- வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தபோது அதனால் பல தீமைகளும் ஏற்பட ஆரம்பித்தது எல்லாரும் அறிந்ததுதான். அது தனிநபரின் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பாதிக்க ஆரம்பித்ததின் ஓர் உதாரணம்தான் ‘சைபர்காண்டிரியா’ (Cyberchondria) என்றழைக்கப்படும் இண்டர்நெட் காய்ச்சல்.
- ஒரு குறிப்பிட்ட நோயை அல்லது நோய் அறிகுறிகளைப் பற்றி சாமானியனும் அறிந்து கொள்ள வலைதளங்கள், யூடியூப் போன்றவை உதவியாக இருக்கின்றன. இதனால் வலை தளங்களைப் பயன்படுத்துபவர்களில் சுமார் 60 -80% பேர் தங்கள் நோய்களைப் பற்றியும், மருத்துவத் தகவல்களையும் தேடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
- குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் தென்னிந்திய இளைஞர்களில் 55% பேர் வரை இந்தத் தேடுதலில் ஈடுபடுவதாக இன்னோர் ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை இந்தத் தேடுதலை அதிகரித்துள்ளது.
தீமையாக மாறும் நன்மை
- ஒரு நபர் தனது உடல் ஆரோக்கியம், மனநல ஆரோக்கியம், நோய் அறிகுறிகளைப் பற்றி தெரிந்துகொள்வது தவறல்ல. ஆனால், வலை தளங்கள், யூடியூப்களில் வலம் வரும் தகவல்கள் அந்த நபரைத் திருப்திப்படுத்தாத பட்சத்தில் அவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த தேடுதல்கள் அவரை ‘நோயே இல்லாத நோயாளி’யாக மாற்றிவிடும்.
- ஹைப்போகாண்டிரியாசிஸ் (Hypochondriasis) என்று நூறாண்டுகளுக்கு முன்பே அறியப்பட்ட இது, இன்று வலை தளங்கள் சொல்லும் அரைகுறை தகவல்களால் மனநோயாளியாக மாற்றும் சைபர்காண்டிரியாவாக அது உருவெடுத்துள்ளது.
எனக்கு என்னதான் பிரச்சினை?
- இண்டர்நெட் யுகத்துக்கு முன்பெல் லாம் ஒரு நோய் அறிகுறியைப் பற்றி மருத்துவர் கொடுக்கும் விளக்கமே சரியானதாகவும், இறுதியாகவும் இருந்தது. இன்றைக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டவுடன், அது எதனால் ஏற்பட்டுள்ளது என்று வலைதளங்களையும், காணொளிகளையும் பார்த்துவிட்டு, அவற்றில் சொல்லப்பட்டுள்ள ஆபத்தான நோய் தங்களுக்கும் இருப்பதாக நோயின் பெயருடன் மருத்துவரைச் சந்திக்கும் நபர்கள் அதிகரித்துவருகின்றனர்.
- ‘எனக்கு என்னதான் பிரச்சினை?’ என்று அறிந்துகொள்ளும் ஆவலில் ஆரம்பிக்கும் இந்தத் தேடல், அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு நிற்காமல் தொடரும் போது மனப்பதற்றமாக மாறுகிறது.
- வாயுத் தொந்தரவினால் ஏற்பட்ட சாதாரண நெஞ்சுவலி கூட வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆபத்தான காரணங்களுள் ஒன்றான மாரடைப்பு நோயின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளப்படுவது தான் சைபர்கண்டிரியாவின் ஆரம்பம். இதில் நெஞ்சுவலி என்பது எடுத்துக்காட்டு தான். இதைப்போலவே எல்லா நோய் அறிகுறிகளுக்கும் இது பொருந்தும்.
எனக்கு ஒன்றுமில்லைதானே?
