TNPSC Thervupettagam

ஜூன் 12, 1975 - இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது

June 12 , 2023 534 days 299 0
  • 'இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது'
  • அரை நூற்றாண்டு நெருங்கவுள்ள நிலையிலும் இன்னமும் மறக்க முடியாத நெருக்கடி நிலைக்குக் காரணம் இந்த வரிதான் என்றால் மிகையில்லை.
  • 1971 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று இந்தியாவின் ஆற்றல் மிக்க பிரதமராக இருக்கிறார் இந்திரா காந்தி. பாகிஸ்தானுடனான போரிலும் வெற்றி, வங்கதேசம் உருவாக்கம்! நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ்தான் ஆட்சி.
  • இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேசத்திலுள்ள ராய் பரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் இந்த நாளில் தீர்ப்பளித்தது.
  • தவிர, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை வகிக்கத் தடை விதித்து, ஆறாண்டு காலத்துக்குத் தேர்தல்களிலும் இந்திரா காந்தி போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பளித்த நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ, எனினும், தடையை நடைமுறைப்படுத்துவதை இருபது நாள்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
  • உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்காக மாநில அரசு செய்த ஏற்பாடுகளும் பாதுகாப்புக்காக என்று காவல் துறையினரை நிறுத்தியதும் முறைகேடுகள் எனக் குறிப்பிட்ட சின்ஹ, இந்த வழக்கைத் தொடுத்த ராஜ்நாராயணின் தேர்தல் செலவை இந்திரா காந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி சின்ஹ உத்தரவிட்டார்.
  • தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார் இந்திரா காந்தி. தேர்தல் பணியில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரான யஷ்பால் கபூரின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டார். 1971 ஜன. 7 ஆம் தேதி முதலாகவே இந்திரா காந்திக்காகத் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் செய்துள்ளார். ஆனால், ஜன. 25 ஆம் தேதி வரையிலும் அவர் அரசு ஊழியராகப் பணியாற்றியிருக்கிறார் என்பதெல்லாமும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டன.
  • எனினும், ராய் பரேலி தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக விமானப் படை விமானங்களில் சென்றதை முறைகேடு என்றும் வாக்காளர்களுக்கு அன்பளிப்புகளாக லஞ்சம் கொடுத்தார், வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி செய்து தரப்பட்டது என்பன போன்ற குற்றச்சாட்டுகளை நீதிபதி நிராகரித்துவிட்டார். தவிர, இந்திரா காந்தியின் தேர்தல் செலவு விதிப்படியான ரூ. 35 ஆயிரத்தைத் தாண்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
  • இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, வழக்கமான நடைமுறைக்கு மாறாக, நீதிமன்ற  அரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர். ராஜநாராயணின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஆர்.சி. ஸ்ரீவத்சவைத் தோளில் சுமந்து அவருடைய அறைக்குக் கொண்டுவந்தார்கள்.
  • தீர்ப்பு வழங்கப்பட்டபோது, வழக்குத் தொடுத்த ராஜ்நாராயணும் சரி, குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் இந்திரா காந்தியும் சரி, நீதிமன்றத்துக்கு வரவில்லை.
  • தீர்ப்பளிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் நீதிபதி சின்ஹ முன் பிரதமர் இந்திரா காந்தி சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. பிரதமரின் வழக்கறிஞருடைய கோரிக்கையை ஏற்றுத் தீர்ப்பின் அமல் இருபது நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார் (இதுவே பின்னர் பல விவாதங்களுக்கும் பிரதமர் பதவியில் இந்திரா காந்தி நிலைகொள்ளவும் காரணமானது). தீர்ப்பின் அமலை நிறுத்திவைக்கப் போதுமான காரணங்கள் இருப்பதாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் பரபரப்பு, இந்திரா நிதானம்

