TNPSC Thervupettagam

சென்னை புத்தகக் காட்சியின் திசைவழி

January 3 , 2024 373 days 295 0
  • தமிழ்நாட்டின் முதன்மையான அறிவுத் திருவிழாவாகக் கருதப்படும் சென்னை புத்தகக் காட்சி, 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தமிழ் பதிப்புச் சூழலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்குடன், தமிழ்நாடுஅரசு முன்னெடுத்துள்ள பன்னாட்டுப் புத்தகக் காட்சி, இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.
  • புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிக நூல்களை வெளியிடவும் வாசிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பதிப்பாளர் கே.வி.மேத்யூவின் முன்னெடுப்பில் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்கள் சிலரும் இணைந்து தொடங்கிய கூட்டமைப்புதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர் சங்கம். 24.8.1976இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரசா--ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் முதல் சென்னை புத்தகக் காட்சியை 1977இல் நடத்தியது.
  • அதே வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில், தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் பபாசி நடத்திவந்த புத்தகக் காட்சி, தமிழ்நாட்டின் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது.
  • 21ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள், மனித வாழ்விலும் உலக இயக்கத்திலும் அளப்பரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள நிலையில், அத்தகைய மாற்றங்களுக்குப் பபாசி தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளதா என்கிற கேள்வி, ஒவ்வோர் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போதும் மேலெழுகிறது.

முதல் கடமை

  • பபாசி நிர்வாகக் குழுவுக்கான தேர்தல், புத்தகக் காட்சி தொடங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னதாகவேநடத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்களுக்கு, புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளை முடிவு செய்வதற்கு மிகக் குறைவான காலமே இருக்கும் நிலையில், புத்தகக் காட்சி அரங்கு தொடங்கி வாசகர்களுக்கான அடிப்படை வசதிகள் வரையிலான ஏற்பாடுகள் பலவற்றிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு பின்னடைவு ஏற்படுகிறது.
  • 2023இல் 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சியை 15 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டனர்; புத்தக விற்பனை ரூ.16 கோடி வரை நடைபெற்றதாக பபாசி தெரிவித்தது. லட்சக்கணக்கில் வருகைதரும் வாசகர்கள், கோடிக்கணக்கில் வியாபாரமாகும் புத்தகங்கள் என மக்கள் பங்கேற்பிலும் வியாபாரத்திலும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில், எந்தவித சமரசமும் இன்றி அடிப்படை வசதிகளை நேர்செய்ய வேண்டியது பபாசியின் முதல் கடமையாகிறது.

அரங்கும் அரசியலும்

  • 2023 புத்தகக் காட்சியில் அரங்குகளின் எண்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்த விதம், குறிப்பிட்ட அரங்கைத் தேடிச் செல்வதில் இளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் குழப்பத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியது.
  • அரங்குகளை எளிதாக அடையாளம் கண்டு அணுகக்கூடிய வகையில், வழிகாட்டுவதற்குதன்னார்வலர்களைப் பபாசி ஈடுபடுத்த வேண்டும். புத்தகக் காட்சி அனுபவம் வாசகருக்குக் கசப்பாகிவிடக் கூடாது!
  • கடந்த ஆண்டு புத்தகக் காட்சியின் சிறப்பம்சமாகத் திருநர் நடத்தும் பதிப்பகத்துக்கும் தமிழ்நாடு சிறைத் துறைக்கும் தலா ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலை நூலகங்களுக்காக சுமார் 22,000 புத்தகங்கள் இந்த அரங்கின் மூலம் சேகரிக்கப்பட்டன.
  • அறிவை ஜனநாயகப்படுத்தும் நோக்கில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வகையிலான மேற்கண்ட முன்னெடுப்புகள் இருந்தாலும், புத்தகக் காட்சியில் அரங்குகள் ஒதுக்குவதில் ஏற்படும் சலசலப்புகளுக்குப் பபாசி நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தேவை பரப்புரை

  • ஃபேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புத்தகம் சார்ந்த உரையாடல்கள் இன்று தீவிரமடைந்துவருவது ஓர் ஆரோக்கியமான போக்கு. ‘இலக்கியக் குரங்குகள்’, ‘Missed Movies New Wave’, ‘The Book Show’ போன்ற அலைவரிசைகள் வழங்கும் புத்தக அறிமுகம்/ விமர்சனம்/ கலந்துரையாடல் இணையத்தில் வாழும் இளையோரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
  • ‘2கே கிட்ஸ்தலைமுறையினரிடம் வாசிப்பைக் கொண்டுசெல்ல, புத்தகக் காட்சியின்போது இத்தகைய யூடியூப் அலைவரிசைகளுடன் இணைந்து பபாசி செயல்படுவது நல் விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும். தமிழ்ப் பதிப்புலகம் இன்று சென்னை புத்தகக் காட்சியை மையப்படுத்தி இயங்கத் தொடங்கியுள்ளது.
  • ஓர் ஆண்டில் வெளியாகும் நூல்களில் பெரும்பான்மை சென்னை புத்தகக் காட்சியில்தான் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பல பதிப்பகங்கள் தங்களின் புதிய நூல்கள் குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன. புத்தகக் காட்சிக்குப் புதிதாக வெளியாகும் புத்தகங்கள் பற்றிய தொகுப்பு /கையேடு என ஒன்றை பபாசி - குறைந்தபட்சம் சமூக வலைதளத்தில் - வெளியிடுவது வாசகர்களுக்குப் பயனளிக்கும்.

இளையோரும் குழந்தைகளும்

  • உலகம் என்னதான் டிஜிட்டல் மயமாகிவந்தாலும், அச்சுக்கான இடம் அசைக்க முடியாத ஒன்றாகவே தொடர்கிறது. சென்னை புத்தகக் காட்சியின் வெற்றி, அச்சுப் புத்தகங்களுக்கான இடத்தை ஆண்டுதோறும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது; அதன்வழி டிஜிட்டல் வாசிப்புக்குமான வழித்தடமும் உருவாகி வருகிறது.
  • திறன்பேசி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களைச் சார்ந்தே தங்கள் வாழ்வியக்கத்தை அமைத்துக்கொண்டுள்ள புத்தாயிரத்தின் குழந்தைகளை வாசிப்பின் பக்கம் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, சென்னை புத்தகக் காட்சி உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்வுகளுக்கு முதன்மையாக இருக்கிறது.
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தவறாது புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இணக்கமான ஒரு சூழலைப் புத்தகக் காட்சியில் உருவாக்குவதன் மூலம், அவர்களை வாசிப்புக்குள் கொண்டுவரும் பணியைப் பபாசி மேற்கொள்ள வேண்டும்.
  • புத்தக விற்பனை பலசரக்கு வியாபாரம் அல்ல; அதன் நோக்கம் விற்பனை மட்டும் கிடையாது. எனவே, வாசிப்புப் பண்பாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எல்லா முன்னெடுப்புகளையும் பபாசி மேற்கொள்ள வேண்டும். அதுவே எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் பரவலாவதற்கான வழியாக அமையும்!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்