சென்னை வெள்ளம்: புதிய வடிவமைப்புக் கொள்கை
- சென்னையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெருமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது நீக்கிக்கொள்ளப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பலவீனமடைந்ததால் முன்கணிப்புகளைவிடக் குறைவான மழையே பெய்தது. எனினும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த முந்தின நாள் (அக்டோபர் 15) கொட்டிய மழையால், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தது. பட்டாளம், வியாசர்பாடி, பெரம்பூர், சூளை முதலான வட சென்னைப் பகுதிகளிலும் திருவான்மியூர், தி.நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி முதலான தென் சென்னைப் பகுதிகளிலும் வெள்ளம் வடிய ஒரு நாள் ஆனது.
- எப்போதும்போல் சமூக ஊடகங்களில் விவாதம் நடந்தது. சிலர் இந்த மழையைச் சென்னை நகரால் தாங்க முடியவில்லையே என்று விமர்சித்தனர். வானிலை முன்னறிவிப்பு ஆர்வலர் ஒருவர் இதற்கு விடையளித்தார். சென்னையில் 30 செ.மீ. - 40 செ.மீ. (சென்டிமீட்டர்) மழை பெய்தால் அது வடிவதற்குத் தாமதமாகவே செய்யும் என்றார் அவர். அப்படிச் சொன்னதால் பல இணையவாசிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.
- சமூக ஊடகங்கள் ‘வல்லுநர்’களால் நிறைந்தவை. சில நாள்களுக்கு முன்னர் திருச்சியிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பழுது ஏற்பட்டு, அது வானில் வட்டமடித்தபோது சமூக ஊடகங்களில் பல விமானவியல் ‘வல்லுநர்’களைப் பார்க்க முடிந்தது. கவரைப்பேட்டை ரயில் விபத்து சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கும் ரயில்வே துறை ‘வல்லுநர்’களை அடையாளம் காட்டியது. இப்போது அவர்களில் பலர் வடிகால் ‘வல்லுநர்’களாயினர்.
- மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடந்திருந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தேங்கியிருக்காது என்றார் ஒருவர். அதற்கு எதிர்வினையாற்றிய வரின் பதில் அபத்தமானது. நாம் இவர்களை விட்டுவிடுவோம். இந்த உரையாடல் எழுப்பியிருக்கும் கேள்வி என்ன? கனமழை பொழிந்தாலும் வெள்ளம் உடனடியாக வடிய வேண்டுமா? அல்லது, எந்த அளவுக்கான மழை பொழிந்தால் அது உடனடியாக வடிய வேண்டும்? இதற்குப் பொறியியல்ரீதியாக விடை காண முயல்வோம்.
நூறாண்டு மழை:
- நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழை அளவை நீரியல் நிபுணர்கள் நூறாண்டு-மழை (100-year rain) என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே பத்தாண்டு- மழை, ஐம்பதாண்டு-மழை என்பனவும் உண்டு. ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். நூறாண்டு-மழையானது நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமென்று எடுத்துக்கொள்ள முடியாது... இடையிடையேயும் வரும்.
- வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட நூறாண்டு-மழைக்கான வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஹாங்காங்கில் மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்டு-மழையைக் கணக்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. அதாவது, ஐம்பது ஆண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகப்படியான மழையை இவை உடனடியாகக் கடத்திவிடும். அதனினும் கூடுதலான மழை பொழிந்தால், சாலைகளில் நீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரத்தில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்கால்களில் வடிந்துவிடும்.
வடிவமைப்புக் கொள்கை:
- சென்னை வடிகால்கள் எத்தனை ஆண்டு மழையைக் கடத்திவிடக்கூடியவை? மத்திய அரசின் பொதுநல-சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் (Central Public Health and Environment Engineering Organisation- CPHEEO) வழிகாட்டுதலின்படி, மழைநீர் வடிகால்களை ஐந்தாண்டு வெள்ளத்வடிவமைத்தால் போதுமானது. சென்னை உள்பட எல்லா இந்திய நகரங்களும் இந்த வடிவமைப்புக் கொள்கையையே பின்பற்றுவதாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் 15இல் சென்னையில் பொழிந்த மழையளவு 16 செ.மீ.லிருந்து 30 செ.மீ. வரை பதிவாகியிருக்கிறது.
- இது 2015, 2023 வெள்ளத்தோடு ஒப்பிடத்தக்கது (2015 டிசம்பர் 2இல் 29 செ.மீ. 2023 டிசம்பர் 4 இல் 23 செ.மீ.). சென்னை நகரின் வடிகால் வடிவமைப்புக்குப் பயன் கொள்ளப்பட்டிருக்கும் ஐந்தாண்டு, பத்தாண்டு மழையளவுகள் பொதுவெளியில் பகிரப்படவில்லை. எனில், இப்போது பொழிந்த மழை ஐந்தாண்டு அளவைவிட அதிகமானது என்பதில் ஐயமில்லை. ஆகவே, வெள்ளம் பல இடங்களில் உடனடியாக வடியாமல் தேங்கியதில் வியப்பில்லை.
