TNPSC Thervupettagam

செல்வத்துள் செல்வம்

March 9 , 2021 1416 days 1035 0
  • உலகில் வாழும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவைத் தவிர, பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மோத்தல், தொடுதல் என ஐந்து அறிவுகள் உள்ளன. இந்த ஐந்து அறிவுகளை ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐம்புலன்கள் அடக்கி  ஆளுகின்றன. எனவேதான், இந்த ஐம்பொறிகள் அறிவு வாயில்கள் எனப்படுகின்றன. அதனால்தான் மகாகவி பாரதியாரும் தன் "புதிய ஆத்திசூடி'யில் "ஐம்பொறி ஆட்சிக் கொள்' என்று கூறினார்.  
  • "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று கூறுவார்கள். நம் உடலிலுள்ள உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளை வெளி உறுப்புகளின் மூலமே நாம் அறிந்து கொள்ள முடியும். நம்முடைய மூக்கு அமைந்திருக்கும் விதம், உள்ளுறுப்புகளில் ஒன்றான நுரையீரலை ஒத்திருக்கிறது. அதாவது, ஒரு மையத் தடத்தில் இணைந்துள்ள இரு அறைகள் மூக்கைப்போலவே, நுரையீரலிலும் உள்ளன. எனவே, நுரையீரலும், மூக்கும் சுவாசம் தொடர்பாக நேரடியாக இணைக்கப்பட்ட உறுப்புகளாக உள்ளன. நுரையீரலில் ஏற்படும் சக்தி மாறுபாட்டை பிரதிபலிக்கும் பகுதியாக மூக்கு அமைந்துள்ளது. எனவே, நுரையீரலின் வெளிப்புற உறுப்பு மூக்கு.  
  • நம் முகத்திலுள்ள கண்களின் வடிவம், மற்றொரு உள்ளுறுப்பான கல்லீரலை ஒத்திருக்கிறது. கல்லீரல் சீர்கெடும்போது "மஞ்சள் காமாலை' எனும் நோய் உண்டாகிறது. அதன் அறிகுறி கண்களில் பிரதிபலிக்கிறது. அது போல, ஒருவர் மது அருந்தினால் கல்லீரல் பாதிப்படையும். அந்த மாற்றத்தை  சிவந்த கண்கள் அறிவிக்கின்றன. எனவே, கல்லீரலின் வெளிப்புற உறுப்பு கண்கள். 
  • கூம்பு வடிவமான நம் நாக்கு இதயத்தை நினைவுபடுத்துகிறது. அதாவது, இதயத்தின் சக்தி மாறுபாட்டை பிரதிபலிக்கின்ற வெளி உறுப்பாக நாக்கு அமைந்துள்ளது. மனத்தை இயக்கும் சக்தியாக இதயம் உள்ளதால், மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நாக்குகள் வார்த்தை உச்சரிப்பில் குழறும் அல்லது நடுங்கும். எனவே, இதயத்தின் வெளிப்புற உறுப்பு நாக்கு ஆகும். 
  • நம்முடைய உதடுகளின் வடிவத்தை, மற்றொரு உள்ளுறுப்பான மண்ணீரலோடு ஒப்பிடலாம். மண்ணீரல் செரிமான இயக்கத்தின் முழுமுதல் உறுப்பாக உள்ளது. எனவே, உதடுகள் வறண்டிருக்கின்றன என்றால் மண்ணீரலில் குளிர்ச்சி குறைந்திருக்கிறது என்பது பொருள்.  அதனால், செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதட்டில் புண் இருந்தால், வயிற்றில் புண் இருக்கும் என்பது மருத்துவ கோட்பாடு.  எனவே, மண்ணீரலின் வெளிப்புற உறுப்பு உதடுகள். 
  • நம்முடைய காதுகள், உடலின் உள்ளுறுப்பான சிறுநீரகங்களை நினைவுபடுத்துகின்றன. சிறுநீரகங்களின் வடிவமும், காதுகளின் வடிவமும் ஒரே மாதிரியானவை. சிறுநீரகத்தில் ஏற்படும் மாறுதல்களை அதன் வெளியுறுப்பான காதுகள் மூலமாக அறிய முடியும். முதியவர்களுக்கு காதுகளின் கேட்கும் திறன் குறைந்தால், அது சிறுநீரகங்களின் பாதிப்பையும் குறிக்கும். எனவே, சிறுநீரகம் தன் ஆற்றலை இழக்கும்போது காதுகளின் இயல்பும் கெடும்.  எனவே, சிறுநீரகத்தின் வெளிப்புற உறுப்பு காதுகள்.  
  • நம் உடலில் உள்ள ஐம்பொறிகளுள் காதுகள் மிகவும் முக்கியமானவை.  அதனால்தான் நம் முன்னோர், அறிவுத் தேடல் குறித்துக் கூறும்போது "கற்றலின் கேட்டலே நன்று' எனக் கூறினார்கள்.  உலக அளவில் செவிதிறன் பிரச்னையால் ஆண்டுதோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளின் விளைவாக மக்களிடையே செவிகளின் கேட்புத்திறன் வேகமாகக் குறைந்து வருகிறது.  
  • தற்போது உலக அளவில் ஐந்து பேரில் ஒருவர் காது கேட்கும் திறன் குறைபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும், 2050-ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறன் பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, அடுத்த முப்பது ஆண்டுகளில் காது கேட்கும் திறன் குறைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் கூடும். அதனால் 2.5 பில்லியன் ( 250 கோடி) மக்கள் பாதிப்படைவார்கள். இந்த எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாக (160 கோடியாக) இருந்தது.  250 கோடி பேரில் 70 கோடி பேர் 2050-ஆம் ஆண்டுக்குள் தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு காது தொடர்பான பிரச்னைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  
