இதுவரை
- ஜூலை மாத தொடக்கத்தில் 17-வது மக்களவையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கைக்கான முதல் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செலவில்லா இயற்கை வேளாண்மையை கவனத்தில் கொண்டு அடிப்படை அணுகுமுறைகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தார்.
- ஏற்கனவே சில மாநிலங்களால், அதன் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ள இந்த புத்தாக்க மாதிரியை அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கூறினார்.
- இது போன்ற நடவடிக்கைகள் நமது 75-வது சுதந்திர தின ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும்.
- ஆந்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த மாதிரியை நோக்கி தீவிரமாக முன்னேறுகின்றன.
பின்பற்றப்படும் முறைகள் மற்றும் அடிப்படைக் கூறுகள்
- செலவில்லா இயற்கை வேளாண்மை என்பது பாரம்பரிய இந்திய நடைமுறைகளிலிருந்து இரசாயனமில்லாத வேளாண்மை முறையைப் பின்பற்றுவதாகும்.
- இது முதன்முதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுபாஷ் பாலேகர் என்பவரால் ஊக்குவிக்கப்பட்டது. இவர் 1990களின் நடுப்பகுதியில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மற்றும் தீவிர நீர்ப் பாசனம் ஆகியவற்றால் இயக்கப்படும் பசுமைப் புரட்சியின் முறைகளுக்கு மாற்றாக இதை உருவாக்கினார்.
- இந்த வெளிப்புற உள்ளீடுகளால் உயரும் செலவானது விவசாயிகளின் கடன் மற்றும் தற்கொலைகளுக்கு ஒரு முக்கிய காரணமென்றும் அதே நேரத்தில் இரசாயனங்களின் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் நீண்ட கால மண் வளச் சீர்கேடு ஆகியவை மிகவும் பேரழிவைத் தரக் கூடியது என்றும் அவர் வாதிட்டார்.
- உற்பத்திச் செலவைக் குறைக்கும் செலவில்லா இயற்கை வேளாண்மையை பின்பற்றுவதன் மூலம் மேற்கூறிய உள்ளீடுகளுக்கென பணத்தைச் செலவழிக்க வேண்டிய அவசியமில்லாததால் இதற்கென கடன் வாங்க வேண்டிய தேவையில்லை. மேலும் இதன் மூலம் பல சிறு விவசாயிகளின் கடன் சுழற்சியைத் தடுக்கலாம்.
- வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ரசாயன உள்ளீடுகளுக்குப் பதிலாக இந்த வேளாண் முறையானது புதிய மாட்டுச் சாணம், வயதான பசுவின் நாள்பட்ட சிறுநீர், வெல்லம், சிறுதானிய மாவு, நீர், மண் ஆகியவற்றின் கலவையான ஜீவாம்ருதாவை விளைநிலங்களில் இடுவதை ஊக்குவிக்கின்றது.
- ஒரு நொதிக்க வைக்கப்பட்ட நுண்ணுயிர் கலவையான இது மண்ணில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கின்றது. மேலும் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண் புழுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வினையூக்கி முகவராக இது செயல்படுகின்றது.
- ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 200 லிட்டர் ஜீவாம்ருதாவானது மாதத்திற்கு இரண்டு முறை தெளிக்கப்பட வேண்டும். மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த அமைப்பு தன்னிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
- பாலேகரின் கருத்துப்படி 30 ஏக்கர் நிலத்திற்கு ஒரு மாடு மட்டுமே தேவைப்படுகின்றது. இது இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்சி அல்லது ஹோல்ஸ்டெய்ன் இனமாக இல்லாமல் இந்திய உள்ளூர் இன மாடுகளாக இருக்க வேண்டும்.
- விதைகளை நேர்த்தி செய்ய பிஜாம்ரிதா எனப்படும் இதே போன்ற கலவை பயன்படுத்தப்படுகின்றது. அதே போன்று வேப்பிலைகள் மற்றும் கூழ்கள், புகையிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையானது பூச்சி மற்றும் தீங்குயிரி மேலாண்மைக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
- இந்த வேளாண் முறையானது மண் காற்றோட்டம், குறைந்த நீர்ப்பாசனம், ஊடுபயிர் வளர்ப்பு, வரப்புகள் அமைத்தல், மேல் மண் பரப்பை மூடுதல் ஆகியவற்றை ஊக்குவித்து தீவிர நீர்ப்பாசனம் மற்றும் ஆழமாக உழுதல் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்துகிறது.