- இந்த ஐந்தாண்டு வரையறையில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதலாவதாக, வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த வரையறை குறைவானது (ஹாங்காங் - ஐம்பதாண்டு வெள்ளம்). அடுத்ததாக, காலநிலை மாற்றத்தால் குறைந்த கால அளவில் கடும் மழை பொழிவது அதிகரித்திருக்கிறது. ஆகவே, இந்த ஐந்தாண்டு மழை, பத்தாண்டு மழைக்கான பழைய கணக்குகளை முற்றிலுமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- இந்த அடிப்படையில், வருங்காலத்தில் சாத்தியமுள்ள புதிய வெள்ள அளவுகளைக் கணக்கிட வேண்டும். அடுத்து, ஒரு பேச்சுக்கு 25 ஆண்டு வெள்ளத்தைக் கடத்தும்படியாக நமது வடிவமைப்புக் கொள்கையை மாற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, இப்போதைய வடிகால்கள் போதுமானவையாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. என்ன செய்யலாம்?
ஆழ்குழாய்களும் சுரங்கங்களும்:
- நமது வடிகால்களின் போதாமை ஒரு புறமிருக்க, அவற்றின் வடிவத்திலும் சிக்கல் இருக்கிறது. சென்னை நகர வடிகால்கள் செவ்வக வடிவிலானவை. மேலும், இவை இயல் ஈர்ப்பாற்றலுக்கு (gravitational force) உட்பட்டு இயங்குபவை. மேலும், சென்னை நகரம் மிகுதியும் சமதளத்திலானது. ஆகவே, ஈர்ப்பாற்றலை முழுவதுமாகச் சார்ந்திருப்பதால், நீர் வேகமாக வடிவதில்லை. மேலதிகமாக, சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே, வடிகாலின் அடிமட்டத்தைக் கடலின் நீர்மட்டத்துக்கு மேலே அமைத்துக்கொள்வதால் வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்பதில்லை. இவை தவிர, இந்த வடிகால்கள் சாலைகளின் ஓரத்தில் நிறுவப்படுவதால் அவற்றின் அகலமும் மட்டுப்படுகிறது.
- ஆதலால், செவ்வக வடிகால்களுடன் மேலதிகமாகவோ புதிதாகவோ வட்ட வடிவிலான குழாய்களைப் பதித்துவிடலாம். செவ்வக வடிவத்தைவிட வட்ட வடிவக் குழாய்களே நீரை வேகமாகக் கடத்த வல்லவை. சாலையின் அகலம் இவற்றைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில், இவற்றைச் சாலையின் நடுவில்கூட நிறுவ முடியும். வேகமாக வடிவதற்கு ஏற்றபடி வாட்டத்தைக் கூட்டி ஆழமாகவும் நிறுவ முடியும். ஈர்ப்பாற்றலுக்கு இயைபாக அமைக்கப்பட முடியாத இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கலாம்.
- இந்த வடிகால்கள் போய்ச் சேரும் பிரதான வாய்க்கால்களிலும் அளவில் பெரிய ஆழ்குழாய்கள் அமைக்கலாம். இப்போதைய முதன்மை வாய்க்கால்களின் நீர் கடத்தும் திறன், புதிய வடிவமைப்புக்குத் தேவைப்படும் திறனைவிடப் பல இடங்களில் குறைவாக இருக்கும். இப்படியான இடங்களில் சுரங்கப்பாதைகளை அமைக்கலாம். ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா முதலான பல நாடுகளில் இப்படியான வடிகால் சுரங்கங்கள் பல்லாண்டு காலமாக மழைநீரைக் கடத்திவருகின்றன.
- இவை மெட்ரோ ரயில் சுரங்கங்களைப் போல வட்ட வடிவத்திலானவை. சாலைப் போக்குவரத்தைப் பாதிக்காமல் நிலத்தடியில் குடைந்துவிடலாம். வடிகால் வடிவமைப்பு தவிர, நீர் தேங்குவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நீர்நிலைகளும் வாய்க்கால்களும் தூர் வாரப்பட வேண்டும். வடிகால்களை அடைத்துக்கொண்டிருக்கும் குப்பைக் கூளத்தை அகற்ற வேண்டும்; இதில் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
நிதி தாரீர்!
- நமது மழைநீர் வடிகால்களின் வடிவமைப்புக் கொள்கையை மாற்றி, ஆழ்குழாய்களும் நீரேற்று நிலையங்களும் சுரங்கங்களும் அமைக்க அதிக செலவாகும். தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலத்தில் நிதி ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது. ஆனால், நமது வரி வருவாய் மத்திய அரசுக்குப் போய், அங்கிருந்து மாநிலங்களுக்குப் பகிரப்படுவதால், நமக்குப் போதுமான நிதி கிடைப்பதில்லை. தமிழகம் போன்ற நகர்மயமான மாநிலங்களின் உள்கட்டமைப்பை விரிவாக்கியே தீர வேண்டும். இதற்கு அவசியமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னை நகரத்தின் மழைநீர் வடிகால்கள் விரிவாக்கப்படவும் நவீனமாக்கப்படவும் வேண்டும். அதற்கு இந்த நகரம் தகுதியுடைத்து!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 10 – 2024)