- பொருளாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் முன்செலுத்துவதற்கு சூரிய சக்தியைப் குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
- ஏனெனில், பசுமையானதொரு எதிர்காலத்துக்கு அது வழிவகுக்கும் என்று நம்பலாம். மின்சக்திக்கும் தொழில் துறையின் சுயசார்புக்கும் சூரிய சக்தி எவ்வளவு அவசியம் என்று அவர் பேசியிருக்கிறார்.
- எனினும், தரமான ஃபோட்டோவோல்ட்டாய்க் மின்கலங்கள் உள்ளிட்ட சாதனங்களை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி தொழில் துறையைக் கட்டமைக்க வேண்டும் என்பது நெடுங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் விஷயம்தான்.
- இந்தியா 35 ஜிகா வாட் அளவுக்கு சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. கரோனா பாதிப்புப் பின்னணியில் 2024-க்குள் 50 ஜிகா வாட் அளவுக்கு சூரிய மின்சக்தியை இந்தியா தயாரிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
- 2022-க்குள் 100 ஜிகா வாட் சூரிய மின்சக்தியை இந்தியா உற்பத்திசெய்ய வேண்டும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் பாதியளவுதான் எட்டப்படும் என்று தெரிகிறது.
- இது பெரிய அளவிலான பற்றாக்குறையாகும். கடந்த ஆண்டு 3.1 ஜிகா வாட் திறனுள்ள உள்நாட்டு மின்கலங்களே உற்பத்திசெய்யப்பட்டன என்பதையும், இதில் சீனாவையே பெரிதும் சார்ந்திருக்கிறோம் என்பதையும் வைத்துப் பார்க்கும்போது நமக்கு வலுவான கொள்கைகள் தேவை என்று தோன்றுகிறது.
- சூரிய மின்சக்தித் துறையில் சீனாவை கவனிக்க வேண்டும். 1990-களில் மிகச் சாதாரண உற்பத்தியாளராக இருந்த சீனா தற்போது உலக அளவில் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
- உயர் தொழில்நுட்பங்களைக் கண்டறிதலிலும் அவற்றைப் பெறுதலிலும், அரசின் ஆதரவு தொடர்ந்து இருந்துவந்ததே இதற்குக் காரணம். இந்தத் துறையில் பெரிதும் ஏற்றுமதி செய்வதில் காட்டிய அதே அளவுக்கு உள்நாட்டுச் சந்தையிலும் சீனா கவனம் செலுத்தியது.
- பசுமை மின்சக்தியைப் பற்றித் திட்டமிடுவதற்கு இந்தக் கொள்ளைநோய் நமக்கு முக்கியமான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. நிலக்கரி போன்ற அதிக மாசுபடுத்தும் எரிபொருட்களை விடுத்து, மாசற்ற சக்தி உற்பத்தியில் ஈடுபடுதல், எதிர்கால வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதத்தில் அமைத்துக்கொள்ளுதல் போன்ற வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதே வழிமுறைகளை இந்தியாவும் பின்பற்றலாம். பாதுகாப்புத் துறைக்கு இணையான முக்கியத்துவத்தை சூரிய மின்சக்தித் துறைக்குத் தர வேண்டிய தருணம் இது.
- 120 நாடுகளைக் கொண்டிருக்கும் ‘சர்வதேச சூரிய சக்தி கூட்டணி’ என்ற அமைப்பை நிறுவியதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா, இந்தத் துறையில் உற்பத்தியில் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும். மாநிலங்களின் ஆதரவு பெறத்தக்க வகையில் இதற்கான கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (04-08-2020)