TNPSC Thervupettagam

சொல்... பொருள்... தெளிவு: தேசியத் தேர்வு முகமை

July 3 , 2024 145 days 165 0
  • வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ஒத்திவைப்பு, மறு தேர்வு என தேசியத் தேர்வு முகமை (National Testing Agency-NTA) சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதலே, தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ச்சியாகப் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இப்புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் நீட் (முதுநிலை), நெட் போன்ற தேசிய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகள் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.

தேசியத் தேர்வு முகமை:

  • தேசியத் தேர்வு முகமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை, தேசிய அளவிலான தேர்வுகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை தனித்தனியாகவே நடத்திவந்தன. இந்நிலையில், 1986இல் ராஜிவ் காந்தி அரசு அமல்படுத்திய தேசியக் கல்விக் கொள்கையில், பொதுத் தேர்வுகளை நடத்த பொதுவான அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக 2010 இல், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றை நடத்த சட்ட அங்கீகாரம் பெற்ற தேர்வு அமைப்பு வேண்டும் என அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
  • இதற்கு அமெரிக்காவில் செயல்படும் கல்வித் தேர்வுப் பணிகள் அமைப்பை (Educational Testing Service) முன்மாதிரியாக இக்குழு சுட்டிக்காட்டியது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில், மத்தியக் கல்வி அமைச்சகம், 2017இல் தேசியத் தேர்வு முகமை என்னும் அமைப்பைத் தொடங்கியது. இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860இன் கீழ் தேசியத் தேர்வு முகமை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

நோக்கம்:

  • வெளிப்படைத்தன்மையுடன், சர்வதேசத் தரத்தில் தேர்வுகளை நடத்துவதே தேசியத் தேர்வு முகமையின் முக்கிய நோக்கமாகும். சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகவே இது செயல்பட்டு வருகிறது.
  • தேசியத் தேர்வு முகமையின் முதல் தலைமை இயக்குநராக வினித் ஜோஷி நியமிக்கப்பட்டார். இவ்வமைப்பில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மாநிலக் கல்வி அமைப்புகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றில் பணியாற்றுகிற நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர்.

நடத்தப்படும் தேர்வுகள்:

  • தேசியத் தேர்வு முகமை அமைப்பானது ஜேஇஇ (JEE), நீட் தேர்வு (NEET), பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) என்கிற மூன்று முக்கிய இளங்கலை நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. வருடத்துக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வுகளுக்காக விண்ணப்பிக்கின்றனர்.
  • இதைத் தவிர்த்து, பொது நீட் முதுநிலைத் தேர்வு (NEET PG), பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு (CUET-PG), உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு (UGC-NET), பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (CMAT), இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (IIFT), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), ஜிபாட் (GPAT), சிஎஸ்ஐஆர் (CSIR), டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் உள்பட பல்வேறு முக்கியத் தேர்வுகளைத் தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

தேர்வு மையங்கள்:

  • நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான மையங்களை, மத்திய அரசிடம் ஏற்கெனவே உள்ள பட்டியலின் மூலம் தேசியத் தேர்வு முகமை தேர்வுசெய்கிறது. கடந்த காலங்களில் எந்தவித முறைகேடுகளும் நடைபெற்றிராதவையாக இத்தேர்வு மையங்கள் இருப்பது தரவுகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்படுகிறது.
  • மேலும், தேர்வு மையங்களில் பற்றாக்குறை இருந்தால், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், கல்வி நிலையங்களைத் தேர்வு மையங்களாகத் தேசியத் தேர்வு முகமை சேர்த்துக்கொள்ளும்.

ரத்துசெய்யப்பட்ட / ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்:

  • 2024 நீட் இளங்கலை நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை வெடித்தது. இம்முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, நடக்க இருந்த நீட் முதுகலை நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டது.
  • தேர்வு வினாத்தாள் கசிந்ததாக நெட் யுஜிசி (NET - UGC) தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎஸ்ஐஆர் - யுஜிசி தேர்வும் ரத்துசெய்யப்பட்டது. மேலும், தொழில்நுட்பக் குறைபாட்டினால், தேசியப் பொது நுழைவுத் தேர்வு (NCET) ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சவால்களும் தீர்வுகளும்:

  • நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமையில், 25க்கும் குறைவான நபர்களே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் பற்றாக்குறையால் இவ்வமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
  • அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும், எழுத்துத் தேர்வு சார்ந்த போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையம், அச்சகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதில் முறையான நெறிமுறைகளைத் தேசியத் தேர்வு முகமை கடைப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
  • மேலும், தேசியத் தேர்வு முகமையில் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் வலுவான இணையப் பாதுகாப்பு இல்லாததால் வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகள் எழுகின்றன; இதற்கு நிபுணத்துவம் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களை ஈடுபடுத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீர்திருத்த நடவடிக்கை:

  • தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் தேர்வுகள் வெளிப்படையாகவும், சுமுகமாகவும் நடப்பதை உறுதிசெய்யவும் தேசியத் தேர்வு முகமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குழு, அடுத்த இரண்டு மாதங்களில் தேசியத் தேர்வு முகமை தொடர்பாகச் சீர்திருத்த அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்