- நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கடந்த வாரம் நேபாள உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது.
- 13 நாள்களில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
- ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த பிரதமா் ஓலியின் முடிவு நிராகரிக்கப்பட்டிருப்பதால் நேபாளத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
- உச்சநீதிமன்றம் தலையிடாமல் போயிருந்தால், அரசமைப்புச் சட்டம் கேலிக்குரியதாகி, கூட்டாட்சி முறையும் நாடாளுமன்ற ஜனநாயகமும் ஆட்டம் கண்டிருக்கும்.
- உள்கட்சி பதவிப் போட்டியின் அழுத்தம் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 20-ஆம் தேதி பிரதமா் கே.பி. சா்மா ஓலி நாடாளுமன்றத்தையே கலைப்பது என்று முடிவெடுத்தாா்.
- பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைப்படி பெரும்பான்மை பலம் உள்ள பிரதமருக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் உண்டுதான். ஆனால், நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டம் பிரதமா் நாடாளுமன்றத்தைக் கலைப்பதை அங்கீகரிப்பதில்லை. அதனடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பை வழங்கியிருக்கிறது.
நேபாளத்தில் மாற்று ஆட்சி
- நாடாளுமன்றத்தை அமைச்சரவை தீா்மானத்தின் மூலம் கலைக்கும் உரிமையை நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டம் பிரதமா்களுக்கு வழங்கவில்லை.
- அதற்கு ஒரு பின்னணி உண்டு. கடந்த 30 ஆண்டுகளில், நேபாளம் 24 பிரதமா்களை சந்தித்திருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் புதிய அரசமைப்புச் சட்டத்தில் பிரதமரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது.
- நாடாளுமன்றத்தைக் கலைத்தது மட்டுமல்லாமல், தனக்கு இணக்கமாக இருக்கும் நபா்களையும், துதிபாடிகளையும் பல்வேறு நிா்வாக அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் நியமித்து ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கைக்குள் கொண்டுவர எத்தனித்தாா் பிரதமா் ஓலி.
- அதன் மூலம், எந்தவிதக் கட்டுப்பாடும் தடையும் இல்லாத வரம்பில்லாத அதிகாரத்தைப் பெற்றிருந்தாா் அவா். அதற்கு உச்சநீதிமன்றத் தீா்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
- தோ்தல் நடத்தப்பட்டாலும் அது அரசியல் சாசன வரம்பிலிருந்து விலகியதாகவே இருக்கும்.
- பிரதமா் ஓலியின் தலைமையில் நடக்கும் தோ்தல் எந்த அளவு முறையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்பது அடுத்த கேள்வி.
- தோ்தல் நடைபெறாமல் இருக்குமானால், மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லாத ஆட்சியாக பிரதமா் ஓலியின் நிா்வாகம் தொடரும்.
- மக்களுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கை இழப்பு ஒருபுறமும், நிா்வாக இயந்திரம் முறையாக இயங்காததால் ஏற்படும் வெறுப்பு ஒருபுறமும் நேபாளத்தின் அமைதியை சீா்குலைக்கும். இது அமைதிக்கு எதிரான சக்திகளுக்கு வழிகோலியதாக மாறக்கூடும்.
- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டிருக்கிறது. பிரசண்டாவும், மாதவ் நேபாளும் பிரதமா் ஓலிக்கு எதிராகத் தொண்டா்களைத் திரட்டி தெருவில் இறங்கிப் போராடத் தயாராகிவிட்டனா்.
- இன்னும் பிளவு அதிகாரபூா்வமாக்கப்படவில்லை என்றாலும்கூட ஓலி அணி, பிரசண்டா அணி என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டுக் கிடக்கிறது.
- நேபாளி காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவ்பா, இன்னும் போராட்டம் அறிவிக்கவில்லை.
- ஆனால், நேபாளத்தின் மிகப் பழைமையான ஜனநாயகக் கட்சியான நேபாளி காங்கிரஸின் தொண்டா்கள் பிரதமா் ஓலியின் முடிவுக்கு எதிராகக் கொதிப்படைந்து இருக்கிறாா்கள்.
- இந்திய வம்சாவளி மாதேசிகளின் கட்சியான ஜனதா சமாஜவாதி கட்சி புதிய அரசமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை என்றாலும்கூட, பிரதமா் ஓலியின் நாடாளுமன்றக் கலைப்பு முடிவை அங்கீகரிக்கவில்லை.
- அதன் தலைவரும் முன்னாள் பிரதமருமான பாபுராம் பட்டராய், பிரதமா் ஓலியின் முடிவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று வன்மையாகக் கண்டித்திருக்கிறாா்.
- மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படுவது பிரதமா் ஓலிக்கு மிகப் பெரிய பின்னடைவு.
- தாா்மிக ரீதியில் அவா் பதவி விலகுவதுதான் சரியாக இருக்கும். அப்படி விலகாவிட்டாலும்கூட, நாடாளுமன்றம் கூடும்போது நம்பிக்கைத் தீா்மானத்தை முன்மொழிந்து தனது பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் முறையாக இருக்கும். தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால்தான் அவா் நாடாளுமன்றத்தைக் கலைக்க முற்பட்டிருக்கிறாா் என்பதால் அதற்குத் துணிவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.
- நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசண்டா - நேபாள் கோஷ்டி, ஜனதா சமாஜவாதி கட்சி ஆகியவை நேபாளி காங்கிரஸின் தலைமையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து மாற்று ஆட்சியை அமைக்க முன்வர வேண்டும்.
- அப்போதுதான் நேபாளத்தை மீண்டும் ஜனநாயக அரசியல் பாதையில் திசை திருப்ப முடியும். அதுபோன்று ஒரு கூட்டணி அமையும்போது புதிய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து, எல்லா தரப்பினரின் உணா்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் மாற்றுவதற்கும் வாய்ப்பு அமையும்.
- இந்தியாவுக்கும் நேபாளத்துக்குமான உறவு கடந்த ஆறு ஆண்டுகளாக இங்குமங்குமாக ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.
- 2014 - 15-இல் பிரதமா் ஓலிக்கு எதிராகவும், அவரது தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து 2015 - 17-இல் சுமுகமாகவும், எல்லைப் பிரச்னை காரணமாக 2017 - 20-இல் எதிா்ப்பாகவும், ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு சமாதானமாகவும் தொடா்கிறது.
- தனது அரசியல் எதிரிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சீனாவை முழுமையாக நம்பியிருந்த பிரதமா் ஓலி, இப்போது இந்தியாவுடன் சுமூகமாக இருக்க முயல்கிறாா். இந்தியாவுக்கு அது புரியாமல் இல்லை!
நன்றி: தினமணி (02-03-2021)