TNPSC Thervupettagam

சுற்றுலா: அழகான நெருப்பு நிலம்!

August 8 , 2024 113 days 111 0

சுற்றுலா: அழகான நெருப்பு நிலம்!

  • கோவையில் இருந்து ஷார்ஜா சென்று, அங்கிருந்து அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இறங்கினோம். பழங்காலத்தின் வசீகரமும் இன்றைய நவீனமும் இணைந்த நகரம் பாகு. 1991 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பழைய சோவியத் பாணியும் நவீனமும் கலந்த கட்டிடங்கள் பெரிது பெரிதாக நின்றிருந்தன. சுவர்களில் அழகான சுதைச் சிற்பங்கள் காணப்பட்டன.
  • இஸ்லாமியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு அசர்பைஜான். இதன் மக்கள்தொகை ஒரு கோடி. பாகுவின் விஸ்தாரமான சாலைகளின் இருபுறமும் பசுமையான மரங்கள், புல்வெளிகள், அவற்றினூடே சிறு மலர் பாத்திகள் என்று மனதைக் கவர்ந்தன. தூசியும் குப்பையும் இல்லாதவண்ணம் மிக நேர்த்தியாகச் சாலைகள் பராமரிக்கப்பட்டிருந்தன.
  • இரண்டு சக்கர வாகனங்களுக்குச் சாலையில் அனுமதி இல்லை. இரவு ஏழு மணிக்கும் பகல்போல் வெளிச்சம் இருந்தது. அசர்பைஜான் பார்லிமென்ட்டுக்கு அருகில் ஒரு சதுக்கம் இருந்தது. அக் டோபர் 18, 1991 அன்று சோவியத்தில் இருந்து பிரிந்து அசர்பைஜான் தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. சோவியத் ராணுவத்தினரால் உயிரிழந்த அசர்பைஜானிய வீரர்களுக்கான சதுக்கத்தில் தீபம் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கிறது.
  • அப்லேண்ட் பூங்காவில் இருந்தபடி பறவைக் கோணத்தில் பாகுவைப் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. அங்கிருந்த போட்ஹவுஸ் இளம் காதலர்களால் வசீகரித்தது. கபாலாவுக்குப் (Qabala) போகும் வழியில் நம் ஊரில் குடிநீர்க் குழாய்கள் போன்று அங்கே ஐநூறு அடி தொலைவுக்கு ஓர் எண்ணெய் குழாய் அமைத்திருக்கிறார்கள். ஐந்து பேர் பயணிக்கும்விதமாக கேபிள் கார்கள் இருக்கின்றன. மேலிருந்து கீழே பார்த்தால் தலைசுற்றுகிறது.
  • பக்கவாட்டில் காகசஸ் மலைச்சரிவுகளில் காடுகள் அடர்ந்திருந்தன. கீழே ஓடைகள் தெரிந்தன. ஆனால், வெயில் காலம் என்பதால் இப்போது தண்ணீர் ஓடிய தடங்கள் மட்டுமே காணப்பட்டன. சில ஓடைகளில் மட்டுமே சிறிது தண்ணீர் இருந்தது. சீசனில் உறைபனியாக இருக்குமாம் அந்த இடம்.
  • ‘பாகு அதேஷ்கா’ என்று அழைக்கப் படும் நெருப்புக் கோயிலுக்குச் சென்றோம். 17 - 18 ஆம் நூற்றாண்டுக் கிடையில் கட்டப்பட்ட ஐங்கோண வடிவிலான மையக் கட்டிடமும் அதைச் சூழ்ந்த துறவிகளுக்கான சிறு குடில்களுமாக இந்தக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • இங்கே ஏழு இயற்கைத் துவாரங்கள் வழியாக நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மீத்தேன் வாயு. அதேஷ்கா அமைந்திருக்கும் ‘சுராகானி’ நகரம் கனிம வளத்தால் நிலத்தடியில் இருந்து பீறிட்டு, தானாகவே தீப்பற்றி எரியும் இடமாக இருக்கிறது.
  • அவெஸ்தான் கலாச்சார தொடர்புகளைக் கொண்ட நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்பட்டன. அங்கிருக்கும் சிறு குடில் போன்ற அறைகளில் கைகால் பிணைக்கப்பட்டு, வேலை செய்யும் பலவிதமான தண்டனைக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருந்தன.
  • மனிதர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்தால், தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக்கொண்டு, இந்தப் பிறவியிலேயே அவற்றை அனுபவித்து விட்டால், இறந்த பிறகு கடவுளிடம் தண்டனை ஏதும் கிடைக்காது என்று நம்பியதை விளக்கும் சிற்பங்கள் இவை.
  • யானர் டாக் (Yanar Dagh) எனப்படும் எரியும் மலைக்குச் சென்றோம். இது பாகுவுக்கு அருகில் உள்ள மலைத் தொடரில் எரியும் நெருப்புள்ள பகுதி. மெல்லிய நுண்துளை மணல் அடுக்கி லிருந்து மூன்று மீட்டர் உயரத்துக்குத் தீப்பிழம்புகள் காற்றில் பறந்தன. இவை இரவில் வண்ணமயமான தீப்பிழம்புகளாக மாறுகின்றன.
  • சுமார் நான்காயிரம் வருடங்களாக மழை, புயல், பனிப்பொழிவு போன்றவற்றை எல்லாம் எதிர்கொண்டு, இந்தத் தீ எரிந்துகொண்டே இருக்கிறது! இதைச் சுற்றி சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு வெப்பக் காற்று வீசுகிறது. இந்தத் தீப்பிழம்புகள் காரணமாக அசர்பைஜான் நாடு ‘நெருப்பு நிலம்’ என்று அழைக்கப் படுகிறது.
  • தேனால் செய்யப்பட்ட ‘பக்ளாவா’ என்கிற இனிப்பு பிரமாதமாக இருந்தது. அசர்பைஜான் கலாச்சாரத்தில் ரொட்டி புனிதமான பொருள். மிஞ்சிய ரொட்டிகள் குப்பைத் தொட்டியில் எறியப்படு வதில்லை. கெட்டுப்போன ரொட்டிகள் உயரமான இடங்களிலோ மரங்களிலோ தொங்கவிடப்படுகின்றன. ரொட்டியை வீணாக்குவதும் காலில் மிதிப்பதும் இங்கே குற்றமாகக் கருதப்படுகிறது.
  • காஸ்பியன் கடல் என்று சொல்லப் பட்டாலும் இது உலகின் மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை கொண்டது. இங்குள்ள நீரில் எண்ணெய் கலந்துள்ள தால் தண்ணீருக்கு அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
  • புகழ்பெற்ற ஈராக்-பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஜஹா ஹடிட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஹெய்டர் அலியேவ் மியூசியம் (Heydar Aliyev Museum) 2012இல் திறக்கப்பட்டது. அதன் அலை போன்ற வடிவத்தால் நவீன அசர்பைஜானின் சின்னமாக மாறியிருக்கிறது.
  • சட்டத்தை மதித்தல், சுகாதாரத்தைப் பேணுதல், பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல், நட்புடன் பழகுதல் போன்றவற்றின் காரணமாக அசர்பைஜானியர்கள் பிற நாட்டினரை ஈர்க்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்