TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!

October 6 , 2024 107 days 134 0

சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!

  • மிகுந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே தொடங்கி, கூட்டணிக் கட்சிகள்  பங்கேற்றதாக முடிந்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது - போதைப் பொருள் ஒழிப்புக்கான மகளிர் மாநாடு.
  • 1971-ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட காலந்தொட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் மதுவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான தீர்மானங்களின் வரிசையில் வி.சி.க. மாநாட்டுத் தீர்மானங்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன.
  • மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு வி.சி.க. அழைப்பு விடுத்ததும் பற்றிக்கொண்டது சலசலப்பும் விறுவிறுப்பும். ஆட்சியில் பங்கு பற்றிய பழைய விடியோவைக் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரெனப் பகிர்ந்தபோது கொஞ்சம் பதற்றமும் சேர்ந்து தோன்ற, ‘பகிர்ந்தது நான் அல்ல, அட்மின்’ என்று அதை நீக்கிவிட்டு, சில நாள்களில் மறுபடியும் அதையே அவரோ அல்லது அட்மினோ பதிவிட... ஊடகங்களுக்கு என்னவோ பெருந்தீனி.
  • ஆனால், கடைசியில் ஏதோவொரு சூர்யா படத்தில் மாடியிலிருந்து மாமனார், 'என்னம்மா கீழே சத்தம்?’ என்றதும் கீழே மனைவியிடம் சவுண்ட் விட்டுக்கொண்டிருந்த வடிவேலுவோ அப்படியே ட்டோனை மாற்றி ‘சும்மா  பேசிக்கிட்டிருக்கேன் மாமா’ என்று பதில் கொடுப்பார். இந்தக் காட்சிக்கு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் இதே ரேஞ்சில்தான் வழக்கமான கட்சி மாநாடாக முடிந்திருக்கிறது விசிக மாநாடு.
  • ‘மது, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மகளிர் குழுக்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம்’ என்ற திருமாவளவனின் பேச்சிலுள்ள ஒரு வரிதான் மாநாட்டின் செய்தி.
  • மதுக்கடைகளை எல்லாம் யார் திறந்தார்கள், யார் மூடினார்கள், யார், எதை, – கள், சாராயக் கடைகள் –  எப்போது திறந்தார்கள், மூடினார்கள்? தனியார் நடத்தியது  எப்போது? டாஸ்மாக் வந்தது எப்படி? மதுக்கூடங்கள் வந்தது எப்படி? இவ்வாறான முடிவுகள், தகவல்கள் எல்லாமும் வரலாறு. இந்த முடிவுகளில் சம்பந்தப்பட்ட - முதல்வர்களாக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி, அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒருவரும் இப்போது இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களையும் இவர்களின் முடிவுகளையும் இனிப் பேசிக்கொண்டிருப்பதில்  பொருளுமில்லை; பயனுமில்லை.
  • திமுகவோ, அதிமுகவோ - இப்போது இருப்பவர்கள் எல்லாருமே அதை நடத்திச் செல்பவர்கள்தான். இன்றைக்கு மது விற்பனை மூலம் மாநில அரசுக்குக் கிடைக்கும் ஆண்டு வருவாய் ரூ. 45,800 கோடி. ஆனால், மதுவால் சமுதாயத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உயிரிழப்புகளுக்கும் சீர்குலைவுகளுக்கும் குற்றங்களுக்கும் எவ்விதக் கணக்குவழக்குமில்லை.
  • இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாருமே மனதார மதுவிலக்கை விரும்புகிறார்களா? ஆளும் திமுகவும் அடுத்த நிலையிலுள்ள அதிமுகவும் மதுவிலக்கு அமல் பற்றி என்ன நினைக்கின்றனர்?
  • உண்மையில் மதுவிலக்கில் அக்கறை கொண்டிருந்தால், மதுக் கடைகளை மூடுவது தொடர்பாகவும் இதனால் அரசுக்கு வந்துகொண்டிருக்கும் வருவாயை இழக்க நேரிடும்போது (வேறு வருவாய் மட்டுமல்ல, செலவுகளைக் குறைப்பதற்குமான) மாற்றுத் திட்டங்கள் பற்றியும் இவர்களிடம் என்ன யோசனைகள் இருக்கின்றன?
  • மதுப் பழக்கத்திலிருந்து மனமாற்றம் செய்வதன் மூலமும் பிரசாரம் செய்வதன் மூலமும் விழிப்புணர்வு பெற்று ‘குடிமக்கள்’ யாருமே மதுக் கடைகளுக்குச்   செல்லாமல் புறக்கணித்துவிடுவார்கள், குடியை நிறுத்திவிடுவார்கள், விற்பனை அற்றுப் போய்விட்டால் தன்னைப்போல மதுக்கடைகளை அரசு மூடிவிட்டுப் போய்விடும் என்றெல்லாம் யாராவது நினைத்தால் அல்லது எதிர்பார்த்தால் எவ்வளவு பெரிய அபத்தம்? பிரசாரம் மூலம் மாற்றம் என்பதெல்லாம் போகாத ஊருக்குச் சொல்கிற வழியைப் போலத்தான், மகாத்மா செய்யாத பிரசாரமா?
  • கெடுவினையாகத் தோற்றுப் போய்விட்ட 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்  அறிக்கையில் மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என்று திமுக வாக்குறுதியளிக்க என்ன காரணம்? யார் காரணம்? மக்கள்... மக்கள்தான் காரணம்!
  • ஏனென்றால், அந்தத் தேர்தலுக்கு முன்னர்தான் மாநிலம் முழுவதும் மதுவுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கிடந்தனர். மதுக்கடைகளுக்குள் மக்கள் புகுந்து நொறுக்கினர். பல இடங்களில் கடைகளைத் திறக்க விடாமல் செய்தனர். மதுவிலக்கை வலியுறுத்தி திமுகவே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியது. தேர்தல் வாக்குறுதியாகவும் தெரிவித்தது.
  • அரசியல் கட்சிகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களே முன்னெடுத்து, இயக்கங்களை, போராட்டங்களை நடத்தினால் மட்டுமே – மதுவிலக்கைக் கொண்டுவர நினைக்காதவர்களை ஆதரிக்க மாட்டோம், வாக்களிக்க மாட்டோம் – என்று சொன்னால் அல்ல, உறைக்கும்படியாக உணர்த்தினால் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் அரசியல் கட்சிகள் தள்ளப்படுவார்கள்.
