TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

December 29 , 2024 9 days 78 0

சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

  • ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ – கியூபாவில் மான்கடா ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் தோல்வியுற்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்துக்காகப் பேசிய உலக வரலாற்றுப்  புகழ்பெற்ற உரையின் நிறைவு வரிதான் இது – சொன்னபடியே வரலாறு அவரை விடுதலை செய்தது!
  • பத்தாண்டுகளாகப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், 2014 ஜன. 3 ஆம் தேதி, தன் பதவிக்கால நிறைவில் (பிரதமராக விடைபெறும் வகையில்) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளித்த பின் சொன்ன ஒரு வரியும் இதைப் போன்றதே – ‘நான் பலவீனமான பிரதமர் அல்ல; இன்றைய ஊடகங்கள் அல்லது எதிர்க்கட்சிகளைவிடவும் வரலாறு என் மீது மிகுந்த கருணை கொண்டதாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்’.
  • இந்தியப் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்திருந்த நேரத்தில், 1991-ல் நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று (பிரதமர் நரசிம்ம ராவ்), எண்ணற்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ந்து பத்தாண்டுகளாகப் பிரதமராகப் பதவி வகித்து, நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராகத் திகழ்ந்த மன்மோகன் சிங் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டார்.
  • மன்மோகன் சிங் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் அவ்வளவாக வெளியே தெரிய வராத விஷயங்கள் எல்லாவற்றையும் (அடேயப்பா, எவ்வளவு!) ஒவ்வொருவராக இப்போது தெரிவித்து அவரைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  • இன்றைக்கு உலகின் மூன்றாவது பொருளாதாரம், நாலாவது பொருளாதாரம் என்றெல்லாம் இந்தியாவால் மார்தட்டிக் கொள்ள முடிகிறதென்றால் அதற்கான அடித்தளத்தை உருவாக்கியவை – நாட்டின் பொருளாதாரத் தோற்றத்தை மாற்றக் காரணமாக இருந்தவை – உலகோடு ஒட்டிச் செல்லும் விதத்தில் மன்மோகன் சிங் அறிமுகம் செய்த திட்டங்கள், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (குறைகள் இருந்தபோதிலும்)!
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (சுருக்கமாகச் சொன்னால் 100 நாள் வேலைத் திட்டம்), அரசு செயல்பாடுகளை வெளிப்படையாக அனைவரும் அறிந்துகொள்ளக் கூடியதான தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், கட்டணமில்லா – கட்டாயக் கல்வி உரிமை, ஆதார் அடையாள அட்டை என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஊடகங்களைவிடவும் மிக அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் மக்கள், அவருடைய திட்டங்களை, சாதனைகளை எல்லாம், இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
  • மன்மோகன் சிங் காலத்தில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் பலவும் இன்னமும் வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய கிராமங்களில் இதனால் பயன்பெறும் ஏழை எளிய மக்களின் இடத்தில் இருந்து பார்க்கும்போதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம் புரியும். யாருக்கும் சும்மா அரசுப் பணத்தை வழங்கிவிட முடியாது, வேலை, வேலைக்குக் கூலி!
  • பொய்களை உதிர்க்கவில்லை, போலியான வாக்குறுதிகளைத் தந்ததில்லை, எந்தக் காலத்திலும் யாரையும் - யாரும் வெறுக்கும்படியாக நடந்துகொண்டதில்லை.
  • `நான் இன்றிருக்கும் நிலைக்குக் காரணம் கல்விதான்’ என்பதை எப்போதுமே மீண்டும் மீண்டும் கூறிவந்திருக்கிறார் மன்மோகன் சிங்.
  • ஏனென்றால், அவர் பிறந்து, 12 வயது வரை வாழ்ந்த (தற்போது பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள) காஹ் என்ற கிராமத்தில் மின்சாரம் கிடையாது, பள்ளி கிடையாது, மருத்துவமனை கிடையாது, குடிக்க நல்ல தண்ணீர்கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பல மைல்கள் நடந்துதான் பள்ளிக்குச் சென்றுவர வேண்டும். இரவில் மங்கலான மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பு
  • நாட்டின் விடுதலை – பிரிவினைக்குப் பிறகு அமிர்தசரஸில் குடியேறியது குடும்பம். அங்கேதான் கல்லூரிப் படிப்பு. பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு, ஒரு ஸ்காலர்ஷிப் உதவியுடன். இன்னொரு ஸ்காலர்ஷிப் உதவியுடன்தான் முனைவர் படிப்பும்.
  • நாடு திரும்பியதும் அமிர்சரஸில் அவர் படித்த கல்லூரியிலேயே ஆசிரியப் பணி (இரு ஆண்டுகள் கட்டாயமாகப் பணிபுரிவதாக ஏற்பாடு). ஒரு முறை மன்மோகனின் பக்கத்து வீட்டுக்காரரான எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், இவரை பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்; நேருவும் அரசுப் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்ள, கல்லூரியில் தாம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தைத் தெரிவித்து மறுத்துவிட்டார் மன்மோகன்.
  • பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் புகழ்பெற்ற பொருளியல் வல்லுநர் ரௌல் பிரெபிஷ் தலைமையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென தில்லி பொருளியல் பள்ளியில் விரிவுரையாளர் பணி புரிய அழைப்பு வரவே, உடனடியாக ஏற்றுக்கொண்டு நாடு திரும்ப முடிவு செய்துவிட்டார் மன்மோகன்.
  • பிரெபிஷ்ஷுக்கு பயங்கர அதிர்ச்சி. எவ்வளவோ புத்திசாலிகளான பொருளியலாளர்கள், ஐ.நா.வில் வேலை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும்போது, அதை விட்டுவிட்டு யாராவது இந்தியாவில் ஆசிரியர்  வேலைக்கு, அதுவும் இந்த இளம் வயதில் செல்வார்களா? நீ முட்டாள்தனமாக நடந்துகொள்கிறாய் என்று மன்மோகனிடம் குறிப்பிட்டிருக்கிறார் பிரெபிஷ். மன்மோகன் சொன்ன பதில்தான், அவர்தான் மன்மோகன் என்பதைக் காட்டுவது – “ஆனால், வாழ்க்கையில் சில நேரங்களில் முட்டாள்தனமாக இருப்பதேகூட புத்திசாலித்தனம்தான்!”
  • கல்வி கற்பிக்கத்தான் இந்தியா வந்தார். ஆனால், பின்னர் அரசுத் துறையுடன் இணைந்து இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் அவர் வகித்த பதவிகள் எத்தனை எத்தனை? இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், நிதித் துறைச் செயலர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக்குழுத் துணைத் தலைவர், நிதியமைச்சர்... நிறைவாக பிரதமர்!
  • 1980 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான இந்திரா காந்திக்கு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்த திறமையான ஒருவர் தேவைப்பட்டபோது அவருடைய தெரிவு – சுமார் எட்டு ஆண்டுகளாக நிதி அமைச்சகத்தில் இருந்த மன்மோகன் சிங். திட்டக் குழு உறுப்பினர் – செயலராகப் பணித்தார். ஆனால், அப்போது மன்மோகன் சிங்கிற்கு வயது 48 ஆகவில்லை. எனவே, இந்த நேரத்தில் விலகினால் அரசு ஊழியருக்குக் கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்களை இழக்க நேரிடும் என்று தயங்கியதுடன், இந்திரா காந்தியிடமே அதைத் தெரிவித்தும் விட்டார். சற்றும் தயங்காமல் மன்மோகன் சிங்கிற்கு விதிவிலக்களித்து திட்டக் குழுவுக்குள் கொண்டுவந்தார் இந்திரா காந்தி.
  • 1991-ல் நாடு மிகச் சிக்கலான நிலையில் இருந்தபோது, மிகுந்த நம்பிக்கையுடன் அரசியலுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவரான மன்மோகன் சிங்கை நிதித் துறை அமைச்சராக்கினார் பிரதமர் நரசிம்ம ராவ். அடுத்தடுத்த ஆண்டுகளில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே,  இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அடிப்படையான பல சீர்திருத்தங்களை - மாற்றங்களைச் செய்தார் மன்மோகன்.
  • இவையெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் நல்ல பலன்களை அளித்ததைத் தொடர்ந்து, பின்னாளில் பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகளை வழங்கக் கூடிய மாறுபட்ட சிந்தனையாளரான பொருளியல் வல்லுநராக உலகெங்கும் புகழப் பெற்றார் மன்மோகன் சிங்.
  • அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2010, ஜூன் 27-ல் ஜி 20 மாநாட்டின்போது பேசியதைக் குறிப்பிட வேண்டும் – “ஜி 20 மாநாட்டில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், (இந்தியப்) பிரதமர் பேசும்போது, மக்கள் கவனிக்கிறார்கள். ஏனென்றால், பொருளாதார விஷயங்களில் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவு, உலகத்தின் சக்தியாக இந்தியா உயர்ந்ததிலுள்ள நுட்பங்கள், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியில் அவருக்குள்ள உறுதிப்பாடு.”
  • 2007 – 08 ஆண்டுகளில் உலகமே பொருளாதார நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்தபோது, எத்தகைய பாதிப்புகளுக்கும் உள்ளாகாமல் இந்தியா கடந்து சென்றதற்கான காரணகர்த்தாக்களில் முக்கியமானவர் மன்மோகன் (கூடவே இந்தியர்களின் பழக்கங்களும் வீடுகளில் இருந்த சேமிப்புகளும்).
  • தன் வாழ்க்கை முழுவதும் எளிமை, எளிமை, எளிமை என்றிருந்தவர் மன்மோகன் சிங். எங்கேயும் தன்னைப் பற்றி எதையும் தம்பட்டம் அடித்துக் கொண்டவரில்லை. பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஏற்கெனவே பிரதமராக இருந்த வாஜ்பாயி பயன்படுத்திய காரையே தொடர்ந்து பத்தாண்டுகளும் பயன்படுத்தினார்.
