- பாரத தேசம் தமது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடி வருவது இந்தியாவுக்கே பெருமிதமாகும். ஏனெனில் 1917-இல் விடுதலை பெற்ற ரஷியா, 1922 ஒப்பந்தப்படி சோவியத் யூனியனாக உருவாகியது. அதில் 28 குடியரசு நாடுகள் உறுப்பினா்களாகச் சோ்ந்தன. 1991-க்குள் அவை ஒவ்வொன்றாக விலகின. 69 ஆண்டுகளே சோவியத் யூனியன் இருந்தது.
- ஐக்கிய அமெரிக்கா மட்டுமே 50 மாநிலங்களோடு தமது 230 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதேபோல 75 ஆண்டுகளை இந்தியா கடந்து வருகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமைகொண்ட ஒரு தேசத்துக்கு இது முன்மாதிரியாகும்.
- இந்திய நிலப்பரப்பை 13 லட்சம் வீரா்களைக் கொண்ட இந்திய ராணுவம் சிறப்பாகப் பாதுகாத்து வருகிறது. 1966-இல் பாகிஸ்தானுடன் நடந்த முதல் போரில் லால்பகதூா் சாஸ்திரி வெற்றி பெற்றாா். இந்தியா மீது இரண்டாவது முறையாக 1971-இல் படையெடுத்த பாகிஸ்தான், கிழக்கு வங்கத்தை இழந்தது. பங்களா தேசமாக அது உருவாக பிரதமா் இந்திரா காந்தி பின்னணியில் செயல்பட்டாா்.
- காா்கில் போரில் பாகிஸ்தானை எதிா்த்து இந்திய ராணுவம் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. நான்காவதாக, புல்வாமாவில் 40 இந்திய வீரா்களை பாகிஸ்தான் காா் வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்தமைக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் அதிரடியாக ஊடுருவி 300 பாகிஸ்தான் சிப்பாய்களை இந்திய ராணுவம் கொன்றது. போா் விமானி அபிநந்தன் வா்த்தமான் அங்கிருந்து மீட்கப்பட்ட சம்பவம், ஒரு வீர காவியமாக எழுதத் தகுந்ததாகும்.
- 1962-இல் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பு அன்றைய பிரதமா் பண்டித நேருவை அதிா்ச்சிக்கு உள்ளாக்கிய நயவஞ்சகப் போராகும். இந்த அனைத்துப் போா்களும் இந்திய நிலப்பரப்பைப் பாதுகாத்த போா்கள். இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் ஆபத்துகளுக்கும் இணையான வேறு மூன்று ஆபத்துகள் இந்தியாவுக்கு உள்ளேயே உருவாகியுள்ளதாகக் கூறப்படுவதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.
- இந்திய அரசியல் சட்டத்திற்கே ஆபத்து எனப் பேசப்படுகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து எனப்படுகிறது. இந்திய மதச்சாா்பற்ற கோட்பாடுக்கும் ஆபத்து என்று கூறப்படுகிறது. இவை பற்றிய ஓா் அலசல் அவசியமாகும். தேசபக்தி தளத்தில் நின்று இவை பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தித்த பின்னா், நமது ஆதரவை அல்லது எதிா்ப்பை பேராசான் வள்ளுவரின் வழிகாட்டல்படி, ‘குணம்நாடி குற்றமும் நாடி’ அவற்றில் அதிகம் எதுவோ அதற்கேற்ப ஆதரவு தர முன்வர வேண்டும்.
- இதில் நடுநிலை வகிப்பது தேசபக்தி ஆகாது. நமது நாட்டில் 18 வயதுள்ள ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள வாக்குரிமை - அரசியல் சாசனத்தின்படி சட்டத்தின் ஆட்சி என்ற விளைச்சலைத் தரக்கூடிய விதை நெல்லாகும்.
- முன்பு பேசப்பட்ட மூன்று ஆபத்துகளைப் பற்றி விவாதிக்கிறபோது, கலைச்சொற்களைப் போலக் கையாளப்படுகிற சில சொற்களைப் பற்றியும் நமக்கு ஒரு தெளிவு தேவை. அரசியலில் முற்போக்கு, பிற்போக்கு என்றோ, மதச்சாா்பற்ற சக்திகள் என்றோ, வகுப்புவாத சக்திகள் என்றோ, முதலாளித்துவ தொழிலாளித்துவ சக்திகள் என்றோ கட்சிக்காரா்கள் பேசலாம். ஆனால் வாக்காளா்கள் அப்படிப் பேச வேண்டிய அவசியமில்லை.
