- இந்திய வரலாறு நெடியது என்றால் அதனினும் அழுத்தமாய் அதற்கு இணையானது தமிழக வரலாறு. ஏறக்குறைய மனித குலத்தின் மூத்த வரலாறாகவே தமிழக வரலாறு விளங்குகிறது. தமிழக வரலாற்றின் அரசியல் மாண்பு தனித்துவம் மிக்கது.
- மூன்று பேரரசர்கள் தொடங்கித் தமிழகத்தைப் பல்வேறு குறுநில மன்னர்கள் காலந்தோறும் ஆண்டு வந்திருக்கிறார்கள். சங்க காலத்திற்குப் பிறகு வந்த ஆட்சிகளின் பின்னணியில் சமய, இன, ஜாதி அடையாளங்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்திய வரலாற்றோடு ஒப்பிட்டு நோக்கும்போது சங்ககால அரசர்களின் நீதிமுறைகளில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் காணப்படவில்லை.
- இந்திய சுதந்திரப் போராட்டம் வெள்ளையரை வெளியேற்றுவதற்காக மட்டும் தோன்றியதில்லை. காலந்தோறும் நமக்குள்ளே நாம் கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டித்தான் அது நேர்ந்தது. "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் 1942-இல்தான் எழுந்தது. ஆனால், "ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று ஒளவையார் காலத்திலிருந்து, "ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதியார் வரை சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்துதான் வந்திருக்கின்றன.
- வெள்ளையரின் ஏகாதிபத்தியத்திற்குப் பின்னர்தான் நம் மக்களுக்கு புத்தி வந்து "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள்' என்னும் உளப்பாங்கை அடைந்து அடக்குமுறைக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வீர சுதந்திரத்தைப் பெற்றனர்.
- சுதந்திரம் பெற்ற பின்பு, விஞ்ஞான யுகமும் மெய்ஞ்ஞான வளமும் பெற்றுள்ள தமிழகத்தை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் மேல்நோக்கி வளர்க்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இணையவழியில் உலகத்தையே இணைக்கும் சமூக ஊடகங்களாகிய ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப் போன்றவற்றின் உதவியோடு தனித்தும் குழுக்களாகவும் மீண்டும் ஜாதியத்தின் கதவுகள் தமிழகத்தில் திறந்து விட்டனவோ என்ற ஐயம் எழுகிறது.
- ஜாதியின் பெருமை சொல்லி அவர்கள் மார்தட்டிக் கொண்டு வீராவேச உரை வழங்குகிற காட்சிகளைப் பார்க்கும்போது இன்னும் எத்தனை காலம்தான் நமக்காகவே நமக்குள்ளே ஒற்றுமைக்காகவும் சமத்துவத்துவத்திற்காகவும் போராட வேண்டிருக்குமோ என்கிற கவலையும் எழுகிறது.
- இவை எல்லாவற்றையும் விடவும் மிகவும் வேதனையானது இந்த ஜாதிப்பரப்புக் குழுக்கள் தங்களின் ஜாதியப் பெருமைக்கு சாட்சியாக ஜாதியை ஒழிக்கப் போராடிய சமூகப் போராளிகளின் திருமுகங்களையே தங்களின் அடையாளமாக்கியிருப்பதுதான்.
- இதனினும் மேலாய் மற்றொன்றும் உண்டு. இந்தக் குழுக்கள் தங்கள் தளங்களுக்குப் பயன்படுத்துகிற "ஸ்லோகன்' எனப்படும் முழக்கச் சொல் "ஆண்ட பரம்பரை' என்பதேயாகும். ஆளுதல் என்பதையும் ஆளுமை என்பதையும் இவர்கள் கொடுங்கோன்மை வழிநின்று பெருமையாகப் பேசுகிறார்கள். அதாவது வெள்ளையர்கள் தாங்கள் வெள்ளை நிறத்தோடு இருப்பதால் உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு கறுப்பின மக்களையெல்லாம் அடிமையெனத் தாழ்த்திக் கொடுங்கோன்மை புரிந்ததைப் போல இவர்கள் தங்களை "ஆண்ட பரம்பரை' என்ற அடைமொழிக்குள் ஆட்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாக, தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் கருதுகிறார்கள் என்பதுதான் அதன் உட்பொருள்.