  • நேரு - இந்திரா காந்தி குடும்ப செல்வாக்கு என்றெல்லாம் மாற்றுக் கட்சிகளால் சொல்லப்பட்டாலும் நாட்டின் மிகச் சிக்கலான காலகட்டத்தை நகர்த்திக் கடந்தபோது காங்கிரஸின் சார்பில் நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்கள் நரசிம்ம ராவ், மன்மோகன் சிங். இருவருமே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
  • தான் படித்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் பற்றியோ, தன்னுடைய எளிமை பற்றியோ, தன் படிப்பை, தகுதியைப் பற்றியோகூட எங்கேயும் தற்பெருமை பேசிக்கொண்டவரில்லை மன்மோகன் சிங்.
  • இந்தியப் பிரதமர்களிலேயே அதிக அளவிலான செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தியவர், நூற்றுக்கும் அதிகம் - 114! அடுத்துதான் நேருவே - 75. வெளிநாட்டுப் பயணங்களில் விமானங்களிலேயே செய்தியாளர்களுடன் பேசிவிடுவார்! என்ன கேள்வி கேட்டாலும், கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னவர், கடைசிக் கேள்வி வரைக்கும் காத்திருந்தவர். நிறையச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.
  • மன்மோகன் சிங் மீது சொல்வதற்குக் குறையே இல்லையா? இருக்கின்றன. பொருளாதார வல்லுநராக வந்தவர் கடைசி வரையிலும் அரசியல் தலைவராக மாறவே இல்லை; மாற முயற்சிக்கவுமில்லை. மைனஸ்தான். ஆனால், அதுவே அவருடைய பிளஸ்ஸும்கூட!
  • மன்மோகன் அரசின் முடிவுகளிலும் விமர்சனங்கள் இருக்கின்றன.
  • மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான் இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சுற்றிவளைத்துக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு யார் காரணமாக இருந்தாலும், மன்மோகனும் காங்கிரஸ் அரசும் செயல்படுவார்கள் என்ற தவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் இருந்தது. ஏமாற்றம்தான் மிச்சம்.
  • 1991 முதல் 2024 வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார் அவர். ஒரே ஒரு முறை - 1999 மக்களவைத் தேர்தலில் தெற்கு தில்லியில் போட்டியிட்டுத் தோற்றார். மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்துதான் பிரதமராகச் செயலாற்றினார். கடந்த ஏப்ரல் 13 வரையிலும் தொடர்ந்தார். கடந்த 2023, ஆகஸ்ட்டில் தில்லி அவசர சட்டத் திருத்த மசோதாவின் மீது வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு வந்தார் அவர்.
  • அமைதியின் உறைவிடமாகவே காட்சி தருபவர். இவருக்கு கோபமே வராதா  என்று நினைக்கச் செய்பவர். எதற்காகவும் எப்போதும் கோபம் கொள்ளாதவர் என்பார்கள். ஆனால், அவரும் கோபப்பட்டிருக்கிறார்.
  • மன்மோகன் யாரையாவது, எதையாவது கடுமையாக விமர்சனம் செய்ததைப் பார்த்திருக்கிறீர்களா? என்றொரு கேள்விக்கு, ஏழாண்டுகளுக்கும் மேலாக அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரான காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்:
  • “இதுபோன்ற தடிமனான சொற்களை அவர் பேசியதை முதலும் கடைசியாகவும் நான் பார்த்தது அப்போதுதான். பண மதிப்பிழப்பு குழப்பத்துக்கான எதிர்வினை அது. மூன்று அல்லது நான்கு நிமிடங்களே நீடித்த சிறிய ஆனால், கடுமையான சொற்களைக் கொண்ட தயாரிக்கப்பட்ட பேச்சு அது. பண மதிப்பிழப்பைத் திட்டமிட்ட,  சட்டப்பூர்வமான கொள்ளை என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பேச்சின் மூலம் எல்லாரையுமே அதிர்ச்சியுறச் செய்தார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் இவ்வளவு கடுமையாக யாரையாவது அவர் விமர்சித்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை”.
  • மன்மோகன் அரசுக்கு எதிராகக் கூறப்பட்ட எத்தனையோ குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாதவையாகிக் கொண்டிருக்கின்றன. ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், மௌனகுரு என்றெல்லாம் மன்மோகனைக் கேலி செய்தவர்களை வரலாற்றின்வழியே வெட்கப்படச் செய்திருக்கிறார் அவர். நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் என்பதையும் நாட்டின் தலைமகன்களில் ஒருவர் என்பதையும் காலம் நிரூபிக்கும்.
  • பிரதமராக அளித்த நேர்காணலில் மனப்பூர்வமாக தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டபடியே, வரலாறு அவர் மீது மிகுந்த கருணை கொண்டதாக இருப்பது அவருடைய மறைவின்போது தலைவர்களின் - மக்களின் நினைவலைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

நன்றி: தினமணி (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்