- இயற்கையின், மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமான பறவைகளின் எண்ணிக்கை சமீப காலமாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு மனிதச் செயல்பாடுகள்தான் முதன்மைக் காரணம். பூச்சிக்கொல்லிகள், வேட்டை, செல்லப் பிராணிகள் வளர்ப்பு போன்ற காரணங்களால் பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
பறவை இனங்கள்
- முன்பு அதிக அளவில் காணப்பட்ட ஒரு பகுதிக்கே உரிய பறவைகள், வலசைப் பறவைகள் பலவும் கடந்த 25 ஆண்டுகளாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதைச் சமீபத்தில் வெளியான ‘இந்தியப் பறவைகளின் நிலை-2020’ என்ற அறிவியல் அறிக்கை உணர்த்துகிறது.
- உலக அளவிலான 10 நிறுவனங்களின் கூட்டு முயற்சியான இந்த அறிக்கை பறவையியலுக்குச் செய்யப்பட்ட பெரும் பங்களிப்பு. 15,500 பறவை ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கோடி அவதானிப்புகளைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
- கடந்த 25 ஆண்டுகளில் பல வகைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது குறித்தும், சமீபத்திய போக்குகள் குறித்தும் போதுமான தரவுகள் கிடைத்திருக்கின்றன. தரவுகளில் உள்ள போதாமையால் பல சிற்றினங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ‘சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு’ (ஐயூசிஎன்) வெளியிட்டிருக்கும் பட்டியலில் ‘குறைந்த கவனம் கோரும்’ பறவைகளில் சில இந்தியாவில் ஆபத்தான நிலையில் உள்ளன.
தரவுகள்
- பறவைகள் நிரம்பிய நாடாக இந்தியா இருந்தபோதும் அடையாளம் காணப்பட்ட 867 பறவை வகைகளில் 261 வகைகள் மட்டுமே முழு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு மட்டுமே நீண்ட காலத் தரவுகள் கிடைக்கின்றன. இவற்றில் 52% ‘அதிக கவனம்’ கோருபவையாகத் தற்போது வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
- இதில் ஆறுதலான செய்தி என்னவென்றால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் பெரிதும் மாற்றமில்லை. சில பெரிய நகரங்களிலிருந்து சிட்டுக்குருவிகள் காணாமல் போயிருக்கின்றன, அவ்வளவுதான். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிலைதான் கவலைக்குரியதாக இருக்கிறது. அங்கே அதிக அளவில் காணப்பட்ட இப்பகுதிக்கே உரிய 12 பறவை வகைகள் 2000-க்குப் பிறகு 75% குறைந்துவிட்டன. நீலகிரி நெட்டைக்காலி, நீலகிரிப் பூங்குருவி போன்றவற்றின் எதிர்காலம் சோலைக்காடுகளைச் சார்ந்தே இருக்கிறது.
‘காட்டுயிர்களில் வலசை வரும் இனங்களைப் பாதுகாப்பது’
- குஜராத்தில் சமீபத்தில் நடந்த ‘காட்டுயிர்களில் வலசை வரும் இனங்களைப் பாதுகாப்பது’ குறித்த சர்வதேச மாநாட்டில், இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மக்களின் அறிவியலைத் தனது தரவு ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை மிகவும் புத்துணர்வைத் தருவது. இதுபோன்ற கூட்டுப் பங்களிப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது.
- மிகக் குறைந்த எண்ணிக்கையில் தற்போது இருக்கும் கானமயில்களைக் காத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம். கல்குருவிகள், வரகுக்கோழிகள் போன்றவற்றின் வாழிடங்களும் அழிக்கப்பட்டுவருகின்றன. செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக அதிக அளவில் கண்ணி வைத்துப் பிடிக்கப்படும் பச்சைச் சில்லைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பறவைகளின் பன்மைத்துவம் இந்தியாவைப் பறவைகளின் சொர்க்கமாக ஆக்குகிறது. பண்பாட்டுக் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் காடுகள், சதுப்பு நிலங்கள், சமவெளி, மலைப் பரப்புகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காகவும் இந்தியப் பறவைகளின் பன்மைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25-02-2020)