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 (அதில் நால்வர் பெண்கள்). இவர்களில் 18 பேர் கூலிப்படை அல்லது மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர்கள். 37 பேர் காவல் துறையால் கொல்லப்பட்டவர்கள். மீதமுள்ள 31 பேர் நில உரிமையாளர்களாலோ, தனியார் பாதுகாவலர்களாலோ அல்லது அடையாளம் தெரியாதவர்களாலோ கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 43% மரணங்கள் காவல் துறையால் நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பிற நாடுகளைப் போலவே, கொல்லப்பட்டவர்களில் ஏறக்குறைய 50% பேர் சுரங்கங்கள், கனிமங்கள் தொடர்புடைய தொழில்களுக்கு எதிராகப் போராடியவர்களே! 2023ஆம் ஆண்டு நம் நாட்டில் 5 பேர் இந்த வகையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசின் சமீபத்திய ‘தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கம்’ (National Critical Mineral Mission) செயல்பாட்டுக்கு வந்திருப்பது, அத்தகைய நிறுவனங்களால் நம் நாட்டில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கச் சாத்தியமாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
- ஒவ்வொரு தொழில் நிறுவனமும் அது ஏற்படுத்த இருக்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட்டு, மக்களின் கருத்தைக் கேட்டு, அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் பின்பற்றப்படுகின்றனவா என்பது மிகப் பெரிய கேள்வி. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக மணல், கனிம வளங்களைச் சுரண்டுதல், மாசு ஏற்படுத்துதல் போன்றவை அன்றாடச் செய்திகளாகிவிட்டன.
- ஜனநாயகரீதியிலான போராட்டங்களுக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கும் புகலிடமாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை முடக்கும் விதமாகப் புதிய சட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் தங்களின் உரிமைக்காகவும், விதிகளை மீறும் நிறுவனங்களைக் கேள்வி கேட்டுப் போராடுபவர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரிக்கும் நடைமுறை கையாளப்படுகிறது.
- நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு நடைமுறைகளை இலகுவாக்குவது, ஊக்கப்படுத்துவது என்கிற வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து, அதனால் விளையும் தீமைகளை எதிர்த்துப் போராடுபவர்களைக் காவல் துறையின் உதவிகொண்டு ஒடுக்குவது நம் நாட்டிலும் நடந்துவருகிறது. மேலும், செயல்பாட்டாளர்களுக்கு எதிராகப் பொய்ப் பரப்புரைகள் (பெருமளவு சமூக வலைதளங்களில்) முன்னெடுக்கப்படுவதையும் காண முடிகிறது.
- அத்தகைய பரப்புரைகள், அவர்களைத் தேச விரோதிகள், நகர்ப்புற நக்ஸல்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என முத்திரைகுத்துவதும் பரவலாகக் காணப்படுகிறது. விதிமீறும் நிறுவனங்களால் நிகழ்த்தப்படும் அவர்களின் உயிருக்கு எதிரான தாக்குதல்களையும், பொய்ப் பரப்புரைகளால் நிகழ்த்தப்படும் உளவியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டே களத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பிற உயிர்களின் நலனுக்காகவும் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து இயங்கிவருகிறார்கள்.
- ஆக, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது? அதற்கான தீர்வு மிக எளிமையானது! அது நடைமுறையில் உள்ள மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை எவ்வித சமரசமும் இன்றி நடைமுறைப்படுத்துவதே. ஆனால், அவ்வாறு நடக்கும் என எதிர்பார்ப்பது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும். எனவேதான் நிலம், வளம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றைக் காக்க முனைவோர் அச்சுறுத்தலுக்கு ஆளாவது ஒரு தொடர்கதையாகவே நீள்கிறது.
- பொதுச் சமூகம் அவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தால், செயல்பாட்டாளர்களுக்கு அது ஊக்கத்தைத் தரும். நாம் ஒருவரை இழந்தாலும் இன்னொருவர் எழுவார். இயற்கைப் பாதுகாப்புக்கான அறப்போராட்டங்கள் தொடரும். ஏனெனில், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் மிக நீண்டது, இடைநில்லாதது. இப்போராட்டம் ஒரு தலைமுறையோடு முடிந்துவிடாமல், எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காகவும் தொடர வேண்டியதாக உள்ளது. அது காலத்தின் கட்டாயம்!
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)