TNPSC Thervupettagam

சொல்…பொருள்…தெளிவு: இந்தியாவில் வெப்ப அலை

May 1 , 2024 255 days 259 0
  • வெப்ப அலையின் தாக்கம் குறித்த உரையாடல் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கத்துக்கு மாறாக வெப்பமான வானிலை தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு நீடிப்பது வெப்ப அலை எனப்படும். சமவெளிப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; மலைப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; கடலோரப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் இருப்பது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது.
  • வெப்ப அலை இரண்டு காரணங்களால் உருவாகிறது. ஒன்று, வெளியிலிருந்து அதிக வெப்பநிலை கொண்ட காற்று உள்ளே வர வேண்டும் அல்லது அப்பகுதியிலேயே ஏதோ ஒரு பொருள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒரு பகுதியில் நிலப்பரப்பின் வெப்பநிலை உயரும்போது, அதையொட்டி வீசும் காற்றும் வெப்பமடைகிறது அல்லது மேலிருந்து கீழிறங்கும் வழியில் காற்று அழுத்தப்படுவதால், நிலப்பரப்பை ஒட்டி வெப்பக் காற்று உருவாகிறது.

இந்தியாவில் வெப்ப அலைக்கான சூழல்:

  • கோடைக்காலத்தில் இந்தியாவுக்கு மேற்கு மற்றும் வட மேற்கிலிருந்து காற்று வீசுகிறது. நிலநேர்க்கோட்டில் உள்ள பகுதிகளைவிட, மத்தியக் கிழக்குப் பகுதி விரைவாக வெப்பமடைந்துவிடுகிறது.
  • இந்தியாவில் வெப்பநிலை அதிகமான காற்று வீசுவதற்கு இது ஆதாரமாகச் செயல்படுகிறது. வடமேற்கிலிருந்து வீசும் காற்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மலைப்பகுதிகளில் சுழன்று வீசுகிறது. இப்பகுதிகளின் எதிர்ப்பக்கத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கும் சூழலில் காற்று இந்தியாவுக்குள் நுழைகிறது.
  • கடலைவிட நிலம் வேகமாக வெப்பமடையக்கூடியது. நிலத்திலிருந்து கடலுக்கு மேல் வீசும் காற்று குளிர்ச்சியடைகிறது. மற்ற கடல்களைவிட அரபிக்கடல் வேகமாக வெப்பமடைகிறது. இந்தச் சூழலும் இந்தியாவில் வெப்ப அலைக்கு ஒரு காரணம்.
  • கோடைக்காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து இந்தியாவை நோக்கி வீசும் வளிமண்டல மேலடுக்குக் காற்று, தரையை ஒட்டிய காற்றைக் கட்டுப்படுத்துகிறது. காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பூமியைவிட வேகமாக வீசுகிறது. பூமி எப்போதும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. பரப்பு உராய்வு விசைக்கு ஈடுகொடுத்து பூமியைச் சுற்றவைக்கும் ஆற்றல் இதிலிருந்துதான் கிடைக்கிறது. கீழ் நோக்கி நகரும் காற்று, அழுத்தத்துக்கு உள்ளாகி, வெப்ப அலைகள் உருவாகக் காரணமாகிறது.
  • வளிமண்டலத்தில் உயரத்துக்கு ஏற்ப வெப்பநிலை மாறுபடும் விகிதம், புவி வெப்பமாதலால் சரிவடைந்துவருகிறது. உலக வெப்பமாதல், நிலப்பரப்பை ஒட்டிய காற்றைவிட, வளிமண்டலத்தின் மேலடுக்கை வேகமாக வெப்பமடையச் செய்கிறது. இதன் விளைவாகக் கீழ்நோக்கி நகரும் காற்று வெப்பமடைகிறது; காற்று கீழே நகர்ந்து அழுத்தத்துக்குள்ளாகி வெப்ப அலையும் உருவாகிறது.
  • வெப்ப அலையின் பின்னணியில் இத்தனை செயல்முறைகள் உள்ளன; உலக வெப்பமாதலும் அதன் மீது தாக்கம் செலுத்துகிறது. நிலநடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலின் குறிப்பிட்ட பகுதியில், மேற்பரப்பு சராசரி வெப்பநிலையைவிட வெப்பமடைகிற ‘எல் நினோ’, தென் அமெரிக்காவை ஒட்டிய பசிபிக் கடலின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைகிற ‘லா நினா’ ஆகிய நிகழ்வுகள் உலகம் முழுவதற்குமான காலநிலையில் தாக்கங்களை ஏற்படுத்துபவை. இவையும் வெப்ப அலை தோன்றுவதற்குக் காரணமாகின்றன.

