TNPSC Thervupettagam

சென்னைக்குப் பன்முகம் தந்தவர்கள்

August 20 , 2023 512 days 274 0

கல்வியாளர்: மோனா மிட்டர் ஹென்ஸ்மேன்

  • கல்வியாளர், நாடாளுமன்ற வாதி, பெண்ணியச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர் மோனா மிட்டர் ஹென்ஸ்மேன். மோனா, இன்றைய மேற்கு வங்க மாநிலத்தின் பெர்காம்பூரில் 1899இல் பிறந்தவர். ஆர். கே. மிட்டர், பெனோடினி போஸ் இணையருக்கு மகளாகப் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ மருத்துவர்.
  • மோனாவின் தமிழ்நாட்டுத் தொடர்பு அவரது பள்ளிப் பிராயத்தில் தொடங்கியது. ஊட்டியில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் பள்ளியில்தான் அவர் படித்தார். கல்லூரிப் படிப்பை இங்கிலாந்தில் படித்தார். ஆசிரியப் பணியை லாகூரில் கின்னெய்ட் கல்லூரி யில் தொடங்கினார். சில காலத்துக்குள் அவர் சென்னை திரும்பினார். சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் பிரெஞ்சும் ஆங்கிலமும் போதித்தார். பிறகு எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.
  • இவர் முதல்வராக இருந்த கால கட்டத்தில்தான் புதிய கட்டிடங்கள் பல இந்தக் கல்லூரியில் கட்டப்பட்டன. இந்திரா காந்தி போன்ற பெரும் தலைவர்களை கல்லூரிக்குப் பேச அழைத்து மாணவியரை உற்சாகப் படுத்தினார். உயர் கல்விச் சேவையில் பல ஆண்டுகள் செலவழித்தார். அதே காலகட்டத்தில் பெண்கள் அமைப்பு களிலும் இணைந்து செயல்பட்டார். சென்னையில் லேடீஸ் ரீக்ரியேஷன் கிளப் ஆஃப் மெட்ராஸின் தொடக்க கால உறுப்பினராகச் செயல்பட்டார். பெண்களுக்கு விளையாட்டுகள் நிந்திக்கப்பட்ட காலத்தில் இந்த அமைப்பின் வழி அதை ஊக்குவிக்கும் செயல்பாட்டில் மோனாவும் ஒருவராக இருந்தார்.
  • 1929இல் இளம் கிறிஸ்துவ பெண்கள் சங்கத்தின் முதல் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவிலும் எடின்பர்க்கிலும் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் பற்றி உரை நிகழ்த்தினார். நாடாளு மன்றவாதியாகவும் மோனா திறம்படச் செயல்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சென்னை மாகாணச் சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுதந்திர இந்தியா வின் மாநிலங்களவை உறுப்பினராக இந்திய தேசியக் காங்கிரஸ் சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டு கள் செயல்பட்டார். அவர் மாநிலங்க ளவை உறுப்பினராக இருந்த கால கட்டத்தில் சிறப்பு திருமணம், இந்து திருமணம், விவகாரத்து ஆகியவை குறித்த சட்ட வரைவுகள் மீது முக்கியமான விவாதங்களை முன்வைத்தார். மோனா, இலங்கையி லிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய தமிழ்வம்சாவளியினரான ஹென்ஸ் மேனை மணந்தார் என்பது விசேஷமானது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமூகப் பங்களிப்புக்காக அர்ப்பணித்தவர் மோனா ஹென்ஸ்மேன் என்பதை அவர் வரலாற்றைப் புரட்டும்போது புலனாகிறது.