- இன்னொரு சாரார் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தில்லாத நோய்கள் இன்னும் சிறிது காலத்தில் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். முன்பெல்லாம் தங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லையே என்று உறுதிசெய்து கொள்வதற்கும், மனதிருப்திக்கும் தினம் ஒரு மருத்துவரை நாடுவது மட்டுமல்லாமல் தேவையற்ற பரிசோதனைகளையும் மேற்கொள்வார்கள்.
- இந்த நபர்கள் இன்று மருத்துவர்களுக்குப் பதிலாக வலைதளங் களையும், காணொளிகளில் கூறப்படும் மருத்துவத் தகவல்களையும் நாடுவதினால் திருப்தி ஏற்படாத பட்சத்தில் இன்னும் உறுதிசெய்துகொள்ளத் திரும்பத் திரும்ப பல்வேறு வலைதளங்களை வாசித்துக் குழப்பமடைவார்கள். இறுதியில் தங்களுக்கு மருத்துவர்களால்கூடக் கண்டுபிடிக்க இயலாத பெரிய நோய் ஏதோவொன்று வந்திருப்பதாகவே முடிவுசெய்து மனப்பதற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவர்.
- இதனால் ஏற்படும் காலவிரயத்தினாலும் பணவிரயத்தினாலும் குடும்ப உறவுகள் எதிர்கொள்ள நேரிடும் பாதிப்புகளை அவர்களால் உணர இயலாமல் போய்விடும். மாறாக மருத்துவர்களும், உறவினர் களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயைப் புறக்கணிப்பதாகவே உணர்வார்கள். இது மனநோயாக உருவெடுத்துள்ளது என்பதையும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தொற்றாநோய்கூடத் தொற்றி விடுமோ?
- உறவினர்கள், நண்பர்கள் யாருக்காவது உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட்டிருப்ப தாகக் கேள்விப்பட்டவுடன் சிலருக்கு அதீதப் பதற்றம் (Panic attack) ஏற்படும். அப்போது உண்டாகும் உடல், மனநல மாற்றங்கள் சிலருக்குத் தங்களுக்கும் அதே நோய் வந்துவிட்டதைப் போன்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிடும்.
- இந்தச் சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள அவர்கள் உடனடியாகத் தேடுவது வலைதளங்களையும் யூடியூப் காணொளிளையும்தாம். அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள நோய் அறிகுறிகள் தங்களுக்கு இருக்கிறதா என்று ஒவ்வொரு நிமிடமும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள ஆரம்பிப்பார்கள்; இவர்கள் சாதாரண உடலியக்க மாற்றங்களைக்கூட நோயின் அறிகுறியாகத் தவறாக விளங்கிக் கொள்வதனால் மேலும் மனப்பதற்றத்திற்கு ஆளாகி முழுநோயாளியாகவே மாறிவிடு வார்கள்.
- புற்றுநோய் பாதித்த நபரைப் பார்த்து விட்டு வீடுதிரும்பிய பின்பு தாங்களும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் ஆரம்பித்து, அதற்குத் தீனிபோடும் வலைதளங்களைப் பார்த்து புற்றுநோயைக் கண்டு பிடிக்கத் தேவையான பரிசோதனைகளைக் கூடச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
- ஒருவேளை உடல்நலம் குறித்த நியாயமான சந்தேகங்கள் இருந்தால் அரசு நிறுவனங்கள் அல்லது மருத்துவத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான வலைதளங்களை மட்டுமே நாடுங்கள்.
- முழு மருத்துவ அறிவு இல்லாத ஒரு நபர் ஒரு நோயைப் பற்றி வலைதளத்தில் மட்டும் பார்த்துப் புரிந்துகொள்ளவும், முடிவெடுக்கவும் முயல்வது என்பது, யூடியூப் காணொளியைப் பார்த்து விமானம் ஓட்டக் கற்றுக்கொண்ட நபர், விமானத்தை இயக்குவது போன்ற ஆபத்து என்பதை மறந்துவிடக்கூடாது..
நன்றி : இந்து தமிழ் திசை (26 – 08 – 2023)