  • இந்தத் தீர்ப்பு பற்றிய தகவல் கிடைத்தவுடன், தில்லி அரசியல் வட்டாரங்களில்  பெரும் பரபரப்பு நிலவியது. மூத்த அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், சட்ட ஆலோசகர்கள் எனப் பலரும் இந்திராவின் இல்லத்துக்கு விரைந்தனர். ஆனால், இந்திரா காந்தி மட்டும் எவ்விதப் பரபரப்போ சஞ்சலமோ அடையாமல் இருந்தார். கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்த எம்.பி.யொருவரிடம், பரபரப்படையாமல் அமைதியாக இருக்குமாறு குறிப்பிட்டு, அவரை அமரச் செய்து குடிக்க காபியும் தரச் செய்தார்.
  • என்றாலும், நீதிமன்றத் தீர்ப்பு பற்றி ஸ்ரீநகரில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் இந்திரா காந்தி பேசினார். தொடர் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆதரவுக் குரல்கள்

  • பிரதமர் பதவியில் தொடர்ந்து இந்திரா காந்தி நீடிப்பார் என்றும் கட்சி முழுவதும் இந்திரா காந்தி தலைமையில் முழு நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருப்பதாகவும் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவாவும் அறிக்கையொன்றை வெளியிட்டனர்.
  • இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரதமர் இந்திரா காந்தி மேல் முறையீடு செய்வார், உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது. நாட்டின் ஒருமைப்பாடு, நிலைத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இந்திரா காந்தியின் தலைமை மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்ட அந்த அறிக்கையில் ஜகஜீவன்ராம், சவாண், உமாசங்கர் தீட்சித், டி.கே. பரூவா, பிரம்மானந்த ரெட்டி, எச்.ஆர். கோகலே, டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
  • இதேபோன்றதோர் அறிக்கையை எட்டு மாநிலங்களின் முதல்வர்களும் வெளியிட்டனர். நாட்டின் முன்னேற்றமும் நிலைத் தன்மையும் இந்திரா காந்தியின் நம்பகமான தலைமையின் கீழ்தான் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுத் தங்கள் ஆதரவையும் அவர்கள் உறுதி செய்தனர்.
  • இந்தக் கூட்டறிக்கையில் பன்சிலால் (ஹரியாணா), ஜெயில் சிங் (பஞ்சாப், பின்னாளில் குடியரசுத் தலைவரானார்), பி.சி. சேத்தி (மத்தியப் பிரதேசம்), ஜகன்னாத மிஸ்ர (பிகார்), சித்தார்த்த சங்கர் ராய் (மேற்கு வங்கம்), எச்.டி. ஜோஷி (ராஜஸ்தான்), எச்.என். பகுகுணா (உத்தரப் பிரதேசம்), ஒய்.எஸ். பார்மர் (ஹிமாச்சலப் பிரதேசம்) ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
  • இந்திரா காந்தியே பதவியில் தொடர வேண்டும் என்று ஆந்திர முதல்வர் வெங்கள ராவும் கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸும் கேட்டுக்கொண்டனர்.
  • இதனிடையே, தில்லியில் முகாமிட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்திரா காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்துத் தங்கள் ஆதரவை உறுதி செய்ததுடன் அவர் பதவியில் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேல் முறையீடு முடிவு

  • பதவியிலிருந்து அவர் ராஜிநாமா செய்யும் திட்டமில்லை. அவர் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. விரைவில் மேல் முறையீடு செய்யப்படும். வழக்கம்போல அரசுப் பணிகள் நடைபெறும் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
  • தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 4, 5 நாள்களாகலாம் என்று கருதப்பட்டது. மறுநாள்தான் தீர்ப்பு நகல் தில்லிக்குக் கிடைக்கும் (ஃபேக்ஸ், இ மெயில், வாட்ஸ் ஆப்... எல்லாம் இல்லாத காலம்!) என்ற நிலையில் சட்ட வல்லுநர்கள் பரிசீலிக்கவும் சில நாள்களாகும் எனக் கூறப்பட்டது.