பட்டியல் இனப் போராளி: மீனாம்பாள் சிவராஜ்

  • பட்டியல் இன மக்களுக்காகத் தன் குரலை எழுப்பிய பெண் போராளி இவர். சட்டமன்றவாதி யாகவும் இந்திய தேசிய அரசியல் வாதியாகவும் அடையாளம் கொண்டவர்.
  • மீனாம்பாள், பர்மாவில் வாசுதேவருக் கும் மீனாட்சிக்கும் மகளாகப் பிறந்தவர். பர்மாவிலேயே ‘ஃபெல்லோ ஆஃப் ஆர்ட்ஸ்’ எனப்படும் உயர் கல்வி பயின்றார். சென்னைக்குத் திரும்பிய பிறகு தனது 16ஆம் வயதில் பட்டியல் இனத் தலைவர்களில் முக்கியமானவரான ந.சிவராஜை மணந்தார். இவர் இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தேசியத் தலைவர்.
  • இந்தத் திருமணம் ஏற்கெனவே அவருக்குள் இருந்த போராட்டத்துக்குப் பாதை அமைத்தது. காங்கிரஸின் முக்கிய மான தலைவர்கள் பலரும் சைமன் குழுவை எதிர்த்தபோது மீனாம்பாள் அதை ஆதரித்தார். நீதிக் கட்சி மட்டுமே பிரிட்டிஷ் அரசு முன்வைத்த இரட்டை ஆட்சி முறையை ஏற்று தேர்தலை எதிர்கொண்டு ஆட்சி புரிந்தது. பட்டியல் இன மக்களுக்கான சுதந்திரத்தை வழங்கு வதாக அது இருந்தது. சைமன் குழுவை ஆதரித்த வகையில் மீனாம்பாள் தேசிய அளவில் கவனிக்கப்படும் தலைவராக ஆனார். சிவராஜும் மீனாம்பாளும் அம்பேத்கருக்கு நெருக்கமாக இருந்தனர்.
  • மீனாம்பாள் பெரியா ரின் சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டுக் கருத் துகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தன் தீரமான செயல் பாட்டால் முக்கியமான சுய மரியாதைத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். சுயமரியாதை அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வான காஞ்சிபுரம் கறுப்புச் சட்டை மாநாட்டில் மீனாம்பாளும் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பெரியாருக்குப் ‘பெரியார்’ என் கிற பட்டத்தை முன்மொழிந்த மாநாட்டுப் பெண் உறுப்பினர்களில் மீனாம்பாளும் ஒருவர். சென்னை மாநகராட்சியின் பட்டியல் இன மக்கள் பிரதிநிதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டார். 1944இல் அகில இந்தியப் பட்டியல் இன மகளிர் கூட்டமைப்பின் தலைவரானார்.
  • சென்னை மாநகராட்சி உறுப்பினராக வும் துணை மேயராகவும் செயலாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணி யில் நின்று போராடினார். ஒரு பட்டியல் இனப் போராளியாக இந்தச் செயல்பாடு அவரது பரந்துபட்ட அரசியல் நிலையைப் பறைசாற்றுகிறது. சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பொறுப் பேற்று வழிநடத்தியவர் மீனாம்பாள். ஒரு சில அறிவாளிகளின் பிரச்சாரத்தை ஒரு வெகுஜன புரட்சியாக மாற்ற மீனாம்பாள் காரணமாக இருந்தார். அவரது திறமை யான தலைமையின்கீழ், பட்டியல் இனத் தைச் சேர்ந்த பலர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்தனர். இம்மாதிரி அம்சங்களில்தான் அவர் முன்னுதாரணம் மிக்கச் சமூகப் போராளி என்பது நிரூபணமாகிறது.

கல்விச் செயல்பாட்டாளர்: பேகம் சுல்தான் மீர் அமிருதீன்

  • பேகம் சுல்தான் மிர் அமிருதீன், சட்டமன்றவாதியாகவும் பெண்ணுரிமைப் போராளியாகவும் கல்விச் செயல்பாட்டாளராகவும் பங்காற்றியவர்.
  • பேகம், பிரிட்டிஷ் இந்தியாவில் கல்கத்தாவில் யாகூப் ஹசன் - கதீஜா யாகூப் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். இவரது தந்தை யாகூப், கிலாபத் இயக்கவாதியாக இருந்தாலும் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டவர். ராஜாஜியுடனும் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார். 1937 காலகட்டத்தில் ராஜாஜியின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பேகத்தின் தாயும் அரசியலில் ஈடுபட்டார். இந்தப் பின்னணியில் வளர்ந்ததால் பேகத்துக்கும் அரசியல் ஆர்வம் இளம் வயதிலேயே வந்தது. 1920இல் படித்துப் பட்டம்பெற்றார். வீட்டிலிருந்தபடியே கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று முதல் மாணவியாகத் தேர்வுபெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. கல்கத்தாவில் இருந்தபோதே மகளிர் உரிமைக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
  • தஞ்சை மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்த மீர் அமிருதீன் சுல்தானை மணந்த பிறகுதான் இவருக்குச் சென்னை தொடர்பு ஏற்பட்டது. இங்கும் தன் சமூகச் செயல்பாட்டைத் தொடர்ந்தார். சென்னை சர்வதேசப் பெண்கள் கூட்டமைப்பில் இணைந்து சென்னை மாகாணப் பெண்களைக் கல்வி அறிவு பெறச்செய்வதில் முனைப்புடன் செயல்பட்டார். இந்த முறைப்பாட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திரத்தில் பெண்கள் கல்வி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.
  • சேலத்தில் கல்விக்காக ஒரு கல்விச் சேவைக் கழகத்தைத் தொடங்கினார். சென்னை மாகாணத்தில் பல பகுதிகளில் அவருடைய கணவர் அமர்வு நீதிபதியாக இருந்ததை நல்வழியில் பயன்படுத்திப் பெண்கள் கல்வி பெற வழி வகை செய்தார். உதாரணமாக சேலத்தில் அவருடைய கணவர் பணியாற்றிய காலத்தில் அந்த நகராட்சியில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தினார். மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • 1946இல் நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லீம் லீக் உறுப்பினர் பேகம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடும் நினைவுகூரத்தக்கதாக இருந்தது. கல்விக்கான நிதியை அதிகரிக்கவும் மருத்துவக் கல்வி வசதியை மேம்படுத்தவும் வலிறுத்தினார். வேளாண் தொழிலின் அவசியம் குறித்துத் தொடர்ந்து பேசி வந்தார்.
  • தரமான விதை, உரம், கருவிகள் உழவர்களுக்குக் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும் எனச் சொன்னார். இஸ்லாம் பெண்களின் நிலை குறித்தி ஆங்கிலத்தில் தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். தன்னை முன்னிறுத்தாமல் சமூகத்துக்காகச் செயலாற்றியவர் பேகம். ‘அறியப்படாத ஆளுமை’ என்கிற பதம் இவர் வழி பொருளைக் கண்டடையும்.

நன்றி: தி இந்து (20 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்