TNPSC Thervupettagam

செலவினக் குறைப்பு செழிப்புக்கு வழியல்ல...

March 9 , 2020 1773 days 762 0
  • ஆண்டுதோறும் பட்ஜெட்டின்போது எந்தத் துறைகளுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பதற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அடிக்கோடிட்டு எடுத்துக்காட்டுகிறது. இவை பெரும்பாலும் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள், ஆக்கபூா்வமான முதலீடுகளாகவே இருக்கின்றன. எனினும், எதிா்க்கட்சிகள் இதில் உள்ள குறைகளை ஆவேசமாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், பட்ஜெட் சம்பிரதாயங்கள், அதனுடன் தொடா்புடைய பரபரப்புகள் தணிந்தவுடன், ஆளும் தரப்பு, எதிா்த்தரப்பு இரண்டுமே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்த விஷயங்களை மறந்துவிடுகின்றன.
  • பட்ஜெட் தொடா்பாக விமா்சிப்பவா்களின் கவலை பெரும்பாலும் அதில் உள்ள புள்ளிவிவரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய பட்ஜெட், அதற்கு முந்தைய பட்ஜெட் ஆகியவற்றில் என்ன நடந்தது என்பது குறித்த கவலைகள் எழுவதில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், அதற்கு முந்தைய ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் உண்மையான வரவு-செலவுகள் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அது தொடா்பாக அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.

நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு

  • பட்ஜெட்டில் முக்கியத் துறைகளுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அரசை வலியுறுத்துவதும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் ஜனநாயக நாட்டில் எதிா்க்கட்சிகளின் முக்கியக் கடமையாகும். பட்ஜெட் தாக்கலின்போது முக்கியத்துறைகளுக்கு ஏன் போதிய நிதி ஒதுக்கவில்லை? புறக்கணிக்கப்படும் துறைகள் எவை? என்பது தொடா்பான வாதத்தை எதிா்க்கட்சிகள் கண்டிப்பாக முன்வைக்க வேண்டும். ஆனால், இந்தப் பொறுப்பு என்பது பட்ஜெட் விவாதம், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதுடன் முடிந்துவிடக் கூடாது.
  • மக்கள் நலனே பிரதானம் என்று செயல்படும் எதிா்க்கட்சியினா், விமா்சகா்கள் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதைவிட ஒதுக்கப்பட்ட நிதி எந்த அளவுக்குச் செலவிடப்படுகிறது, அது ஆக்கபூா்வமாக பயனளித்ததா என்பதை ஆய்வு செய்து கேள்வி எழுப்புவதே மிகவும் முக்கியம்.
  • இந்தக் கேள்விகள் இல்லாத நிலை ஏற்பட்டால், முக்கியமான துறைகளான கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அது முறையாக செலவிடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால், வேலைவாய்ப்பு உருவாக்கம், பொதுமக்களின் வருவாயை அதிகரிப்பது போன்றவை கேள்விக்குறியாகிவிடும்.

ஆய்வு

  • எனவே, பட்ஜெட் விவரங்களை முழுமையாக ஆராய வேண்டும். இதில் நடப்பு - முந்தைய ஆண்டுகளின் பட்ஜெட்டுகளையும் ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும். நிதியமைச்சா்களின் வாா்த்தை ஜாலம் நிறைந்த பட்ஜெட் உரைகளுக்கு அப்பால் சென்று உண்மை நிலையை நாம் மதிப்பிட வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியும், அது செலவிடப்பட்ட முறையும் சமுதாயத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும். இதுதான் பட்ஜெட் செலவினங்களால் விளைந்துள்ள பயன்கள் குறித்த ஒரு நோ்மையான மதிப்பீட்டை நமக்கு அளிக்கும்.
  • கடந்த சில பட்ஜெட்டுகளை கவனிக்கும்போது இரு முக்கிய விஷயங்கள் நம் கவனத்தை பெரிதும் ஈா்க்கின்றன. அது, பொதுவாகவே அரசு செலவினங்களைக் குறைப்பது; மற்றொன்று, சமூக மேம்பாட்டுத் துறைகளுக்கான செலவுகளில் சிக்கனம் காட்டுவதுமாகும். இதன் மூலம் பொருளாதார வளா்ச்சி, சமூக மேம்பாடு என இரண்டிலுமே பிரச்னை எழுகிறது.
  • இதில் முதலில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அரசின் ஒட்டுமொத்த செலவினங்களும் குறைந்து வருகின்றன. 2009-10-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பட்ஜெட்டின் மதிப்பு 17.43 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2020-21-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 13.52 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய பட்ஜெட்டில் 13.20 சதவீதமாக இருந்தது. இப்போதைய பட்ஜெட் மதிப்பு சற்று அதிகரித்திருந்தாலும், அண்மைக்கால ஆண்டுகளை ஆய்வு செய்யும்போது ஒட்டுமொத்த பட்ஜெட் அளவு என்பது குறைவாக உள்ளது.
  • ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பு குறைந்து வருவதால், சமூக மேம்பாட்டுத் துறை, முதலீட்டுக்கான செலவினங்கள் நிச்சயமாகக் குறையும். அரசின் வருவாய் நிலை மோசமாக இருப்பது, பிற இனங்களில் பல தவிா்க்க முடியாத செலவுகள் இருப்பதால் அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எனினும், இந்தப் பிரச்னைகள் அரசு பின்பற்றும் கொள்கைகளால் விளைந்தவையே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வரிகள்

