TNPSC Thervupettagam

சொல்லில் விரியும் வாழ்க்கை

August 4 , 2024 117 days 173 0
  • காக்கைபாடினியார் நச்செள்ளை தமிழ்ச் சங்க காலக் கவிஞர்களில் பெயர் பெற்றவர். இவரது காலம் பொ.ஆ (கி.பி.) 2ஆம் நூற்றாண்டுக்கும் 7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. குறுந்தொகை, புறநூனூறு ஆகிய தொகுப்புகளில் முறையே ஒரு பாடலும் பதிற்றுப்பத்து தொகுப்பில் பத்து பாடல்களும் இவரது பங்களிப்புகள். இவை அல்லாமல் காக்கைபாடினியம் என்னும் யாப்பிலக்கண நூலையும் அவர் எழுதியிருக்கிறார்.
  • இவரது குறுந்தொகைப் பாடலில் பாண்டிய நாட்டுப் பகுதியான தொண்டி குறிப்பிடப்படு வதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. கண்டீரம் என்னும் பகுதியை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளியைப் பற்றிய குறிப்பும் இதில் உண்டு. கண்டீரம் இன்றைய நீலகிரிப் பகுதியில் உள்ள ஒரு மலை. நச்செள்ளை எழுதிய பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவன், சேர மன்னனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அதனால் இவர் சேர நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்கிற துணிபும் உண்டு.
  • குறைந்த அடியில் உணர்ச்சி களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாடல்கள் நிறைந்த தொகுப்பு குறுந்தொகை. அந்தத் தொகுப்பில் நச்செள்ளை எழுதிய ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. இந்தக் கவிதையின் பாடுபொருள் பிரிவாற்றாமை. தலைவனைப் பிரிந்து தலைவி படும்பாட்டைச் சொல்லாமல் அதற்கு எதிர் நிலையில் தலைவி உழன்ற துன்பத்தை உணர்த்தும் வகையில் இந்தக் கவிதை விசேஷமானது. தலைவன் பொருள் தேடிச் சென்றதும் அவனைப் பிரிந்து தலைவி உண்ணாமல், உறங்காமல் வாசலில் விழிகளை வீசிக் கிடந்தாள் என்கிற விவரிப்பை யெல்லாம் நச்செள்ளை சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, தலைவன் வருவான் எனக் குறிப்புணர்த்த ஒரு காக்கை வந்து கரைந்து செல்கிறது. அதனால் தான் அதுவரை இருந்த துன்பத்துக்கு நேரெதிராக இன்பம் அடைகிறாள் தலைவி.
  • இந்தக் கூற்று தோழியின் விவரிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் உட்பொருள் இருக்கிறது. தலைவன், தலைவி தன்னைப் பிரிந்த துன்பம் இல்லாமல் இருக்கத் தோழிதான் காரணம் என நினைத்திருக்கக் கூடும். அதனால் அதற்குத் தோழியிடம் நன்றி கூறியிருக்கலாம். இதெல்லாம் இந்தப் பாடலில் விவரிப்பாக இல்லாமலேயே நச்செள்ளை உணர்த்தும் காட்சிகள். கவிதைக்குரிய லட்சணங்கள் இவை. தலைவியின் மகிழ்ச்சிக்கு நான் காரணம் அன்று. கரைந்து சென்ற காக்கை என்பதை ‘ திண்டேர் நள்ளி கானத் தண்டர்/பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ/றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி/பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு/விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’ என்கிறாள் தோழி. தொண்டி என்கிற ஊரில் உள்ள வயல்களில் நன்கு விளைந்த வெண் நெல் அரிசிச் சோற்றில் கடையெழு வள்ளல்களுள் ஒருவனான நள்ளி என்பவன் காட்டின் இடையர்கள் பசுக்களின் நெய் கலந்து ஏழு பாத்திரங் களில் வைத்து அதை அந்தக் காக்கைக்குப் படையலாகப் படைத்தாலும், அது தலைவனின் வரவைச் சொன்ன காக்கையின் செயலுக்கு இணையாகாது என்பது அதன் பொருள். சிறு பாடல்களில் விரிவுகொள்ளக்கூடிய காட்சிகள் மூலம் ஒரு பண்பாட்டை இந்தப் பாடல்கள்வழி நச்செள்ளை சித்தரித்துள்ளார்.
  • பண்டைய தமிழர்கள் சில ஒழுக்கங்களைப் பேணியுள்ளனர். போரில் புறமுதுகிட்டு ஓடுவது இழிவான செயல்; அது அந்த வீரனின் தாய்க்கு அவமானகரமானது. இந்தப் பண்பாடு நச்செள்ளையின் குறுந்தொகைப் பாட்டில் பதிவாகியுள்ளது. ஆனால், தான் கைக்கொண்ட பொருளை உணர்த்த நச்செள்ளை சுவீகரித்துக்கொண்ட விவரிப்பு மொழி விசேஷமானது. ‘நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்/முளரி மருங்கின் முதியோள்’ என்கிற விவரிப்பு இந்தக் கவிதையில் முக்கியமானது. படைக் களத்துக்குச் சென்ற தன் மகன், புறமுதுகிட்டு ஓடிவிட்டான் என்கிற செய்தியைக் கேட்டு ஒரு தாய் அவமானம் அடைகிறாள். அது உண்மையானால் அவனுக்குப் பால் சுரந்த தன் மார்பை அறுத்துவிடுவேன் என்கிறாள். இந்த இடத்தில்தான் மேற்சொன்ன ‘நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்’ என்கிற விவரிப்பின் அவசியம் கவிதையை இன்னும் உணர்ச்சி மிக்கதாக்குகிறது. நரம்புகள் வெளித் தெரியுமளவுக்கு முதுமையான தோள்களையும் தாமரை இலை போன்ற வற்றிய வயிற்றையும் உடையவள் அந்தத் தாய். அந்தப் பலவீனமான நிலையில் தன் மகன் நைச்சியமாக இருப்பது அவளைப் பொறுத்தவரை நல்லதுதான். ஆனாலும் அவள் அதை விரும்பவில்லை. ஒரு வாளை எடுத்துக்கொண்டு படைக்களம் செல்கிறாள். மகன் இறந்துகிடப்பதைக் கண்டு ‘பெரிதுஉவந் தனளே' என்கிறார் நச்செள்ளை. அதாவது மனம் மகிழ்ந்தாள். மகன் இறந்து கிடப்பது துக்கமான விஷயம். ஆனால், அவன் புறமுகிட்டுச் செல்லவில்லை; களத்தில் மாண்டான் என்பது அதையெல்லாம்விட அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சிதமான கவிதை இந்தப் பாட்டில் வெளிப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்