  • ஆண்டு முழுவதும் வற்றாமல் பெருகியோடிக்கொண்டிருக்கும் இந்த மது வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்படுவது மக்கள்தொகையில் சரிபாதியான பெண்களே என்கிறபோது போராட்டங்களிலும் பெண்களுக்கே பெரும் பங்கு இருக்கிறது.
  • அரசு என்ற அதிகாரத்தின் முழு ஆசிர்வாதத்துடன் மனிதர்களையும் மனித விழுமியங்களையும் மரியாதையான வாழ்வையும், எதிர்காலத்துடன் சேர்த்துத் தின்று செரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கொடிய பூனைக்குக் கண்டிப்பாக மணி கட்டியே தீர வேண்டும்! யார் கட்டுவது? எப்படிக் கட்டுவது? எவ்வாறு கட்டுவது? நிச்சயம் வெறும் மாநாடுகளால் அல்ல!
  • இந்த ஆண்டு அக்டோபர் 31-தான் கொண்டாட்டத்துக்கான தீபாவளி! ஆனால், கொலைகாரத் தீபாவளியோ கடந்த ஓராண்டாகவே - 364 நாள்களாகவே -  நடந்துகொண்டிருக்கிறது இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில். சர்வம் வெடிமயம். இதுவரையில் கொல்லப்பட்டவர்கள் 43,494 பேர்!
  • கடந்த சில நாள்கள் முன் ஒரு சின்ன டிவிஸ்ட். திடீரென இடையில் புகுந்த ஈரான், எதிர்பாராத தருணத்தில் திடீரென நடுத்தலையில் குட்டுவதைப் போல, இஸ்ரேலிலுள்ள மூன்று விமான தளங்களை நோக்கி சரமாரியாகத் துல்லிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இஸ்ரேல் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை போல.
  • இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் எல்லாம் காஸாவில் லெபனானிலும்  பெருமளவில் மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால், ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மக்களுக்குப் பாதிப்பில்லாமல் ராணுவ நிலைகள் மட்டுமே தகர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
  • தவிர, தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடிதான் இது. இதற்கு எதிரொலியாகத் தாக்கினால், மீண்டும் இஸ்ரேல் தாக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருக்கிறது. இந்தப் போரில் தாங்கள் ஈடுபடப் போவதில்லை, தங்களுக்கு சம்பந்தமில்லை என்று பிரிட்டனும் பிரான்ஸும் அறிவித்துவிட்டன. வளைகுடா நாடுகள் பலவும் இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாகவும் தங்களுடைய நிலத்தையும் யாரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன. ரஷியா, சீனா போன்றவை ஈரானுக்கு ஆதரவாக நிற்கின்றன.
  • எப்போதுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்காவின் நிலையில்தான் குழப்பம். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த முடிவையும் யாரும் எடுக்க முடியாததைப் போல சென்றுகொண்டிருக்கிறது.
  • ஈரானிலுள்ள எண்ணெய் வயல்களைத் தாக்கி அழிக்க முனைந்தால் வளைகுடா நாடுகளிலுள்ள அனைத்து எண்ணெய் வயல்களையுமே கொளுத்திவிடுவோம் என்று இஸ்ரேலுடன் அமெரிக்காவுக்கும் சேர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான். அதிர்ந்து கிடக்கும் இஸ்ரேலின் அடுத்தடுத்த நகர்வுகளைப் பொருத்திருக்கிறது இந்தப் போரின் போக்கு.
  • இப்படி உலகமே இரண்டாகப் பிரிந்துகிடக்கிறதே... ஒருகாலத்தில் மூன்றாவதாக ஒரு வலுவான சக்தி, அணிசாரா நாடுகள் (Non Aligned Nations – நான் அலைன்ட் நேஷன்ஸ்) என்றோர் அமைப்பு, இருந்ததே? நினைவிருக்கிறதா?
  • 1955 ஏப்ரல் 18 முதல் 24 ஆம் தேதி வரை இந்தோனேசியாவிலுள்ள பாண்டுங் நகரில் நடைபெற்ற, பெரும்பாலும் ஆசியா, ஆப்பிரிக்காவிலிருந்து 29 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் வித்திடப்பட்டு, பஞ்சசீலக் கொள்கை அறிவிக்கப்பட்டு, 1961 செப். 1 – 6-ல் யூகோஸ்லாவியாவிலுள்ள பெல்கிரேட் நகர மாநாட்டில் முறைப்படி அறிவிக்கப்பட்ட அமைப்பு! இன்னமும் இருக்கிறது, பெயரளவில். இப்போது உகாண்டாதான் இதன் தலைவர்.
  • சீனா உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்ற இதன் உருவாக்கத்திலும் நடத்திச் சென்றதிலும் இந்தியாவும் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் பெரும் பங்காற்றினர். அமெரிக்கா - சோவியத் சோசலிச குடியரசுகள் ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையே இரு முனைப்பட்ட பதற்றமான கெடுபிடிப் போர்ச் சூழலிலும் வலுவான மூன்றாவது சக்தியாகத் திகழ்ந்த அணிசாரா நாடுகள் அமைப்புக்கு என்னவானது? எங்கே சென்றது? ஏன்? என்ன - யார் காரணம்?
  • ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலரையே உள்ளே வரக் கூடாது என்று இஸ்ரேல் அறிவித்திருக்கும் நிலையில் போரிட்டுக்கொண்டிருக்கும் வலுவான இந்த சக்திகளை யாரால் தட்டிக் கேட்க முடியும்? ம். இந்தியா என்ன சொல்கிறது என்று உலகம் எதிர்பார்த்த ஒரு காலமும் இருந்ததே!
  • பிக் நியூஸ்! இலங்கையில் தேர்தலில் வெற்றி பெற்றுப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயகவைக் கொழும்புக்குச் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். திஸ்ஸநாயக ஆட்சியமைத்ததும் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற ‘பெருமை’யும், இந்தியாவையும் ஜெய்சங்கரையும் சேர்ந்திருக்கிறது.
  • தீரா தலைவலியாகத் தமிழ் மீனவர்களுக்குத் தொடரும் பிரச்சினை எப்போது தீரப் போகிறதெனத் தெரியவில்லை. இதுபற்றி ஜெய்சங்கர் பேசியிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கன் மாதிரி 50 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இப்படியே இன்னும் எவ்வளவு காலத்துக்கு?