- பாலேகர் வழக்கமான இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் மண்புழு உரத் தயாரிப்பிற்கு எதிரானவர். ஏனெனில் இம்முறை மிகவும் பொதுவான உரமாக்கும் ஐரோப்பிய சிவப்பு புழுவை (ஐசீனியா ஃபெடிடா) இந்திய மண்ணில் அறிமுகப்படுத்துகின்றது.
- இந்தப் புழுக்களானது நச்சுத்தன்மை உடைய உலோகங்கள், நச்சு நீர் மற்றும் மணல்களை உறிஞ்சுவதாக அவர் கூறுகின்றார்.
முக்கியத்துவங்கள்
- தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக தரவுகளின்படி கிட்டத்தட்ட 70% விவசாயக் குடும்பங்கள் அவர்கள் சம்பாதித்ததை விட அதிகமாகச் செலவிடுகின்றனர். மேலும் அனைத்து விவசாயிகளிலும் பாதிக்கும் மேற்பட்டோர் கடனில் உள்ளனர்.
- ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கடனின் அளவு சுமார் 90% ஆகும். அங்கு ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக 1 லட்சம் ரூபாயை கடனாகக் கொண்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் எனும் மத்திய அரசின் வாக்குறுதியை அடைவதற்கு கருத்தில் கொள்ளப்படும் ஒரு அம்சமாக விவசாய உள்ளீடுகளுக்கென அதிக அளவிற்கு கடன் வாங்கப்படுவதைக் குறைக்கும் இந்த செலவில்லா இயற்கை வேளாண்மையும் உள்ளது.
- அதே வேளையில் இதனுடன் ஊடுபயிர் இடுதலும் அதிக வருவாயை அளிக்கின்றது.
- பொருளாதார ஆய்வறிக்கையும் சுற்றுச்சூழலுக்கு இதனால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிட்டுள்ளது.
செயல்திறன்
- 2017ல் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான ஆய்வு இவ்வகையான முறையால் உள்ளீட்டிற்கான செலவுகள் மிகவும் குறைந்து விளைச்சல்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறுகின்றது.
- எனினும், பாலேகரின் பூர்வீகமான மகாராஷ்டிரா உட்பட பல பகுதிகளின் விவசாயிகள் தங்கள் செலவில்லா இயற்கை விவசாயத்தில் சில வருடங்களில் வருமானங்கள் வீழ்ச்சியடைவதைக் கண்டு பின்னர் மீண்டும் தங்களின் வழக்கமான விவசாய முறைக்குத் திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் இந்த முறையின் செயல்திறன் குறித்த சந்தேகம் எழுகின்றது.
- மத்திய கொள்கை மற்றும் திட்டமிடல் சிந்தனைக் குழுவின் (நிதி ஆயோக்) வல்லுநர்கள் உள்பட இம்முறையின் சில விமர்சகர்கள், இந்தியா தன்னிறைவு அடைவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பசுமைப் புரட்சியேத் தேவை என குறிப்பிடுகின்றனர்.
- விளைச்சல் பாதிக்கப்படாது என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாமல் வழக்கமான முறையிலிருந்து ஒட்டு மொத்தமான நகர்விற்கு மாறுவது என்ற கருத்திற்கு எதிராக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இயற்கை வேளாண்மை முறைக்கு மாறியதைத் தொடர்ந்து விளைச்சலில் ஏற்பட்ட சிறு சரிவை எதிர்கொண்ட சிக்கிம் நிலமானது இராசயன உரங்களைக் கைவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த முன் எச்சரிக்கை களமாகப் பார்க்கப்படுகின்றது.
தீவிர திட்டங்களைக் கொண்ட மாநிலங்கள்
- இந்த முறையானது ஒட்டுமொத்தமாக 30 லட்சம் பேருக்கும் அதிகமானோரால் பின்பற்றப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் பொருளாதார ஆய்வறிக்கையின் படி, ஏறக்குறைய 1000 கிராமங்களில் உள்ள 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில அரசின் ஏதேனும் ஒரு வகையான உதவியுடன் இந்த முறை விவசாயத்தைப் பின்பற்றுகின்றனர்.
- கர்நாடகா ராஜ்ய ரைதா சங்கம் எனும் மாநில அளவிலான விவசாயிகள் சங்கத்தினால் ஒரு இயக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இதன் உண்மையான முன்னோடி கர்நாடகா ஆகும்.
- அங்கு இந்த முறை குறித்து விவசாயிகளுக்கு கற்பிப்பதற்காக பெரிய அளவிலான பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- ஆரம்பகால ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி, இம்முறையை மேற்கொண்ட விவசாயிகள் சிறிய அளவிலான நிலங்களையும் நீர்ப் பாசன வசதியையும் குறைந்த பட்சம் ஒரு பசுவையும் வைத்திருந்தனர்.