காற்று நிறை:

  • காற்று நிறையும் (Air mass) வெப்ப அலையுடன் தொடர்புடையது. ஒரு நிலப்பரப்புக்கு மேலாகக் காற்று ஒரு பெரிய மூடாக்குபோலச் சில நாள்களுக்கு நிலைத்து நிற்கும். நிலப் பரப்புக்கு மேலேயும் பக்கவாட்டிலும் பல கிலோமீட்டர் தொலைவுக்குத் திரண்டுள்ள மொத்தத் தொகுதியிலும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை ஒன்றாகவே இருக்கும். அந்த நிலப்பரப்பின் பண்புகள் காற்று நிறையிலும் இருக்கும்.
  • காற்று நிறை எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது, எவ்வளவு தொலைவுக்கு நகர்ந்துள்ளது ஆகியவை வெப்ப அலை மீது தாக்கத்தைச் செலுத்துகின்றன. வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் காணப்படும் வெப்ப அலைகள், 800-1,600 கிமீ தொலைவிலிருந்து வரும் காற்று நிறையுடன் தோன்றுகின்றன; இது ஏறக்குறைய இரண்டு நாள் நீடித்திருக்கும்.
  • தென்னிந்திய மாநிலங்களில் காணப்படும் வெப்ப அலை 200-400 கிமீ தொலைவிலிருந்து வரும் காற்று நிறையுடன் தோன்றுகிறது. இது ஒருநாள் மட்டுமே நிலவும். இதன் விளைவாக, வெப்ப அலை தீவிரம் குறைந்ததாகவே இருக்கும்.

உடல்நலப் பாதிப்புகள்:

  • ஒரு பகுதியில் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும்போது, வானிலை தீவிர மாற்றத்துக்கு உள்ளாகிறது; காற்று அழுத்தப்பட்டு அப்பகுதியில் மேகங்கள் விலகிச் செல்லும் நிலை தோன்றுகிறது. இதனால் சூரிய ஒளி நேரடியாக நிலப்பரப்பில் படுவதால், ஈரப்பதம் அகன்று, அப்பரப்பு இன்னும் அதிக வெப்பத்துக்கு உள்ளாகிறது.
  • இந்தியாவில் வெப்ப அலையால் நேர்ந்த இறப்புகள் 2003-2012க்கும் 2012-2022க்கும் இடையே 34% அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. டெல்லியில் உள்ள இம்மையத்தின் தேசியக் காலநிலை முன்னறிவிப்பு மையம் என்ற பிரிவு, வெப்ப அலை நிலவும் காலகட்டத்தில் நாள்தோறும் நான்கு வேளைகளில் வெப்ப அலை அறிக்கையையும், ஒருநாளில் இரண்டு வேளை வெப்ப அலை குறித்த வழிகாட்டல் அறிக்கையையும் வெளியிடுகிறது.

கணிப்புத்திறன் மேம்பாடு:

  • வெப்ப அலையின் சிக்கலான கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, அதைத் துல்லியமாகக் கணிப்பது கடினமானதுதான். எனினும் தொடக்க நிலை முன்னெச்சரிக்கை செயல்முறைகளுக்கு வெப்ப அலை உருவாகும் வழிமுறைகள், வெப்ப அலையின் அமைவிடம், எத்தனை நாள்களாகக் காற்று நிறை உள்ளது போன்ற தகவல்களை நன்றாகப் பயன்படுத்த முடியும்.
  • இதன் மூலம் அதிகத் தரம் வாய்ந்த முன்னெச்சரிக்கை செயல்முறைகளை நாம் அடைய முடியும்; முன்னெச்சரிக்கைகளை விரைவாக வழங்கவும் இயலும். ஒரு பக்கம் வெப்ப அலைக்கான காரணங்களை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை; இன்னொரு பக்கம், நிலநேர்க்கோட்டின் நடுப்பகுதிகளான வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்றவற்றைவிட, இந்தியாவில் வெப்ப அலையால் ஏற்படும் இறப்புகள் குறைவாக உள்ளன; இறப்புகள் அறிவிக்கப்படாமலும் உள்ளன. இழப்புகள் குறைவு என்றே நிம்மதியடைந்துவிடாமல், வெப்ப அலை கணிப்பில் நமது திறனை மேம்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்