TNPSC Thervupettagam

சோழ அரசியரின் கல்வண்ணங்கள்

September 22 , 2024 116 days 143 0

சோழ அரசியரின் கல்வண்ணங்கள்

  • தமிழ்​நாட்டுக் கலை வரலாற்றில் தமக்கெனத் தனி முத்திரை பதித்​தவர்​களில் அரசர்​களைப் போலவே அரசியரும் இருந்​தனர். எனினும், கண்டரா​தித்த சோழரின் தேவியும் உத்தமசோழரின் அன்னை​யுமான செம்பியன்​மாதேவிக்குக் கிடைத்த வெளிச்சம், பலருக்குக் கிடைக்​காமலே போயிற்று.
  • கணவர், மகன் என இருவரும் ஆட்சியில் இருந்​ததும் அவர்களுக்​கிடை​யிலும் பின்பும் ஆட்சியில் இருந்​தவர்கள் மாதேவி​யிடம் செலுத்திய அன்புநிறை பத்தி​மையுமே செம்பியன்​மாதே​வியின் அரும்​பணிகள் சிறக்​கவும் தொடரவும் நிலைக்​கவும் காரணி​களாயின. முதல் பராந்தகர் காலத்​திலிருந்து முதல் ராஜராஜர் காலம்வரை சோழர் ஆட்சியைப் பார்த்த பெருமாட்டி அவர். அவர் போல் நெடிய வாழ்வும் பெருமிதப் புரப்பும் கிடைக்காத சூழலிலும் பெற்ற வாழ்க்கையின் சொற்ப காலத்தில் பெருமைக்​குரியன செய்து இம்மண்ணின் கலைவளம் கூட்டிய​வர்​களில் குறிப்​பிடத்​தக்கவர் தந்திசத்​தி​விடங்கி.
  • சோழநாட்டின் பெருவேந்​தராய் மிளிர்ந்த முதல் ராஜராஜரின் பட்டத்​தரசியாக, உலகமாதேவி என்று பெருமையுடன் அழைக்​கப்பட்ட பெருமாட்டி, இரண்டு கலைக் கோயில்களை உருவாக்கி​யுள்​ளார். இரண்டுமே பாடல் பெற்ற இரு காவிரிக்​கரைக் கோயில்​களில் அடங்கி​யுள்ளன. சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழித் தளி, பெருவளாகமாய் விரிந்த பெருங்​கோ​யில். அதன் முதலிரு கோபுரங்​களுக்கு இடைப்பட்ட பெருவெளியில் தென்புறத்தே இலங்கும் ஒருதள விமானமும் முகமண்​டபமும் பெற்ற சேத்திர​பாலர் கோயில் தந்திசத்​தி​விடங்​கியால் ராஜராஜரின் 6ஆம் ஆட்சி​யாண்டில் எழுப்​பப்​பட்டது. அப்பர் கயிலாயக் காட்சி பெற்ற திருவை​யாற்று ஐயாறப்பர் கோயிலுள் வடபுறத்தே விளங்கும் உலகமாதேவீசுவரமான வடகயி​லாயம் இவ்வம்​மையால் ராஜராஜரின் 21ஆம் ஆட்சி​யாண்​டிற்குச் சற்று முன்பாக வடிவம் பெற்றது. இரண்டு கோயில்​களுமே எழிலார்ந்த சிற்பங்​களாலும் வளமான கல்வெட்டு​களாலும் நிறைந்​துள்ளன.
  • பல திருக்​கோலங்​களில் பல்வேறு திருப்​பெயர்​களுடன் விளங்கும் சிவபெரு​மானுக்கு ஆடையற்ற கோலங்​களாய் அமைந்தவை மிகச் சிலவே. அவற்றுள் மிகப் பழைமை​யானது, அவர் பிச்சையேற்கும் கோலம். நாயை ஊர்தி​யாகக் கொண்ட பைரவ வடிவம், அவரது மற்றோர் ஆடையற்ற கோலமாகும். இவ்விரண்டு கோலங்​களிலும் முற்சோழர் சிற்பங்கள் பலவாய்க் கிடைத்​துள்ளன. மூன்றாவதும் சிறப்​புக்​குரியதுமான வடிவமாக அமைந்த சேத்ர​பாலரைத் தமிழ்​நாட்டில் செழிக்கச் செய்தவர் தந்திசத்​தி​விடங்கி.
