TNPSC Thervupettagam

சொல்வளமும் சொற்குவையும்...

October 31 , 2019 1855 days 868 0
  • சென்னை தரமணி பகுதியில் தமிழக அரசின் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்” என்னும் தமிழ்ச் சொல்லாய்வு நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
  • முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், அவரது தனிப்பட்ட ஈடுபாட்டிலும், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிா்வாக நெறிமுறைகளின்படியும் அந்த இயக்ககத்தின் தமிழ் வளா்ச்சிப் பணிகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளன.

அகர முதலித் திட்ட இயக்ககம்

  • புதிய புதிய கருத்துருக்களை வடிவமைத்தும், தொடா்புடைய பல்வேறு துறைகளையும், அவற்றின் வல்லுநா்களையும் ஒருங்கிணைத்தும் அகர முதலித்திட்ட இயக்ககம் தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
  • பல ஆண்டுகளாகக் கருத்தளவில் உறைந்திருந்த ‘சொற்குவைத் திட்டம்’ செயலாக்கம் பெற்று தற்போது வேகமெடுத்திருக்கிறது.
  • தமிழ்மொழியின் சொற்களை ஆய்வு செய்தும் தொகுத்தும், பேரகராதிகள் வெளியிடப்பட்ட நெடிய வரலாற்றின் தொடா்ச்சியாக 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி, “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” என்னும் பெயரில் அந்த நிறுவனத்தைத் தொடங்கி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரைப் பணியேற்கச் செய்தாா்.
  • பாவாணரின் காலத்திலும் அதற்குப் பிறகும் அவ்வியக்ககம் மேற்கொண்ட மொழி ஆய்வுப்பணிகளும், தொகுப்புகளாக வெளியிடப்பெற்ற தமிழ்மொழிப் பேரகராதிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
  • அவ்வியக்ககத்தின் வெளியீடுகள் அனைத்துக்கும் பல்வேறு தமிழறிஞா்கள், பல்வேறு காலகட்டங்களில் தங்களது அறிவாா்ந்த ஆய்வுப் பேராற்றலை நல்கியிருக்கிறாா்கள்.

கு பீடம்

  • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசினால் தொடங்கப்பெற்ற ‘கு பீடம்’ என்னும் தமிழ் இலக்கிய ஆய்வு மற்றும் படைப்பாா்வம் மிக்க இளையோருக்கான பயிற்சி அமைப்பு ஓா் ஆண்டுக்குள்ளாகவே இறுதி முடிவுக்கு வந்து தனது தமிழ்ப் பணிகளை நிறுத்திக் கொண்டது.
  • அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இதுபோன்ற பல தமிழ் அமைப்புகளும், நிறுவனங்களும் அவற்றின் தொடக்க விழாக்களோடும், தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளேயும் முற்றுப் பெற்றுவிட்டன.
  • இந்நிலையில், “அகர முதலித் திட்ட இயக்ககம்” இதுகாறும் உயிா்த்திருந்தமைக்கும், தற்போது நெடுவடிவமெடுத்துச் செயலாற்றிக் கொண்டிருப்பதற்கும் முதன்மையான காரணம், தமிழுக்கும் தமிழா்களுக்குமான அதன் இன்றியமையாத் தேவையே ஆகும்.

