TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அந்தஸ்து மாற்றம்

August 10 , 2019 1936 days 6920 0
இதுவரை...
  • மத்திய உள்துறை அமைச்சர், சரத்து 370-ஐ செயல்பாட்டிலிருந்து நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஏற்றுக் கொள்ளக் கோரியும் இரண்டு சட்ட ரீதியான தீர்மானங்களை அறிமுகப்படுத்தினார்.
  • இந்திய அரசியலமைப்பின் 370வது சரத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீர் அனுபவித்து வந்தது. 
  • இது ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும் குடியரசுத் தலைவர் அதற்கான ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டால் அதன் செயல்பாடு நின்று விடும் எனவும் இந்த சரத்து குறிப்பிடுகின்றது.

  • இருப்பினும், அதற்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரை அவசியமாகும்.
  • 370வது சரத்தின் விளைவாக, ஜம்மு-காஷ்மீர் தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்துச் சட்டங்களுக்கும் மாநில அரசு அதன் ஒப்புதலை வழங்காவிட்டால் அச்சட்டங்கள் எதுவும் அம்மாநிலத்திற்குப் பொருந்தாது.
  • இந்திய அரசியலமைப்பின் எந்தெந்த விதிகள் அம்மாநிலத்திற்குப் பொருந்தும் எனவும் என்னென்ன விதிவிலக்குகள் அதற்கு உள்ளன எனவும் அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் தீர்மானிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

சரத்து  370 மற்றும் 35A-ன் வரலாறு

  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று ஜம்மு-காஷ்மீரின் ஆட்சியாளரான மகாராஜா ஹரிசிங்கால் இணைப்பு ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
  • இது வருடந்தோறும் இணைப்பு தினம் என்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டும் ஜம்மு-காஷ்மீருக்காக சட்டமியற்ற இந்திய நாடாளுமன்றத்தற்கு அதிகாரம் அளித்தது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று மாநில அரசின் ஒப்புதலோடு குடியரசுத் தலைவரின் முதல் ஆணை வெளியிடப்பட்டது. 
  • 1951 ஆம் ஆண்டு செப்டம்பர்–அக்டோபரில் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது.
  • 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் முறையாக கூட்டப்பட்டது.
  • சரத்து 370-ஐ திருத்தக் கோரிய மாநில அரசின் வேண்டுகோளின் படி குடியரசுத் தலைவரின் இரண்டாவது ஆணை 1952 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று பிறப்பிக்கப்பட்டது.
  • மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் இடையேயான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஒரு தூதுக் குழுவை இந்திய அரசு டெல்லிக்கு வரவழைத்தது. 
  • சில கலந்துரையாடல்களுக்குப் பின்னர் 1952 ஆம் ஆண்டின் டெல்லி ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 அன்று டெல்லி ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடன் இணைதல் ஆகியவற்றிற்கு காஷ்மீர் ஒப்புதல் அளித்தது.
  • 1950ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையானது, 1954 ஆண்டின் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும் அரசியலமைப்பு ஆணையால் மாற்றப்பட்டது. இது 1954 ஆம் ஆண்டு மே 14 அன்று நடைமுறைக்கு வந்தது.

  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு சட்டமானது அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1957, ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. 

1954 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணையின் கூறுகள்

  • 1954 ஆம் ஆண்டின் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும் அரசியலமைப்பு ஆணையானது அம்மாநிலத்திற்குப் பொருந்தும் சரத்துகள் மற்றும் விதிகளைப் பட்டியலிடுகின்றது.
  • மேலும், அரசியலமைப்பின் 35A பிரிவின் கீழ் சில விதிவிலக்குகளின் தொகுப்பையும் குடியரசுத் தலைவர் பட்டியலிட்டார்.
  • இந்த சரத்து ஆனது (35A) இந்திய அரசியலமைப்பில் இடம் பெறாமல் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பில் மட்டுமே உள்ளது.
  • இது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப் படாமல் குடியரசுத் தலைவரின் ஆணை ஒன்றின் மூலம் மேற்கொள்ளப் பட்டது.
  • 1954 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையானது ஜம்மு-காஷ்மீருக்கான ஒரு அடிப்படை உருவாக்க சட்ட ஆவணத்தை உருவாக்கியிருந்தாலும், 35A பிரிவானது அம்மாநிலத்தின் பிரத்தியேக சட்டங்களைப் பாதுகாக்கின்றது.
  • இந்த சிறப்பு நடவடிக்கைகளை அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் பேரில் செயல்படும் ஜம்மு-காஷ்மீரின் சதர்-இ-ரியாசத்தின் (மன்னரைப் போன்ற) பரிந்துரையின் பேரில் அல்லது அம்மாநிலத்தின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையின் மூலம் மட்டுமே மாற்ற இயலும்.
  • தற்போது அங்கு அரசியலமைப்பு நிர்ணய சபை இல்லை.