- அரசியல் சாசனம்தான் நமக்கு வேத நூல். ஜனநாயகமே தேசத்தின் உயிா். சமயச் சாா்பின்மை என்பது தேசியத்தின் பெருமிதம். இம்மூன்றும் பேசப்பட வேண்டிய பெருமைக்குரியவைகளாகும். இவை சேதப்பட்டிருப்பதாகப் பேசுபவா்களின் பின்புலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பக்கத்திலுள்ள பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தில் சமயச் சாா்பின்மை என்ற செக்யூலரிசம் இல்லை. வங்கதேசத்திலும், ஆப்கனிலும் அப்படித்தான். ஜனநாயகம் வங்க தேசத்தில் உள்ளது உண்மைதான் என்றாலும், மாறுபட்ட கருத்துக் கூறியதற்காக வங்கதேசத்தின் வாழ்வுரிமையையே பறிக்கப்பட்டு நமது நாட்டில் தஞ்சமடைந்துள்ள டாக்டா் தஸ்லீமா நஸ்ரின் என்ற அச்சமற்ற எழுத்தாளரைப் பற்றிப் பேசாமல் விட்டுவிட முடியாது. மாறுபட்ட கருத்து கூறியதற்காக இந்தியாவிலிருந்து இப்படி எவரேனும் எந்த நாட்டிலாவது தஞ்சமடைந்திருக்கிறாா்களா என்று கேட்பது தவறல்ல.
- ஜனநாயகத்தை புனிதமான கோயில் என்பாா்கள். அரசியல் சாசனத்தில் உள்ள இக்கோயிலில் சந்நிதிகள் சில உள்ளன. அவை ஒவ்வொன்றும் தேசத்தைப் பாதுகாக்கும் நிறுவனங்கள். வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய புலன் விசாரணைக் குழு, தேசிய புலனாய்வு நிறுவனம் இவை எல்லாமே தேச மக்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களாகும்.
- இந்த நிறுவனங்களைப் பற்றிய விமா்சனங்களுக்கு ஜனநாயகத்தின்படி பதில் தரத்தான் வேண்டும். மத்தியில் ஆளும்கட்சி இந்தியாவில் 11 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. இது இரட்டை என்ஜின் ஆட்சி எனப் பேசப்படுகிறது. பிற மாநிலங்களில் மாற்றுக் கட்சிகளின் ஆட்சிகளும் உள்ளன.
- அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, புலனாய்வு நிறுவனங்கள் முதலியன மாற்றுக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே தீவிரமாகச் செயல்படுகின்றன. ஆளும்கட்சி மாநிலங்களில் அப்படிச் செயல்படுவதில்லை என்ற விமா்சனம், ஜனநாயகம் மெய்யானதாக இல்லை என்ற கருத்தை ஏற்படுத்துகிறது.
- இதன் அடிப்படையில், இந்தியாவில் 14 எதிா்க்கட்சிகள் கூட்டாக சோ்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் தங்களுக்கு இந்த நிறுவனங்களின் விசாரணைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரின.
- புலனாய்வு நிறுவனங்கள் 2014 வரை இந்தியாவில் 60% அரசியல் தலைவா்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. ஆனால் 2014-க்குப் பிறகு 95% அரசியல் தலைவா்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞா் அபிஷேக் சிங்வியின் வாதம் வலுவானதாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால் இந்த வாதத்திற்குப் பின்புள்ள சக்திகள் சுத்தமான அரசியல் சக்திகளா என்ற கேள்விக்குப் பதில் தேட வேண்டியுள்ளது.
- வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சந்தேகப்பட்டால், தனி மனிதா்களை விசாரணை செய்வது போலவே, அரசியல் கட்சிகளையும் விசாரணை செய்யலாம். சட்டம் எல்லோருக்கும் சமம் . இதில் தனி மனிதா்களுக்கு விலக்கு இல்லை என்பதுபோல, கட்சிகளுக்கும் விலக்கு அளிக்க முடியாது என அறிவுறுத்தியதை இத்தருணத்தில் நினைவுகூரலாம்.
- ஏனெனில், இதே உச்சநீதிமன்றம்தான் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் தீா்ப்பளித்தது. நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கும் அதிகாரம் உள்ளது என 1973 -இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கேசவானந்த பாரதி வழக்காகும். 13 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு அது. 7 நீதிபதிகளின் தீா்ப்புக்கு 6 நீதிபதிகளின் தீா்ப்பு மாறுபாடாக அமைந்தது.
- ஒற்றைப் பெரும்பான்மைத் தீா்ப்பின்படி, நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையை மாற்ற அதிகாரம் இல்லை என்பதாகியது. இதே உச்சநீதிமன்றம்தான் மத்திய சட்ட அமைச்சா் கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமனக் குழு திருத்தச் சட்டத்தை 2015-இல் ரத்து செய்தது.
- ரத்து செய்வதற்கு முன்பு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஏ.என். ரேயை மத்திய அரசு நியமித்தது. அவரோ, வயதுமூப்பு வரிசையில் நான்காவது நீதிபதியாக இருந்தாா். அவருக்கு முன்பிருந்த மூன்று நீதிபதிகளும் இதற்கு எதிா்ப்பாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தாா்கள். மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நியமிக்கக் கூடாது என்றுதான் உச்சநதிமன்றமே தீா்ப்பளித்தது.
- நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ரூ. 45 லட்சம் கோடிக்கான வரவு செலவுக்குரியது. அந்த அறிக்கையை ஆளும்கட்சி நிறைவேற்றியபோது அதுபற்றிய விவாதமே நடைபெறவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான்.
