TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி-இலக்கை நோக்கி

July 5 , 2023 562 days 322 0
  • சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகமாகி ஆறு ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியிருப்பது மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்டு, அறிமுகப்படுத்துவதில் சுணக்கம் காட்டப்பட்ட ஜிஎஸ்டி-யை, நரேந்திர மோடி அரசு எதிர்ப்புகளைத் துணிந்து எதிர்கொண்டு அறிமுகப்படுத்தியபோது, இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.
  • மத்திய - மாநில அரசுகளின் 17 வரிகளையும், 13 கூடுதல் வரிகளையும் (செஸ்) அகற்றி, அதற்கு பதிலாக 2017 ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு - சேவை வரி. மறைமுக வரிகளில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி, வரி விதிப்பை நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் சாதகமாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் ஜிஎஸ்டி.
  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டங்களில், சிறு வியாபாரிகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு காணப்பட்டது. இப்போது, ஆறு ஆண்டு கடந்துவிட்ட நிலையில், சந்தேக மேகங்கள் கலைந்து, எதிர்ப்பும், விமர்சனமும் பொய்த்து, ஜிஎஸ்டி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரிவிதிப்பாக மாறியிருக்கிறது.
  • முன்பு விற்பனை வரி, மதிப்புக்கூட்டப்பட்ட வரி என்று பல்வேறு மறைமுக, பல்முனை வரிகள் நிலவின. ஒவ்வொரு பொருளின் மீதும் வெவ்வேறு வரிகள் விதிக்கப்பட்டு, எந்தவொரு பொருளும், சேவையும் பல முனை வரி விதிப்பால் வாடிக்கையாளர் மீதான சுமையாக மாறியது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு, வரிக்கு மேல் வரி என்பது அகற்றப் பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பகுதி மட்டுமே வரி வரம்புக்குள் வந்தது.
  • மூலப்பொருளுக்கு வழங்கப்பட்ட வரியைத் திரும்பப் பெறும் "இன்புட் டாக்ஸ் கிரெடிட்' முறையால், உற்பத்தியாளர், விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர் என அனைவரும் அவரவர் பங்குக்கான வரியை மட்டுமே செலுத்தும் வசதி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக நுகர்வோர் பயனடைந்திருக்கிறார்கள்.
  • இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பும், வரி விதிப்பு தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் இருப்பதால், எந்தவொரு தொழிலையோ, சேவையையோ மேற்கொள்வதில் தெளிவும், வரி செலுத்துவதில் ஒரே மாதிரியான நடைமுறையும் ஜிஎஸ்டி உருவாக்கி இருக்கும் நன்மைகள். அதிகாரிகள் தலையீடு இல்லாத இணையவழிப் பரிமாற்றம் கையூட்டுக்கு இடமளிக்காத நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலத்துக்கு மாநிலம் காணப்பட்ட சோதனைச் சாவடிகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அதன் மூலம் சரக்கு லாரிகள் மாநிலத்துக்கு மாநிலம், நகரத்துக்கு நகரம் கடக்கும்போது கைமாற்ற வேண்டிய கையூட்டுக்கு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்லப்படும் சரக்குகளின் அளவு 44% அதிகரித்திருக்கிறது.
  • முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு, மன்மோகன் சிங் ஆட்சியிலும், இப்போதைய நரேந்திர மோடி அரசாலும் விரிவுபடுத்தப்பட்ட தங்க நாற்கரச் சாலைகளின் கட்டமைப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு அறிமுகத்துக்குப் பிறகு, சரக்கு போக்குவரத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
  • ஜிஎஸ்டி அல்லது மதிப்பு கூட்டப்பட்ட வரிவிதிப்பு முறை உலகில் 175 நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. 1954-இல் பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரிவிதிப்பு முறையின் அடிப்படை , எந்தவொரு பொருளுக்கும் மதிப்பு அதிகரிப்புக்கு மட்டுமே வரி விதிப்பது என்பதுதான். எல்லா நாடுகளிலும் "இன்புட் டாக்ஸ் கிரெடிட்' வழிமுறை பின்பற்றப்படுகிறது. நடைமுறைகளிலும், வரி விதிப்பிலும் மாற்றங்கள் இருக்குமே தவிர, எல்லா நாடுகளிலும் அடிப்படை ஒன்றுதான்.
  • ஜூலை 2017-இல் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 67.83 லட்சம் என்றால், 2023 ஜூன் 25-ஆம் தேதி நிலவரப்படி அது 1.40 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2017-18 நிதியாண்டில், மாத சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.89,885 கோடியாக இருந்தது, 2022-23-இல் ரூ.1,50,504 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிகழ் நிதியாண்டில் அதுவே ரூ.1,72,063 கோடியாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரி என்பதுதான் ஜிஎஸ்டியின் இலக்கு. இப்போதைக்கு 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறை அமலில் இருக்கிறது. மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் பெரும்பாலானவை வரி விலக்கும் பெற்றிருக்கின்றன. ஆடம்பரப் பொருள்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படுகிறது.
  • ஜிஎஸ்டி எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னை வரி ஏய்ப்பு. 40,000 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.13,900 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.1,430 கோடிக்கான "இன்புட் டாக்ஸ் கிரெடிட்' முடக்கப்பட்டிருக்கிறது. புதிதாக ஜிஎஸ்டிக்கு பதிவு செய்வோரை கண்காணிப்பதும், முறைகேடான போலி நிறுவனங்களை அடையாளம் காண்பதும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள்.
  • இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக மாறியிருப்பதற்கு ஜிஎஸ்டி முறையும் ஒரு முக்கியமான காரணம். தவறுகள் திருத்தப்பட்டு, குறைகள் களையப்பட்டு அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரி என்கிற இலக்கை அடையும்போதுதான், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் உயர முடியும்!

நன்றி: தினமணி (05 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்