- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டம் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் பார்த்தோம்.
அரசமைப்பு வழங்கும் வாய்ப்பு
- தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1957இல் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கும் சார்நிலை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1976இல் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982 இல் உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியானது.
- இந்தச் சார்நிலை நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் நடைபெறுவதற்குத் தமிழ்நாடு அரசு வழிவகுத்தது. அடுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுந்தது.
- அதன் முதற்படியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் கூடுதல் வழக்காடு மொழியாகத் தமிழ் மொழியும் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையைப் பல்வேறு அமைப்புகள் எழுப்பிவந்தன. இதற்கான வழிமுறை இந்திய அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (2) இல், ‘ஒரு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன், அந்த மாநிலத்தில் தலைமை அமர்விடமாகக் கொண்டுள்ள உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி மொழியை அல்லது அந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிற மொழி எதனையும் பயன்படுத்திக்கொள்வதற்கு அதிகாரமளிக்கலாம்’ என்று வரைமுறை வழங்கப்பட்டுள்ளது.
- இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாட்களுக்குள்ளேயே - அதாவது, 1950 பிப்ரவரி 14 அன்றே ராஜஸ்தான் மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் இசைவைப் பெற்று, இந்தி மொழியை ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவித்துவிட்டார்.
- இதனைத் தொடர்ந்து, 1969இல் உத்தரப் பிரதேசத்திலும் 1971இல் மத்தியப் பிரதேசத்திலும் 1972இல் பிஹாரிலும் உள்ள உயர் நீதிமன்றங்களின் ஆட்சிமொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுவிட்டது. 1976இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் அலுவல் மொழி இந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 2006இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டுவருவது குறித்துத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டது. அதற்குப் பதிலளித்த உயர் நீதிமன்றம், தமிழ் மொழியைச் சென்னை உயர் நீதிமன்ற மொழியாகக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன், அதற்கு ஏதுவாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
முன்முயற்சிகள்
- உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட அடிப்படைக் கட்டமைப்பு என்பதில் முக்கியமானதாக இருப்பது நீதிமன்றங்களின் நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதாகும். தமிழ்நாட்டில் இருக்கும் சார்நிலை நீதிமன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்கச் சட்டம் இயற்றப்பட்டபோதே, நீதிமன்றப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் அடிப்படைச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம், உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம் ஆகியவற்றுடன் இந்திய அரசமைப்புச் சட்டமும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
- அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பதிப்பை 105ஆவது திருத்தத்துடன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சட்டச் சொல் அகராதியை இரண்டு பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
- இவற்றுடன் மத்திய அரசின் சட்டத் துறை ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்துக்கு அனுப்பிவைக்கின்ற மத்திய அரசின் சட்டங்களையும் தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறது.
- இவ்வகையில் வெளிவந்த சட்டங்கள் ஏறக்குறைய 300. தமிழ்நாடு அரசின் சட்டங்களைப் பொறுத்த அளவில், சட்டமன்றத்தில் இயற்றப்படுகிற சட்டங்கள், ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் அத்துடன் தமிழிலும் சேர்த்தே வெளியிடப்பட்டுவருகின்றன.
- மேலும் வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், மக்களின் புரிதலுக்காகப் பல்வேறு பதிப்பகங்கள் மத்திய அரசின் சட்டங்களையும் தமிழ்நாடு அரசின் சட்டங்களையும் தமிழில் வெளியிட்டு வருகின்றன. தமிழில் தட்டச்சு செய்வது, இணையவழியில் மொழிபெயர்ப்புப் பணிகள் போன்றவை தமிழ்மொழிக்கு நெருக்கமாகிவிட்ட செயல்பாடு என்பது நடைமுறை.
- இப்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் மாதிரி நீதிமன்றங்களில் தமிழில் வாதிடுகின்றனர். தேர்வுகளைத் தமிழில் எழுதிவருகின்றனர். வழக்கறிஞர்கள் தமிழில் வாதிடுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. எனவே, அடிப்படைக் கட்டமைப்பு இல்லை என்னும் வாதம் முற்றிலும் ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை.
என்ன செய்ய வேண்டும்
- இந்த நிலையில், இப்போது இருக்கும் சிக்கல் மத்திய அரசின் நடைமுறைச் செயல்பாடே. 1965இல் மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில உயர் நீதிமன்றத்தில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற தீர்மானம் இடம்பெற்றுள்ளது.
- இதனைப் பின்பற்றி இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து வரும் கோரிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பும்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவருகிறது.
- சட்டம் - நீதி அமைச்சகத்தின் நிலைக்குழுவின் 75 மற்றும் 84ஆவது மானியக் கோரிக்கைகளுக்கான அறிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் 348(2) பிரிவை எடுத்துக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதனை 2016இல் நாடாளுமன்ற நிலைக் குழுவும் தெளிவுபடுத்தியுள்ளது.
- 2006இல் அன்றைய திமுகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்தடுத்து வந்த அரசுகளும் இந்தக் கருத்தை வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றி உள்ளன.
- எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாக வர வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலமாக மத்திய அரசுக்கு உணர்த்திவருகின்றனர். இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன.
- தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிற குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் எல்லாம் தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் ஆட்சிமுறை தாய்மொழியில் நடைபெற வேண்டும் என்று பேசிவிட்டுச் செல்கின்றனர்.ஆனால், அதற்குச் செயல் வடிவம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்தான் தெளிவாக இல்லை.
- ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசர்கள் முன்னிலையில் தங்கள் வாதத்தைப் புலவர்கள் தமிழில் எடுத்து வைத்தனர். செம்மொழியான தமிழ்மொழியில் சட்டக் கருத்துக்களைத் தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்துரைக்க முடியும்.
- சிலப்பதிகாரத்தில் கண்ணகி பாண்டிய மன்னன் முன்பு தமிழ் மொழியில்தானே வழக்குரைத்தாள். எனவே, மத்திய அரசு தாமதிப்பது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் எதிரான செயலாகும்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கை. எனவே, தமிழ்நாடு அரசு அனுப்பிய கோரிக்கையை, உச்ச நீதிமன்றத்திடம் இசைவு பெற வேண்டும் என்ற சாக்கிட்டுக் காலம் கடத்தத் தேவையில்லை. மத்திய அரசின் உள்துறை அமைச்சகமே இதற்கான இசைவைக் குடியரசுத் தலைவரிடம் பெற்று வழங்கலாம். இதுவே மக்களாட்சி முறையில் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசுக்கு அடையாளம்.
நன்றி: இந்துதமிழ் திசை (11 – 03 – 2024)