TNPSC Thervupettagam

செயலிகள்...அவசியத்துக்கு மட்டும்!

October 29 , 2019 1901 days 863 0
  • கடந்த 20-ஆம் நூற்றாண்டில் தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவை மனித வாழ்வின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன. இவை அனைத்தின் பயன்பாடுகளையும் ஒருங்கே தன்னிடத்தில் கொண்ட கையடக்கக் கருவியாக செல்லிடப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது.

செல்லிடப்பேசிகள்

  • தொடக்கத்தில், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியதாக செல்லிடப்பேசிகள் இருந்தன; நாளடைவில் அவை அறிதிறன் பேசியாக (ஸ்மார்ட் ஃபோன்) உருமாறி இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றன.
    நிழற்படம், காணொலி ஆகியவற்றை செல்லிடப்பேசி மூலமாகவே எடுத்து அவற்றை முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) முதலியவற்றில் பதிவேற்றும் வசதியும் கிடைத்தது. இவ்விதம்,  மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுக்குப் பலவிதங்களிலும் உதவக்கூடிய சாதனமாகிய செல்லிடப்பேசி, பல சமூகச் சிக்கல்களுக்கும் காரணமாக அமைகிறது.
  • குறிப்பாக, அறிவை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்த வேண்டிய செல்லிடப்பேசியை இன்றைய இளைஞர்கள் பலரும் வாழ்க்கையை வீணடிக்கும் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவது மிகப் பெரிய சோகம். அதிலும்,  அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) மூலம்  பொழுதுபோக்குச் செயலிகளை பதிவிறக்கம் செய்து காணொலி விளையாட்டுகளில் நீண்ட நேரம் ஈடுபட்டுத் தங்களின் பொன்னான நேரத்தை பெரும்பாலோர் வீணடிக்கின்றனர்.

காணொலி விளையாட்டு

  • கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீலத்திமிங்கிலம் என்ற காணொலி விளையாட்டு, இளைஞர்கள் பலரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதை நாம் இன்னும் மறக்கவில்லை. இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தரவயதினரும் கூட ரம்மி எனப்படும் சீட்டு விளையாட்டை விளையாடிப் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்கின்றனர்.
  • பப்ஜி எனப்படும் காணொலி விளையாட்டு, அதில் ஈடுபடுபவர்களுக்குக் கொலைவெறியைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.  ஏதோ ஒருவிதத்தில் பிறரது பாராட்டைப் பெற வேண்டும் என்றோ, கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றோ கைப்படம் (செல்ஃபி) அல்லது காணொலி எடுத்துப் பதிவிடுவது ஒரு மன நோயாகவே ஆகிவிட்டிருக்கிறது.
  • இளம் பெண்கள், விதவிதமான உடையணிந்து கொண்டு தங்களைத் தாங்களே கைப்படம் எடுத்து அவற்றைப் பொதுவெளியில் பதிவேற்றி, அதனைப் பிறர் பாராட்டும்போது மகிழ்ச்சி கொள்கின்றனர். அதே சமயம், அந்தப் புகைப்படங்களும் காணொலிகளும் அவர்களது முகநூல் நண்பர்கள் தவிர வேறு பலரும் பார்க்கக் கூடும் என்பதால், பல்வேறுவிதமான சங்கடங்களுக்கும் உள்ளாகின்றனர்.

ஆபத்தான இடங்களில்....

  • இவை தவிர மலைமுகடுகள், ஆற்றுப்பாலங்கள் போன்ற ஆபத்தான இடங்களில் இருந்தபடி கைப்படம் எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் உயிரையே இழக்கின்றனர். மிருகக் காட்சி சாலைகள், காப்புக் காடுகள் முதலியவற்றில் காட்டு விலங்குகளுக்கு அருகில் சென்று கைப்படம் எடுத்துப் பதிவிடுவதற்கும் பலர் தயங்குவதில்லை. 
  • இவற்றையெல்லாம் மிஞ்சும்படியாக, டிக்டாக் என்றொரு செயலி தற்போது உலா வந்துகொண்டிருக்கிறது. ஆடல், பாடல், பலகுரல் ( மிமிக்ரி ) மற்றும் நடிப்பு போன்றவற்றில் தத்தமது திறமைகளை வெளிக்காட்டுகின்ற குறுகிய காணொலிகளை இந்தச் செயலி மூலம் பொதுவெளியில் பதிவிட்டுப் பலரது பாராட்டையும் பெறலாம் என்பதற்காக, இந்தச் செயலியைப் பலரும் தங்களது செல்லிடப்பேசியில் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த ஆர்வமே சமூகச் சீர்கேடுகள் மற்றும் உயிரிழப்புகளுக்குத் தற்போது காரணமாகி வருவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. 
  • இது மட்டுமின்றி, காட்டாறுகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் நீராடியபடி டிக்டாக் காணொலி எடுக்கும் மோகத்தில் உயிரை விடுவதும் ஆங்காங்கே நடைபெறுகிறது. டிக்டாக்கில் தாம் வெளியிட்ட காணொலிக்கு எதிரான விமர்சனங்களால் மனமுடைந்து சென்னை வியாசர்பாடியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இப்படியாக, வெறும் பொழுதுபோக்குக்காக செல்லிடப்பேசியில் பயன்படுத்தப்பட வேண்டிய இந்த டிக்டாக் செயலி பற்பல உயிரிழப்புகளுக்கும் சமூகச் சீர்கேடுகளுக்கும் காரணமாகி வருகிறது. எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் முறை தவறிய பயன்பாட்டுக்கு அப்பாற்பட்டதல்ல. அதனை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். வேறு விதமாகவும் பயன்படுத்தலாம்.
  • செல்லிடப்பேசியும் இதற்கு விதிவிலக்கல்ல. விரைவான தகவல் தொடர்புக்கும், அறிவுப் பகிர்வுக்கும் மட்டுமே பயன்பட வேண்டிய செல்லிடப்பேசியை, பொழுதுபோக்குவதற்காகப் பயன்படுத்துவதுகூடப் பரவாயில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், சமுதாய வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இளம் வயது மரணங்கள்

  • குடும்ப வாழ்வின் சீரழிவுக்கும் இளம் வயது மரணங்களுக்கும் செல்லிடப்பேசிச் செயலிகள் காரணமாவதை சமூக அக்கறையுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்லிடப்பேசியின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் பிரவேசித்துள்ளோம்.
  • இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த தலைமுறையினர் முறையற்ற செல்லிடப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகாமல் இருப்பது முக்கியம். 
  • மேலும், வேண்டாத செயலிகளிலும், காணொலி விளையாட்டுகளிலும் தங்களின் பொன்னான நேரத்தை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவது மிகமிக முக்கியம். தேவையற்ற செயலிகளை அரசாங்கம் தடை செய்யும் என்று காத்துக் கொண்டிருக்காமல், தாங்களாகவே புறக்கணித்திட சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் முன்வரவேண்டும்.  
  • தேவையற்ற செயலிகள் இல்லாமல் வாழ்வது ஒன்றும் கடினம் அல்ல.

நன்றி: தினமணி (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்