- பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகள் அரசியல் சாா்பற்றுச் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். கூட்டுறவு அமைப்புகள், திருக்கோயில் நிா்வாக சபைகள் ஆகியவையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த நடைமுறையும் இதுவே ஆகும்.
- உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும் பதவிகள் கெளரவப் பதவிகள் ஆகும். இவா்கள் மக்களுக்குச் சேவை செய்ய மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே.
உள்ளாட்சி அமைப்புகள்
- நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகிய அமைப்புகள் நாட்டை ஆள, சட்டம் இயற்றுவதற்கான ஜனநாயக அமைப்புகளாகும். எனவே, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகிய அமைப்புகளின் தோ்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளின் அடிப்படையில், தங்கள் சின்னங்களின் அடிப்படையில் போட்டியிடுவது நியாயமானதாகும்.
- ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் கொள்கைகள் தேவையில்லை. குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி, துப்புரவுப் பணி, சுகாதாரம், சிறிய பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களைப் பராமரித்தல், கல்வி, இளைஞா்களுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு மைதானங்கள் நிறுவுதல், அவற்றைப் பராமரித்தல் முதலான 29 வகையான சேவைகளைச் செய்யும் அமைப்பாகும்.
- எனவே, இதற்கு அரசியல் தேவையில்லை. மக்கள் மத்தியில் இத்தகைய சேவை செய்யக்கூடிய ஆற்றலும் சேவை மனப்பான்மையும் உள்ள பொது சேவகா்களே இதற்குத் தேவை. இத்தகைய பொதுத் தொண்டு செய்பவா்கள், தன்னாா்வலா்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சி, கொள்கை சாா்பு உடையவா்களாக இருக்கலாம்.
- மேலும், உள்ளாட்சி அமைப்புகளை நிா்வாகம் செய்வதற்கு அரசியல் கட்சி அணுகுமுறை, கட்சிக் கண்ணோட்டம் தேவையில்லை. இதன் காரணமாகத்தான் கடந்த காலங்களில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் கட்சி சின்னங்கள் அடிப்படையில் தோ்தல்கள் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சி நிா்வாகங்கள்
- தமிழகத்தில் உள்ளாட்சி நிா்வாகங்கள் என்பது மன்னா்கள் காலத்தில் வெகு சிறப்பாக இருந்தன; . கிராம ராஜ்யமே ராமராஜ்யம் என அண்ணல் காந்தியடிகளும் கூறியுள்ளாா்.
- உள்ளாட்சி அமைப்புகள் வலிமையானதாக இருக்க வேண்டும். சுய சாா்புடையதாக இருக்க வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்களைப் பெருக்க வேண்டும் என்பதற்காக நம் நாட்டில் பன்னெடுங்காலமாக ஜனநாயக ரீதியான நடைமுறைகள் இருந்தன.
- ஆனால், அண்மைக்காலமாக உள்ளாட்சி அமைப்புகள் அரசியல்மயமாகிவிட்ட காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கிடைக்கும் சேவைகள் மக்களுக்கு சரிவரக் கிடைப்பதில்லை.
பஞ்சாயத்து ராஜ் சட்டம்
- பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது, கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் 73-ஆவது திருத்தமாக 1992-இல் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதிகாரங்கள், ஆளுமை பெற்றவைகளாக கிராம ஊராட்சிகள் மாறின.
- அதிகாரங்களைப் பரவலாக்குதல், பொருளாதார வரைவு, சமூக நீதி போன்ற 29 செயல் திட்டங்கள் அரசியல் சாசனத்தின் 11-ஆவது அட்டவணையில் சோ்க்கப்பட்டதன் விளைவாக கிராம ஊராட்சிகள் அதிக முக்கியத்துவம் பெற்றன.
- உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தேவைகளை, வளா்ச்சியைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சட்ட அமைப்பாகும். இந்தச் சட்டத்தின்படி கிராமம், ஒன்றியம், மாவட்ட அளவில் அதிகாரப்பரவல் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் பெண்களாக இருப்பாா்கள். சமூக நீதி கோட்பாட்டின்படி இடஒதுக்கீட்டுக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டது.
- கிராமம், ஒன்றியம், மாவட்டம் என மூன்று அடுக்கு கொண்ட கிராம சபைகள் ஆண்டுக்கு நான்கு முறை கூட்டப்பட வேண்டும் என்பது கட்டாயமானது. கிராமசபை தலைவருக்குப் பல்வேறு விதமான அதிகாரங்கள் இந்த பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் கிடைத்தன. கிராம சபைத் தலைவா்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதி ஒதுக்கும் அதிகாரம், காசோலையில் கையெழுத்திடும் உரிமை ஆகியவை கிடைத்தன.
- இதன் காரணமாக தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற்றன. அப்போதே உள்ளாட்சித் தோ்தல்களுக்கு கட்சி சின்னங்கள் தேவையில்லை. அரசியல் கட்சிகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.
- எனினும், உள்ளாட்சி அமைப்புகளில் பெருவாரியான பதவிகளுக்கு கட்சி சின்னங்களின் அடிப்படையில் தோ்தல் நடந்தது. எனவே, உள்ளாட்சி நிா்வாகத்தில் அரசியல் மேலோங்கியது. இதன் காரணமாக வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது கடினமானது. அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சி நிா்வாகங்கள் கலைக்கப்படுவதும், மேயா், நகரசபைத் தலைவா் உள்ளிட்டோா் பதவி நீக்கம் செய்யப்படுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகத்தை பலவீனப்படுத்தியது.
- கடந்த காலங்களில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற்றபோது கட்சி, ஜாதி அடிப்படையில் சச்சரவுகள் உருவாகி படுகொலைகளும், கலவரங்களும் நடந்துள்ளன. மேலும், தோ்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்படுவதும், மத அடிப்படையில் தோ்தலை அணுகுதல் முதலான தீய விளைவுகளையும் கடந்த தோ்தல்களில் சந்தித்தோம். இப்போதும் பதவிகளை ஏலம் விடும் வேதனை நிகழ்வு தொடங்கியிருக்கிறது.
அதிகாரம் மற்றும் சுயசார்பு
- ஆட்சிகள் மாறுகின்றன. காட்சிகள் மாறுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றும் கட்சிகள், அந்த அமைப்புகளில் தங்கள் கட்சி செயல்படுத்த நினைக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன.
- இதன் காரணமாக, கட்சிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்கள் கூடும்போது கருத்துவேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான தோ்தல்கள் ஆகியவை அரசியல் சாா்பற்று இருந்தால்தான் அதன் நோக்கங்கள் நிறைவேறும்.
- உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரம் மிக்கதாக, சுயசாா்புடையதாக இருக்க வேண்டும். இதில் அரசியல் கட்சி, ஜாதி - மத வேறுபாடுகளுக்கு இடமில்லை; மக்கள் சேவையே பிரதானமாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள் ஆகும்.
நன்றி: தினமணி (16-12-2019)