- தன்னுடைய ஆத்மார்த்த நண்பர்களையும் ஆசானையும் சந்திக்க 1952-ல் அமெரிக்காவுக்கு அம்பேத்கர் சென்றிருந்தபோது, பேராசிரியர் ஜான் டூயி இறந்துவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் அம்பேத்கரை மிகவும் வாட்டியது.
- ஆசானின் பேரிழப்பிலிருந்து மீள முடியாமல் தன்னுடைய மனைவி சவிதாவுக்குக் கடிதம் எழுதினார்: “அமெரிக்காவில் உதவ என்னைச் சுற்றிலும் பழைய சிநேகிதர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். நானோ பேராசிரியர் டூயியைச் சந்திக்கவே புறப்பட்டேன். ஆனால், அமெரிக்காவை நோக்கி நான் விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ரோம் நகரை விமானம் அடைந்திருந்தபோதே ஆசானின் உயிர் ஜூன் 2-ம் தேதி அன்று பிரிந்துவிட்டது. வேதனையில் ஆழ்ந்திருக்கிறேன். என்னுடைய அறிவார்ந்த வாழ்க்கையை அவருக்கே சமர்ப்பிக்கிறேன். அற்புதமான மனிதராக வாழ்ந்தவர்.”
- நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் முதுநிலை அரசியல் அறிவியல் பட்டப் படிப்பைப் (1913-1916) படித்துக்கொண்டிருந்த காலத்தில், ‘‘எதிர்பாராமல் பேராசிரியர் டூயி மரணமடைய நேரிட்டால் அவர் இதுவரை நிகழ்த்திய அத்தனை விரிவுரைகளையும் என்னால் பிசகின்றிப் பேச முடியும்” என்றே தன்னுடைய வகுப்புத் தோழர்களிடம் கூறியதுண்டு.
- அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது மகோன்னத தாக்கத்தைச் செலுத்தியவர் பேராசிரியர் ஜான் டூயி. ‘‘என்னுடைய ஆசான் பேராசிரியர் ஜான் டூயி. அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றும், “வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த உன்னதமான நண்பர்கள் கொலம்பியா பல்கலையில் என்னுடன் படித்த சில சக மாணவர்களும் ஜான் டூயி, ஜேம்ஸ் ஷாட்வெல், எட்வின் செலிக்மான், ஜேம்ஸ் ஹார்வே ராபின்சன் ஆகிய அற்புத ஆசான்களும்தான்” என்றும் அம்பேத்கர் ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ புத்தகத்திலும் தன்னுடைய உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
புரட்டிப்போட்ட ஆய்வுக்கூடப் பள்ளி!
- சட்டமேதை, பொருளாதார நிபுணர், புரட்சிகர அரசியலர் அம்பேத்கரைச் செதுக்கிய ஜான் டூயியின் பிறந்தநாள் நேற்று (1859 அக்டோபர் 20). அறிவுச்சுடராகத் திகழ்ந்த அம்பேத்கர் மீது மிகப் பெரிய தாக்கத்தை டூயி ஏற்படுத்தக் காரணம், அவர் ஏட்டுச் சுரைக்காயைப் புகட்டிய வழக்கமான ஆசிரியர் அல்லர் என்பதுதான்.
- அதுவரை பிரதிநிதித்துவ ஜனநாயகம் குறித்து மட்டுமே அறிந்திருந்த அம்பேத்கருக்குப் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை டூயி உணர்த்தினார்.
- ஜனநாயகம் என்பதை மக்களாட்சி என்பதாக அரசியல் தளத்தோடு சுருக்கிவிடக்கூடாது. சமூக பொருளாதார அமைப்பில் ஜனநாயகத்தன்மையை அமல்படுத்துவதே விடுதலைக்கு வழிகோலும் என்கிற சிந்தனையை ஊட்டினார்.
- ‘நடைமுறையியல்’ (Pragmatism) என்ற தத்துவக் கோட்பாடு, செயல்பாட்டு உளவியல் ஆகியவற்றைக் கட்டமைத்தார். அதைவிடவும் அவருக்குப் பெயரும் புகழும் வாங்கித் தந்தது அவர் முன்வைத்த, நடைமுறைப்படுத்திய கல்விச் சிந்தனைகளே.
