TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

October 20 , 2024 36 days 85 0

சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

  • ஒரே பரபரப்பு. தொடர்ந்து 4, 5 நாள்களாகத் தொடர்ச்சியாக வானிலை முன்னறிவித்தல்கள். எச்சரிக்கைகள். அரசு வானிலை நிலையங்கள் மட்டுமல்ல, தனியார் வானிலை ஆய்வாளர்களும் வரிசைகட்டி எச்சரித்துக்கொண்டிருந்தனர். தொலைக்காட்சிகளில் மட்டுமின்றி ‘யூ டியூப்’களிலும் ஏராளமான திடீர் வானிலை அறிஞர்கள் மழை பற்றிக் கணித்துக் கொண்டிருந்தனர்.
  • வங்கக் கடலில் தாழ்வு அழுத்த மண்டலம். சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பெரு மழை பெய்யப் போகிறது; ஒரே நாளில் சில மணி நேரங்களில் 200 மி.மீ.யிலிருந்து 250 மி.மீ. மழை பெய்யும். சென்னை தாக்குப் பிடிக்குமா? சும்மாவே ஆடுவோருக்குச் சலங்கை கட்டிவிட்டால் எப்படி இருக்கும்? மாநகரின் மக்களும் அப்படியாகிவிட்டார்கள், பெருங்குறையாகச் சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் அதிகபட்சமான முன்னெச்சரிக்கை. டஜன் கணக்கில் ரொட்டிகள், பால் பாக்கெட்கள் எனத் தொடங்கி, அரிசி, பருப்பு, காய்கறிகள் என எல்லாவற்றையும் வாங்கிக் குவித்தார்கள் அல்லது சேகரித்து வைத்தார்கள் (பாருங்க, ஒருத்தருக்குக்கூட இந்தக் கம்பெனில ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மட்டும் தோன்றவேயில்லை!).
  • மார்க்கெட்களில் எல்லாம் ஏதோ நாளை உலகம் அழியப் போகிறது என்கிற லெவலுக்கு வேகவேகமாக விற்பனைகள் நடைபெற்றன. நம்மூர்ல சொல்லவா, வேண்டும்? விலைகளும் அதே வேகத்தில் இருமடங்கு, மூன்று மடங்கென உயர்ந்துவிட்டன.
  • சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மழை வலுக்கத் தொடங்கி, புதன்கிழமை பகலில் விட்டு விளாசப் போவதாகவும் வியாழக்கிழமையும் தொடரும் என்றுதான் எச்சரிக்கை. அரசும் நிர்வாகங்களும் ஒருவித த்ரில்லுடன் காத்துக் கொண்டிருந்தனர். தாழ்வான பகுதிகளில் படகுகள் மட்டுமின்றி, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் சாப்பாடு, ரொட்டி வகையறாக்கள் எல்லாமும் ரெடி. இந்த மழைக்காகவே துணை முதல்வரானார் என்பதைப் போல எல்லா இடங்களிலும் உதயநிதி ஸ்டாலின் காணப்பட்டார். ஆனால்...

ஆன்ட்டி கிளைமாக்ஸ்!

  • செவ்வாய்க்கிழமை இரவில்… இயற்கை சிரித்தது, மனிதர்களைப் பார்த்துக்  கெக்கெலி கொட்டி. யாராலும் காது கொடுத்துக் கேட்டிருக்க முடியாத அல்ட்ராசோனிக் பெருஞ்சிரிப்பு.
  • கடலிலிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எல்லாருடைய கணிப்பையும் பொய்யாக்கிவிட்டு வடக்கே நகர்ந்துபோய்விட்டிருந்தது! சாதாரண மழைகூட இல்லை. நல்லவேளை, தப்பித்தன சென்னையும் மக்களும் மட்டுமல்ல, அரசு நிர்வாகங்களும்! ஆக்கிவைத்த சோறும் ரொட்டிகளும் அடுத்த இரு நாள்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டன!
  • பெருமழை என்றதுமே இவ்வளவு பரபரப்பும் பயமும் பதற்றமும் கொள்ளும் அரசும் மக்களும் ஒரு கணம் யோசித்தால்... காசா, பணமா, யோசித்துதான் பார்க்கலாமே.
  • ஒருவேளை இந்த மழையே ஓராண்டு அல்லது இரு ஆண்டுகள் முற்றிலுமாகப் பெய்யாமல் போய்விட்டால்...  அப்பாடி, மழையே பெய்யவில்லை என்று மக்கள் மகிழ்ச்சி கொள்வார்களா, என்ன? கதை கந்தலாகிவிடும். தண்ணீருமில்லாமல் ஒன்றுமில்லாமல் ஒட்டுமொத்தமாக எல்லாரும் செத்துச் சுண்ணாம்பாகிவிடுவார்கள் (ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்று கலயமேந்த நேரிடலாம்).