- தமிழக அரசியல் வரலாற்றை நன்கு கற்றவர்களுக்கு ஆளுமை என்பதும் ஆட்சி என்பதும் எத்துணை புனிதமான சமூகத் தொண்டு என்பது புலப்படும். ஊரை, நாட்டை ஆளும் அரசனை, தலைவனை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுகிற திருவள்ளுவர், ஆட்சியை ஆளுந்தொழிலை "இறைமாட்சி' என்கிறார். பொருட்பாலில் முதல் அதிகாரமே இறைமாட்சிதான். ஆளுமை என்பது அடக்கி ஒடுக்குவதன்று. ஆள்பவர் கடவுளுக்கு இணையானவராயினும் கீழோர் என்று பிறரை ஒதுக்கித் தள்ளுதலுமன்று. தாய்போல் பரிந்து அனைத்துயிர்களையும் போற்றிக் காப்பதாகும். பரிமேலழகர் "இறைமாட்சி' என்பதற்கு "அஃதாவது, அவன்றன் நற்குண நற்செய்கைகள் உலக பாலர் உருவாய் நின்று உலகங் காத்தலின் இறை' என்றார்; "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்பது நம்மாழ்வார் வாக்கு.
- ஆளுமை என்பது பிறப்பாலோ, குலத்தாலோ, மரபினாலோ வருவதன்று. உயர் பண்புகளாலும் மானுட நேயத்தாலும் பெறப்படுகிற அருங்குணங்களின் தொகுப்பு. தமிழகத்தில் எக்காலத்தும் எம்மன்னராயினும் செங்கோன்மையே எப்போதும் முன்னின்று ஆட்சி புரிந்திருக்கின்றனர். தமிழகத்தை முறையாக ஆண்ட மன்னர்கள் சமூக நீதியை உயிராகப் பேணியவர்கள். உயிரிரக்கப் பண்பைக் கண்போல் போற்றிக் காத்தவர்கள்.
- தான் வைத்ததே சட்டம், தான் வகுத்ததே நீதி, தான் விதித்ததே வரி, தன் விரலசைந்தால் பலர் தலைகள் உருளும் என்னும் முற்றுரிமையைப் பெற்றிருந்தவர்கள் அரசர்கள் என்றாலும், அறத்திற்கு மாறான செயல்களைச் செய்தவர்கள் வரலாற்றில் புகழ்பெறவில்லை; பழிக்கப்பட்டனர்.
- முல்லைக்குத் தேரையும் மயிலுக்கு போர்வையும் தந்த அருளுள்ளம் கொண்ட "ஆண்ட மன்னர்கள்' அந்த முல்லையையும் மயிலையும் தன் ஆட்சிக்கு உட்பட்ட உயிர்கள் என்று கருதினார்கள். தன் மகனால் ஒரு பசுங்கன்று இறந்து போனது என்று அறிந்ததும் தன் மகனையும் தானே மரணத்துக்கு உட்படுத்தியது "ஆண்ட பரம்பரையினர்' அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான மனுநீதி வரலாறு.
- "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று கூறும் சிலப்பதிகாரத்தில் தவறான தீர்ப்பு கூறியதற்காகத் தன்னுடைய உயிரை இழந்த பாண்டிய மன்னன் கதையையும் இவர்கள் சேர்த்தே அறிய வேண்டும்.
- அரசன் என்பதனாலும், ஆண் என்பதனாலும் மனையறம் கடப்பதைக் கூடப் புலவர்கள் அனுமதிக்கவில்லை.
- மயிலுக்குப் போர்வை தந்ததற்காகப் பேகனைப் புகழ்ந்த புலவர்கள் அவன் தன் மனைவியை விடுத்துவிட்டு, மற்றொரு பெண்ணின் பின் திரிந்ததை இகழ்ந்தும் பாடியுள்ளது வரலாறு.