- ‘அனுபவபூர்வமான கல்வியின் நவீனத் தந்தை’ என்று வாஞ்சையோடு டூயி அழைக்கப்படக் காரணம் 124 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிகாகோ நகரில் தோற்றுவித்த ‘ஆய்வுக்கூடப் பள்ளி’ (Laboratory School).
- 1896-ல் சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘ஆய்வுக்கூடப் பள்ளி’யை டூயி நிறுவினார். சிகாகோவை விட்டு டூயி வெளியேறும் சூழல் ஏற்பட்டதால், அந்தப் பள்ளி 1904-ல் மூடப்பட்டது.
- வெறும் எட்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டாலும் அதில் அவர் நடைமுறைப்படுத்திய கல்விச் சிந்தனைகள் உலகம் எங்கும் பரவின. சொல்லப்போனால் இவற்றைக் கொடுத்தது டூயிதான் என்று அறியாமலே அவருடைய பல கல்வி சிந்தனைகளை நாம் பின்பற்றிவருகிறோம்.
- உதாரணத்துக்கு, “பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு தகவல்களைச் சேகரிப்பதற்கான வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலை மாணவர்கள் இழந்துவிடுகிறார்கள். இந்நிலையில் பள்ளி என்பது, அவரவர் சமூகத்தில் நிகழும் அன்றாட நிகழ்வுகளில் பங்கேற்கும் சமூக மையமாக மாற்றப்பட வேண்டும். அதேநேரத்தில், பழங்காலத்தின் கட்டுப்பெட்டித்தனங்களை அது உதிர்த்துவிட்டுச் செயல்பட வேண்டும்” என்றார் டூயி.
சமூகமும் பள்ளியும் இணைய!
- கல்வி வணிகமயமாவதைக் கடுமையாக டூயி எதிர்த்தார். எதிர்காலத்தை மனத்தில் வைத்து குழந்தைமையைப் பறித்தல் கல்வி அல்ல என்றார்.
- வயதுவந்தோரின் மறுவடிவமாகக் குழந்தைகளை நடத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உரிமைகள் உள்ளன. அவர்களுடைய போக்கிலேயே அனுமதித்தாலே வளரிளம் பருவத்தில் தனித்தன்மையைக் கண்டுகொள்ள முடியும் என்றவர் ‘செயல்திட்ட வழிமுறை’ (Project method) என்ற திட்டத்தையும் முன்மொழிந்தார்.
- இதன்படி, 6 அல்லது 7 வயதுக் குழந்தைகளின் தனித்துவத்தையும் விருப்பத்தையும் கண்டறிய அவர்கள் முன்பாக வெவ்வேறு தொழில்கள் சார்ந்த பொருட்களை வைக்கும்படி பரிந்துரைக்கிறார்.
- உதாரணத்துக்கு, ஒரு குழந்தை ‘நூல்கண்டை’ தேர்ந்தெடுக்கிறது என்றால், அதற்குப் பருத்தி எப்படி விளைவிக்கப்படுகிறது, பின்னர் நூலாக எப்படித் தயாரிக்கப்படுகிறது, நூல் நூற்கும் கருவியின் வரலாறு ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.
- இதன் வழியாக அதன் வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பித்துவிடலாம். இதன் மூலம் சமூகத்துக்கும் பள்ளிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றார்.
- படித்ததைக் கிரகித்துக்கொள்ளுதல் மட்டும் கல்வி அல்ல. சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றத் தேவையான பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல்தான் கற்றல். அதுவும் சுயநலமின்றி, உதவும் மனப்பான்மையுடன், விமர்சனபூர்வமான அறிவுடன், உத்வேகத்துடன் செயல்பட நம்மை உந்தித்தள்ளுவதே கல்வி என்றார் டூயி.
- மனித நேயமும் சமத்துவமும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்திருக்க அம்பேத்கர் மீது டூயி ஏற்படுத்திய தாக்கத்துக்கும் பங்குள்ளது.
- 1916-ல், ‘அறநெறியும் அரசியல் தத்துவமும்’ என்ற தலைப்பில் சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை குறித்து டூயி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்திய வகுப்புகள் அம்பேத்கரின் சிந்தனைப் போக்கில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
- அம்பேத்கருக்கு மட்டுமல்ல கல்விப் புலத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் டூயி கலங்கரை விளக்கமாகவே இன்றளவும் திகழ்கிறார்.
- (அக்டோபர் 20: ஜான் டூயி பிறந்த நாள்)
நன்றி: தி இந்து (21-10-2020)