  • மழை என்றால் பெய்யும். பெரு மழை பெய்தால் வெள்ளம் பெருகத்தான் செய்யும். வெள்ளத்தைத் திறமாகக் கையாளவும், சேகரித்துப் பயன்படுத்தவும், தேவைக்கு அதிகமானதை வெளியேற்றவும் கற்றுக்கொள்ள வேண்டியதும் கற்றுக்கொண்டதைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டியதுமே நாகரிகங்களைக் கண்ட சமுதாயத்தின் – அதனிலிருந்து உருவான அரசு மற்றும் மக்களுடைய பணி அல்லது கடமை.
  • முதலில் சென்னையை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சென்னை மாநகரைப் பொருத்தவரை இரண்டு பெரிய ஆறுகளான கூவமும் அடையாறும் ஒருகாலத்தில் படகுப் போக்குவரத்துகூட நடைபெற்ற பக்கிங்காம் வாய்க்காலும் நகரின் வழியே சென்று கடலில் கலக்கின்றன (சென்னைக்கு வடக்கே கொற்றலையாறு!).
  • இப்போது நம்ம சென்னைவாழ் மக்களுக்கெல்லாம் கூவம் என்பது வெறும் சாக்கடைதான். பெயரே அப்படியிருப்பதால் அடையாறு தெரியும். பக்கிங்காம் வாய்க்காலுடன் சேர்ந்து மூன்றுமே வற்றாத ஜீவநதியென சாக்கடையால் நிரம்பிச் சென்றுகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் நதிகள் என்றால் புதிய தலைமுறைச் சென்னைப் பிள்ளைகள் சிரிக்கும்.
  • இன்று மாநகராக உருமாறிவிட்டபோதிலும் ஒருகாலத்தில் வயல்களாகக் காட்சியளித்த சென்னை மாநகருக்குள் ஏராளமான (தற்காலத்தில் சாக்கடைகளாகக் கறுத்துவிட்ட) சிறுசிறு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. இவையெல்லாமும் ஆங்காங்கே இணைந்து சற்றுப் பெரிய வாய்க்கால்களாக (சாக்கடைகளாக) மாறி, பின்னர் மிகப் பெரும் வாய்க்கால்களாக உருப்பெற்று, கூவம் ஆற்றிலோ, அடையாற்றிலோ, அல்லது பக்கிங்காம் வாய்க்காலிலோ சென்று கலக்கின்றன. தொடர்ந்து இவையெல்லாமும் கடலைச் சென்றடைகின்றன.
  • சென்னையில் எங்கே மழை விழுந்தாலும் தண்ணீர் இவற்றை நோக்கிதான் செல்லும்! இவற்றின் நீர்ப்போக்கிற்கான நிலச்சாய்வு அமைவுகளும் இயற்கையே வகுத்துத் தந்திருப்பவை. எங்கே எவ்வளவு மழை பெய்தாலும் இந்தச் சிறு, பெரு வழிகளை மறக்காமல் (தேவையானபோதில் சில பகுதிகளில் நின்று காத்திருந்து) தண்ணீர் அல்லது வெள்ளம் வெளியேறிச் சென்றுவிடும்.
  • சென்னை மாநகருக்குள் எத்தனை ஏரிகள், குளங்கள் இருந்தன, எத்தனை எத்தனை சங்கிலித் தொடரான – வரத்து மற்றும் வடிகால்களாக - இணைப்புக் கால்வாய்கள் இருந்தன, எவையெல்லாம் வயல்களாக இருந்தவை, எவையெல்லாம் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், எவையெல்லாம் நீர்நிற்கும் (Water Cushion Area) பகுதிகள்… எத்தனை பேருக்குத் தெரியும்? அரசுக்குத் தெரியுமா? அரசு அதிகாரிகளுக்குத் தெரியுமா?
  • இவற்றில் எங்கெல்லாம் நகர்கள் வந்திருக்கின்றன, சாலைகள் வந்திருக்கின்றன, கட்டடங்கள் வந்திருக்கின்றன, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உருவாகியிருக்கின்றன?