ஆல் ஆர் ஈக்வல்!

  • மராட்டி, வங்காளி, பாலி, பிராகிருதம், அசாமி ஆகிய நாட்டில் மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை!
  • மனிதன் பேசுகிற எல்லா மொழிகளும் நல்ல மொழிகளே.
  • பழைமைச் சிறப்பு உள்பட பல்வேறு தகுதிகளையும் கருத்தில்கொண்டு இந்தியாவில் 2004-ல் முதன்முதலில் தமிழ்தான் செம்மொழி என அறிவிக்கப்பட்டது. அடுத்து சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா எனத் தொடர்ந்தது. இப்போது மேலும் 5 மொழிகள் சேர்க்கப்பட்டுப் பட்டியலின் எண்ணிக்கை பதினொன்றாகியிருக்கிறது.
  • இதே வேகத்தில் சென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய ரூபாய்த் தாளில் இடம் பெற்றிருக்கும் எல்லா மொழிகளுக்குமே செம்மொழித் தகுதி அறிவிக்கப்படலாம்!
  • ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் எல்லாரும் அமைச்சர் பதவி கேட்பார்கள். பிரச்சினையே வேண்டாம் என அருமையான தீர்வை அறிவிப்பார் துக்ளக் – அனைவருமே உதவிப் பிரதம மந்திரிகள்!

நன்றி: தினமணி (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்