- உலகில் வாழத் தகுதியில்லாத இடம் எனப் பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுவது, மகாகனம் பொருந்திய சென்னை மாநகரைத்தான்! சென்னையில் கால் வைத்திராதவர்களும்கூட இத்தகைய கற்பிதத்தில் ஆழ்ந்திருப்பதற்கு, இந்த நகரத்தின் தட்பவெப்பம் (weather) பற்றி காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கதைகளும் ஒரு காரணம். பண்டைய தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பெரும் பொழுதுகளாகப் பகுத்திருந்தனர்; ஆனால், சென்னையில் எப்போதும் ஒரே பருவம்தான், அது சுட்டெரிக்கும் வெயில் காலம்.
- மழையும் வெள்ளமும் இந்நகரத்துக்குப் புதிதல்ல என்றாலும், 2015 பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, மழையின் காரணமாகவும் சென்னை பல்வேறு நெருக்கடிகளைச் சமீப காலங்களில் எதிர்கொண்டுவருகிறது. அரசியல், பண்பாடு, உணவு எனப் பல்வேறு பரிமாணங்களில் சென்னையின் வரலாறு - முதன்மையாக ஆங்கிலத்தில் - எழுதப்பட்டுவருகிறது.
- ஆனால், சென்னையின் காலநிலை சார்ந்த குறிப்புகள், இத்தகைய வரலாற்றுப் பதிவுகளில் மிகப் பெரிய விடுபடல்களாகத் தொடர்கின்றன. சென்னையின் காலநிலை வரலாறு சார்ந்த யோசனைகூட எங்கும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.
- 16ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், தொண்டை மண்டலக் கடற்கரையின் மீனவக் கிராமங்களில் ஒன்றாக இருந்த ‘சென்னப்பட்டணம்’, இன்று உலகப் பெருநகரமாகப் பரிணமித்திருப்பதன் பின்னணியில்,காலநிலை ஆற்றிய பங்குஆய்வுக்குரியது; காலநிலை மாற்றம்நிகழ்ந்துவரும் இந்தக் காலத்தில் அத்தகைய ஓர் ஆய்வு தமிழில் அத்தியாவசிய மானதும்கூட.
முதல் பதிவுகள்
- சென்னையில் முதல் ஐரோப்பியர்களாக, போர்த்துகீசியர்கள் சாந்தோம் பகுதியில் பொ.ஆ. (கி.பி.) 1522 வாக்கில் கால்பதித்தனர். 1600 காலகட்டத்தில், இந்தியாவில் வணிகம் செய்வதற்கு அனுமதிபெற்ற கிழக்கிந்தியக் கம்பெனி, இங்கு 1639இல் ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி, புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது. ‘நவீன சென்னை’யின் வரலாறு அப்போது தொடங்கியது.
- 18, 19ஆம் நூற்றாண்டில், இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் வானிலை-காலநிலையின் தாக்கங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஐரோப்பிய மிஷனரிகள், காலனிய அதிகாரிகள் பலர் தனிப்பட்ட முறையில் வானிலை ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினர். வானிலை/ காலநிலை சார்ந்து நாள்குறிப்புகள் எழுதுவது அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்துசென்ற ஐரோப்பியர்களின் முக்கியப் பொழுதுபோக்கு.
- அந்த வகையில், ஜெர்மன்-டானிஷ் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த யோஹான் எர்னஸ்ட் ஜெய்ஸ்டர் கைப்பட எழுதிய இரண்டு வானிலை நாள்குறிப்புகள் (1732 அக்டோபர் தொடங்கி 1737 ஜூலை 20 வரை; 1789 பிப்ரவரி 1 தொடங்கி 1791 டிசம்பர் 31 வரை), 18ஆம் நூற்றாண்டு சென்னையின் காலநிலையைப் புரிந்துகொள்ள மிகப் பெரிய திறப்புகளை வழங்குகின்றன.
- ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் வில்லியம் ராக்ஸ்பர்க், 1776இல் இந்தியாவுக்கு வந்தார். புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தபடி வளிமண்டல அழுத்தத்தைப் பதிவுசெய்துவந்த அவரது நாள்குறிப்புகள், அக்டோபர் 1776 தொடங்கி மே 1778 வரை நீள்கின்றன. 1778இல் நாகூருக்கு இடம்மாற்றப்பட்ட அவர், அங்கிருந்து 1793இல் கல்கத்தா தாவரவியல் பூங்காவின் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்படும்வரை வானிலை நாள்குறிப்புகளை எழுதிவந்தார்.
- காற்று, வெப்பநிலை ஆகியவற்றுடன் மழைப்பொழிவு அளவையும் ராக்ஸ்பர்க் பதிவுசெய்துவந்திருக்கிறார். மற்றொரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான ஜேம்ஸ் காப்பர், பருவமழை சார்ந்து ஆர்வம் கொண்டிருந்ததை, மார்ச் 1777 முதல் மே 1778 வரை பதிவாகியுள்ள அவரது வானிலை நாள்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
அதிகாரபூர்வ பதிவுகள்
- இந்தப் பின்னணியில்தான், வில்லியம் பெட்ரி என்கிற கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி, தனியார் வானியல் ஆய்வகம் ஒன்றை 1786இல் எழும்பூரில் நிறுவினார். அவர் இந்தியாவிலிருந்து புறப்பட்டபோது, அந்த ஆய்வகத்தை கம்பெனியிடம் கையளித்துவிட்டுச் சென்றார்.