  • தண்ணீர் மட்டும், தான் வாழ்ந்த இடங்களையோ தன்னுடைய வழித் தடங்களையோ இன்னமும் மறக்கவில்லை. அதன் வழிகளில்தான் செல்கிறது, அல்லது செல்ல முனைகிறது. இந்த இடங்களில் எல்லாம் நிறைய கட்டடங்கள் வந்துவிட்டிருக்கின்றன, மக்கள் வசிக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் அது கவலைப்படுவதில்லை. எத்தனை நூறாண்டுகள் கழிந்தபோதும் மாறவுமில்லை, மறக்கவுமில்லை – சென்னை மாநகராகிவிட்டது, சாலைகளும் கட்டடங்களும் முளைத்துவிட்டன என்பதெல்லாம் தண்ணீருக்குத் தெரியாது, ஒருநாளும் தெரியப் போவதுமில்லை.
  • மழை - வெள்ளக் காலங்களில் சென்னைக்கு மேற்கே, வடமேற்கே, தென்மேற்கே இருக்கும் ஏரிகள் நிரம்பும்போது வெள்ளம் வெளியேறி, அங்கிருந்து   வாய்க்கால்கள் வழியோடி, அடுத்தடுத்த ஏரி, குளங்களுக்கு வரும், நிரம்பியதும்  மீண்டும் வெளியேறி அடுத்தடுத்து (அப்போது வயல்வெளியில், இப்போது நகர்வழியே) கடலை நோக்கிச் செல்லும். மாநகருக்குள்ளும் வெளியேயும் இப்படி வழிந்தோடி வரும் தண்ணீரின் பெருமளவைக் கொற்றலையும் கூவமும் அடையாறும் கடலுக்கு ஏந்திச் செல்லும்.
  • கடலும் நிலமும் சமமட்டமான பெரும்பரப்பில், வெளியேறி வந்த வெள்ளம் அத்தனையும் உடனே கடலில் கலக்க முடியாது என்பதால், சதுப்பு நிலப் பரப்பில் காத்திருந்து மெதுவாகக் கடலைச் சென்றடையும்,  நிலத்தடியிலும் சேரும். எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சதுப்பு நிலத்தில் நின்று நிதானித்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலைச் சென்றடையும்.
  • அந்தச் சதுப்பு நிலங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன? இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பு இப்போது வெறும் ஆயிரத்துச் சொச்சம் என்ற அளவுக்குச் சுருங்கிப்போய்விட்டது. எல்லாமும் சாலைகள், கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள். சதுப்பு நிலத்தைத் தின்று உருவான பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் எல்லாம் டாலர்களைக் கக்கிக் கொண்டிருக்கும்போது வெள்ளத்தை எப்படி வெளியேற்றுவது?
  • சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரைச் சாலையும் பழைய மாமல்லபுரம் சாலையும், நம்மவர்களுக்குப் புரியும்படி சொன்னால் இசிஆரும் ஓஎம்ஆரும், சதுப்பு நிலத்துக்குள்தான் ஊடறுத்துச் செல்கின்றன. இவற்றின் இருபுறமும் இருப்பவை, அல்ல இருந்தவை, சதுப்பு நிலங்களே. நிலம் காய்ந்துகிடக்கும் காலங்களில் இந்தப் பரப்புகளில் பயிர்களை – புஞ்சைப் பயிர்களை மக்கள் சாகுபடி செய்வார்கள். இவ்வாறு பயன்படுத்துவோருக்கு அவை அரசுக்குச் சொந்தமான நிலம்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தண்டம் விதித்து பி மெமோ என்ற ரசீதை - ஆவணத்தைத் தருவார்கள். பின்னாளில், இவ்வாறு விவசாயம் செய்தவர்களுக்கெல்லாம், இத்தனை ஆண்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற அனுபோக பாத்தியதையாக இந்த நிலங்கள் உரிமையாக்கப்பட்டுவிட்டன. தவிர,  மிச்சம் மீதியிருந்த பெரும் பரப்புகள் எல்லாம் கல்வி வள்ளல்களுக்குத் தானங்களாகவும் தரப்பட்டுவிட்டன.
  • சதுப்பு நிலங்களில் பயிர்கள் செய்யப்பட்ட வரை பாதிப்பு இல்லை. வெள்ளம் நிற்கும், பின்னர் வெளியேறிவிடும். அவையே நகர்களாகவும் வீடுகளாகவும் கட்டடங்களாகவும் மாறிப் போய்விட்டால்...
  • மாநகருக்குள் நிலைமையைப் பாருங்கள். சென்னை மாநகர் முழுவதுமே கட்டடங்கள், கட்டடங்கள், கட்டுமானங்கள்தான். எத்தனை பெரிய மழை பெய்தாலும் மாநகரின் உள்பகுதி நிலப் பரப்புக்குள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இறங்காது.  நிலத்தடி நீராக மாறாது; வியப்பாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை.
