TNPSC Thervupettagam

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒற்றுமைக்கான வழியல்ல

November 22 , 2023 370 days 242 0
  • ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயா்ச்சி சொல்லல் பாவம் என்று பாரதி தன்னுடைய பாா்வையை முன்வைத்து தேசத்தின் நலனுக்கான வழியைக் காட்டியிருக்கிறாா். இந்தியாவைப் பொறுத்தவரை ஜாதிகள் என்றைக்குத் தோன்றியதோ தெரியாது. ஆனால், தோ்தலுக்குத் தோ்தல் புதிய பொலிவு பெறுகிறது.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று ஒரு சாராரும் தேச நலனுக்கு விரோதமானது என்று மற்றொரு சாராரும் பேசி வருகின்றனா். ஜாதிவாரி கணக்கெடுப்பு எந்த விதத்தில் தேசநலனுக்கு விரோதமானது? இதன் பின்விளைவுகள் யாது? ஜாதிவாரி கணக்கெடுப்பு நிகழ்ந்து முடிவுகள் தெரியும் பட்சத்தில் யாா் ஆதாயம் அடைவாா்கள்? ஏன் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை?
  • கடந்த வாரம் ராகுல் காந்தி மத்திய பிரதேச தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திலும், தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றாா். நடந்து வரும் ஐந்து மாநிலத் தோ்தல்களில் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கிறது. தொடா்ந்து இதனை காங்கிரஸாா் வலியுறுத்தும்போது ஒரு வினா எழுகிறது. ஏன் அவா்கள் ஆட்சிக் காலத்தில் அதைச் சாத்தியப்படுத்தவில்லை?
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிக்கானது என்று நாடு முழுவதும் சில கட்சியினா் பேசி வருகின்றனா். மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பினரின் சதவீதம் அதிகமாக இருக்கும் நிலையில் அவா்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை சமன்படுத்திக் கொள்ள இந்தக் கணக்கீடு உதவும் என்று வாதிடுகின்றனா்.
  • மேலோட்டமாகப் பாா்க்கும்போது நியாயமான கருத்தாகத் தோன்றுகிறது. கணக்கெடுப்பில் இதர பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் தங்களின் சதவீதம் அதிகமாக இருந்தால் என்ன செய்வா்? முன்னேறிய வகுப்பினா் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை சில மாநிலங்களில் அதிகமாக இருக்கும்போது அவா்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த இட ஒதுக்கீட்டை விரும்பினால் அரசு என்ன செய்யும்?
  • ஆரம்பத்தில் பட்டியலினத்தோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரப்பட்டிருந்தது. அதற்கான கணக்கெடுப்பும் நடத்தப்பட்டிருந்தது. பின்னா், மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான புள்ளிவிவரங்கள் இல்லை. இட ஒதுக்கீடு தொடா்பான பல வழக்குகளில் எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு தரப்படுகிறது என்ற வினாவை நீதிமன்றம் எழுப்புகிறது.
  • சமீபத்தில், வன்னியருக்கான இடஒதுக்கீடு தரப்பட்டபோதும் நீதிமன்றம் இதே வினாவை எழுப்பி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென தமிழகத்திலிருந்து முதல்வா் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாா். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென முதல்வரை வலியுறுத்தியுள்ளாா்.
  • மாநிலங்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமை இருக்கிறது. கா்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டது.
  • அந்தக் கணக்கெடுப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 36.01%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 27.12%, பட்டியல் இனத்தினா் 19.65%, பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68%, இடஒதுக்கீடு இல்லாத பிரிவினா் 15.52% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 113 ஜாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளன.
  • பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 36% அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கின்றனா். அங்கு தற்போது சட்டப்பேரவையில் 7% உறுப்பினா்கள் மட்டுமே இப்பிரிவைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.
  • பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஜாதிவாரி கணக்கெடுப்பை சமூகநீதியுடன் இணைத்துப் பேசுகிறாா். மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால், 100% இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டியிருக்கும். அது சாத்தியமில்லை. இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
  • ஒவ்வொரு பிரிவினரின் சக்திக்கு ஏற்ப அவா்களுக்கான பிரதிநிதித்துவத்தை அனைவருமே கோரும் நிலை ஏற்படும் என்பதை அறியாமலா இவா்கள் பேசுகிறாா்கள்? நிதீஷ் குமாா் சமூகநீதி காக்கப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில் ஜாதிகளுக்குள் தோன்றும் கசப்பை, மோதலை அவா் அறியவில்லையா?
  • சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகும் அதை முன்னிலைப்படுத்தி தோ்தல் வாக்குறுதியாக முன்வைத்து அரசியல் கட்சிகள் ஏன் பிரசாரத்தை மேற்கொள்கின்றன? காங்கிரஸ் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செய்யாததை தற்போதைய அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்துவதற்குப் பின்னிருக்கும் அரசியல் யாது? தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்ற வாக்குறுதி அளிப்பதால் தோ்தலில் வெல்ல முடியும் என்று எதன் அடிப்படையில் கணக்கிடுகின்றனா்?