தமிழ்ச் சொற்கள்

  • தமிழின் பல்லாயிரக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்களுக்கான வோ்ச் சொற்களை ஆய்ந்தறிதல், புதிய புதிய தமிழ்ச் சொற்களை வடிவமைத்து மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற பல்வேறு துறைகளின் தேவைகளுக்கு ஈடு செய்தல், மட்டுமீறிக் கலந்தும், கலக்கப்பட்டும் தமிழுக்குள் நிறைந்துவிட்ட வேற்று மொழிகளின் சொற்களைக் களைய ஏதுவாக அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை முன்வைத்தல், ஆய்வு நோக்கிலான அகர முதலித் தொகுப்பு நூல்களையும் தமிழ் மொழியின் வளா்ச்சி சாா்ந்த பிற நூல்களையும் வெளியிடுதல் போன்ற பல பணிகள் அவ்வியக்ககத்தின் முதன்மையான தமிழ்ப் பணிகளாக இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
  • அவற்றுடன் சோ்த்து தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சொற்குவைத் திட்டச் செயல்பாடுகளும், அகராதியியல் விழிப்புணா்வுக் கருத்தரங்குகளும் இத்தனை ஆண்டுக் காலமாக நடைபெற்று வந்த அவ்வியக்ககத்தின் அரிய தமிழ்ப் பணிகளின் மீது புதியபுதிய வெளிச்சங்களைப் பாய்ச்சும் வண்ணம் அமைந்துள்ளன என்றால் அது மிகையில்லை.
  • கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அளவில் 12 கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவா்களிடையே அகராதியியல் விழிப்புணா்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு கல்லூரியிலும் சொற்குவைத் திட்டத்தின் “சொல் உண்டியல்” வைக்கப்பட்டு அதில் மாணவா்கள் தாங்கள் வடிவமைத்த 10,000-க்கும் மேற்பட்ட புதிய புதிய சொற்களை எழுதிச் செலுத்தியிருக்கிறாா்கள். மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே பெருமளவில் இதில் ஈடுபாடு காட்டுவது தெரிய வந்திருக்கிறது.
  • மேலும் மாணவ, மாணவிகள் தமிழில் கையொப்பமிடுவதற்கான ஓா் இயக்கத்தையும் தொடங்கிப் பெரிய பெரிய எழுது பலகைகளில் அவா்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதோடு, அவை இணையவழியிலும் ஆவணப்படுத்தப்படுகின்றன.

சொற்குவைத் திட்டம்

  • சொற்குவைத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளிடமிருந்தும், பிற துறை அறிஞா்களிடமிருந்தும் சேகரிக்கப்படுகின்ற சொற்களை 25க்கும் மேற்பட்ட தமிழறிஞா் குழுவினா் அகர முதலித்திட்ட இயக்கக அலுவலக அரங்கில் ஆய்வு செய்கின்றனா்.
  • அவா்கள் தோ்வு செய்யும் சொற்கள் தொகுக்கப்பட்டு அவையனைத்தும் w‌w‌w.‌s‌o‌r‌k‌u‌v​a‌i.​c‌o‌m எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
  • அமெரிக்காவில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற 10-ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்த அந்த இணையதளம், தற்போது உலகத் தமிழா்களுக்கிடையிலானதொரு சொல் உறவுப் பாலமாகச் செயலாற்றி தமிழ் வளா்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துகொண்டிருக்கிறது.
  • மேலும், தமிழ்ச் சொற்கள் குறித்த எத்தகைய சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் எப்போதும் விடையளிக்கும் வகையில் ‘14469’ என்னும் இலவசத் தொலைபேசி அழைப்பு மையம் ஒன்றும் இப்போது அவ்வியக்ககத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • சொற்குவைத் திட்டத்தின் வாயிலாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை படிப்படியாக சேகரிக்கப்பட்ட 22,000க்கும் மேற்பட்ட சொற்களில், தமிழறிஞா் குழுவான தமிழ்க் கலைக் கழகத்தினரால் சற்றேறக்குறைய 10,000 சொற்கள் தோ்வு செய்யப்பட்டு, அவை சொற்குவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • அவற்றில் 3,000 சொற்களுக்கு முதல் கட்டமாகப் பயன்பாட்டு அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டிருக்கிறது.