சரத்து  370 மற்றும் 35 A

  • இது இந்திய அரசியலமைப்பின் 21 ஆம் பகுதியின் முதல் சரத்து ஆகும்.

  • “தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்” என்பது இந்தப் பகுதியின் தலைப்பு ஆகும்.
  • இதன் அசல் வரைவானது ஜம்மு-காஷ்மீர் அரசால் வழங்கப்பட்டது.
  • பேச்சுவார்த்தை மற்றும் திருத்தங்களைத் தொடர்ந்து சரத்து  306A (தற்போது 370) ஆனது 1949 ஆம் ஆண்டு மே 27 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் நிறைவேற்றப்பட்டது.

  • ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு சரத்து  370ஐ திருத்தவோ நீக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ உரிமை உண்டு என்ற வகையில் இந்த சரத்து  தற்காலிகமானது என்றே பொருள் கொள்ளலாம். ஆனால் இதனைத் தக்க வைத்துக் கொள்ள அதன் அரசியலமைப்பு நிர்ணய சபை முடிவு செய்தது.
  • மற்றொரு விளக்கத்தின் படி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இந்த இணைப்பு தற்காலிகமானது.
  • இந்திய அரசிலயமைப்பின் மற்ற பிற விதிகளானது குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடக்கூடிய விதி விலக்குகள் மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மாநில அரசின் ஒப்புதல் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும் என்று சரத்து 370 கூறுகின்றது.
  • சரத்து 35A ஆனது 1954 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஆணையால் அறிமுகப்படுத்தப்பட்ட சரத்து  370-லிருந்து வந்ததாகும்.

  • சரத்து 35A என்பது ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பின் உட்பகுதியில் இடம் பெறவில்லை என்ற அடிப்படையில் இது தனித்துவமானது ஆகும். சரத்து 35-ஐத் தொடர்ந்து சரத்து  36 இடம் பெற்றிருந்தாலும் 35A சரத்தானது முதல் பிற்சேர்க்கையில் உள்ளது.
  • சரத்து 35A ஆனது மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களையும் அவர்களுக்கான சலுகைகள் மற்றும் சிறப்பு உரிமைகளையும்  வரையறுக்க ஜம்மு-காஷ்மீரின் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீரின் அந்தஸ்து மாற்றப்பட்ட முறை

  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவானது மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின் ஆகஸ்ட் 06 அன்று அது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
  • அரசிலயமைப்பின் சரத்து  370 பிரிவு 1-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஒரு ஆணையைப் பிறப்பித்தார்.
  • இந்த பிரிவானது ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தக் கூடிய விவகாரங்களை குறிப்பிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கின்றது.
  • ஆனால் இதனை ஜம்மு-காஷ்மீரின் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே வழங்க இயலும்.
  • எனவே, தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழுள்ள மாநிலத்தை நிர்வகிக்கும் ஆளுநர், மாநில அரசின் சார்பாக தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். 
  • இந்த ஆணையானது 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை விட மேலோங்கி நிற்கின்றது. 
  • ஜம்மு-காஷ்மீருக்கான தனி அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து விதிகளும் இனி ரத்து செய்யப் படுகின்றன என்பதே இதன் உண்மையான பொருளாகும்.
  • மேலும் இந்த உத்தரவானது, இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கின்றது.
  • எனினும் சரத்து 370 ஐ முழுவதுமாக அகற்ற மேலும் சில சிறப்பு நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுகின்றன.
  • எனவே இந்திய அரசியலமைப்பின் சரத்து 367-இல் மேலும் சில உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த புதிய உட்பிரிவுகளானது, ஜம்மு-காஷ்மீருக்கு என பார்க்கப்படும் போது அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் படி செயலாற்றும் சதார்-இ-ரியாசத்தைக் குறிப்பிடும் அனைத்து இடங்களிலும் அதை ஜம்மு-காஷ்மீரின் ஆளுநர் எனக் கொள்ளப் படலாம் எனக் குறிப்பிடுகின்றது.
  • மாநில அரசைக் குறிப்பிடும் அனைத்து குறிப்புகளும் ஆளுநர் என பொருள்படும். 
  • மேலும் மிக முக்கியமாக, சரத்து 370 இன் 3-வது பிரிவில் அரசியலமைப்பு நிர்ணய சபை என குறிப்பிட்ட இடங்களில் திருத்தம் செய்யப்பட்டு அது மாநில சட்டமன்றம் என மாற்றப்பட்டுள்ளது.
  • அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சரத்து 370 இனி செயல்படாது எனவும் குடியரசுத் தலைவரால் அறிவிக்க முடியும் எனக் குறிப்பிடும் விதி இதுவேயாகும்.
  • இப்போது எந்தவொரு அரசியலமைப்பு நிர்ணய சபையும் அங்கு இல்லாததால் சரத்து 370-ஐ நீக்கம் செய்வதற்குப் பரிந்துரை செய்ய எந்த அமைப்பும் அங்கு இல்லை.
  • தற்போது ஜம்மு-காஷ்மீர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது என்ற நிலையை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 356-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தின் கீழ், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்கிறார். அப்போது மாநில சட்டமன்றத்தின் வழக்கமான சட்டமியற்றும் பணிகளைப் பாராளுமன்றம் மேற்கொள்கின்றது. 
  • மேலே தொடக்கத்தில் குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது சரத்து 370வின் செயல்பாடுகள் நிறுத்தப் படுவதாக குடியரசுத் தலைவர் அறிவிக்க உதவும்.

