- கேரளத்தின் வடகிழக்கு மாவட்டமான வயநாட்டில் ஜூலை 30 அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பதில் கோட்டைவிடும் ஆட்சியாளர்களின் மெத்தனத்தையும் இந்தக் கோர நிகழ்வு நமக்கு உணர்த்தியிருக்கிறது.
- இயற்கைப் பேரிடர்களை அதிகம் எதிர்கொள்ளும் கேரளத்தில் 2018 வெள்ளத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பேரிடர் இது. மலைகள் நிறைந்த வயநாட்டில் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை இந்த நிலச்சரிவுக்கு வழிவகுத்துவிட்டது.
- இதனிடையே, இயற்கைப் பேரிடர் குறித்து கேரள அரசு முன்னெச்சரிக்கையாக இருக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் நிலையில், அதை மறுத்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், இது பழிசுமத்துவதற்கான நேரம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
- அரசியல் கருத்து முரண்கள் ஒருபுறம் இருந்தாலும், இயற்கை விடுத்த எச்சரிக்கையை யாரும் தீவிரமாக அணுகாததே இத்தகைய பேரழிவுக்குக் காரணம் எனச் சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, முண்டக்கை பகுதியில் சுற்றுலா தொடர்பான பணிகளுக்காக விதிகளை மீறி வீடுகள், தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் அதிகரித்துக்கொண்டே வந்தன.
- வாகனப் போக்குவரத்து, குப்பைக் கூளங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் முடிவின்றித் தொடர்ந்தன. கூடவே காடுகளை அழித்தல், சுரங்கப் பணிகள், செயற்கை ஏரிகளை அமைத்தல் உள்ளிட்டவையும் வயநாட்டின் சீரழிவுக்கு முக்கியக் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.
- குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற குரல்களுக்கு உரிய பலன் கிட்டவில்லை. 2011இல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான ‘மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு’ (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் 75 சதவீதப் பகுதியைச் சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- 2013இல் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மேற்குத் தொடர்ச்சி மலையின் 50 சதவீதப் பகுதியைச் சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக அறிவிக்குமாறு பரிந்துரைத்தது. வயநாட்டின் சூரல்மலை, மேப்பாடி பகுதிகள் உள்பட, கேரளத்தின் 26% நிலப் பகுதிகள் நிலச்சரிவின் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக 2019இல் கேரள அரசின் ஜவாஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்தது.
- இதுதொடர்பான வரைபடத்தையும் கேரள மாநிலப் பல்லுயிர் வாரியத்துக்கு அளித்தது. வயநாடு பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும், 4,000 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், 2020இல் பேரழிவு மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது. அதில் முண்டக்கை பகுதி முக்கியமானது.
- இப்படி இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் குரல்கள் விடாமல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இந்தக் குரல்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை. விளைவாக, காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பின் மிக மோசமான அத்தியாயமாக வயநாடு துயரம் அமைந்துவிட்டது.
- இயற்கைச் சீற்ற ஆபத்து நிறைந்த பகுதிகளில் சுற்றுலா உள்ளிட்டவற்றால் மனிதர்களுக்குக் குறுகிய காலப் பலன்கள் கிடைக்கலாம். ஆனால், தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை வகுக்காவிட்டால், பேரழிவுகளைத் தடுக்க முடியாது. இது கேரளம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)