  • உத்தமசோழரின் ஆட்சிக் காலத்தில் உலகமாதே​வியால் வலஞ்சுழிக் கோயிலில் உள்ளடக்கத் திருமேனியாய் அமைக்​கப்​பெற்ற சேத்ர​பாலர், ராஜராஜர் ஆட்சிக் காலத்தே தனித் திருமுன் பெற்றுக் கற்றளித் தெய்வமாய் இடம்பெயர்ந்​தமையைக் கல்வெட்டுகள் பெருமையோடு புகல்​கின்றன. சேத்ர​பாலர் என்றால், ‘ஊர்க் காவலர்’ என்று பொருள். ‘தாம் இருக்கும் இடத்தைக் காப்பவர்’ என்று இவரை ஆகமங்கள் அடையாளப்​படுத்து​கின்றன. வலஞ்சுழிக் கோயிலுக்குள் தென்கிழக்கில் மேற்குப் பார்வையாக அமைந்த இத்திரு​முன்னே தமிழ்​நாட்டில் சேத்ர​பாலருக்காக எடுக்​கப்பட்ட முதல் தனித் திருக்​கோயி​லாகும்.
  • தமிழ்​நாட்டில் காணப்​பெறும் மிகச் சிலவான இந்த ஊர்க் காவலர் சிற்பங்​களில் தலையாயது, உலகமாதே​வியால் உருவாக்​கப்​பட்டது. எட்டுக் கைகளுடன் சுடர்முடி அழகராய் விளங்கும் வலஞ்சுழி ஊர்க் காவலரின் தலையில், இடுப்​பில், திருவடியில் பாம்புகள். காவலுக்​குரிய கருவிகள் கைகளில் இலங்கக் கோரைப்​பற்​களுடன் நெடிய திருமேனியராய் விளைந்த இந்தக் காவலருக்குப் பூசைக்கும் அழகூட்​டலுக்கும் என உலகமாதே​வியும் சோழப் பெருங்​குடும்பமும் வாரி வழங்கிய கொடைகள் கல்வெட்டு​களாய் இந்தத் திருமுன் சுவர்களை நிறைத்​துள்ளன. ராஜராஜப் பெருவேந்தர் தஞ்சாவூரில் எழுப்பிய ராஜராஜீசுவரத்தின் கொடையாளர் பட்டியலில்கூட இடம்பெறாத அவரது மூன்று திருமகள்​களுள் குந்தவையும் நடுவிற் பெண்ணான மாதேவடிகளும் சேத்ர​பாலருக்குத் தங்கம் தந்து மகிழ்ந்​துள்ளனர். உலகமாதே​வியின் வலஞ்சுழி அறிமுகம் சேத்ர​பாலர் வழிபாட்டைச் சோழநாட்டில் செழிக்க வைத்தது.
  • ஐயாற்று உலகமாதேவீசுவரம் ராஜராஜரின் 21ஆம் ஆட்சி​யாண்​டிற்குச் சற்று முன்பாக உலகமாதே​வியால் கற்றளியாய் எழுப்​பப்​பெற்றது. வலஞ்சுழி சேத்ர​பாலர் போலவே இங்கும் சோழக் கொடைகள் கல்வெட்டு​களாய்க் கற்சுவர்களை நிறைத்துக் கண்சிமிட்டு​கின்றன. அவற்றுள் ஒன்றுதான் முதல் ராஜராஜரின் மூன்றாம் மகள் அருமொழி சந்திரமல்​லியான கங்கமாதேவியை வெளிச்​சப்​படுத்து​கிறது. வலஞ்சுழி சேத்ர​பாலருக்கு விருப்போடு பொன்னையும் நகைகளையும் அள்ளி வழங்கிய குந்தவை நங்கையை உலகமாதேவீசுவரம் கல்வெட்டுக்​களில் காண முடியாத​போதும் மாதேவடிகள் வலஞ்சுழிக்கு அளித்தாற் போலவே இங்கும் கொடையாளியாய் ஒளிர்​கிறார்.