  • இரண்டாவது மசோதாவானது ஜம்மு-காஷ்மீரை சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பிரதேசமாக மாற்றுவதற்கும், லடாக் பிராந்தியத்தை மற்றொரு சட்டமன்றம் இல்லாத தனி ஒன்றியப் பிரதேசமாக பிரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் குறித்த சில தவறான புரிதல்கள்

I. சரத்து  370-ன் நிலை
  • இந்திய அரசியலமைப்பின் விதிகள் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் பொருந்தும் எனக் கூறும் வகையில் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும் அரசியலமைப்பு ஆணை 2019-ஐ குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். 
  • இது மாநிலத்தின் தன்னாட்சி நிலையைப் பறித்துள்ளது.
  • எனினும், சரத்து 370 இன்னும் நடைமுறையில்தான் உள்ளது. 
  • உண்மையில் இந்த குடியரசுத் தலைவரின் ஆணையானது சரத்து 370ன் 1வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தையேப் பயன்படுத்தியது.
  • இதுவரை, பயங்கரவாத எதிர்ப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான வரி விதிப்பு, மற்றும் தகவல் தொடர்பு போன்ற ஜம்மு-காஷ்மீர் சட்டசபையிடமிருந்து எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் மட்டுமே பாராளுமன்றத்திடம் இருந்தன.
  • ஆனால் தற்போது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்குப் பொருந்தும்.
  • மேலும், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வானது சரத்து 370 ஆனது ஒருபோதும் தனது செயல்பாட்டை நிறுத்தாது எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இது ஒரு நிரந்தர விதி ஆகும். 
II. தனிக் கொடியின் நிலை
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது 1952 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு கொடியைக் கொண்டிருந்தது.

