TNPSC Thervupettagam

செயலி சந்தேகங்கள் போக்கப்படட்டும்

May 8 , 2020 1722 days 905 0
  • கரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஆரோக்கிய சேது’ செயலியானது சில சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது.
  • அரசின் நோக்கம் முக்கியமானது என்றாலும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களாலும் எதிர்க்கட்சிகளாலும் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
  • வாய்ப்புள்ள ஒவ்வொரு குடிநபரின் செல்பேசியிலும் ‘ஆரோக்கிய சேது’ செயலி இருக்க வேண்டும் என்று விரும்புகிறது அரசு.
  • இதன் மூலம் கரோனா தொற்று அபாயத்தில் இருப்பவர்களின் புழக்கத்தைப் பொதுவெளியில் குறைக்கலாம் என்று எண்ணுகிறது. உலகின் பல நாடுகளும் இதே போன்ற செயலியை இன்றைக்கு நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றன.
  • இந்தியாவில் சிக்கல் என்னவென்றால், இந்தச் செயலி எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருக்கும் என்ற வரையறை சொல்லப்படவில்லை. அதேபோல, இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளின் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாட்டு விதிகளும் இல்லை.
  • அதனாலேயே, ‘உரிய சட்டபூர்வ அங்கீகாரமற்ற இந்தச் செயலி, ஒரு நிரந்தரக் கண்காணிப்பு உபகரணமாக ஆகிவிடக்கூடும்’ என்று நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி உள்ளிட்டோர் கவலை தெரிவித்திருக்கின்றனர். ஆயினும், மக்களிடையே ‘ஆரோக்கிய சேது’ பிரபலமாகிவருகிறது; கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் தரவிறக்கியுள்ளனர்.
  • கரோனா சவாலை எதிர்கொள்ள உலகளாவிய அணுகுமுறைகளில் ஒன்றையே இந்திய அரசும் கடைப்பிடிக்கிறது; அந்த வகையில், உலகளாவிய ஜனநாயக நாடுகளின் அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • ‘இதுபோன்ற செயலி மக்களின் அந்தரங்க உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தச் செயலி பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்’ என்று ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கிற விதிமுறையை இங்கே ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
  • ‘ஆரோக்கிய சேது செயலியின் தரவுகளைத் திருட முடியும்’ என்ற பிரான்ஸ் நாட்டு ஹேக்கர் எலியட் ஆல்டர்சனின் எச்சரிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட இந்திய அரசு, ‘இதுதொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது; தரவுகள் அப்படி திருடப்படும் வாய்ப்பில்லை; எனினும், செயலி தொடர்பில் குறைகள் இருப்பின் எவரும் சுட்டிக்காட்டலாம்’ என்று கூறியிருப்பது நல்ல விஷயம்.
  • இதேபோல, ‘இந்தச் செயலியானது நிரந்தரமான கண்காணிப்புச் சாதனமாக ஆகிவிடும் ஆபத்தை இந்திய அரசு களைய வேண்டும்’ என்ற எதிர்க்கட்சிகளின் முறையீட்டுக்கும் அரசு செவிசாய்க்க வேண்டும்.

நன்றி: தி இந்து (08-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்