TNPSC Thervupettagam

செபி - ஹிண்டன்பர்க்: மறைப்பது ஒரு பாதி

August 18 , 2024 148 days 117 0

செபி - ஹிண்டன்பர்க்: மறைப்பது ஒரு பாதி

  • ‘இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்’ (செபி) மீதான சந்தேகம் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல்கள் தொழில் - வர்த்தகம் மற்றும் நிதித் துறையின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவருகிறது. “கண்மூடித்தனமான நம்பிக்கை, நாடகம், குழப்பம் ஆகிய அம்சங்களை ஒரு கதையிலிருந்து விலக்கிவிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது உண்மைகள் – அப்பட்டமான உண்மைகள்” என்பார் ஷெர்லாக் ஹோம்ஸ்.
  • அதானி குழுமம் தொடர்பாக (ஒன்றிய) அரசு எப்போதும் உண்மைகளைத்தான் பேசுகிறது, மக்களுடைய நலனில் மட்டுமே அக்கறை கொண்டு செயல்படுகிறது என்று கருதுவது கண்மூடித்தனமான நம்பிக்கை. பெருந்தொழில் நிறுவனமும் சிறு முதலீட்டாளர்களும் மோதும் களத்தில், குருதி வடிவதையும் பலர் குத்துப்பட்டு சாவதையும் நாம் தவிர்த்துவிட வேண்டும் என்று நினைப்பது தொடரும் மாபெரும் கூத்தின் அங்கம். வெவ்வேறு நபர்கள் ஒரே சம்பவம் குறித்து வெவ்வேறு குரல்களில் ஒரே நேரத்தில் பேசுவது பெருங்குழப்பம் – மிஞ்சுவது பெருங்கூச்சல்!
  • அதானி - ஹின்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக செபி நடத்திய விசாரணை விவகாரத்தில் கண்மூடித்தனமான நம்பிக்கை, நாடகம், குழப்பம் ஆகியவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சுவது, உண்மையில் நடந்த ஊழலும் அதை மறைக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளும்தான். ஒரு தொழில் குழுமத்தில் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மையமான கேள்வி.
  • அந்தக் குழுமம் சொன்னது, ‘தவறாக எதையும் செய்யவில்லை, பணம் முறையான வழியில் கிடைத்ததுதான்’ என்று; ‘விற்பனை மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டியும், முகமூடி நிறுவனங்களுடன் போலியாக பரிவர்த்தனைகள் செய்து சொத்துகளைப் பரிமாற்றி முறைகேடாக வருவாய் மதிப்பை அதிகரித்தும் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது’ என்றார்கள் சந்தேகப்பட்டவர்கள்.
  • செபி அமைப்பு அந்தப் புகார்களை விசாரித்து, ‘முதல் நோக்கில் பார்த்தவரையில்’ எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. ஆனால், சந்தேகப்பட்டவர்களுக்கு அது திருப்தி தரவில்லை. இறுதியாக உச்ச நீதிமன்றம், நீதிபதி சப்ரே தலைமையில் ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்து அறிக்கையை ஆராய உத்தரவிட்டது.

குழு கண்டறிந்தது என்ன?

  • நீதிபதி சப்ரே குழு கண்டுபிடித்தது என்ன – கண்டுபிடிக்க முடியாதது என்ன – என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை. வெளிநாடுகளைச் சேர்ந்த 13 முதலீட்டாளர்கள் உள்ளனர் – அவர்களில் 12 பேர் வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகள் – கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யும் (ஃபோர்ட்ஃபோலியோ) முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ).
  • ஒவ்வொரு முதலீட்டிலும் பயன்பெறுவது யார் என்று தெரிவிக்கப்பட்டது – ஆனால் இந்தச் சங்கிலியின் இறுதியில் இருக்கும் நபர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஏன்? காரணம், இறுதியில் பயன் அடையப்போகிறவரைத் தெரிவிக்க வேண்டாம் என்று 2018இல் முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும், 2020 அக்டோபர் முதல் 13 வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவிட்டதாகவும், சந்தேகப்படும்படி எதையும் கண்டுடிபிடிக்கவில்லை என்றும் ‘செபி’ கூறிவிட்டது.
  • ஆனால், நீதிபதி குழுவின் கருத்து, கண்டனமாகவே இருந்தது: “அப்படியொரு தகவல் இல்லாமல், சிலரிடையே எழுந்த சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம், ஆனால் ‘செபி’யால் தனக்குத்தானே திருப்தி அடைந்துவிட முடியாது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று பங்குச் சந்தை நெறியாளரான ‘செபி’ சந்தேகப்படுகிறது ஆனால், எல்லாவித ஒழுங்குவிதிகளும் பின்பற்றப்பட்டிருப்பதாக விசாரித்துவிட்டுக் கூறுகிறது. எனவே இந்தப் பதிவானது கோழி – முட்டை ஆகியவற்றில் - எது முதலில் என்ற நிலைக்கே இட்டுச் செல்கிறது.”
  • எந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதோ அந்த நிறுவனங்களுடன் முதலீட்டாளர்களுக்கோ, பயன் அடைந்த உரிமையாளர்களுக்கோ உறவு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நவம்பர் 2021இல் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை குழு தனது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் 2022 ஏப்ரல் 1 முதலும், 2023 ஏப்ரல் 1 முதலும் திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் தொடர்பாகவும் குழுவின் விமர்சனம் கண்டனமாகவே இருக்கிறது:
  • ‘எந்தவொரு பரிவர்த்தனையும் முறையாக இருக்க வேண்டும் என்ற நியதிக்கு மாறாக நடந்திருக்கும் (இந்த) பரிவர்த்தனைகள், எதிர்காலத்துக்கும் பொருந்தும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, ஒழுங்காற்று விதிகளுக்கு ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது’.
  • விசாரணைக் குழுவின் இறுதி முடிவு வருமாறு: “அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுடைய நிறுவனக் கட்டமைப்பு தொடர்பாக செபியின் கொள்கை வகுப்பு குழு ஒரு திசையிலும், தவறுகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு எதிர் திசையிலும் பயணப்பட்டிருப்பதைப் போலத் தெரிகிறது.”