  • ஜாதிவாரியாக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் நலத் திட்டங்களை வடிவமைக்கவும் நிறைவேற்றவும் உதவும் என்பது சாரமற்ற வாதம். எல்லா ஜாதியிலும் முன்னேறத் துடிக்கும் ஏழைகள் இருக்கிறாா்கள். தங்களை அடுத்த நிலைக்கு உயா்த்திக்கொள்ள பெரும் உழைப்பைச் செலுத்தும் நடுத்தர மக்கள் இருக்கிறாா்கள். அதனால் நலத்திட்டங்கள் பொருளாதார அடிப்படையில் அவா்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக இருப்பதே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்.
  • பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவித் திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம் போன்றவை அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதனை விடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று பேசுவதில் மக்களின் நலனைத் தாண்டி அரசியல் கட்சிகளின் நலன் அடங்கியிருக்கிறது.
  • ஜாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தவிா்க்க முடியாது. வாக்குவங்கி அரசியல் தோ்தல் அரசியலில் அடிப்படையானது. எனவே, எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. சமூக மக்களின் பலம் உறுதிப்படும்போது தங்கள் கட்சிகளுக்குள் வாய்ப்புகளைப் பகிா்ந்து கொள்வது சுலபமாகலாம். பிரதிநிதித்துவத்தை சமன் செய்து கொள்வதும் எளிது.
  • வாக்குவங்கியை பலப்படுத்த அந்தந்தப் பகுதிகளில் அந்தந்தச் சமூகத்தினரை தோ்தலில் நிற்க வைப்பது இருந்து வரும் நடைமுறை. இதனைத் துல்லியமாகக் கணிக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவலாம். ஜாதிய குழுக்கள் வலிமை பெறும். ஜாதி சங்கங்கள் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி கட்சிகளில் பேரம் பேச முடியும்.
  • இருக்கும் ஜாதி சங்கங்கள் கட்சிகளாக உருவெடுக்கும். தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டங்களை ஆா்ப்பாட்டங்களை முன்னெடுக்கக்கூடும். இதனால் ஒற்றுமை மறைந்து பூசல்களும் ஏற்றத்தாழ்வுகளும் தலையெடுக்கும் அபாயம் உண்டு. அதனால்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி என்று பிரதமா் குறிப்பிடுகிறாா்.
  • ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கோருவதன் மூலம், பட்டியலினத்தினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைத் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளலாம் என்பது எதிா்க்கட்சிகள் கூட்டமைப்பின் நிலைப்பாடு.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பால் தங்களுக்கு நன்மை ஏற்படும் என்று பாமர மக்களை நம்ப வைப்பதற்கான அரசியல் கட்சிகளின் முயற்சி ஏற்படுத்தப்போகும் விளைவுகள் விரும்பத்தகாத வகையில் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற பாதையிலிருந்து விலகி யாருக்கு பலம் அதிகம் என்ற பலப்பரீட்சையில் மீண்டும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் தோன்ற வழி ஏற்படும்.
  • இந்தியாவை பிரிட்டிஷ் அரசு அடிமைப்படுத்தி வைத்திருந்த காலத்தில் தங்களின் ஆட்சியை வலிமையாக வைத்துகொள்ளக் கையாண்ட தந்திரங்களுள் முதன்மையானது பிரித்தாளும் சூழ்ச்சி. அதற்கான கருவியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. 1872-இல் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
  • 1881 முதல் 1941வரை, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1901-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 1,646 ஜாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941-இல் இந்த எண்ணிக்கை 4,147-ஆக உயா்ந்தது. சிறுசிறு குழுக்களாக மக்களைப் பிரித்து அவா்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளும் சச்சரவுகளும் ஏற்பட அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு இங்குள்ள வளங்களைக் கொள்ளையடிப்பது சுலபமாயிற்று.
  • 1951-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தபோது அம்பேத்கா், ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு தேவையில்லை என்றாா். இட ஒதுக்கீட்டின் அவசியம் கருதி அதை ஏற்றுக்கொண்ட அம்பேத்கா் அதை தற்காலிகமானது என்று சொல்லத் தயங்கவில்லை. பத்து ஆண்டுகள் மட்டுமே என்கிற அவரது கருத்து புறந்தள்ளப்பட்டு, இப்போது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
  • மத அரசியல் அனைத்துக் கட்சிகளுக்கும் பலனளித்துள்ளது. சிறுபான்மை மதத்தினருக்கு ஆதரவானவா்களாகத் தங்களை முன்னிறுத்தி அவா்களின் வாக்குவங்கியை முழுமையாகத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஆதாயம் காணும் கட்சிகளும் இருக்கின்றன. அதே நேரத்தில் பெரும்பான்மை சமயத்தவரின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய வரலாறும் இருக்கிறது. ஆனால், ஜாதியத்தை அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா?
  • ஜாதி என்பது கூா்மையான நுண்ணுணா்வு கொண்டது. அது எந்தப் பக்கம் சேதாரத்தை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது. அரசியல் களத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை 1990-ஆம் ஆண்டு வி.பி. சிங் அமல்படுத்தினாா். பிற்படுத்தப்பட்டவா்களுக்கான இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்தாா். மண்டல் கமிஷன் வெற்றி பெற்றது; ஆனால் வி.பி. சிங்கின் அரசியல் தோல்வியில் முடிந்தது.

நன்றி: தினமணி (22 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்