  •  அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தேசியக்கொடி மற்றும் மாநிலக் கொடி ஆகிய இரண்டையும் ஏற்ற அரசின் நெறிமுறை கட்டளையிடுகின்றது.
  • குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவிற்குப் பிறகு தேசியக் கொடியை மட்டுமே அங்கு ஏற்ற வேண்டும்.
III. தனி அரசியலமைப்புச் சட்டம்
  • சரத்து 370 ஆனது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அதன் சொந்த அரசியலமைப்பைக் கொண்டிருக்க அனுமதித்தது.
  • இதனால் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அம்மாநிலத்திற்குப் பொருந்தும்.
  • ஆனால், இனி ஜம்மு-காஷ்மீருக்கென தனி அரசியலமைப்பு இருக்காது.
IV.இரட்டைக் குடியுரிமை
  • காஷ்மீரி மக்கள் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூர்வீக இனத்தவரைக் குறிக்கும் சொல்லாகும்.
  • பல தலைமுறைகளாக, காஷ்மீர் இனத்தவர்கள் பாகிஸ்தான் உட்பட உலகின் பல பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
  • இந்தியக் காஷ்மீரிகள் உட்பட எவருக்கும் இரட்டைக் குடியுரிமையை இந்தியா அனுமதித்ததில்லை.
  • சரத்து 370-ன் கூறுகளில் உள்ள இரட்டைக் குடியுரிமையின் படி காஷ்மீரி மக்கள் இந்தியக் குடிமக்களாகவும் காஷ்மீரின் குடிமக்களாகவும் கருதப்படுகின்றனர். 
  • இனி இந்த வசதியும் இருக்காது.
V. காஷ்மீரில் மட்டும் காஷ்மீரி அல்லாதோர் சொந்தமாக நிலம் வாங்க இயலாது
  • சரத்து 35A ஆனது காஷ்மீர் குடிமக்கள் அல்லாதோர் இப்பகுதியில் சொந்த நிலம் வைத்திருப்பதைத்  தடைசெய்தது.
  • இருப்பினும், இது போன்ற சட்டத்தைக் கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர் அல்ல.
  • நிலம் தொடர்பான சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. 
  • உதாரணமாக கர்நாடகாவில் விவசாயிகளால் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும்.
  • அசாமின் சில பகுதிகள், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
  • இனி இந்தியாவில் எங்கிருந்தும் மக்கள் காஷ்மீரில் சொத்து வாங்கவும், நிரந்தரமாக அம்மாநிலத்தில் குடியேறவும் முடியும்.
VI. தகவலறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது
  • மத்திய அரசின் தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே, 2004 ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீரின் தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. 
  • இருப்பினும் மத்திய அரசின் அந்தச் சட்டத்தை அம்மாநில அரசு நீண்ட காலமாக அங்கீகரிக்கவில்லை. 
  • 2007 ஆம் ஆண்டில், மாநிலத்தின் தகவலறியும் உரிமைச் சட்டமானது மத்திய அரசின் சட்டத்திற்கு ஒத்ததாக திருத்தப்பட்டது. 
VII.ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் கால அளவு
  • ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பின் படி, சட்டமன்றத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத்தில் நடத்தப்படுகின்றன.
  • இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல சட்டமன்றத் தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு நடத்தப்படும். 
VIII. இனி ஜம்மு-காஷ்மீர் தனியாக சட்டமியற்ற இயலாது 
  • தற்போதைய குடியரசுத் தலைவரின் ஆணையானது இந்தியாவின் ஒவ்வொரு சட்டத்தையும் ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை மீண்டும் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய தேவையை நீக்கியுள்ளது.
  • எனினும், ஒன்றியப் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டு மசோதாக்களை அம்மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்ற முடியும். பின்னர்  அது சட்டமாக மாறும்.
  • மற்ற மாநிலங்களைப் போலவே, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமும், உரிய ஒப்புதலுக்குப் பின்னர் மத்திய அரசின் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் அதை விட மேலோங்கி இருக்கச் செய்ய முடியும்.
  • எடுத்துக்காட்டாக புதுச்சேரியானது தனது பிராந்தியத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க 1960 ஆம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்தை திருத்தம் செய்தது. 
IX. இடஒதுக்கீடுகள் பொருந்தாது
  • அம்மாநிலத்தில் இட ஒதுக்கீடுகளானது ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் – 2004 ஆல் நிர்வகிக்கப்படுகின்றது.
  • இந்தியாவின் பிற பகுதிகளைப் போலல்லாமல் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் நியமனம் மற்றும் சேர்க்கைகளில் மட்டும் SC, ST மற்றும் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே அங்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • சிறுபான்மையினருக்கு அங்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
  • சமீபத்திய ஆணையானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்களை விரிவாக்கம் செய்துள்ளது. 
X. ஜம்மு-காஷ்மீரின் பெண் வேற்று மாநிலத்தவரை மணக்கும்போது, குடியுரிமையை இழப்பார்.
  • சரத்து 35A-ன்படி, ஒரு காஷ்மீர் பெண் காஷ்மீர் குடிமகன் அல்லாதோரை மணக்கும் போது அப்பெண் தனது சொத்துரிமையை இழக்கின்றார்.
  • ஆனால் அவர் தொடர்ந்து காஷ்மீரின் குடிமகளாவே இருப்பார். ஆனால் அவரின் குழந்தைகளின் குடியுரிமை விவகாரம் மிகச் சிக்கலானதாகின்றது.
  • அப்பெண்ணின் குழந்தைகளின் தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவரில்லை எனும் போது அக்குழந்தைகள் காஷ்மீரின் “நிரந்தரக் குடியிருப்பாளர்களாக” கருதப் படுவதில்லை.
  • அவர்கள் காஷ்மீரில் வாழ்ந்தாலும், “நிரந்தரக் குடியிருப்பாளர்கள்” அந்தஸ்தை அவர்களுக்கு வழங்குவது குறித்து முடிவு எடுக்க காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளது. 

 

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்