விசாரணையைத் தொடர்கிறது செபி

  • நீதிபதி சப்ரே தலைமையிலான குழுவின் அறிக்கை, செபியின் செயலைக் கண்டித்த நிலையிலும் 24 குறிப்பிட்ட புகார்கள் தொடர்பான விசாரணையை ‘செபி’ தொடர்ந்து விசாரித்தது. குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட பிறகு இரு தரப்பு வாதங்களையும் அது கேட்டது. பிறகு 2024 ஜனவரி 3இல் பிறப்பித்த ஆணையில், செபியின் நடவடிக்கைகள் சரியே என்று கூறியது. இந்த விசாரணைகளை 3 மாதங்களுக்குள் முடித்துவிடுமாறும் செபிக்குக் கட்டளையிட்டது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஏழு மாதங்கள் ஓடிவிட்டன.

ஆதாய முரண்

  • ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் 2024 ஜனவரியோடு சமாதிக்குப் போய்விட்டன என்றே அனைவரும் கருதினார்கள். ஆனால், அந்நிறுவனம் ஆகஸ்ட் மாதம் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் மூலம் மீண்டும் தலைப்புச் செய்தியாகிவிட்டது. செபி அமைப்பின் தலைவரான மாதவி புரி புச், மற்றும் அவருடைய கணவர் தவல் புச் இருவரும், அதானியின் முகமூடி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் என்ற தகவலை அது வெளியிட்டது.
  • செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக மாதவி புச் 2017 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். அவருடைய அந்தப் பதவிக் காலம் முடிந்த பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவரே தலைவராக 2022 மார்ச் 1இல் நியமிக்கப்பட்டார். அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்ட காலமான 2018 முதல் 2021 - 2024 காலத்தில் அவர் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் செபியில் பணியாற்றினார்.
  • செபி நிறுவனமும் நீதிபதி சப்ரே தலைமையிலான குழுவும் விசாரித்த நிறுவனங்களில், மாதவியும் அவருடைய கணவரும் பங்குகளை வாங்கியிருந்தனர் எனவே, அந்த அமைப்பில் மாதவி பதவி வகித்தது தார்மிக அடிப்படையில் தவறு. தன்னுடைய சொந்த லாபத்துக்கும், தான் ஏற்ற பதவிக்குண்டான கடமைக்கும் இடையே மோதல் நிகழும் தருணத்தில் அவர் பதவி வகித்தது ‘ஆதாய முரண்’ (Conflict of Interest) என்று ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
  • அந்த நிறுவனங்களில் தாங்கள் முதலீடு செய்தது உண்மைதான், ஆனால் செபி அமைப்பில் எந்தப் பதவியும் பெறுவதற்கு முன்னால் சாதாரணக் குடிமக்களாக இருந்தபோது செய்த முதலீடுகள் அவை என்று மாதவி ஒப்புக்கொண்டார். செபியில் நியமனம் பெற்ற பிறகு அந்த முதலீடுகளை விலக்கிக்கொண்டுவிட்டதாகவும், அந்த நிறுவனங்களே செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
  • மாதவி தவறு செய்தாரா, அந்தப் பொறுப்பில் அவர் இருந்தபோது ஆதாய முரண் ஏற்பட்டதா என்பதல்ல கேள்வி. அந்தத் தொழில் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக இப்போது மாதவியையும் குற்றச்சாட்டுகளிலிருந்து அரசு காப்பாற்ற முயல்கிறதா என்பதே கேள்வி.
  • இப்போது கேள்விகள் மிகவும் எளிமையானவை, நேரடியானவை: செபியால் விசாரிக்கப்படும் நிறுவனங்களில் கடந்த காலத்தில் தான் பங்குகளில் முதலீடு செய்ததையும் அதனால் இந்த விவகார விசாரணையின்போது தான் பதவியில் இருப்பது முறையல்ல – அது ஆதாய முரண் என்றே கருதப்படும் என்று செபி அமைப்பிடம் அல்லது ஒன்றிய அரசிடம் அல்லது நீதிபதி சப்ரே தலைமையிலான விசாரணைக் குழுவிடம் அல்லது உச்ச நீதிமன்றத்திடம் மாதவி தெரிவித்தாரா என்பதுதான் கேள்வி. அப்படி அவர் செய்யவில்லை. விசாரணையிலிருந்தும் அவர் விலகவில்லை.
  • மாதவி தவறேதும் செய்யவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், செபி அமைப்பால் விசாரிக்கப்படும் அமைப்பின் நிறுவனத்தில், தான் முதலீடு செய்ததை மறைத்தது அல்லது தெரிவிக்காமல் விட்டது மிகப் பெரிய பழிக்குரிய செயல். அதை அவர் அறிவித்து, இந்த விசாரணையில் தான் தொடர்வது தார்மிகப்படி சரியல்ல என்று கூறி விலகியிருக்க வேண்டும். அவரும் அந்த விசாரணையில் இருந்ததால் முழு விசாரணை மீதும் கறை படிந்துவிட்டது. இப்போதாவது அவர் பதவி விலக வேண்டும், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்