TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியமான 3 பரிந்துரைகள்

July 1 , 2024 193 days 245 0
  • ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-வது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் ஜிஎஸ்டி கூட்டம் இது. அந்த வகையில் இக்கூட்டம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. வரி ஏற்றம், குறைப்பு தாண்டி இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 3 பரிந்துரைகள் முக்கியமானவை. ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு பயன்படக் கூடியவை.
  • 1 ஒருவர் 2017-18 முதல் 2019-20 வரையில் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டர்னில் ஏதேனும் பிழைகள் இருந்து அதற்கு ஜிஎஸ்டி அதிகாரி அபராதமும் வட்டியும் விதித்திருந்தால், புதிய பரிந்துரையின்படி, அதை அவர் செலுத்தத் தேவையில்லை.
  • விடுபட்டிருந்த ஜிஎஸ்டியை மட்டும் செலுத்தினால் போதும். முந்தைய நடைமுறைப்படி, ஒருவர் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டர்னை அதிகாரிகள் சோதனை செய்யும்போது அதில் ஏதேனும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்படும். தவிர, விடுபட்ட ஜிஎஸ்டியை வட்டியுடன் கட்ட வேண்டும்.
  • இதில் என்ன பிரச்சினை என்றால், ஜிஎஸ்டிரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது, நடைமுறைச் சிக்கல்களால் சில ஜிஎஸ்டிகளுக்கு முறையான சான்றுகள் இல்லாமல் போவதுண்டு. உதாரணத்துக்கு, நீங்கள் ஒருவரிடம் சரக்குகளை வாங்குகிறீர்கள். அதற்கான ஜிஎஸ்டி ரிட்டர்னை நீங்கள் தாக்கல் செய்துவிடுவீர்கள். ஆனால், அந்த விற்பனையாளர் உங்களுக்கு வழங்கிய ஜிஎஸ்டிக்காக முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்திருக்க மாட்டார்.
  • இத்தகைய சூழலில், அவர் மூலம் உங்களுக்கு வர வேண்டிய இன்புட் கிரெடிட் டேக்ஸ் உங்களுக்கு மறுக்கப்படலாம். தவிர, இதற்கு அபராதமும் விதிக்கப்படும். மேலும், விடுபட்ட ஜிஎஸ்டியை 18 சதவீத வட்டியுடன் கட்ட வேண்டும். இந்த நடைமுறைச் சிக்கலால், பல வணிகர்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.
  • இந்நிலையில், 2017-18 முதல் 2019-20 ஆண்டு வரையில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கலில் நிகழ்ந்த பிழைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் வட்டியையும் ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம், இந்தப் பரிந்துரை பிரிவு 73-க்கு மட்டுமே பொருந்தும். அதாவது, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கலில் பிழைகள் இருந்தால், அதிகாரிகள் இரண்டு பிரிவுகளில் நோட்டீஸ் அனுப்புவார்கள். உள்நோக்கம் ஏதும் இல்லமால் தவறுதலாக ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், பிரிவு 73 நோட்டீஸ் அனுப்பப்படும்.
  • அதுவே, ஒருவர் வேண்டுமென்றே பொய்யான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்திருக்கிறார் என்று அதிகாரிகள் முடிவு செய்தால் பிரிவு 74 -ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்நிலையில் தற்போதைய பரிந்துரை பிரிவு 73-க்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிரிவு 74- கீழ் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தால் அவர்கள் அபராதத்தையும் வட்டியையும் சேர்த்தே கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2 வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி விவரங்களை மறு ஆண்டின் செப்டம்பருக்குள் தாக்கல் செய்துவிட வேண்டும். அதாவது, 2017-18 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டர்னை 2018 செப்டம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
  • தவறினால், இன்புட் கிரெடிட் டேக்ஸ் மறுக்கப்படும். இதனிடையே 2020-21 நிதி ஆண்டில் இந்தக் கால அவகாசம் செப்டம்பரிலிருந்து நவம்பருக்கு மாற்றப்பட்டது. அந்த ஒரு நிதி ஆண்டுக்கு மட்டும் இவ்வாறு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
  • அதேசமயம், 2017-18, 2018 -19, 2019 – 20 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில், அந்தந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துக்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு இன்புட் கிரெடிட் டேக்ஸ் மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர்களுக்கும் ஜிஎஸ்டி ரிட்டர்னுக்கான கால அவகாசம் 2021 நவம்பர் வரையில் நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • 3 ஜிஎஸ்டி ரிட்டர்னை வணிகர் தொடர்ந்து தாக்கல் செய்யாமல் இருந்தால், அவரது ஜிஎஸ்டி எண்ணை அதிகாரிகள் முடக்கக் கூடும். மீண்டும் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதை ஆக்டிவேட் செய்யும் வரையில் அவரால் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியாது. இதனால், அவரால் இன்புட் கிரெடிட் டேக்ஸையும் பெற முடியாது. தற்போது இதற்கு சாதகமான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, முடக்கப்பட்ட ஜிஎஸ்டி எண்ணை அதிகாரிகள், மீண்டும் செயல்பாட்டுக்கு அனுமதித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள், விடுபட்டுப்போன ஜிஎஸ்டி ரிட்டர்னை தாக்கல் செய்து இன்புட் கிரெடிட் டேக்ஸைப் பெற்றுக்கொள்ளலாம். மேற்கூறியவை அனைத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள். ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து, முறையான அறிவிப்பு வந்த பிறகே இவை நடைமுறைப்படுத்தப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்