TNPSC Thervupettagam

ஜனநாயகம் பழக்குவோம் கல்வி காப்போம்

December 28 , 2023 359 days 259 0
  • ஜனநாயகத்தை ஆழப்படுத்தி, ஆற்றல்படுத்துவதுதான் ஜனநாயகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு. ஏழ்மையில் அமிழ்ந்து கிடக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்கும் அதுதான் ஒரே வழி. பள்ளி நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களின் பெற்றோர் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும்; முழுமையாகப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். கல்வியில் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளிலும் நிலைத்துத் தழைத்திருக்கும் நிர்வாக அமைப்பு முறை இத்தகையதுதான்.

முடக்கமும் தொடக்கமும்

  • இந்த ஜனநாயகக் குறிக்கோளை நிறுவுவதற்காகத்தான் இந்தியாவில் 2009இல் கல்வி உரிமைச் சட்டம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் முழு நிர்வாக அதிகாரங்களும் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டன. பெற்றோர், உள்ளாட்சி உறுப்பினர், பெண் தலைவர் கொண்ட இந்த அமைப்பில், கணிசமானோர் பெண்கள். ஏழ்மையில் தவித்திருக்கும் பெற்றோர், பெண்ணடிமைச் சமுதாயத்தில் வார்க்கப்பட்ட பெண்கள் ஆகியோரையே கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களைவிட ஜனநாயக நெறிக்கு எடுத்துக்காட்டான அமைப்பு இருக்க முடியாது. இது மக்கள்மயமாகும் கல்வியின் முதல் படி எனக் கருதப்பட்டது.
  • ஆனால், தமிழ்நாட்டில் இச்சட்டம் முடமாக்கப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் - தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் மேல்மட்ட அதிகாரிகள் சிலரின் அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு ஆகியவற்றால் இச்சட்டம் உயிரூட்டப்பட்டுள்ளது. இன்று ஒரு முக்கிய கட்டம். முதல் இரு ஆண்டுகள் முடிந்து, அடுத்த இரு ஆண்டுகளுக்கான மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டம். அடுத்தகட்ட குழு சக்தி கொண்டதாக, தங்கள் பொறுப்புகளையும், அதிகாரத்தையும் உணர்ந்து, மாணவர்களின் கல்வி சிறக்க, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், துணிவுடன் குரல் கொடுப்பவர்களான உறுப்பினர்களைக் கொண்டவையாக அமைய வேண்டும். அதற்கான எனது யோசனைகளை இக்கட்டுரையில் முன்வைக்கிறேன்.

கசப்புகளைத் தவிர்க்க

  • அண்டை மாநிலமான கேரளத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முழு அதிகாரம் பெற்று, அதன் சிறந்த பலன்களை அறுவடை செய்துவருகின்றன. கற்றல் திறன்களில் மிகவும் பின்னடைவு கண்டிருக்கும் தமிழ்நாடு, இனிமேலாவது கேரளத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்ற வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சுதந்திரமான, முழு சட்ட அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்புகள். அரசின் ஆணையில் இயங்குபவை அல்ல. உறுப்பினர்களும், தலைவருமே அனைத்து முடிவுகளும் எடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதற்கும், அனைத்துப் பள்ளிகளுக்கும் குழுக்கள் கூடுவதற்கான ஒரே நாளும், நேரமும் குறித்து, கல்வித் துறைதான் ஆணைகள் அனுப்புகிறது.
  • பெரும்பாலும் பெற்றோருக்குச் சிறிதும் வசதியற்ற நேரம்தான் குறிக்கப்படுகிறது. தினக் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்கள், ஒருநாள் கூலியை இழந்துதான் கூட்டத்துக்கு வரவேண்டும். இதில் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை என்ற அங்கலாய்ப்புகள் வேறு. இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் மேலாண்மைக் குழு எப்போது கூடுவது என்ற முடிவு குழுவின் தலைவரால் எடுக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்தந்த ஊரில் உழைக்கும் பெற்றோர் உறுப்பினர் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னான ஒரு நேரம் குறிக்கலாம். கூட்டம் எப்போது கூடுவது என்பதை மட்டுமல்ல. எங்கு கூடுவது என்பதையும் குழுத் தலைவரே தீர்மானிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டியதெல்லாம், இந்தப் பொறுப்பைக் கையாளுவதற்கான பயிற்சிகளைக் குழுத் தலைவர், உறுப்பினர்களுக்குக் கொடுத்து, அவர்களுக்குத் துணை நிற்பதுதான்.
  • ஏழைப் பெற்றோர் கேள்விகள் எழுப்புவதை ஆசிரியர்கள் விரும்பாத சூழல் பல இடங்களில் நிலவுவதாக விமர்சனங்கள் உண்டு. உறுப்பினர்களுக்குக் கடைசி நிமிடத்தில் அழைப்பு அனுப்புவது, தரையில் அமரச் செய்வது, தலைமை ஆசிரியர் தீர்மானங்களை எழுதிக் கொண்டுவந்து வாசித்து நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பது எனப் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. கேரளத்தில், குழு உறுப்பினர் வீடுகளிலும் கூட்டம் நடப்பது உண்டு. அதேபோல் இங்கும்கூடப் பள்ளிகளுக்கு வெளியில் வேறு இடங்களில் கூட்டம் நடத்தலாம். கூட்டங்களைக் குடியிருப்புகளில் நடத்தினால் மேற்சொன்ன கசப்புகள் தவிர்க்கப்படும்.

