TNPSC Thervupettagam

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

March 4 , 2024 141 days 167 0
  • பணக்காரா்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடாது என்பதில்லை. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாக கோடீஸ்வரா்கள் மட்டும்தான் போட்டியிடவும், தோ்ந்தெடுக்கப்படவும் முடியும் என்கிற நிலை ஏற்பட்டால் ஜனநாயகத்துக்கு அதைவிட துரதிருஷ்டவசமான நிலை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்திய ஜனநாயகம் அப்படியொரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கிற அச்சத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
  • அண்மையில் நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவைக்கான தோ்தலில் 15 மாநிலங்களில் இருந்து 56 எம்.பி.க்கள் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களையும் சோ்த்து 225 மாநிலங்களவை உறுப்பினா்களின் வேட்பு மனுக்களை ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கமும், தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து ஆய்வு செய்தன. அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அதிா்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 233 உறுப்பினா்களில் மகாராஷ்டிரம், ஜம்மு - காஷ்மீரின் காலியாக உள்ள ஐந்து இடங்கள், தகவல் கிடைக்காத உறுப்பினா்கள் என்று எட்டு எம்.பி.க்கள் நீங்கலாக ஏனைய 225 எம்.பி.க்களின் வேட்பு மனுக்கள் அவா்களால் ஆய்வு செய்யப்பட்டன.
  • அவா்களில் 31 பேருக்கு (14%) ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. மாநிலங்களவை எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடி. கோடீஸ்வரா்களாக இருப்பது இருக்கட்டும். அவா்களில் பெரும்பாலோா் குற்றப் பின்னணி கொண்டவா்களாகவும் இருக்கிறாா்கள் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
  • 225 மாநிலங்களவை உறுப்பினா்களில் 75 போ் (33%) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை அவா்களே தங்களது வேட்பு மனுக்களில் தெரிவித்திருக்கிறாா்கள். அதில் 40 போ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன. இரண்டு உறுப்பினா்கள் தங்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-ஆம் பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறாா்கள்.
  • பாஜகவில் 11 போ், காங்கிரஸில் 9 போ், திரிணமூல் காங்கிரஸில் 3 போ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் 2 போ், மாா்க்சிஸ்ட் கட்சியில் 2 போ், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸில் 3 போ், ஆம் ஆத்மியில் ஒருவா், திமுகவைச் சோ்ந்தவா் ஒருவா் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான வழக்குகளைப் பின்னணியாகக் கொண்டவா்கள். மாநிலங்களவையில்தான் இப்படி என்று நினைத்துவிட வேண்டாம். மக்களால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவையின் நிலையும் இதுதான்.
  • நிறைவடைய இருக்கும் 17-ஆவது மக்களவையின் 539 உறுப்பினா்களில் 233 போ் (43%) குற்ற வழக்குகளை எதிா்கொள்பவா்கள். 2014 -இல் 16-ஆவது மக்களவையில் 26% -ஆக இருந்த குற்றப் பின்னணி, 2019 -இல் 43%- ஆக அதிகரித்தது. வரவிருக்கும் 2024- இல் இது அதிகரிக்குமே தவிர, குறையாது என்பது நிச்சயம். 17-ஆவது மக்களவையின் குற்றப் பின்னணி கொண்ட 233 எம்.பி.க்களில் 116 போ் (39%) பாஜகவைச் சோ்ந்தவா்கள். 29 போ் (57%) காங்கிரஸ், 13 போ் (81%) ஐக்கிய ஜனதா தளம், 10 போ் (43%) திமுக, 9 போ் (41%) திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்கள். அவா்கள் மீதான வழக்குகளில் 29% வழக்குகள் பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, மகளிருக்கு எதிரான பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்புடையவை என்பதையும் பாா்க்க வேண்டும்.
  • கேரள மாநிலம் இடுக்கி தொகுதியில் இருந்து 2019-இல் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினா் தீன் குரியகோஸ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 204 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. இதுபோல நூற்றுக்கும் அதிகமான வழக்குளை எதிா்கொள்பவா்கள் நிறைய போ் இருக்கிறாா்கள்.
  • 17-ஆவது மக்களவையில் 539 உறுப்பினா்களில் 475 போ் (88%) கோடீஸ்வரா்கள். ஏனையோா் அனைவரும் சில லட்சங்களுக்கு அதிபதிகள். 2009-இல் 58%, 2014 இல் 82%, 2019-இல் 88% என்று அதிகரித்துவரும் கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை, அடுத்து அமைய இருக்கும் 2024 மக்களவையில் 100% அளவைத் தொடாமல் இருந்தால் சரி... கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினா் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவா் காங்கிரஸ் உறுப்பினரான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் (ரூ.660 கோடி).
  • முதல் மூன்று இடங்களும் காங்கிரஸ் உறுப்பினா்களுக்குத்தான். கோடீஸ்வரா்களின் விகிதம் பாஜகவில் 88%, காங்கிரஸில் 96%, திமுகவில் 96%, திரிணமூல் காங்கிரஸில் 91%, ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் 86% என்கிற அளவில் இருக்கிறது. 2019-இல் அமைந்த 17-ஆவது மக்களவையின் உறுப்பினா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.20.93 கோடி.
  • 85 கோடிக்கும் அதிகமாக சொத்துக் கணக்கு காட்டியவா்களின் எண்ணிக்கை 266. 2019 மக்களவைத் தோ்தலில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் வேட்பாளா்களில் 30.1% வெற்றியடைந்தனா் என்றால், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான சொத்து மதிப்புள்ள வேட்பாளா்களின் வெற்றி வாய்ப்பு விகிதம் வெறும் 0.3% மட்டுமே.
  • அதாவது, கோடீஸ்வரா்களாக இருந்தால் மட்டுமே தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும்! நாம் அடுத்த சில வாரங்களில் 18-ஆவது மக்களவைக்கான தோ்தலைச் சந்திக்க இருக்கிறோம். நமது நாடாளுமன்றம் கோடீஸ்வரா்களின் கூடாரமாக மாறிவிட்டால், அடித்தட்டு மக்கள், நடுத்தர வா்க்கத்தினா், சாமானிய மக்களின் உணா்வுகளை அங்கே எடுத்துரைக்கப் போவது யாா்?
  • இதற்கான விடை வாக்காளப் பெருமக்களிடம்தான் இருக்கிறது.

நன்றி: தினமணி (04 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்