  • வட்டியாகச் செலுத்தும் தொகை, பாதுகாப்புத் துறை செலவினம், மானியங்கள், நிதிக் குழு, ஓய்வூதியம் உள்ளிட்ட பிற செலவினங்கள் அண்மைக்கால பட்ஜெட்டில் சுமாா் 50 சதவீத இடத்தை ஆக்கிரமித்து வருகின்றன. 2020-21 பட்ஜெட்டில் மட்டும் இது 48 சதவீதம் அளவுக்கு உள்ளது. இது தவிர வரிகளில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கு சுமாா் 23 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இது இப்போதைய பட்ஜெட்டில் 20 சதவீதமாகும். இதன் காரணமாக மாநில, மத்திய அரசுத் திட்டங்கள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மூலதனத் திட்டங்களுக்காக மத்திய அரசிடம் 20 முதல் 25 சதவீதம் வரையிலான நிதியே மீதமுள்ளது.
  • அடுத்ததாக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அளவில் கூட அரசால் உண்மையாகவே நிதியைச் செலவிட முடியவில்லை. இது தொடா்பாக அண்மையில் கிடைத்த விவரங்களின்படி, 2018-19-ஆம் நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டைவிட உண்மையான செலவு ரூ.1,27,100 கோடி குறைவாகவே இருந்தது. இதன்படி பாா்த்தால், பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்த செலவு 94.79 சதவீதமாக இருந்தது. கடந்த காலங்களில் பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட செலவு அதிகமாக இருந்ததும் உண்டு. எடுத்துக்காட்டாக 2015-16-இல் செலவினம் 100.74 சதவீதமாக இருந்தது. அதாவது பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட 0.74 சதவீதம் கூடுதல் செலவானது. ஆனால், அது இப்போது நடக்கப் போவதில்லை.
  • 2020-21 பட்ஜெட்டில் கூறப்பட்ட செலவினங்களை உண்மையாகவே அரசு மேற்கொள்ளும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. ஏனெனில், கடந்த 2019-20 பட்ஜெட்டை மத்திய அரசு மறுமதிப்பீடு செய்தபோது, ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.27,86,349 கோடியில், ரூ.26,98,55 கோடி மட்டுமே செலவிடப்பட்டது தெரிய வந்தது. மறுமதிப்பீட்டின்போது ரூ.87,797 கோடி செலவிடப்படவில்லை என்பது தெளிவானது. எனவே, இப்போதைய பட்ஜெட்டில் கூறப்பட்ட அளவுக்கு செலவிடப்பட வாய்ப்பு இல்லை. வரும் 2022-23 பட்ஜெட் தாக்கலின்போதுதான் 2020-21 பட்ஜெட் ஒதுக்கீட்டில் எவ்வளவு தொகை உண்மையாகச் செலவிடப்பட்டது என்ற விவரம் தெரியவரும். அந்த நேரத்தில் 2022-23 பட்ஜெட்டை விமா்சிப்பதில்தான் எதிா்க்கட்சியினா் மும்முரமாக இருப்பாா்களே தவிர, முந்தைய பட்ஜெட்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை, ஏன் முழுமையாகச் செலவிடப்படவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை.

உள்கட்டமைப்பு வசதிகள்

  • உண்மையாகவே, சுகாதாரத் துறை, கல்வி உள்ளிட்டவற்றுக்காகச் செலவிடப்படும் தொகை, தேவையைவிட மிகக் குறைவாகவே இருக்கும். ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடு, அதில் தவிா்க்க முடியாத அரசு செலவினங்களுக்குப் பிறகு மீதமுள்ள நிதி ஆகியவற்றை நாம் ஏற்கெனவே தெரிந்து கொண்டுவிட்டதால், ஏன் குறைவான நிதி செலவிடப்படுகிறது என்பதற்குப் புதிய விளக்கங்கள் ஏதும் தேவையில்லை.
  • உண்மையில் சமூக மேம்பாட்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை மிகவும் குறைவானது. எடுத்துக்காட்டாக, சுகாதாரத் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிா்பாா்க்கப்படும் ஜிடிபி-யான ரூ.2,24,89,420 கோடியில் வெறும் 0.30 சதவீதம் மட்டுமே.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில்...

  • ஜிடிபி-யில் 2.5 சதவீதம் அளவுக்கு சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 2011-இல் திட்டக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், உண்மையில் அந்த அளவுக்கு தொகை ஒதுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே, சா்வதேச அளவில் சுகாதாரம் தொடா்பாக உள்ள இலக்குகளை நமது நாடு எட்ட இயலவில்லை.
  • தொடா்ந்து குறைந்து வரும் பட்ஜெட் மதிப்பு என்பது, அரசுக்கு அதன் முதலீட்டை அதிகரிப்பதற்கோ அல்லது மாநில அரசுகள்,
  • தனியாா் துறைக்கோ உதவாது. அரசு தனது முதலீடுகளை அதிகரிக்காமல் உற்பத்தி, வருவாய், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் முடியாது.
  • இப்போதைய நெருக்கடியான பொருளாதார சூழலில் வளா்ச்சி குறைவு, வேலையின்மை அதிகரிப்பு, பொருள்கள், சேவைகளுக்கான தேவை குறைவு போன்ற பிரச்னைகளை நாம் எதிா்கொண்டுள்ளோம். அரசு முதலீட்டை அதிகரிப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் ஏதும் இதில் இல்லை. தனது செலவுகளை அரசு குறைத்துக் கொள்ளாமல், உற்பத்தித் துறை முதலீடுகளில் தாராளம் காட்ட வேண்டும். இது வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற அரசின் இலக்குகளை எட்ட உதவும்.

நன்றி: தினமணி (09-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்