  • சாலைகளில் இருபுறங்களையும்  தொட்டுத் தார்ப் போர்வை, பின்னர் கல் பதித்த அல்லது சிமெண்ட்டாலான நடைமேடைகள், அதைத் தொட்டாற்போல கட்டடங்கள் வந்துவிடும்… பிறகு அடுத்த தெரு, அதே கல் – சிமெண்ட் நடைமேடை, தார்ப் போர்வை… எங்கே இடைவெளியைக் கண்டுபிடித்து, எப்படி நிலத்தடிக்குச் சென்றடையும் நீர்?
  • சாலைகளை எல்லாமும் முக்கால் அடி, முக்கால் அடி லேயர்களாக உயர்த்தித் தார் போர்வையின் கனத்தையும் அதிகமாக்கிவிட்டார்கள். ஆக, இப்போது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளியும் வெள்ளம்தான். நகருக்குள் மண்பரப்பே இல்லாதவாறு மறைத்துப் போட்டுவிட்டு, வெள்ளம், வெள்ளம் என்றால்… வெள்ளம் எங்கேதான் செல்லும்?
  • எடுத்துக்காட்டாக, வட சென்னை வெள்ளம் முழுவதும் கேப்டன் காட்டன் வாய்க்கால், கொடுங்கையூர் வாய்க்கால், ஓட்டேரி நல்லா போன்றவற்றின் மூலம் வெளியேறி பக்கிங்காம் கால்வாயைச் சென்றடையும். பக்கிங்காம் கடலைச் சேரும். மேடுதட்டிப் போன பக்கிங்காம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, அதனுடைய உண்மையான அளவுக்கு அகலப்படுத்தப்பட்டால் மட்டுமே வட சென்னைப் பகுதிகளால் வெள்ளத்திலிருந்து தப்பிக்க இயலும். ஆனால், பக்கிங்காம் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்புகள், மாபெரும் குப்பைக் கிடங்காக அதைப்  பாவித்து அருகிலுள்ள குப்பைகள் எல்லாம் அங்கேதான் கொட்டப்படுகின்றன. இதேபோல சென்னை மாநகரின் எல்லா பகுதிகளுக்குமே தண்ணீர்த் தடங்கள் இருக்கின்றன.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக முதலில் கூவம், அடையாறு ஓரங்களில் தொடங்குவார்கள். ஏழை, எளிய மக்கள் எதிர்ப்பார்கள், எதிர்க்கிறார்கள் என்று கூறி அப்படியே வேலைகள் பலவீனமாகிவிடும். ஆனால், மிகப் பெரிய அளவிலான நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள், பெரிய கட்டடங்களை எழுப்பியிருப்போர் பெரும்பாலும் தொடப்படுவதில்லை என்ற அதிருப்தி மக்களிடம் இருக்கிறது. சென்னை மாநகருக்குள் சென்ற வாய்க்கால்கள், அதாவது இன்றைய சாக்கடைகள் எல்லாம் அதே ஆழ, அகல அளவில்தான் இருக்கின்றனவா? நகரில் தண்ணீர் நிற்க வேண்டிய ஏரிகள் எல்லாமும் எங்கே போய்விட்டன?
  • கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கப்படும் அதிஉயர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நீர்வழிகளை மறித்துக்கொண்டிருப்பவை எத்தனை? நீர்நிலைகளின் மீதே கட்டப்பட்டிருப்பவை எத்தனை? அரசே நீர்நிலைகளை  ஆக்கிரமித்துக் கட்டியிருப்பவை எத்தனையெத்தனை? நாமே ‘குறுக்க மறுக்க’ எல்லாவற்றையும் கட்டிவைத்துக்கொண்டு ‘லபோதிபோ’ என்றால் என்னங்க நியாயம்?
  • முதலில் இந்தத் தண்ணீரெல்லாம் அதன் வழிகளில் செல்வதற்கு என்ன வழியென்று கண்டுபிடித்து, அதன் வழியில் அனுப்பிவைத்தால் பிறகு யாருக்கும் எந்தத் துயரமும் இருக்காது.
  • திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் முடிந்திருப்பதாகவும் இதன் மூலம் பிரதான நகர்ப் பகுதிகளில் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டப் பணிகள் முடியும்போது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுவிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நம்புவோம்.
  • தமிழின் முதலாவதும், மக்கள் காப்பியமுமான சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய இளங்கோவடிகள் அடுத்ததாக வாழ்த்துகிறார் - மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்!
  • வெள்ளத்துக்கான தடங்களை எல்லாம் திறந்துவிட்டால் மாமழையும் மகிழ்ச்சிக்குரியதே.

நன்றி: தினமணி (20 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்