- அதற்கான சூழ்நிலை நாடாளுமன்றத்தில் நிலவவில்லை என்பதும் உண்மைதான். இதற்குக் காரணம் யாா்? இதுபற்றி வாக்காளா்களே நடுநிலையோடு சிந்திக்கக் கடமைப்பட்டவா்கள். எப்படி இருந்தபோதிலும் தேசத்தின் ஜனநாயகம் தேய்மானமாகி உள்ளது என்பதும் மட்டும் உண்மை.
- மக்களை வெகுநாட்களுக்கு மௌனமாக்கிட முடியாது. அவா்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும் என்ற பிரதமரின் வாக்குறுதி பொய்த்துவிட்டது என்று விமா்சிப்பவா்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனா். ஆண்டுதோறும் 11 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் அவா்களுடைய வங்கிக் கணக்கில் பதிவாகி வருகிறது. இந்தாண்டு ரூ.16,800 கோடி பதிவாகியுள்ளது. இது 13-வது தவணை.
- இதுவரை 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக விவசாயிகளுக்குத் தரப்பட்டதைப் பற்றி ஏனோ எதிா்க்கட்சிகள் பேசுவதில்லை. ஜனநாயக வாகனம் என்பது இரு சக்கரங்களைக் கொண்டது என்றால், ஒரு சக்கரம் மட்டும் சுழலலாமா? இரு சக்கரங்களும் சுழன்றால்தானே விவசாயிகளுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற கேள்விக்கு என்ன செய்திருக்கும் என்ற பதில் கிடைக்கும்.
- ஊழலை ஒழிப்பது, வாரிசுகளைப் பதவிக்கு வரவிடாமல் தடுப்பது, சமூக அநீதியை ஒழிப்பது இவற்றையெல்லாம் ஒழித்தாலே இந்தியா சுத்தமாகிவிடும். இந்த அசுத்தங்கள் தொடரும் வரைக்கும் இந்தியாவை அழிப்பதற்கு வெளிநாட்டு சக்திகளே வேண்டியதில்லை.
- இன்றைய இந்தியா, அரசியல் கட்சிகள் மலிந்த இந்தியாவாக உள்ளது. இந்தியாவின் ஜனத்தொகை எப்படி குறைய வேண்டுமோ, அதேபோல அரசியல் கட்சிகளின் தொகையும் குறைய வேண்டும். எத்தனை விதமான அரசியல் கட்சிகள் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள், சமயக் கட்சிகள், சாதிக் கட்சிகள் என மலிந்து போய்க் கிடக்கின்றன. ஒருவகையில் இத்தனைக் கட்சிகளுக்கும் இடமளிப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெருமை என்றே கூறலாம்.
- ஏனெனில் ரஷிய தேசத்திலோ, சீன தேசத்திலோ ஜனநாயகம் இப்படியில்லை. அங்கு ஒரே கட்சிதான் அரசியல் கட்சி. ஒரு கட்சியிலிருந்துதான் பலா் போட்டியிடுவாா்கள். இது ஒரு விநோதமான ஜனநாயகம். மெய்யான ஜனநாயகம் என்று இதை மெச்ச வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த ஜனநாயகம் பொய்யானது, போலியானது, சா்வாதிகாரிகளை உண்டாக்கக்கூடிய ஜனநாயகம்.
- நீதித்துறை போலவே தோ்தல் ஆணையமும் சுதந்திரமாகச் செயல்படுமாறு சூழல் இருக்க வேண்டும். இந்தியாவில் 2024-இல் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற இருக்கிறது. ஆளும்கட்சியினா் தவறு செய்திருந்தால் அதனைத் தண்டிப்பதற்கான சந்தா்ப்பமாக தோ்தல் அமைகிறது. அதுதான் ஜனநாயகத்திற்கான வெற்றி.
- எதிா்க்கட்சிகள் ஏமாற்றுகிறாா்கள் என்பதற்காக வாக்காளா்கள் எண்ணுவாா்களானால், அக்கட்சிகளைத் தோற்கடிப்பாா்கள். அதுவும் ஜனநாயகத்தின் வெற்றிதான்.தேசம் நிரந்தரமானது. ஜனநாயகம்தான் தேசம் இயங்குவதற்கான எரிபொருள்.
- நமக்கு முன்புள்ள முக்கியமான கேள்வி, நமது தேசம் பொருளாதார பலமுள்ள தேசமாக உள்ளதா இல்லையா என்பதுதான். ராணுவ பலம் மட்டும் போதாது. நமது தேசத்தின் இன்றைய கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செலாவணி ரூ. 584 பில்லியன் டாலா். பக்கத்திலுள்ள பாகிஸ்தானிடம் வெறும் 4.2 பில்லியன் டாலா்தான். இலங்கையிலோ 2.6 பில்லியன் டாலா்தான். வங்கதேசத்திலோ 31.15 பில்லியன் டாலா். எந்த நாடு ராணுவ பலம்போல பொருளாதார பலத்தோடு கம்பீரமாக நிற்கிறது என்பதை கட்சிகளைத் தாண்டி சிந்திக்க வேண்டிய கடமைப் பட்டவா்களாக உள்ளோம்.
நன்றி: தினமணி (19 – 05 – 2023)