குழுக்கள் வலிமை பெற

  • பள்ளி மேலாண்மைக் குழுவின் இரு உறுப்பினர்கள் உள்ளாட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலான கூட்டங்களில் பங்கேற்பதே இல்லை. இந்நிலையை மாற்ற வேண்டும். பள்ளிகளின் ஆண்டு வளர்ச்சித் திட்டம் உள்ளாட்சிகளின் ஆண்டு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக வேண்டும். குடியிருப்புகளில் கூட்டம் நடைபெறுவது, உள்ளாட்சி உறுப்பினர்களையும் கூட்டங்களுக்கு இழுத்துவரும். தொடக்கத்தில் சில காலம் கல்வித் துறை அதிகாரிகள், குடியிருப்புகளில் நடைபெறும் கூட்டங்களுக்குச் சென்று, அவற்றுக்கு ஏற்பு (legitimacy) அளிக்க வேண்டும். அதிகாரிகள் கூட்டங்களுக்குச் சென்றால், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.
  • பெருந்தொற்றுக் காலத்தின் கற்றல் இழப்புகளுக்கு ஈடுசெய்வதற்காக உருவாக்கப்பட்டஇல்லம் தேடிக் கல்விதிட்டம் இரண்டு லட்சம் பெண்களைக் கல்விப் பணியில் இணைத்திருக்கிறது. இவர்களை முழுமையாகப் பயன்படுத்தி, ஊரில் உள்ள அனைத்து மேலாண்மைக் குழு உறுப்பினர்களையும் ஒன்று திரட்ட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வலிமை பெற வேண்டுமென்றால், அவை நிறைவேற்றும் தீர்மானங்கள் அரசுத் துறைகளினால் உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக, மாதம்தோறும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கவனிப்பாரின்றிக் குவிந்துகிடக்கும் நிலை இருந்தது. இதை மாற்றும் முயற்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் துறைகளுக்கு அனுப்பப்பட்டு, நிறைவேற்றப்படுகின்றன. இது துரிதப்படுத்தப்பட்டு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.
  • பெரும்பாலான தீர்மானங்கள் உள்கட்டமைப்பு தொடர்பானவையாகவே இருக்கின்றன. மாணவரின் கற்றல் திறன்கள் மேம்படுதல், மற்ற திறமைகளை ஊக்குவித்தல், மாணவரின் உளவியல் பிரச்சினைகளைக் கையாளுதல் ஆகியன குறித்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் விவாதித்துத் தீர்வுகாண முயல வேண்டும். ஜனநாயகம் பழக்குவதற்கு சிவில் சமூக அமைப்புகள் - குறிப்பாக, கல்வித் தளத்தில் இயங்குபவை - மாதர் இயக்கங்கள் களமிறங்க வேண்டும். அவற்றைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினராக வேண்டும். இயக்கங்கள் குடியிருப்புகளின் மக்களுடன் கலந்து பழகி, அடுத்து பதவி ஏற்பதற்குத் தகுதியானவர்களை, குறிப்பாகப் பெண்களை இனம் கண்டு, உறுப்பினர்களாக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வேர்மட்ட ஜனநாயகத்தின் உயிர் அணுக்கள் என்ற உணர்வு சமுதாயம் முழுதும் பரவ வேண்டும். ‘ஒரு தேசத்தின் தலைவிதி, அதன் வகுப்பறைகளில் வார்க்கப்படுகிறதுஎன்ற கோத்தாரி ஆணைய அறிக்கையின் வார்த்தைகள் நம் அனைவரையும் களத்துக்கு இழுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்