- நகரச் சோதனையின்போது அறியாது ஒரு வீட்டுக் கதவைத் தட்டியதற்காகத் தன் கையையே வெட்டிக் கொண்ட பாண்டியனை, "தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்' எனப் போற்றி அவனைப் "பொற்கைப் பாண்டியன்' என்றே இலக்கியம் போற்றுகிறது.
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் போரில் வென்ற மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை வெற்றிக் களிப்பின் மிகுதியால் யானைக் காலிட்டு இடறச் செய்ய முயன்றபோது கோவூர் கிழார் இடைமறிந்து, "புறாவுக்காகச் சதையை அரிந்து கொடுத்த அரச மரபில் வந்த நீயா இந்தச் செயலைச் செய்வது?' என்று கடிந்து சினந்தபோது, அரசன் பணிந்து அப்புலவரின் அறிவுரையை மதித்திருக்கிறான்.
- ஆளுமை என்பதும் ஆள்வது என்பதும் அத்தனை எளிமையானதன்று.
சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
- "சேற்றில் விளங்கும் செந்தாமரையின் மலரைப் போல, நற்குடியில் பிறந்திருந்தாலும் வேற்றுமை பாராட்டாது நற்பண்புகளுடன் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டவர்கள் சிலரே' என்று புறநானூறு ஆளுமையுடையவர்களையே பெரியோராய் மதித்துப் போற்றுகிறது. மற்றவர்களை "பலர்' என்று செந்தாமரையின் இலைகளைப் போன்றவர்கள் எனக் காட்டி விலக்குகிறது.
- வானுலகத்தையே அமிழ்தத்தொடு தந்தாலும் வாக்குத் தவறாதவர்களாகவும், உலகமே திரண்டு வந்தபோதும் அறநெறிக்கும் தன் உள்ள உறுதிக்கும் மாறாய் அஞ்சாதவர்களாயும், உயிர்களுக்கு எல்லாத் துயர்களையும் நீக்கும் தாய்மைக் குணத்தோடு நேராட்சி புரிபவர்களாயும் விளங்கிய அரசர்களின் ஆண்ட கதைகளை இவர்கள் முதலில் நன்கு அறியட்டும். அதன்பின்னர் ஆண்ட பரம்பரை என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் முன்வரட்டும்.
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்
- "மழைவளம் குன்றினாலும் அச்சம். மக்கள் மனம் வாடினாலும் அச்சம். குடிமக்களைக் காக்கும் பொறுப்பேற்றுள்ள மன்னர் குடியைத் தன்குடியென்று தேர்ந்தவர்களுக்கு அது பெருந்துன்பம் அல்லாது தொழும் தகைமையுடையது அன்று' என்று சேரனின் வாயிலாக சிலப்பதிகாரத்தில் ஆண்ட பரம்பரையைத் துறந்த இளங்கோவடிகள் சுட்டுவதையும் நினைவில் கொள்வோம்.
- ஜாதிகளின் பெயராலும், இனத்தின் பெயராலும் பழம்பெருமை பேசுவதை விட்டு விட்டு, ஜாதிய வன்முறைகளைத் தூண்டுவதை விலக்கிவிட்டு மேற்கூறிய உண்மையான அறநெறி வழுவாத மன்னர்களைப் போல எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைக்கின்ற, செயல்படுகின்ற அத்தகைய அருளாட்சியைத் தருவார்கள் என்றால் அவர்கள் தங்களை "ஆண்ட பரம்பரை' என்று மார்தட்டிக் கொள்ளட்டும்.
- ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றி கொண்டு ஜாதி, சமய, இன, மொழி பேதங்களைக் கடந்த சங்ககால முழக்கமாகிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் கொள்கையை நிலைநிறுத்துகிற அரசை அமைக்கட்டும்; நல்லாட்சியைத் தரட்டும்!*.
நன்றி: தினமணி (14 – 07– 2022)