- இந்நிலையில், மெட்ராஸில் வானிலை ஆய்வு மையம் ஒன்றைத் தொடங்குவதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒப்புதல் அளிக்கவே, நுங்கம்பாக்கத்துக்கும் இடமாற்றப்பட்ட பெட்ரியின் ஆய்வகம், ‘மெட்ராஸ் வானிலை ஆய்வு மையம்’ எனப் பெயர் மாற்றப்பட்டு 1792இலிருந்து அதிகாரபூர்வமாகச் செயல்பாட்டுக்குவந்தது; மைக்கேல் டாப்பிங் அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
- டாப்பிங்கின் உதவியாளராக இருந்தவரும் அவருக்கு அடுத்தபடியாகத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான ஜான் கோல்டிங்ஹாம், 1796இலிருந்து வெப்பநிலை, 1813இலிருந்து மழைப்பொழிவு ஆகியவற்றின் அளவீடுகளைத் தொடங்கினார். அந்த வகையில், இந்தியத் துணைக்கண்டத்தில், முதல்முதலாகச் சென்னையில்தான் மழைப்பொழிவின் அளவீடு தொடங்கியது. கோல்டிங்ஹாமுக்கு அடுத்துவந்த தாமஸ் கிளான்வில் டெய்லரும் வானிலை அளவீடுகளைத் தொடர்ந்தார்.
- இதன் விளைவாக, 19ஆம் நூற்றாண்டில் சென்னையில் நடந்த வானிலை நிகழ்வுகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் பதிவாகியுள்ளன. 1846 அக்டோபர் 21 அன்று சென்னையைத் தாக்கிய புயல் காரணமாக, 24 மணிநேரத்தில் 520 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு அளவாக இன்றுவரை அதுவே தொடர்கிறது.
- 1875 ஜனவரி 15 அன்று ‘இந்திய வானிலை ஆய்வு மையம்' (IMD) தொடங்கப்பட்டது; அறிவியல் வளர்ச்சிகளும் தொடர்ந்து மேம்பட்டுவந்ததால், 20ஆம் நூற்றாண்டில் வானிலை ஆய்வுகளின் தீவிரம் மேலும் கூடியது. கடந்த 200 ஆண்டுகளாகச் சென்னையில் பதிவாகியிருக்கும் வானிலை நிகழ்வுகள் பற்றிய சுவாரசியம் கொப்பளிக்கும் தரவுகளை ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் பட்டியலிட்டுள்ளார்.
- 1639இல் ‘சென்னை’யின் மக்கள்தொகை வெறும் ஏழாயிரம்; இன்று அது உத்தேசமாக ஒரு கோடி. மக்கள்தொகையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நகரமான சென்னை, கடந்த 25 ஆண்டுகளில் அதிதீவிரமாக நகரமயமாகி இருக்கிறது. இதே காலகட்டத்தில்தான், வானிலை நிகழ்வுகளின் தீவிரமும் சென்னையில் தீவிரமடைந்திருக்கிறது.
- உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையைக் கொண்டிருக்கும் சென்னை, கடல்மட்ட உயர்வு தொடங்கி பெருவெள்ளம், அதிகரிக்கும் வெப்பநிலை எனக் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பல்வேறு நெருக்கடிகளைத் தற்போது எதிர்கொண்டுவருகிறது. இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு தகவமைக்கும் வழிமுறைகளில் ஒன்றாக, ‘C40 cities network’ என்கிற அமைப்பில் 2016இல் சென்னை இணைந்தது.
- அந்த வகையில், C40 - நகர்ப்புற மேலாண்மை மையம் ஆகியவற்றின் துணையுடன் ‘சென்னை காலநிலைச் செயல்திட்ட’ (CCAP) வரைவைச் சென்னைப் பெருநகர மாநகராட்சி 2022இல் வெளியிட்டது. மட்டுப்படுத்துதல்-தகவமைத்தல் நடவடிக்கைகள் மூலம், 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனைப் பெற்ற நகரமாகச் சென்னையை மேம்படுத்துவதை இந்தச் செயல்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 ‘சென்னை நாளா’கக் கொண்டாடப்படுகிறது; ஆகஸ்ட் மாதம் முழுவதுமே ‘சென்னை மாத’மாகக் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையின் வரலாற்றில் புதிய பக்கங்களைத் தேடும் முயற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் முன்னெடுக்கப்படுகின்றன; அதில் சென்னையின் காலநிலை வரலாறு சார்ந்தும் நம்முடைய கவனம் ஆழப்பட்டாக வேண்டும். அதுவே இந்த நகரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!
நன்றி: தி இந்து (19 – 08 – 2023)