TNPSC Thervupettagam

சோவியத் ஒன்றியம் உடைப்பு முதல் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பு வரை...உக்ரைன் பிரச்னைக்கு காரணம் என்ன

February 27 , 2022 890 days 385 0
  • மூன்றாம் போருக்கு இணையான அச்சம் உலக மக்களிடையே நிலவிவருகிறது. கரோனாவால் ஏற்படுத்தப்பட்ட தாக்கமே குறையாத நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
  • அமெரிக்க, பிரிட்டன், ரஷியா ஆகிய நாடுகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் உலகின் அதிகமான அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது நாடான உக்ரைன், கடந்த 1994ஆம் ஆண்டு, தங்களிடம் இருந்த அணு ஆயுதங்களை அழித்தது. தற்போது, இதை நினைத்து வருந்தும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது.
  • தற்போது, நிகழ்காலத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சுவடுகளே காரணம். அதேபோலதான், இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய தாக்குதலான உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கும் பனிப்போருக்கும் தொடர்பு இருக்கிறது. 
  • இரண்டாம் உலக போருக்கு பிறகு, எண்ணெய் விலை, பொருளாதார திறனற்றத் தன்மை, பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவிய பதற்ற நிலை, கோர்பச்சேவ் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக கம்யூனிசத்தை கட்டியெழுப்பி வல்லரசு நாடாக திகழ்ந்த சோவியத் ஒன்றியம் உடைந்தது.
  • கடந்த 1991ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கமான உக்ரைன் வாக்கெடுப்புக்கு பிறகு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில், உக்ரைன் சோவியத் குடியரசின் தலைவரான லியோனிட் கிராவ்சுக் வெற்றிபெற்றார். 
  • பின்னர், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிராவ்சுக்கை தோற்கடித்து லியோனிட் குச்மா வெற்றிபெற்றார். இது பெரும்பாலும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்ட தேர்தலாகவே கருதப்படுகிறது. ஆனால், கடந்த 1999ஆம் ஆண்டு, தேர்தல் முறைகேட்டின் காரணமாக, குச்மா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 
  • 2004ஆம் ஆண்டு, ரஷிய ஆதரவு அதிபர் வேட்பாளரான விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றார். ஆனால், தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து உக்ரைன் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆரஞ்சு புரட்சி எனப்படும் இந்த போராட்டத்தின் விளைவாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் பிரதமரான விக்டர் யுஷ்செங்கோ, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
  • பின்னர், 2005ஆம் ஆண்டு, ரஷியாவின் கட்டுப்பாட்டிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் என்றும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்றும் யுஷ்செங்கோ உறுதிமொழி அளித்தார். எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான யூலியா திமோஷென்கோவை யுஷ்செங்கோ பிரதமராக நியமித்தார். ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்களாக கருதப்படும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், அவரை பதவியிலிருந்து நீக்கினார்.
  • கடந்த 2008ஆம் ஆண்டு, தங்களின்  கூட்டணியில் உக்ரைன் இணைக்கப்படும் என நேட்டோ உறுதி அளித்தது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் யானுகோவிச் திமோஷெங்கோவை தோற்கடித்தார். எண்ணெய் ஒப்பந்தத்தின் காரணமாக உக்ரைன் கருங்கடல் துறைமுகத்தை ரஷிய கடற்படைக்கு உக்ரைன் குத்தகைக்கு விட்டது.
  • 2013 ஆம் ஆண்டு, யானுகோவிச்சின் அரசு நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் மற்றும் கூட்டணி பேச்சுக்களை இடைநிறுத்தி, ரஷியாவுடனான பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவில் பல மாதங்களாக நடைபெற்ற போராட்டத்திற்கு இது காரணமாக மாறியது. கீவ் சதுக்கத்தை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 12க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். 
  • நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நாட்டிலிருந்து தப்பியோடினார். சில நாட்களிலேயே, உக்ரைனில் உள்ள கிரிமியாவின் நாடாளுமன்றத்தை ஆயுதமேந்தியவர்கள் கைப்பற்றி ரஷ்ய கொடியை ஏற்றினர். மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, கிரிமியாவை ரஷியா தங்களுடன் இணைத்து கொண்டது.
  • 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், டான்பாஸின் கிழக்குப் பகுதியை சுதந்திர நாடாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இன்று நடைபெறும் போருக்கு இந்த அறிவுப்பு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்