  • உலகமாதேவீசுவரத்​திற்கு அளிக்​கப்பட்ட கொடைகளுள் குறிப்​பிடத்​தக்கது பாவைக்​கண்ணாடி. இதை, ‘செம்பின் மேல் பொன் அடுக்கிய பாவைக்​கண்ணாடியில் ஆடுகிற பாவை ஒன்று, மத்தளம் கொட்டுகிற பாவை ஒன்று, உடுக்கை வாசிக்கிற பாவை ஒன்று, பாடுகிற பாவை ஒன்று, பீடம் ஒன்று உட்படக் கண்ணாடி ஒன்று’ என விரித்துப் போற்றும் கல்வெட்டு, அந்நாளைய ஆடலுக்குத் தோல் கருவிகளே பேரிசைக் கருவி​களாய் விளங்​கியமையைச் சுட்டு​வதுடன், சோழர் கைத்திறம், கலைத்​திறம் இவற்றிற்கும் சான்றாய் நிற்கிறது.
  • வலஞ்சுழி சேத்ர​பாலரை உருவாக்கிய சிற்பியின் பெயர் பதிவாக​வில்லை என்றாலும், உலகமாதேவீசுவரச் சிற்பியை முதல் ராஜேந்​திரரின் கல்வெட்டு அடையாளப்​படுத்து​கிறது. எழிலார்ந்த சிற்பங்​களுடன் உருவான இக்கற்​றளியை வடிவமைத்த செம்பியன்​மாதேவிப் பெருந்​தட்​டாரின் உளித்​திறம் போற்றித் தட்டாரக்​காணியாக நிலம் வழங்கிப் பெருமைப்​படுத்திய தந்திசத்​தி​விடங்கி, ராஜராஜருக்குப் பிறகும் பெருமை​யுடன் வாழ்ந்​திருந்தமை இங்குள்ள ராஜேந்​திரர் கல்வெட்டு​களால் வெளிச்​ச​மாகிறது.
  • தஞ்சாவூர் ராஜராஜீசுவரம் உள்ளிட்ட தமிழ்​நாட்டின் வேறெந்தக் கோயில்​களிலும் கொடையாளி​களாய்த் தங்கள் பெயர்​களைப் பதிவுசெய்யாத ராஜராஜரின் மகள்கள் மூவரும் உலகமாதே​வியின் திருப்​பணி​களில் மட்டும் பங்கேற்றுள்ளமை அவர்களை அவ்வம்​மையின் அன்புக்​குரிய புதல்வி​களாய் அடையாளப்​படுத்து​கிறது. இம்மூவருள் குந்தவை மட்டுமே விமலா​தித்​தரின் தேவியாய் அறிமுக​மாகிறார். பிற இருவரும் ராஜராஜரின் திருமகள்களாக மட்டுமே கல்வெட்டு​களில் காட்டப்​பெறுகின்​றனர்.
  • வரலாற்றின் பாதை விசித்திர​மானது. ‘நாம் குடுத்​தனவும் நம் அக்கன் குடுத்​தனவும் நம் பெண்டுகள் குடுத்​தனவும் மற்றும் குடுத்தார் குடுத்​தன​வும்’ என்ற ராஜராஜரின் பெருமைக்​குரிய தொடரில் அவர் திருமகள்கள் அடைக்​கல​மா​காமைக்கு எது காரணமோ, அதுவே தந்திசத்​தி​விடங்கி போன்ற படைப்​பாளி​களையும் மேகமாய் மறைத்து வேடிக்கை காட்டுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்