எதிர்ப்புக் குரல்கள்

  • அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஆளுங் காங்கிரஸ் கட்சி தவிர்த்த பெரும்பாலான பிற கட்சிகள் வரவேற்றன.
  • நீதித் துறையின் தகுதி உயர்ந்திருக்கிறது. அலாகாபாத் நீதிமன்றத்தின் உயர் பாரம்பரியத்தை நீதிபதி சின்ஹ காப்பாற்றியிருக்கிறார் என்று வழக்குத் தொடுத்த பாரதிய லோகதளத் தலைவர்களில் ஒருவரான ராஜ்நாராயண் தெரிவித்தார்.
  • இந்திரா காந்தி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் தெரிவித்தார். தாம் எதிர்பார்த்தவாறே தீர்ப்பு இருந்தது. ஆதாரபூர்வமான வழக்கு இது. நீதித்துறையின் சீரிய பாரம்பரியத்தைத் தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது. நீதிமன்றம் 20 நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தாலும் இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார் தேசாய்.
  • நீதித்துறை தனது சுதந்திரத் தன்மையை உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்ட புது காங்கிரஸ் எம்.பி.யான மோகன் தாரியா (ஜெயப் பிரகாஷ் நாராயணுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இந்திரா காந்தி அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டவர்), பதவியை ராஜிநாமா செய்துவிட்டு விலக வேண்டியது இந்திரா காந்தியின் கடமை என்று தெரிவித்தார். இந்திரா காந்தி விலக வேண்டும் என்று ரபி ராய் தெரிவித்தார்.
  • பிற்காலத்தில் தொடர்ந்து இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஒரே பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பூபேஷ் குப்தவோ தீர்ப்பு பற்றிக் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழுவும் இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டது.
  • சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் மது தந்தவாதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது லிமயே ஆகியோரும் இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
  • ஒரு தேசிய அரசை உருவாக்குவதற்கு இப்போது சாத்தியக்கூறு உள்ளதாகவும் ஓர் ஒளிமயமான எதிர்காலம் பற்றி மக்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஏற்படுத்த இதுவே தக்க தருணம் என்றும் அகில இந்திய ஜனசங்கத்தின் நிர்வாகச் செயலர் நானாஜி தேஷ்முக் குறிப்பிட்டார்.

பொறுத்திருந்து பார்ப்போம்: காமராஜர்

  • சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமராகக் காரணமானபோதிலும் கட்சிப் பிளவுக்குப் பின் விலகிவிட்டவருமான பழைய காங்கிரஸ் தலைவரான காமராஜர், கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும், நிலைமை எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று மட்டும் தெரிவித்தார்.

நோ காமென்ட்ஸ்! கருணாநிதி

  • அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார் (தமிழக சட்டப்பேரவையைக் கலைத்து, இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, 1971 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்தச் செய்து  வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதல்வரானவர் கருணாநிதி).

எதிர்க்கட்சிகளின் ஏழு அம்சத் திட்டம்

  • இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்திரா காந்தி பதவியில் நீடிப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவிர எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், பழைய காங்கிரஸ், பாரதிய லோகதளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூடி இந்திராவின் ராஜிநாமாவை வலியுறுத்தி 7 அம்ச செயல் திட்டத்தை வகுத்தனர். ராஜிநாமா கோரிக்கை வாரம் நடத்தவும் ஜெயப் பிரகாஷ் நாராயண் தலைமையில் தேசிய இணைப்புக் குழுக் கூட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

யார் இந்த நீதிபதி?

  • இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தக்க, எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்குக் காரணமான இந்தத் தீர்ப்புக்குக் காரணமான வழக்கில் தொடர்புடையவர்கள் யார், யார்?
  • பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பு அளித்த நீதிபதியின் முழுப்பெயர் ஜக்மோகன்லால் சின்ஹ. மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். 1943-ல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியவர். 1955 - 57 மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிவில் செஷன்ஸ் நீதிபதி, மாவட்ட நீதிபதி, மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர், உத்தரப் பிரதேச அரசின் சட்டத் துறைச் செயலராக இருந்தார். 1970 ஜன. 3 ஆம் தேதி அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1972 ஆக. 25-ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.

ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள்

  • இந்த வழக்கை முதலில் புரூம் என்ற நீதிபதி விசாரித்தார். அவர் பதவியிலிருந்து விலகிய பிறகு நீதிபதி ஸ்ரீவத்சவா என்பவர் விசாரித்தார். அவரும் ஓய்வு பெற்ற நிலையில் 1974 ஜூலை மாதம் நீதிபதி சின்ஹ முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

யார் இந்த வழக்கறிஞர்கள்?

  • இந்த வழக்கில் பிரதமர் இந்திரா காந்திக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சி. காரே. ராஜ்நாராயண் சார்பில் ஆஜரானவர் சாந்திபூஷண், இருவருமே பிரபலமானவர்கள், தீவிர அரசியலிலும் செயல்பட்டு வந்தவர்கள். இருவேறு கருத்து நிலை கொண்டவர்களும்கூட.
  • காரேயின் வயது 62. புது காங்கிரஸ் ஆதரவாளர். 1934 முதல் வழக்கறிஞராக இருக்கிறார். 49 வயதான சாந்திபூஷண் பழைய காங்கிரஸ் ஆதரவாளர். ஆனால், 1934-ல் சாந்திபூஷண் தொடக்கப் பள்ளியைக்கூட தாண்டியிருக்கவில்லை. இருவருமே தங்கள் 20-வது வயதில் பட்டப்படிப்பில் தேறி, 21-வயதில் அலாகாபாத் பல்கலை. சட்டப் படிப்பிலும் தேறியவர்கள்.
  • சாந்திபூஷண் 1969 ஆம் ஆண்டில், தன்னுடைய 44-வது வயதில் உத்தரப் பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். இந்த வயதில் அப்போது யாரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதில்லை. சாந்தி பூஷணுடைய தந்தை விச்வமித்ரவும் வழக்கறிஞர் (இப்போதும் பிரபலமாக இருக்கும் மகன் பிரசாந்த் பூஷணும் வழக்கறிஞர்தான்).
  • காங்கிரஸ் மகாசபையில் இருந்தவர் காரே. 1940-ல் மகாத்மா காந்தியின் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்குபெற்றவர். 1942-ல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறையிலிருந்தவர். அந்தக் காலத்திலேயே ஆண்டுக்கு ரூ. 2.15 லட்சம் வருமான வரி கட்டிக்கொண்டிருந்தவர்.

இந்திரா காந்தியின் சண்ட மாருதம்!

  • தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்துக்கு முன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உயர்நிலை அலுவலர்கள் நிறுத்தப்பட்டனர். வீட்டின் முன் ஆதரவாகவும் எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  • தன்னுடைய இல்லத்தின் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே முதன்முதலாகப் பேசினார் இந்திரா காந்தி.
  • "மக்களின் நம்பிக்கையைப் பெற்று வறுமை ஒழிப்பு, புது சமுதாய அமைப்பு ஆகிய லட்சியத்தை அடைவதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். இதற்கு முன் பல சவால்களை நாம் சமாளித்திருக்கிறோம். இனியும் தொடர்ந்து சமாளிப்போம்."
  • இல்லத்தின் முன் தொடங்கிய இத்தகைய கூட்டங்கள் தொடர்ந்தன.

குஜராத் வழி

  • இதே நாளில்தான் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாயின. முடிவு அறிவிக்கப்பட்ட 169 தொகுதிகளில் ஜனதா முன்னணி 81 இடங்களிலும் (இந்திரா காந்தியின்) புது காங்கிரஸ் 65 இடங்களிலும் வெற்றி பெற்றன!

நன்றி: தினமணி (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்