TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு: அச்சு ஊடகங்களே இறுதித் தேர்வு!

May 9 , 2023 614 days 364 0
  • ‘செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence – AI) பிதாமகர்களில் ஒருவர்’ எனப் போற்றப்படும் ஏஐ தொழில்நுட்ப முன்னோடியான ஜெஃப்ரி ஹின்டன், கூகுள் நிறுவனப் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகியது தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு புதியவற்றை உருவாக்கும் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘சாட்ஜிபிடி’ போன்ற சக்திவாய்ந்த அரட்டைப்பெட்டிகளைத் (Chatbot) உருவாக்கும் அசுரப் போட்டியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது ஆபத்துக்கு இட்டுச் செல்லும் என ஹின்டன் கவலை தெரிவித்திருக்கிறார்.
  • ‘ஏஐ-யின் ஆபத்து என்பது காலநிலை மாற்றத்தைவிட ‘மிகவும் அவசரமான கவனத்தைக் கோருவது’, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிகள் நமக்குத் தெரியும். ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவு நம்மிடம் இல்லை’ என்கிற ஹின்டனின் கூற்று நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது; மனித குலம் வந்தடைந்திருக்கும் இடத்தையும் துலக்கப்படுத்துகிறது.
  • 2023 மார்ச் 14 அன்று ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘சாட்ஜிபிடி-4’, கல்வி தொடங்கி கலைகள்வரை உள்ளீடு செய்யப்படும் தரவுகளால் மனிதர்களைப் பதிலீடு செய்துவிடும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இது மனிதர்களின் வேலைஇழப்பு சார்ந்த அபாயம் மட்டுமல்ல என்பதன் பின்னணியில்தான், ஹின்டன் வெளிப்படுத்திவரும் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
  • நவீன காலத்தில் புரட்சிக்கான கருவிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், பத்தாண்டுகளிலேயே அதன் மோசமான பயன்பாடுகளால் சமூகத்தின் ஸ்திரத் தன்மையைக் குலைக்கும் அளவுக்கு அபாயத்தை ஏந்தி நிற்கின்றன. போலிச் செய்திகள் என்னும் சமூகத் தீங்கு தீவிரமடைந்ததற்குச் சமூக ஊடகங்கள் முதன்மைப் பங்களித்திருக்கின்றன.
  • இந்நிலையில், மனிதர்கள் நினைத்ததையும், நினைக்காததையும்கூட முடிக்கும் வல்லமை பெற்றுவிட்ட ஏஐ சாதனங்கள், போலிச் செய்திகளின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் மேலதிகப் பங்களிப்பை வழங்குகின்றன. ஆக, ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்பதற்கான தடங்கள் ஏதுமின்றி, பிசிறில்லாத உண்மை என நம்பச் செய்துவிடக்கூடிய செய்திகள், தகவல்கள், படைப்புகள் எல்லாவற்றையும் எழுத்து, ஒளி, ஒலி, காட்சி ஆகிய ஊடகங்களில் உருவாக்கிவிட முடியும். ஏஐ கருவிகள் அனைத்தும் இலவசமாகவே இணையவெளியில் கிடைக்கும் நிலையில், தவறானவர்களின் கைகளில் அது சென்றடையும்போது சமூகத்துக்கு விளைவது ஆபத்து மட்டுமே.
  • இணையத்தில் தோன்றி மறையும் செய்திகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது என்னும்போது, செய்திகளின் நம்பகத்தன்மைக்கு மக்கள் முதன்மையாக அச்சு ஊடகங்களையே சார்ந்துள்ளனர். தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்துப் பகுத்தறிவதற்கான கால அவகாசத்துடன் இயங்கும் அச்சு ஊடகங்களே உண்மைச் செய்திகளை விரும்புவோரின் முதன்மைத் தெரிவாக இருக்க முடியும்.
  • மனிதர்களின் அறிவு சாத்தியப்படுத்தும் புத்தாக்கங்களும் புதிய தொழில்நுட்பங்களும் மனிதகுலத்தின் மேம்பாட்டுக்குப் பங்களித்து வரலாற்றை முன்னகர்த்திச் செல்கின்றன; அதேவேளை, அவை மனிதகுலத்தின் இருப்புக்கான ஆதார அம்சங்களை அசைத்துவிடக் கூடிய அபாயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பது செயற்கை நுண்ணறிவின் முன் உணரப்படாத அசாதாரண வளர்ச்சி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்னும் வள்ளுவர் வாக்கைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டிய நவீனச் சவால் இது!

நன்றி: தி இந்து (09 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்