  • காது கேட்கும் திறன் குறைபாடு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதனைத் தீர்ப்பதற்கான சிறப்பு கவனிப்பின்மைதான்.  மேலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த அளவிலேயே மருத்துவ வல்லுநர்களே உள்ளனர்.  இந்த நாடுகளில் வாழும் 85 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் காது கேளாமை பிரச்னையால் அவதியுறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் முறையாகக் கிடைப்பதில்லை. ஏழை நாடுகளில் மட்டுமல்ல, ஒருசில பணக்கார நாடுகளில்கூட, செவித்திறன் குறைபாட்டு பிரச்னைக்கான சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 
  • பொது இடங்களில் சத்தத்தைக் குறைப்பதன் மூலம் மக்களின் செவித்திறன் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றும்  காது கேளாமை குறைபாட்டைத் தடுக்க தடுப்பூசிகளை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தனது உறுப்பு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.  
  • நமது புலனுறுப்புகளில் மிக முக்கியமானவை காதுகள். அமெரிக்க பிரெvன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேத் ஹராவிட்ஸ் என்பவர், தான் எழுதிய "தி யுனிவர்சல் சென்ஸ் ஹேவ் ஹியரிங் ஷேப் தி மைண்ட்' எனும் புத்தகத்தில் மனிதர்களுக்குக் கண்களைவிட காதுகளே மிகவும் முக்கியமானவை' என்று கூறியுள்ளார். அவர், மனிதனுக்கு அவன் கண்களின் செயல்பாடுகளைவிட காதுகளின் செயல்பாடுகளே பல மடங்கு சிறப்பானவை என அறிவியல் ரீதியான சான்றுகளை முன்வைத்து நிரூபித்துள்ளார். அதாவது, பார்வையிழந்த ஒருவரால் நன்றாகப் பேச முடியும்.  ஆனால், செவிப் புலனை சிறு வயதிலே இழந்துவிடும் குழந்தை வளரும் போது வாய் பேச இயலாமல் போய் விடும் என்று விளக்கினார். 
  • நாம் நமது வீட்டிலுள்ள ஓர் அறையில் இருக்கும்போது நம் கண்கள் அந்த வீட்டினுள் உள்ள மனிதர்களை, பொருட்களைப் பார்த்தபடிதான் இருக்கும். ஆனால், நம் காதுகளோ அந்த அறைக்கு வெளியே தெருவிலும், வெகு தொலைவிலும் எழும் ஒலிகளையும் கேட்கும். இதுவே காதுகளின் சிறப்பு. எனவேதான், திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்கிறார். 
  • இடைவெளியின்றித் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் சப்தம், ஓசையில்லாமல் மனிதர்களின் செவித் திறனை பாதிக்கிறது. அளவுக்கு மீறிய சத்தமும் காது கேளா பிரச்னைக்குக் காரணம். இப்படிப்பட்ட அதிக சப்தம் "ஒலி மாசு' எனப்படுகிறது. நகரங்களில் சாலைகளில் எப்போதும் அதிக சப்தத்தை ஏற்படுத்திக் கொண்டே செல்லும் வாகனங்களாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையினாலும் ஒலி மாசு ஏற்பட்டு அவர்களுக்கு காது தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. 
  • ஒலியின் அளவை "டெசிபல்' எனக் குறிப்பிடுவர். குடியிருப்புப் பகுதிகளில் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல், மக்கள் கூடும் சந்தைகளில் பகலில் 65 டெசிபல், இரவில் 55 டெசிபல், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் பகலில் 75 டெசிபல், இரவில் 65 டெசிபல் ஒலியளவு இருக்கலாம் என்று மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது. ஆனால், தற்போது அப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஒலியையே நாம் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 
  • தொழிற்சாலைகளில் தினமும் எட்டு மணி நேரம் 85 டெசிபல் ஒலியைக் கேட்டபடி வேலை செய்பவர்களுக்கும், பேருந்துகளில், மகிழுந்துகளில் பயணம் செய்தபடி இசை என்ற பெயரில் குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பதாலும் காது கேளாமை பிரச்னை ஏற்படும். பொதுவாக மனிதர்கள் 80 டெசிபல் சத்தம் வரை கேட்பதால் அவர்களுக்கு ஆபதில்லை.  எட்டு மணி நேரம் தொடர்ந்து 90 டெசிபல் சத்தத்தை நாம் கேட்டால், அது நம் காதுகளின் கேட்புத்திறனைக் கட்டாயம் பாதிக்கும். 
  • ஹெட் செட் எனப்படும் காதில் செருகிக்கொள்ளும் கருவியை தற்போது மாணவர்கள் இணையவழிக் கல்விக்குப்  பயன்படுத்துகின்றனர். ஆனால், இதுவும் வளரிளம் பருவத்தினரிடையே காது கேளாமை பிரச்னையை உருவாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 
  • நீண்ட நேரம் அதிக சத்தத்தடன் ஹெட் செட் வழியே பாடங்களைக் கேட்பதால் மாணவர்கள் கேட்கும் திறனை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர். பொதுவாக எல்லாருமே ஆண்டுதோறும் தங்கள் கண் பார்வை சோதித்துக்கொள்வதுபோல காதுகளின் கேட்புத்திறனையும் சோதித்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. 
  • ஒருவருக்கு காதுகளில் ஏற்படும் செவித்திறன் குறைபாடு நாளடைவில் அவருடைய சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நாம் நம் செவிகளை நல்ல முறையில் பாதுகாக்கப் பழகுவோம்.

நன்றி: தினமணி (09 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்