- 2024 ஆம் ஆண்டிற்குள் 100% இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் முதல் மாநிலமாக மாறுவதற்கான ஒரு லட்சியத் திட்டத்தை ஆந்திரப் பிரதேச மாநிலம் ஜுன் 2018ல் வகுத்தது.
- இது 80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இரசாயன முறை விவசாயத்தை அகற்றி 60 லட்சம் விவசாயிகளை செலவில்லா இயற்கை வேளாண் முறைக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் தங்கள் மாநில விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க பாலேகருக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தேவையான உதவிகள்
- வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் செலவில்லா இயற்கை வேளாண்மை குறித்துப் பேசப்பட்டாலும் இதனை ஊக்குவிக்க எந்தவொரு புதிய நிதி ஒதுக்கீடுகளையும் நிதியமைச்சர் அறிவிக்கவில்லை.
- மத்திய அரசானது, பசுமைப் புரட்சியின் முதன்மைத் திட்டமான வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைப் புனரமைப்பதற்கு உதவும் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா என்ற திட்டத்திற்கு கடந்த ஆண்டின் அணுகுமுறைகளைத் திருத்தியமைத்து இந்த ஆண்டு 3745 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் கரிம வேளாண்மை மற்றும் மண் வளத்தினை மேம்படுத்தும் பாரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜானாவிற்கு 325 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது.
- இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் மத்திய அரசினால் நிதியளிக்கப்படும் மேற்கண்ட இரண்டு திட்டங்களும் தற்போது மாநிலங்கள் தங்கள் நிதியை செலவில்லா இயற்கை வேளாண்மை, வேத கால வேளாண்மை, இயற்கை வேளாண்மை, பசு வளர்ப்பு மற்றும் பிற பாரம்பரிய முறைகளை மேம்படுத்த அனுமதிக்கின்றன.
- இந்தத் திட்டங்களிலிருந்து 249 கோடி ரூபாயை செலவில்லா இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கடந்த 2½ ஆண்டுகள் கால அளவில் பயன்படுத்தியுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
- அடுத்த 10 ஆண்டுகளில் அதன் 60 லட்சம் விவசாயிகளையும் இம்முறைக்கு மாற்ற 17,000 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் அம்மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.
- இருப்பினும், இது பசுமைப்புரட்சி மாதிரிகளான உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் பெரிய அளவிலான நீர்ப்பாசன அமைப்புகளுக்காக மத்திய அரசு செலவிடும் மானிய செலவுகளில் ஒரு பகுதியேயாகும்.
எதிர்கால நடவடிக்கைகள்
- பாலேகர் மற்றும் செலவில்லா இயற்கை வேளாண்மை முறையை ஊக்குவிப்பதில் முன்னணி நிலையில் நிதி ஆயோக் உள்ளது.
- இருந்த போதிலும், அதன் வல்லுநர்கள் இதனை மேம்படுத்துவதற்கும் நாடு முழுவதும் ஊக்குவிப்பதற்கும் முன்னதாக இந்த மாதிரியின் நீண்டகால தாக்கத்தையும் நம்பகத் தன்மையும் அறிவியல்பூர்வமாக சரிபார்க்க பல்வேறு இடங்களில் ஆய்வு முடிவுகள் தேவை என எச்சரித்துள்ளனர்.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது இந்த வேளாண் முறையை உத்தரப் பிரதேசத்தின் மோடிபுரம், பஞ்சாபின் லூதியானா, உத்தர காண்டின் பந்த் நகர் மற்றும் ஹரியானாவின் குருஷேத்ரா ஆகிய இடங்களில் பாஸ்மதி மற்றும் கோதுமை பயிர்களுக்கான விவசாயிகள் கடைபிடிக்கும் செலவில்லா இயற்கை வேளாண் முறைகளை ஆய்வு செய்து அவற்றின் உற்பத்தித் திறன், வருமான நிலை, மண்ணின் கரிம கார்பன் மற்றும் மண்ணின் விளை திறன் உள்ளிட்ட மண்ணின் வளம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றது.
- இந்த ஆய்வுகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கென ஒரு நிறுவன கட்டமைப்பு அமைக்கப்படும்.
- மேலும் பொது நிதியுதவி தேவையின் அளவைத் தீர்மானிப்பதற்காக ஆந்திரப் பிரதேசத்தின் நடைமுறைகளும் உன்னிப்பாக கண்காணிக்கப் படுகின்றன.
- - - - - - - - - - - - - - -