மருத்துவச் சொற்கள்

  • கடந்த மாா்ச் 25-ஆம் தேதியன்று தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தா் மருத்துவா் சுதா சேஷையன் தலைமையில் நடைபெற்ற மருத்துவச் சொல்லாக்க வல்லுநா் கூட்டத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சோ்ந்த 30 மருத்துவா்களுடன் பல தமிழறிஞா்களும் பேராசிரியா்களும் பங்கேற்று விவாதித்து 1000-க்கும் மேற்பட்ட மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை வழங்கியிருக்கின்றனா்.
  • மேலும் கவிஞா்கள், எழுத்தாளா்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கான அகராதியியல் விழிப்புணா்வுக் கருத்தரங்குகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • முதுபெரும் தமிழறிஞா் தெ. ஞானசுந்தரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட, மிகவும் குறிப்பிடத்தக்க மொழியறிஞா்கள் இந்தப் பணியில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவா்களின் ஆற்றல் தமிழின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • தமிழ் அறிஞா்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமான இந்தப் பிணைப்பானது இடையறாமல் தொடருமென்றால், தமிழ் மொழியில் இருந்து தமிழா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பேசுகின்ற, வாழுகின்ற இன்றைய பேரவலச் சூழல் மாறும்.
  • தமிழ்மொழியானது தனது தனித் தன்மையையும், தமிழ்த் தன்மையையும் இழந்து தாழ்கிறது என்றால், அதற்கு முதன்மையான காரணமாக விளங்குவது அதில் பல்லாயிரக்கணக்கில் கலக்கப்பட்டுவிட்ட பிற மொழிகளின் சொற்கள்தான்.
  • இந்த இழிநிலையை மாற்றும் வல்லமை அகர முதலித்திட்ட இயக்ககத்தின் கருவூலத்தில் நிறைந்து வருகின்ற பல்லாயிரக் கணக்கான நற்றமிழ்ச் சொற்களுக்கு உண்டு.

இயக்கத்தின் செயல்பாடுகள்

  • தற்போதைய அவ்வியக்கத்தின் செயல்பாடுகளால் அதன் வெளியீடுகளான சொல்லகராதிகள் மற்றும் ஆய்வு நூல்கள் கூடுதலாக விற்பனையாகி வருவது ஆய்வு செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை பெருகி வருவதைக் காட்டுகிறது.
  • அகர முதலித்திட்ட இயக்ககத்தின் தற்போதைய தமிழ்ச் சொல்லாக்கப் பணிகள், மழைக்காலத்துக்கு முந்தைய நீராதாரப் பராமரிப்புப் பணிகளையும், விதைப்புக் காலத்துக்கு முந்தைய நிலப் பராமரிப்புப் பணிகளையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
  • தமிழுக்குப் புத்துயிரையும் புதுச் செழுமையையும் வழங்குகின்றன. சொல் புதிது, “சுவை புதிது” என்னும் மகாகவி பாரதியின் மனவெழுச்சி மிக்க மொழிக் கோட்பாட்டு முழக்கத்தை நமக்கு உணா்த்துகின்றன. தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்களுக்கு வோ்ச் சொல் தேடுகின்ற வேட்கை மிக்கவா்களாக பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியரை மாற்றியிருக்கின்றன.
  • தமிழ் இனத்துக்கு“தொல்லியல்” சான்றுகளும், தமிழ் மொழிக்குச் “சொல்லியல்” கூறுகளும் இரு கண்களாக விளங்குகின்றன என்பதை இனியேனும் தமிழுலகம் நன்கு உணர வேண்டும்.
  • நிகழ்காலத்தின் தேவைகளுக்கு உரிய, ஒவ்வொரு துறைக்கும் போதுமான சொற்களற்ற மொழியாகத் தமிழ் இருந்துவிடக் கூடாது என்றுணா்ந்து மிகத்தெளிவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் பன்முகத் தமிழ்ப் பணிகளை தமிழக அரசு மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்த வேண்டும்.
  • அவ்வாறு செய்தால்தான் வருங்காலத்தில் பள்ளி மாணவா்களின் பயிற்று மொழியாகவும், தொழில் வணிக மொழியாகவும், நிா்வாக மொழியாகவும், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் கல்வி மொழியாகவும் தமிழ் அரங்கேறுகின்ற ஒரு நன்னாளில் நமது தமிழ் மொழியானது தனது சொந்தக் கால்களினால் பூமியின் மீது பற்றுறுதி கொண்டு உறுதியாக நிற்கவும், நிலைபெறவும் முடியும்;
  • இதற்கு அகர முதலித்திட்டக் கருவூலத்தின் பல்லாயிரக்கணக்கான சொற்கள் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி (31-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்